Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தங்கம் வென்ற 'தெருவோரத் தங்கம்'...! -பிரேசிலை அதிர வைத்த சென்னை சிறுமி!

பிரேசிலில் நடந்த தெருவோரக் குழந்தைகளுக்கான ஒலிம்பிக் போட்டியில்,  தங்கம் உள்பட நான்கு பதக்கங்களை வென்று சாதனை படைத்திருக்கிறார் சென்னையைச் சேர்ந்த ஹெப்சிபா. ' இந்த வெற்றியை என்னைப் போன்ற தெருவொரக் குழந்தைகளுக்கு சமர்ப்பிக்கிறேன்' என்கிறார் உற்சாகத்தோடு.

'ஸ்ட்ரீட் சைல்டு யுனைடெட்' என்ற லண்டனைச் சேர்ந்த நிறுவனம், பிரேசிலில் தெருவோரக் குழந்தைகளுக்கான மினி ஒலிம்பிக் போட்டியை நடத்தியது. உலகில் முதல்முதலாக நடத்தப்படும் இந்தப் போட்டியில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரேசில், அர்ஜன்டினா, எகிப்து, மொசாம்பிக், பாகிஸ்தான் உள்ளிட்ட 14 நாடுகளைச் சேர்ந்த தெருவோரக் குழந்தைகள் பங்கேற்றனர். கடந்த 14-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை நடந்த ஸ்ட்ரீட் ஒலிம்பிக் போட்டியில்தான் ஹெப்சிபா இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். 

பிரேசில் போட்டிக்குச் செல்லும் கடைசி நிமிடம் வரை பாஸ்போர்ட் கிடைக்காமல் தவித்து வந்தார் ஹெப்சிபா. காரணம், தெளிவான முகவரி இல்லாததுதான். சென்னை, ரிப்பன் பில்டிங் பின்புறம் உள்ள அல்லிகுளத்தின் தெருவோர குடிசையில் நீண்டகாலம் இவரது குடும்பம் வசித்து வந்தது. இதன்பிறகு, ஆக்ரமிப்புகளை அப்புறப்படுத்துகிறோம் என்ற பெயரில், வீடற்ற விடுதியில் தங்கியிருந்தார் ஹெப்சிபா. இவரது தந்தை உடல்நலமில்லாமல் இறந்துவிட்டார். இவருடன் பிறந்தது நான்கு பெண் குழந்தைகள். இவர் கடைக்குட்டி. அம்மா ஆராயி பூ வியாபாரம் செய்து வருகிறார். பிரேசில் ஒலிம்பிக் போட்டியில், 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்க மெடல், 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டப் பந்தயத்தில் வெண்கலம், 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம், 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டப் பந்தயத்தில் வெண்கலம் என நான்கு பதக்கங்களை அள்ளியிருக்கிறார் அல்லிகுளம் ஹெப்சிபா.

அவரிடம் பேசினேன்.

" மொதல்ல எனக்கு பிரேசில் போக வாய்ப்பு கிடைக்குமான்னு சந்தேகமா இருந்துச்சு. அங்க போறதுக்கு பணமும் இல்லை. கருணாலயா அமைப்புக்காரங்கதான் உதவி செய்தாங்க. இப்ப டவுட்டன் கவர்மெண்ட் ஸ்கூல்ல பிளஸ் 1 படிச்சிட்டு இருக்கேன். பிரேசிலில் தெருவோரக் குழந்தைகளுக்கு போட்டி நடக்குதுன்னு எங்களைக் கூட்டிட்டுப் போறதுக்காக டெஸ்ட் மேட்ச் நடத்துனாங்க. அதுல நான் முதல் ஆளா வந்தேன். ஸ்கூல்ல நடக்கற போட்டிகள்ல பரிசு வாங்கியிருக்கேன். ஆனா, சர்வதேச அளவுல கலந்துக்குவோம்னு நினைக்கல. சென்னையில இருக்கும்போது காலை சாப்பாடுகிங்கறதே கிடையாது. அம்மா ரொம்ப கஷ்டப்பட்டு பூ விக்கறதால அவங்ககிட்ட எதுவும் கேக்க முடியாது. போட்டிக்குத் தயாராகும்போது முட்டை, சுண்டல்னு நிறைய கொடுத்தாங்க. அதனால நல்லா ஓட முடிஞ்சது. ஜெயிச்சா வாழ்க்கை நல்லா இருக்கும்னு சொன்னாங்க. எப்பவும் போலத்தான் ஓடினேன். நாலு பதக்கம் வாங்குவேன்னு நினைச்சு கூடப் பார்க்கலை சார்..." என்றார் கண்களில் உற்சாகத்தோடு.

இதேபோல், சிறுவயதிலேயே பெற்றோரின்  செயல்பாட்டால், வீட்டை விட்டு ஓடிவந்த தர்மபுரி, சுங்கரஹள்ளி பகுதியைச் சேர்ந்த அசோக்,  குண்டு எறிதலில் வெண்கலப்  பதக்கம் வாங்கியிருக்கிறார்.

" எங்க அப்பா பேர் சின்னத்தம்பி. எலக்ட்ரீசியனா இருந்தார். அப்பாவுக்கும் அம்மாவுக்கும் முழுநேர வேலையே சண்டை போடறதுதான். ஒருநாள் ஸ்கூலை விட்டு வீட்டுக்கு வந்தப்ப, ரெண்டு பேரும் இல்லை. சண்டை போட்டுட்டு ஊரைவிட்டு ஓடிப் போயிட்டாங்கன்னு சொன்னாங்க. சொந்தக்காரங்க கண்டுக்காததால, தர்மபுரி ரயில்வே ஸ்டேஷன்ல நின்ன ரயில்ல ஏறிப் படுத்துட்டேன். சென்னைக்கு வந்ததும் எங்க போறதுன்னு தெரியாம அழுதுட்டு இருந்தேன். கருணாலயா தொண்டு நிறுவனத்துக்காரங்கதான் இப்ப வரைக்கும் சோறு போட்டு வளர்த்துட்டு இருக்காங்க. 2014-ம் வருஷம்,  தெருவோரக் குழந்தைகளுக்கான ஃபுட் பால் போட்டி,  பிரேசில்ல நடந்துச்சு. அந்தப் போட்டியில நேர்மையான ஆட்டத்திற்கான பரிசை எனக்குக் கொடுத்தாங்க. இந்தமுறை குண்டு எறிதல் போட்டியில வெண்கலம் வாங்கியிருக்கேன். இது பத்தாது. அடுத்தமுறை இன்னும் நிறைய பதக்கங்களை வாங்கணும்" என்றார் நம்பிக்கையோடு.

இவர்களைப் போல, ஃபாரெக்ஸ் ரோடு உஷா, சூளை சிலம்பரசன், பீச் ஸ்டேசன் சினேகா என மொத்தம் ஐந்து பேர் பிரேசில் ஒலிம்பிக்கில் பங்கேற்றனர். மற்ற மூவருக்கும் பங்கேற்பு சான்றிதழை வழங்கியுள்ளது போட்டியை நடத்தும் நிறுவனம்.

பதக்கக் குவியலுக்குப் பின்னால் இருந்தவர் பால் சுந்தர் சிங். கருணாலயா என்ற அமைப்பின் நிர்வாகியாக இருக்கிறார். அவரிடம் பேசினேன்.

" ஐந்து சிறுவர்களுக்கும் பயணச் செலவாக தலா ஒரு லட்சம் ரூபாய்க்கும் மேல் ஆனது. நாங்கள் சிரமப்படுவதைப் பார்த்ததும் நான்கு பேருக்கான கட்டணச் செலவை ஒலிம்பிக் போட்டியை நடத்தும் லண்டன் அமைப்பே ஏற்றுக் கொண்டது. இதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இந்தப் போட்டியில் பங்கேற்பதே நமக்கான வெற்றிதான். ஏனென்றால், போதிய அளவில் பயிற்சியை மேற்கொள்ளவும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்தச் சிறுவர்களுக்கு நேரு ஸ்டேடியத்தில் பயிற்சியெடுக்க அனுமதி கிடைத்தது மிக முக்கியமான விஷயம். ஹெப்சிபாவுக்கு பாஸ்போர்ட் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டதை அறிந்து, வால்டர் தேவாரம் உதவினார். எல்லாவற்றையும் தாண்டி ஐந்து பதக்கங்களோடு சென்னை திரும்புவோம் என கனவிலும் நாங்கள் நினைத்துப் பார்க்கவில்லை. இந்தப் போட்டியில் அர்ஜண்டினா, எகிப்து, மொசாம்பிக், பாகிஸ்தான் உள்பட பல நாடுகளோடு போட்டி போட்டுக் கொண்டு நமது சிறுவர்கள் சாதனை படைத்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட சாலையோரக் குழந்தைகள் வசிக்கின்றனர். அவர்களின் எதிர்காலத்திற்கு நம்பிக்கை ஊட்டும் வகையில் தெருவோர ஒலிம்பிக் போட்டிகள் நடந்தன. விரைவில் பதக்கங்களோடு சென்னை வருகிறோம்" என தம்ஸ்-அப் காட்டினார் பால் சுந்தர் சிங்.

வாருங்கள் தெருவோரத் தங்கங்களே....!

-ஆ.விஜயானந்த் 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close