Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

திரை நாயகர்களே... காடுகளுக்கு நீங்களும் வில்லன்கள்தான்!

னி தினங்கள் தேவையில்லை. மூச்சு விடும் அனைவரும் நித்தமும் நினைவு கூரவேண்டும்.  தன் கருப்பையில் பிராணவாயுவை உண்டாக்கி, அதை அண்டம் எங்கும் பரப்பி, நாம் உயிர்வாழ்தலுக்கு காரணமாக இருக்கும் காடுகளை கொண்டாட தனி தினம் தேவையா என்ன...?

ஆம். இன்று உலக காடுகள் தினமாம்.  அரசும், நிறுவனங்களும், தன் உச்சபட்ச வன்முறையை காடுகள் மீது செலுத்தினாலும், தனி நபர்களும், பொது சமூகமும்  சூழலியல் விஷயத்தில் நம்பிக்கை அளிப்பவர்களாக இருக்கிறார்கள்.  ஒரு பக்கம் பாரிய அழிப்புகள் நடந்தாலும், தனி மனிதனாக  நூறு ஏக்கர் பரப்பளவில் கூட்டுறவு காடை உண்டாக்கிய பியுஷ், தினம் தினம் தன் மிதிவண்டியில், மரக்கன்றுகளை ஏற்றிக்கொண்டு பல கி.மீ பயணித்து, வனாந்தரங்களை சோலையாக்கும் ‘மரம்’ நாகராஜன் ஐயா போன்றோர், அடுத்த தலைமுறைக்காக காற்றை உற்பத்தி செய்யும் நிஜ கதாநாயகர்களாக  இருக்கிறார்கள்.

மரம் நாகராஜன். ஈரோடு மாவட்டம், காஞ்சிக்கோவிலைச் சேர்ந்த இவர்,  கடந்த நாற்பது ஆண்டுகளில் பத்தாயிரம் மரங்களை நட்டு இருக்கிறார். மன்னிக்கவும், நட்டு, வளர்த்து இருக்கிறார். தன் தலைவனின் கடைக்கண் பார்வையை பெற ஏங்கும் கட்சி தொண்டன், தலைவரின் பிறந்த நாளில் அவரது கவனத்தை ஈர்க்க, அறுபதாயிரம் மரங்களை நட்டுள்ளார் என்ற செய்தியை கடந்து வந்து இருக்கும் நமக்கு, ‘இது என்ன பெரிய விஷயம்’ என்று தோன்றலாம். ஆனால், நட்ட அறுபதாயிரம் மரத்தின் நிலையை நீங்கள் பார்த்தீர்கள் என்றால் நிச்சயம் இப்படி நினைக்க மாட்டீர்கள்.  ஆம். புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கும் வரை மட்டும்தான், இங்கு பலருக்கு மரத்துடன் பந்தம். பல செடிகள் நட்ட ஒரு வாரத்திலேயே சருகாகி விடுகிறது.  மரத்தை நடுவது மிகவும் சுலபம், அதை வளர்த்தெடுப்பது ஒரு பிள்ளையை வளர்ப்பதற்கு சமம். அதனால்தான், மரம் நாகராஜனும் பியுசும்,  இயல்பாக முக்கியத்துவம் பெறுகிறார்கள்,   கதாநாயகர்கள் ஆகிறார்கள். ஒரு புறம் அரசுக்கும், அரசியல்வாதிகளுக்கும்தான் காடுகள் குறித்து அக்கறை இல்லை என்றால்,  திரை கதாநாயகர்களும் காடுகளுக்கு வில்லனாகதான் இருக்கிறார்கள். அவர்கள், தங்களுக்கே தெரியாமல், தினம் தினம் காடுகள் மீது வன்முறையை ஏவி கொண்டிருக்கிறார்கள். ஆம். ரஜினி, கமல், விஜய், அஜீத், விஷால், ஏன் நேற்று அறிமுகமான கதாநாயகன் கூட, அறிந்தோ அறியாமலோ காடுகளின் அழிவிற்கு காரணமாக இருக்கிறார்.

கதாநாயகர்கள் காடுகள் மீது தொடுக்கும் யுத்தம்:


'என்ன... என் மானசீக நாயகன்,  காடுகள் மீது வன்முறையை ஏவுகிறானா...? உங்களுக்கு நடிகர்கள்தான் இளிச்சவாயர்கள், அதான் காடுகளை அழிக்கும் நிறுவனங்கள், மத குருக்கள் குறித்து எழுத தையரியமற்று  சினிமா நாயகர்களை குறித்து எழுதுகிறீர்கள்...' -  நிச்சயம், இது உங்கள் எண்ணமாக இருக்கும்.

மறுப்பதற்கில்லை. ஒரு பக்கம் நிறுவனங்கள் காடுகளை அழிக்கிறதென்றால், இன்னொரு பக்கம் அமைதியை போதிக்கும் மதக்குருக்கள், காடுகள் மீது வன்முறையை ஏவுகிறார்கள். உண்மைதான்.  இது குறித்து விவாதிக்கதான் வேண்டும். விவாதிக்கவும் செய்கிறோம். ஆனால், அதே வேளை, கதாநாயகர்கள் காடுகள் மீது தொடுக்கும் யுத்தம் குறித்து எந்த பதிவும் இல்லாமல் இருக்கிறது. அது பற்றியும் இந்த நன்நாளில் கொஞ்சம் பேசிவிடுவோம்.

காடுகளின் மரணத்திற்கு மட்டுமல்ல, அண்மையில் வந்த சென்னை வெள்ளத்திற்கும் திரை கதாநாயகர்களும் ஒரு காரணம். ஏன், காவிரி மாசடைவதற்கும் ரஜினியும், கமலும் அவர்களையே அறியாமல் ஒரு காரணமாகிவிடுகிறார்கள். 

'நிறுத்து... நிறுத்து...என்ன ஆதாரம் இல்லாமல் அடுக்கிக் கொண்டே போகிறாய்...' என்கிறீர்களா?

இல்லை. ஆதாரம் இல்லாமல் எழுதவில்லை. உங்கள் மனதில் போற்றி துதிக்கும் நாயகனை பற்றி தவறான சித்திரத்தை ஏற்படுத்த வேண்டுமென்பது என் எண்ணமில்லை. நியாயமாக சொல்லப் போனால், காடுகளின் அழிவிற்கு அவர்களின் நேரடி பங்கு குறைவுதான்; கதாநாயக வழிபாட்டில் மூழ்கி திளைக்கும் நீங்களும், நானும்தான், அவர்களை காரணமாக்கி, சூழலை கெடுக்கிறோம்.

'நான்கு பத்திகள் கடந்துவிட்டது. நானும், என் கதாநாயகனும் எப்படி காரணம்... நேரடியாக சொல்' என்று நீங்கள் கேட்பது எனக்கு நன்றாக கேட்கிறது.  நான் டிஜிட்டல் பேனர்களை பற்றி குறிப்பிடுகிறேன்.  கதாநாயகர்களின் ஒவ்வொரு பட வெளியீட்டின் போதும், நீங்கள் வைக்கும் டிஜிட்டல் பேனர்கள், இந்த சூழலை எப்படி கெடுக்கிறது என்று அறியாத அப்பாவியாக இருப்பீர்களானால், நீங்கள் உங்களின் அடுத்த தலைமுறைக்கு துரோகம் இளைத்தவர்கள் ஆவீர்கள்.

டிஜிட்டல் பேனர்களுக்கான, வினைல்  துணியை தயாரிக்கும் நிறுவனம், காவிரி ஆற்றங்கரை அருகே மேட்டூரில் இருக்கிறது.  பயன்பாட்டில் மட்டும் அல்ல, தயாரிப்பிலேயே சூழலுக்கு அனைத்து கேடுகளையும் விளைவிப்பதாக அது இருக்கிறது.  அதன் கழிவுகள் காவிரி ஆற்றில் கலக்கிறது. அந்த விஷத்தன்மை கலந்த நீரை தான் நீங்களும், நானும் பருகுகிறோம். 

அன்புள்ள திரை நாயகர்களே...நீங்கள் படப்பிடிப்பிற்காக மேட்டூர் பக்கம் சென்றால், கேரவனில் முடங்கி விடாமல், அந்த  பகுதிகளை சுற்றிப் பாருங்கள், இந்த தயாரிப்பு நிறுவனங்கள் எவ்வளவு சூழல் கேட்டினை உண்டாக்கி இருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த வினைல் துணி பயன்பாட்டிற்கு வந்த பிறகு அது வெளிப்படுத்தும் கதிர்வீச்சு கேன்சரை உண்டாக்கவல்லது. அதை உங்கள் குழந்தைகளும் சுவாசிக்க நேரிடும்.

ஒவ்வொரு பட வெளியீட்டின் போதும், கதாநாயகர்களாலும், அவர்களை துதிபாடுபவர்களாலும், ஊருக்கு குறைந்தது நூறு டிஜிட்டல் பேனர்கள் வைக்க்கப்படுகின்றன... அப்படியானால், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும், குறைந்தது மூவாயிரத்து இருநூறு பேனர்கள். சூழலுக்கு எவ்வளவு கெடுதல்...? இது அனைத்தும் மிகவும் குறைந்த பட்ச கணக்குதான் என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். 

இந்த பேனர்கள்தான் தண்ணீரை பூமிக்குள் செல்ல  விடாமல், ஒரு தடுப்பு அரணாக மேற்பரப்பில் இருக்கிறது. இதுவும் சென்னை வெள்ளத்திற்கு ஒரு காரணம் என்று அறிஞர்கள் சொன்னார்கள்.  இந்த பேனர்கள்தான் மக்காமல், மலை போல் குவிந்து இருக்கிறது.

இந்த தலைமுறை நடிகர்கள் சினிமா என்பதை தாண்டி சூழலியல் சார்ந்த விஷயங்களிலும் ஆர்வமுடையவர்களாக இருக்கிறீர்கள். விஷாலை கல்லூரி மரம் நடும் விழாக்களிலும், கார்த்தியை தண்ணீர் குறித்த விழிப்புணர்வு பேரணிகளிலும் அதிகம் பார்க்க முடிகிறது. நடிகர் விவேக்,  மரம் நடுவதை ஒரு இயக்கமாகவே முன்னெடுக்கிறார். மகிழ்ச்சி. ஆனால், ஒரு பக்கம் பாரியளவில் சூழலைக் கெடுத்து கொண்டு, இன்னொரு பக்கம் மரங்கள் நட்டு, தண்ணீர் பேரணிகளில் கலந்து கொண்டு என்ன பயன்...?

அண்மையில்  சூழலியல் நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் கார்த்தியை சந்தித்த போது, கொஞ்சம் கடுமையாகவே இது குறித்து ஆட்சேபம் தெரிவித்தோம்.  அவரும், “நிச்சயம் இதில் கவனம் செலுத்துகிறோம்” என்று உறுதி அளித்தார். அந்த உறுதியை அவர் நிச்சயம் காக்க வேண்டும். தன் சக நடிகர்களிடத்தும் இது குறித்து உரையாட வேண்டும். அனைத்து நடிகர்களும், தன் ரசிகர் மன்றங்களை, டிஜிட்டல் பேனர்களை தவிர்க்கும் படி அழுத்தமாகவே சொல்ல வேண்டும். இந்த நவீன காலத்தில் விளம்பர பாணி மாறிவிட்டது. நடிகர்கள் டிஜிட்டல் பேனர்களை தவிர்த்து மற்ற விளம்பர உத்திகளில் கவனம் செலுத்த வேண்டும். 
அப்போதுதான் நீங்கள் நிஜ கதாநாயகர்கள் ஆவீர்கள்...

வாக்களிப்பதற்காக வேணும் , உயிருடன் விட்டு வையுங்கள்:

அரசியல்வாதிகளை பற்றி எழுதாமல், இந்த கட்டுரை முற்று பெறாது. ஏனெனில், இந்த விஷயத்தில் திரை நாயகர்களுக்கு முன்னத்தி ஏர் நீங்கள்.  உங்களுக்கு வாக்களிப்பதற்காக வேணும், நீங்கள் குடிகளாக ஒரு போதும் மதிக்காத வாக்காளர்களை உயிருடன் விட்டு வையுங்கள். இது தேர்தல் காலம். உங்களுக்கு விளம்பரம் அவசியம்தான். அதற்கு துணியில் எழுதுவது, சாக்கு பையில் விளம்பரம் போன்ற சூழலை அதிகம் கெடுக்காத மாற்று வழிகளை பயன்படுத்துங்கள். ஏன் இது கூட உங்களுக்கு வாக்களிக்க காரணமாக அமையலாம். தேர்தலை நியாயமாக நடத்த உறுதி பூண்டுள்ள தேர்தல் அணையம், இதிலும் கொஞ்சமேனும் கவனம் செலுத்த வேண்டும். 

பிறப்பு முதல் இறப்பு வரை, இடையில் பூப்புனித நீராட்டலுக்கும்:


மற்றவர்களை கூறி என்ன பயன்...? சாமானியனாகிய நமக்கும் இது குறித்த விழிப்புணர்வு  வேண்டும். பிறப்பு, இறப்பு, பூப்புனித நீராட்டல், திருமணம் என நம் வாழ்வின் அத்தனை முக்கிய தருணங்களிலும், டிஜிட்டல் பேனர் இருக்கிறது. கெடுவாய்ப்பாக,  சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றால் கூட நாம் டிஜிட்டல் பேனர்களைதான் பயன்படுத்துகிறோம். நம் குழந்தைகள் இப்புவியில் ஆரோக்கியமாக ஜீவிக்க வேண்டுமென்றால்,  நாம் இதை எந்த சப்பைக்கட்டும் கட்டாமல் உடனடியாக நிறுத்த வேண்டும். 

காடுகளை காத்தல் என்பது, மரம் நடுதலில் மட்டும் இல்லை, இது போல் சிறு விஷயங்களிலும் இருக்கிறது. விழிப்புடன் இருப்போம்.

- மு. நியாஸ் அகமது

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close