Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'என்னைப் பத்தி நல்லதா ரிப்போர்ட் போடுங்கய்யா...!' (இன்டலிஜென்ஸ் அரசியல்: மினி தொடர்-4)

சிக்குத்து தலைவர் மடங்கியது குறித்தும்... தேர்தல் நேரத்து போஸ்டிங் குறித்தும்... கூட்டணி முறியடிப்பும் - தூது டெக்னிக்குகள் பற்றியும் தொடர்ந்து மூன்று கட்டுரைகள் வெளியிட்டுள்ளோம். இது நான்காவது கட்டுரை. இதில், போஸ்டர், சமூக வலைதளம் மூலம் செய்யும் அரசியல். 'சீட்' கேட்டு போடச் சொல்லும் ரிப்போர்ட்கள், ஆட்சி, யார் கைக்குப் போகும் என்பதை எப்படிக் கண்டுபிடிக்கிறார்கள் என்பதை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

இருவர் ஒருவரான கதை

எங்கு போனாலும் அந்தத் தலைவரும், தலைவரோடு சமமாக பொறுப்பில் 'துணை'யாக  இருந்தவரும் தொண்டர்கள் மத்தியில் சமமாக மதிக்கப்பட்டனர். இருவரில் ஒருவர், இனி நாம் நுழைவதற்கு ஏற்ற இடம் கிழக்கு வாசல்தான்தான் என்ற முடிவில் இருந்தவர். மற்றவர் அதைவிட ராயப்பேட்டையே என்ற முடிவில் இருப்பவர். அடுத்தடுத்த நாட்களில் இணை பிரியாத ஒரே சமுதாயத்தைச் சேர்ந்த இந்த இரண்டு தலைவர்களுமே ஒருவர் மீது ஒருவர் தூற்றும் நிலை இயல்பாக நடப்பது போல் நடந்தது. இருதரப்பும் ஆதரவாளர்களை உருவாக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். ஒரு தரப்பு அலுவலகம், மறுதரப்பால் சூறையாடப்பட்டது. அதேநேரம் ஒரு தரப்புக்கு மட்டும் போலீசாரின் உரிய பாதுகாப்பு கொடுக்கப்பட்டது. இரண்டாக உடைந்து நொறுங்கிய கட்சிக்கு இரண்டு தலைவர்கள் உருவாகினர். 'மேலே' என்ன ரிசல்ட் எதிர்பார்க்கப்பட்டதோ, அது கச்சிதமாக  நடந்து முடிந்தது. இதெல்லாம் ஸ்மெல் ஏரியாவின் ரொம்பவும் ரிலாக்ஸ்டான சின்ன வொர்க்தான்.

உடைந்து போன சங்கத் தலைவன்

"தனிப்பட்ட சாதிய பலம், அந்தத் தலைவருக்கு இருக்கிறதா என்று பாருங்கள்... நம்மை வைத்துதான் பலமே என்றால், அவரை டம்மி ஆக்கப் பாருங்கள். ஏற்கனவே அவர், சங்கத் தலைவர் என்று ரொம்பவே ஆட்டம் போட்டு விட்டார்" - இப்படியொரு வேலை ஸ்மெல் ஏரியாவினருக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. பொறுப்பு கைக்கு வந்ததுமே அது குறித்து கிராஸ் செக் செய்து விட்டனர் ஸ்மெல் டீமில். அந்த நடிகரின் பாதை 'கிழக்குத்திசை' நோக்கி இருப்பதாக  முதலில் ஸ்மெல் செய்தவர் தலைமையிடத்தில் இருக்கும் அந்த இளம் 'துணை' அதிகாரி. இப்படியான திறமைசாலிகளை எப்போதும் டிபார்ட்மென்ட் வெளியில் விடுவதேயில்லை. அடுத்தடுத்து இரண்டு பதவி உயர்வுகளை பெற்றும் கூட இவரை இதே ஏரியாவில் இழுத்துப் பிடித்து வைத்திருப்பது. இப்படியான விஷயஞானம் காரணமாகவே. அவரும் 'அந்த' சீட்டுக்குப் பொருத்தமாக பொருந்தியிருக்கிறார்.

 இந்த டுவிஸ்ட்டுக்குள் இன்னொரு டுவிஸ்ட் என்னவென்றால் நேற்று 'ஆண்ட' தரப்போடு இன்றும் விசுவாசம் வைத்திருக்கும் 'ஸ்லீப்பர் செல்' டீமுடன் இதே ஸ்மெல் டீமும் (இதில் மட்டும்) கைகோர்த்ததுதான். இப்படி பல நேரங்களில் சேம் சைடு கோல்களை  'அ(இ)வர்களும்' போட்டு மொத்தமாகக் கூடி கும்மி அடித்து விடுவார்கள். அதன் எதிரொலிதான் அவருக்கு கிழக்கு வாசலும் (தானே முன்வந்து) ஆதரவுக்கரம் நீட்டாமல் கைகழுவி விட்டதும்.

போஸ்டர், சமூக வலைதள அரசியல்

கட்சித் தலைமையின் கவனத்துக்கே வராமல்,  அடுத்தக்கட்ட தலைவர் ஆசையில் இருக்கும் 'ஒருவர்' சைலண்ட்டாக போட்ட ஆலோசனைக் கூட்டத்தை அம்பலப்படுத்தவும் எதிர்கோஷ்டியினர் ஒரு வழியைக் கையாள்கிறார்கள். கூட்டம் தொடர்பான 'ரெடிமேட் போஸ்டர்கள்' அடித்து முக்கிய பகுதிகளில் ஒட்டி விடுவார்கள். இதற்கான தலைமையின் ரியாக்‌ஷனை அப்படியே வாங்கி, அதை போஸ்டரே அடிக்காதவரின் கவனத்துக்கு கொண்டு போய், அதையும் இன்னொரு போஸ்டராக்கி ஒட்டத் தொடங்கி விடுவார்கள். அதேபோல்  ஆலோசனைக் கூட்டமே போடாதவரை போட்டது போல் ஒரு போஸ்டர் போட்டு ஊரெங்கும் ஒட்டுவார்கள். சில விருப்பு, சில வெறுப்பு, சில வேண்டுகோள்களின் அடிப்படையில் இவைகள் நடக்கும். (இந்த வேலைகளுக்கும் ஸ்மெல் ஏரியாவினர் பெரும்பாலான சமயங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர்)

வாட்ஸ் அப், முகநூல், ட்விட்டர் போன்ற சமூக தொடர்பியல் சாதனங்கள் இதுபோன்ற ஆபரேஷன்களுக்கு வெகுவாகக் கை கொடுக்கிறது. கூர்ந்து கவனித்தால், இதுபோன்ற 'டுவிஸ்ட்டிங்' போஸ்டர்களில் பிரின்டர் முகவரி இருக்காது. இந்த டெக்னிக்கை 'லோக்கல் பாலிடிக்சுக்காக' பலரும் கையிலெடுக்க, சுதாரித்துக் கொண்ட 'ஸ்மெல்' ஏரியாவினர் பிரின்டர் முகவரி இல்லாமல் யாராவது போஸ்டர் அடித்துக் கொடுத்தால் அவர்களின் பிரின்டர் லைசென்ஸ் ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கத் தொடங்கினர். ஒரு உறையில் ஒரு கத்திதானே இருக்க வேண்டும் என்ற கோபத்தின் வெளிப்பாடுதான் அது.

காவல் நிலையங்களில் வரவேற்பு?

தமிழகத்தின் பிரமாண்ட அரசியல் நிலவரங்களைப் பார்த்தவர்களுக்கே சமீப காலங்களாக காணப்படும் ஒரு கிர்ர்ர் நிலை அவர்களையே குழப்பத்தில் ஆழ்த்திக் கொண்டிருக்கிறது. அவர்களின் 'க்ளைமாக்ஸ்' கணிப்புகள் எப்போதுமே மிஸ் ஆவது இல்லை. ஆனால், இம்முறை அதில் கொஞ்சம் இடியாப்ப சிக்கல் நீடிக்கிறது. அரசுத்துறை வட்டாரங்களில், குறிப்பாய் காவல் நிலையங்களில் எந்த கரை வேட்டிகளுக்கு பிப்ரவரி- மார்ச்களில் அதிக வரவேற்பு கிடைக்கிறதோ, அவர்களே 'கோட்டை'யில் பரிவட்டம் கட்டிக் கொள்வார்கள்.

இந்த முறை, குறிப்பிட்ட இரண்டு முக்கிய கட்சிகளுக்குமே இந்த ஏரியாக்களில் 'சேம்' வரவேற்புதான் கிடைக்கிறதாம். சின்ன பர்சன்டேஜ் வித்தியாசத்தில் மற்றவருக்கு வழி விட்டு விடக்கூடாது என்பதில் இரு தரப்புமே அவரவர் ஆதரவு ஸ்மெல் டீமின் உதவியோடு உறுதியைக் கடைப்பிடிக்கின்றன.

இதுபோக, மாநாட்டை நடத்திக் காட்டியிருக்கும் நால்வர் டீமும்  தங்கள் நம்பிக்கையை இழக்கவில்லை. காந்தகத்தில் ஒட்டிக் கொள்வது போல் காத்திருக்கும் சிறு கட்சிகளின் ஆதரவால் கூட அடுத்தவருக்கு பர்சன்டேஜ் கூடிவிடக் கூடாது என்பதிலும் இரு தரப்பினரும் உறுதி காட்டுகின்றனர். அந்த வேலையையும் சேர்த்தே பார்க்க வேண்டிய பொறுப்பு ஸ்மெல் ஏரியாவில் பலருக்கு பிரித்துக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

சீட்டுக்காகவும் ரிப்போர்ட்

"சார், தலைவா, அய்யா, என்னையப் பத்தி கொஞ்சம் நல்லதா ரிப்போர்ட்டைத் தட்டி விடுங்கள். நான் செய்த கட்சிப்பணி, என் செல்வாக்கு, பணபலம், சாதிய பலம், வெற்றி வாய்ப்பு அப்படி இப்படின்னு கொஞ்சம் நல்லதா தூக்கி எழுதி கை தூக்கி விடுங்கப்பா... நான் ஜெயித்து வந்ததும், உங்களை அதே மாதிரி கை தூக்கி விடுறேன்" என்று சீட்டுக்கு பணம் கட்டியிருக்கும் கனவு ஆசாமிகள், ஸ்மெல் ஏரியாவில் உள்ளவர்களைத் தேடித்தேடி கெஞ்சுவதும் இந்த கால கட்டத்தில் சாதாரணமாக பார்க்கக் கூடியவைகள். அவர்களின் ரிப்போர்ட் எப்படி இருக்கின்றது என்பது வேறு விஷயம்.

ஸ்மெல் குறித்த சகல மூவ்களும் கீழ்மட்டம் வரை எப்படி கொடிய வியாதியாக பரவி... அது ஊரறிந்த சினிமா ரகசியம் போல் ஆகி விட்டிருக்கிறது என்பதற்கான பல சாட்சிகளில் இதுவும் ஒன்று. இது மிகவும் ஆபத்தானதும் கூட. 'ஸ்மெல் ஏரியாவில் இருப்பவர்கள் மட்டும்தான் 'டிபார்ட்மெண்ட்', பிறர் ஒன்றுமே இல்லாதவர்கள்' என்ற நீர்த்துப் போன மனநிலைக்கு அவர்களை கொண்டு வந்து விட்டு விடும். அது நாளடைவில் சாமான்ய மக்களுக்குள்ளும் ஊடுருவ தொடங்கி விட்டால், 'காக்கி' என்ற பெயரை மக்கள் ஒரு குறிப்பிட்ட அதிகாரத்தின் கீழ் செயல்படும் 'வணிக' மையமாகவே கருத ஆரம்பித்து விடுவர். இந்த நிலைக்கு 'அந்த' துறையை மாற்றியதும் தவறு. அவர்கள் சூழ்நிலை காரணமாகவோ, தங்களை மேம்படுத்திக் கொள்வதற்காகவே இந்த சூழ்நிலைக்குள் வந்து விட்டதும் தவறு.

பார்ட்டி ஆபீஸ் ஸ்மெல்லர்கள்:

எழுபதுகள் வரையில் தமிழகத்தில் அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை குறைவாகத்தான் இருந்தன. குறிப்பிட்ட அரசியல் கட்சியின் லீடர்கள் 'மூவ்' எப்படி என்பதைக் கண்காணிக்க அனுப்பி வைக்கப்பட்ட ஸ்மெல் குழுவினர், ஏதாவது ஒரு டீக்கடையில் 'அஞ்சல்பெட்டி 520' என்ற படத்தில் வரும் நேபாளி ஸ்மெல் பார்ட்டி போல தலை கலைந்து, துணி கிழிந்து உட்கார்ந்து, வாரக் கணக்கில் காத்திருந்து சொன்ன வேலையை முடித்தனர். காலப்போக்கில் கட்சிகளும், சாதிய அமைப்புகளும் பெருகி நிற்கவே வேறு வழியில்லாமல் ஸ்மெல் டீம் எண்ணிக்கை கூடியது. சராசரி ஆட்கள் போல மாறியும், ஆடைகளில் வித்தியாசம் காட்டியும் வலம் வர ஆரம்பித்தனர். ஒவ்வொரு கட்சி அலுவலகத்துக்கும், ஒவ்வொரு சாதி அலுவலகத்துக்கும் ஒரு ஸ்மெல் அதிகாரி பிரத்யேகமாக போடப்பட்டனர். அவர்களின் ரிப்போர்ட்டை பில்டர் செய்ய, ஒரு மேலதிகாரியை மண்டல வாரியாக நியமித்தனர். அந்த மண்டல அதிகாரியானவர், கீழ்மட்ட லெவலில் ஒருபோதும் பேச மாட்டார். அவருடைய தொடர்பின் விரிவாக்கமானது 'எந்த கூட்டணிக்கு போனால் சரியாக வரும்?' என்று தலைவர்களுக்கே ஆலோசனை சொல்லுமளவு வளர்ந்து விடும். அதே நேரம் கீழ்மட்ட ஆட்களிடம்  பேசிப்பழகிக் கொள்ளவும் ஒருவர் 'சைலண்ட்' ஆக போஸ்ட்டிங் செய்யப்பட்டிருப்பார். 

உதாரணமாக, 2015-ல் இப்படி கீழ்மட்ட ஆட்களிடம் பேசி பழக ஒருவரை போஸ்ட் செய்துள்ளனர் என்று வைத்துக் கொள்வோம். அவர், தன்னுடைய சர்வீஸ் முடிகிற சில ஆண்டுகளுக்குள், அவர் லெவலில் (கீழ்மட்ட) இருந்த ஓரிருவர் பெரிய லீடராக வளர்ந்திருப்பார். அப்போது அவர் யார் சொன்னாலும் நம்ப மாட்டார், கேட்க மாட்டார். முப்பது வருடமாக பேசிப்பழகி வந்த இவரைத்தான் நம்புவார். இப்படி ஒரு லீடரையே தன் சொல்லுக்கு கட்டுப்பட வைத்திருக்கும் ஸ்மெல் பார்ட்டிகளை டிபார்ட்மென்ட்டும் உரிய காலத்தில் ஓய்வு கொடுத்து வீட்டுக்கு அனுப்புவதில்லை. உங்கள் சேவை இந்த நாட்டுக்குத் தேவை என்பது போல, அவரை பணி நீட்டிப்பு கொடுத்து தக்க வைத்துக் கொள்வார்கள். ஆக, இது காலந்தோறும் பின்னிப் பிணைந்து பயணிக்கும் ஒரு சங்கிலித் தொடர் என்றுதான் சொல்ல வேண்டும்.

ந.பா.சேதுராமன்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close