Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இவர்கள் இல்லாமல் காடுகளை காப்பாற்றுவது சாத்தியமா?

கொஞ்சம் மனம் விட்டு உரையாடலாம். பழங்குடியினர் பால் மனம் கொண்டவர்கள், அவர்கள் வனத்தின் காதலர்கள், காவலர்கள் போன்ற வர்ணனைகளை விடுத்து, கொஞ்சம் உண்மை பேசி உரையாடுவோம்.

வெற்று வர்ணனைகள் எப்போதும், யாருக்கும் நன்மை பயக்காது. ஆம். காலம் காலமாக வனத்தை, மலையை காத்து வந்தவர்கள், வருகிறவர்கள் பழங்குடிகள்தான். இதில் மிகையில்லை. இன்றும் தண்டகாருண்யா மலையை, நிறுவனங்களிடமிருந்து காப்பவர்கள் பழங்குடிகள்தான். மறுக்கவில்லை.  ஆனால், கூட்டம் கூட்டமாக தமிழகத்தில் பழங்குடிகள் மரத்தை வெட்ட செல்கிறார்களே, அது எதனால்...? தமிழகத்திலும் பல மலைகள் பழங்குடிகளை கொண்டே மொட்டை அடிக்கப்படுகிறதே, அது எதனால்...? வறுமை, பஞ்சம், உழைப்பு சுரண்டல் என நாம் பல காரணங்களை அடுக்கலாம். ஆனால் மரத்தை காக்க,  மலையை காக்க தன் இன்னுயிரை தியாகம் செய்த பழங்குடிகள், வெறும் பணத்திற்காக மட்டும் மரம் வெட்டும் வேலைக்கு செல்லவில்லை. இயற்கையை அழிக்காமல், அதனுடன் இயைந்து வாழ பழகியவர்கள் அவர்கள். நம்மை போல் மரத்தை வெறும் பலகையாக, பணமாக பார்க்காதவர்கள் அவர்கள். ஆனால், நம் அரசுகள் வெற்றிகரமாக பழங்குடிகளுக்கும், மரத்திற்கும் இருந்த உணர்வுபூர்வமான பந்தத்தை அறுத்துவிட்டது. 


ஆந்திர படுகொலையும், பாலனுடனான உரையாடலும்:

ஏப்ரல் மாதம் 9-ம் தேதி 2015, அடர் பின்னிரவு.  அழுகை சத்தம், சபித்தல் என அனைத்தும் ஓய்ந்து வனமெங்கும் பேரமைதி சூழ்ந்த இரவு. சித்தேரிமலையில் நானும், ஒரு வங்காளி நிருபரும்  பாலனுடன் உரையாடிகொண்டிருக்கிறோம்.  பாலன் அவர் நிஜப்பெயர் அல்ல. ஆம். பெயர் மாற்றி இருக்கிறேன்.  பாலன், ஒரு முன்னாள் மரம் வெட்டுபவர், வெறும் 500 ரூபாய் பணத்திற்காக ஐந்து இலட்சம் மதிப்புள்ள மரங்களை வெட்டிய கடை நிலை கூலி. இப்போது அனைத்தையும் விட்டுவிட்டார். 

வங்காளி நிருபர் கொஞ்சம் காட்டமாக அவரிடம், “உங்கள் மீது அவ்வளவு மதிப்பு வைத்திருக்கிறோம். நீங்கள் தான் காட்டை காக்கும் காவல் தெய்வங்கள் என்று இத்தனை நாள் நம்பி வந்தோம். எப்படி உங்களால் மரத்தை வெட்ட முடிகிறது...?” என்று தன் மழலை தமிழில் கேட்டார். பாலனின் மெளனம், அடர் இரவை இன்னும் அசவுகர்யம் ஆக்கியது. ஆனால், வங்காளி நண்பன் விடுவதாக இல்லை, “அப்படியென்றால் நாங்கள் இத்தனை நாள் உங்களை கதாநாயகர்களாக தவறாக நினைத்து வந்தோமா...?” என்று இன்னும் உஷ்ணமானான். 

பாலன், ஒரு வெற்று புன்னகையை படரவிட்டு, பீடியை பற்ற வைத்தார்; தன் மெளனத்தை கலைத்தார். 

“நீங்கள் காலம் காலமாக ஒரு இடத்தில் வசிக்கிறீர்கள். அங்கு உங்களை சுற்றி செல்வம் குவிந்து இருக்கிறது. அந்த செல்வம் அனைத்தும் உங்கள் உழைப்பால் உருவானது. உங்கள் தேவைக்கேற்ப அதை பயன்படுத்தி மிக மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறீர்கள். உங்கள் தேவைக்கு மேல், நீங்கள் என்றுமே, ஒரு குண்டு மணி செல்வத்தை கூட எடுத்ததில்லை. இத்தருணத்தில், உங்களை ஆள்பவர்கள், இனி உங்களுக்கு அந்த செலவத்தின் மேல், எந்த உரிமையும் இல்லை என்கிறார். நீங்கள் அச்செல்வத்தை நுகர்ந்தால், உங்களுக்கு கடுமையாக தண்டனை என்கிறார். சிலருக்கு கடுமையான தண்டனையும் தருகிறார். ஆனால், அதே வேளை, அந்த இடத்திற்கே சம்பந்தம் இல்லாத, அந்த செல்வ உருவாக்கத்தில் சிறு பங்களிப்பையும் செலுத்தாத ஒரு பெருங்கூட்டம், அந்த செல்வத்தை கட்டற்ற முறையில் சுரண்டுகிறது. அந்த செல்வத்தை சுரண்டுவதற்கு, உங்களை பயன்படுத்த அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றுகிறது. இப்போது சொல்லுங்கள், உங்களுக்கு அந்த செல்வத்தின் மீது வெறுப்பு வருமா...வராதா...?” என்று மெல்லிய குரலில், தீர்க்கமாக பேசினார்.


“காடு எங்களுடையது. இங்குதான் என் பாட்டன் பூட்டன் மகிழ்வாக வாழ்ந்தார்கள். இங்கு உள்ள பல மரங்கள் அவர்கள் பராமரித்தது. ஆனால், அவர்கள் சந்ததியினரான எங்களுக்கோ, காட்டின் மீது ஒரு அதிகாரமும் இல்லை.  மரங்கள் மீது, மலைகள் மீது அதிகாரம் என்று நாங்கள் குறிப்பிடுவது,  மரத்தை வெட்டுவதோ, இல்லை அதன் கீழ் உள்ள தாது செல்வங்களையோ இல்லை. இங்கும் காய்க்கும் கடுக்காய், நெல்லிக்காய், புளியங்காய் என எதன் மீதும் எங்களுக்கு அதிகாரம் இல்லை. கீழே விழுந்தால், அதை பொறுக்குவது கூட கொடுங்குற்றம். ஆனால் அதே நேரம், இங்கு சிலர் பெரும் பணம் செலுத்தி, அரசு அனுமதியுடனோ அல்லது முறைகேடாகவோ அனைத்தையும் உறிஞ்சி கொண்டிருக்கிறார்கள். எங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தாத, எங்களுக்கு சொந்தமான மரங்கள் மீது, எங்களுக்கு கோபம் வருவது இயல்புதானே... அந்த கோபம்தான் எங்களை மரங்களை வெட்ட தூண்டுகிறது. இதை நான் நியாயப்படுத்தவில்லை. குற்றம்தான். ஆனால், பெரும்பாலான குற்றங்கள் இயலாமையிலிருந்து பிறக்கின்றன” என்றார்.

பழங்குடிகளுக்கு காடுகள் மீது உரிமையில்லை:

இங்கு அனைவருக்கும் பேச ஒரு நியாயம் இருக்கிறது. பாலனின் நியாயத்தை நாம் தவறு என்று தர்க்கம் செய்யலாம். நம் நியாயத்தை அவர் மீது திணிக்கலாம். ஆனால், நாம் கொஞ்சமேனும் அவரின் நியாயத்தை புரிந்து கொள்ள வேண்டும்.  இந்தியாவில் பல மாநிலங்களில் அமலுக்கு வந்த வன உரிமைச் சட்டத்தை, தமிழகத்தில் இதுவரை அமல்படுத்தவில்லை. பழங்குடிகளுக்கும், காலம் காலமாக வனத்தில் வாழும் வனவாசிகளுக்கும் கொஞ்சமேனும் காடுகள் மேல் அதிகாரத்தை தரும் ஜனநாயகமான சட்டம் அது. அந்த சட்டம் அமலுக்கு வந்தால் காடுகள் உள்ளூர் நிர்வாகத்தின் கீழ் வரும். காடுகள்,  பழங்குடிகளுக்கு வாழ்வு தரும்.  அங்கு விளையும் அனைத்து பயிர்கள் மீதும் முழு அதிகாரம் கொண்டவர்களாக, அந்த மக்களை இருக்கச்செய்யும். ஆனால், இந்த சட்டம் தமிழகத்தில் இன்னும் அமல்படுத்தப்படவில்லை. ஆனால், அதே நேரம் காடுகளிலிருந்து, பழங்குடிகளை பிரிக்கும்  இன்னொரு வேலையை அரசு திறம்பட செய்து வருகிறது.


ஆம். காடுகள் வனவிலங்குகள் மட்டும் வாழும் பகுதி, அங்கு மக்களுக்கு (இந்த வார்த்தையை குறித்து கொள்ளுங்கள்) எந்த உரிமையும் இல்லை என்று காடுகளையும், மக்களையும் பிரிக்கும் வேலையை வனப்பாதுகாப்பு சட்டம் மூலமும் புலிகள் பாதுகாப்பு திட்டத்தின் மூலம் அரசு திறம்பட செய்து வருகிறது. அண்மையில் சத்தியமங்கலத்தில், 'புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது, புலிகள் சரணாலயம் அமைக்கப் போகிறோம்' என்ற பெயரில் மக்களை காடுகளிலிருந்து வெளியே அனுப்ப அனைத்து தகிடுதித்தங்களையும் அரசு செய்தது.  அவர்கள் மக்களை வெளியே அனுப்ப சொன்ன காரணம், புலிகளுக்கு தொந்தரவாக இருக்குமாம். 'மக்கள் இருக்கும்போதுதானே புலிகளின் எண்ணிக்கை கூடியது, பிறகு நாங்கள் இருப்பது எப்படி புலிகளுக்கு தொந்தரவாக இருப்போம்?'  என்ற அந்த மக்களின் நியாயமான கேள்விக்கு, அரசிடம் எந்த பதிலும் இல்லை.  ஒவ்வொரு முறையும் காடுகளிலிருந்து பழங்குடி மக்களை வெளியே அனுப்பும் அரசு,  காடுகளுக்குள் சுற்றுலாவை மேம்படுத்துகிறோம் என்று இன்னொரு பகுதி மக்களுக்கு அனைத்து சலுகைகளையும் வழங்கி வருகிறது.

எப்போதும் மக்களை ஒரு அமைப்பிலிருந்து பிரித்து, அந்த அமைப்பை வலுவாக்க முடியாது. அந்த மக்களை இணைத்துதான் அதை செய்ய முடியும். இங்கும் அரசு செய்ய வேண்டியது அதைதான்.

காடுகளை நம்மை விட நன்கு அறிந்தவர்கள் பழங்குடிகள். அவர்களுக்கு அதிகாரம் தந்து காடுகளை காப்பது தான் தார்மீக நெறி, நிறுவனங்களிடம் கொடுத்து காப்பது அல்ல.

- மு. நியாஸ் அகமது 
    

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ