Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கார்டனில் நடக்கும் 'ரகசிய' சிகிச்சை... சூறாவளி பிரசாரத்திற்குத் தயாராகிறார் ஜெயலலிதா!

வேட்பாளர் நேர்காணல், பிரசார வியூகம் என முன்பைவிட அதிக உற்சாகத்தில் இருக்கிறார் ஜெயலலிதா. 'ஏப்ரல் முதல் வாரத்தில் சூறாவளி சுற்றுப்பயணத்திற்குத் தயாராவார் அம்மா' என்கின்றனர் அ.தி.மு.க நிர்வாகிகள்.


போயஸ் கார்டனில் சீனியர் அமைச்சர்கள் மீதான முறைகேடு புகார் விசாரணை ஒருபுறம், வேட்பாளர் தேர்வு மறுபுறம் என நடக்கும் மாறுபட்ட காட்சிகளை அதிசயத்தோடு பார்த்து வருகிறார்கள் தோட்டத்து ஊழியர்கள். நேற்று காலை 10.30 மணி  அளவில் உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பனுக்கு 'பரேடு' நடத்திய கையோடு, மதியம் 2 மணியளவில் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்ட கட்சிக்காரர்களிடம் நேர்காணலும் நடத்தினார் ஜெயலலிதா. ஓரிரு நாட்களுக்கு முன்பு தேர்தல் பிரசார வியூகம் குறித்து மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, பண்ருட்டி ராமச்சந்திரன் உள்ளிட்டவர்களோடு விவாதித்தார் ஜெயலலிதா. மார்ச் இறுதிக்குள் தேர்தல் பிரசார அறிக்கையை வெளியிட்டுவிட்டு,  அதன்பிறகு வேட்பாளர் தேர்வு பட்டியலை வெளியிடுவார் என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில்.


இதுகுறித்து நம்மிடம் பேசிய கட்சியின் சீனியர் ஒருவர், " வேட்பாளர் தேர்வில் இந்தளவுக்கு அம்மா உற்சாகமாக இருக்கக் காரணமே, டாக்டர்.சிவக்குமார் தலைமையிலான மருத்துவர்கள் குழுதான். இந்த டீம், அமெரிக்காவைச் சேர்ந்த மருத்துவர்கள் சிலரின் ஆலோசனையோடு அம்மாவுக்கு கூடுதல் கவனத்தோடு சிகிச்சை அளித்து வருகிறார்கள். முதல்வருக்கு இருக்கும் முக்கியப் பிரச்னையே, சர்க்கரை பிரச்னைதான். உச்சகட்ட சர்க்கரையைக் கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் தவித்து வந்தார். இதுதவிர, நீண்ட நேரம் நிமிர்ந்து பேச முடியாது, அதிக நேரம் உட்கார்ந்து கொண்டு பேசினால் இடுப்பு வலி வருவது என உடல் உபாதைகளால் அவதிப்பட்டு வந்தார். கடந்த சில வாரங்களாக நடக்கும் சிகிச்சையில் முழுக்க தேறிவிட்டார் அம்மா. மூத்த அமைச்சர்கள் ஓ.பி.எஸ், நத்தம், பழனியப்பனை விளாசியது, கட்சி நிர்வாகிகளை சந்திப்பது, பிரசார வியூகம் வகுப்பது என பழைய அம்மாவை இப்போதுதான் பார்க்கிறோம். இதனால், ' நாங்கள்தான் கார்டன். எங்களுக்கு மேல் எதுவும் இல்லை' என்ற எண்ணத்தில் ஆடிய சீனியர்கள் ஆடிப் போயிருக்கிறார்கள். கடந்த பொதுக்குழு கூட்டத்தில் அம்மாவின் வாகனம் மேடை வரை வந்தது. இனி இதுபோல் நடக்காது. சிகிச்சை முடிந்தபிறகு சில நாட்கள் ஓய்வெடுப்பார். அதன்பிறகு, வேட்பாளர் தேர்வு பட்டியலை அறிவித்த கையோடு பிரசார களத்திற்குச் செல்வார் அம்மா" என்கிறார் உற்சாகத்தோடு.அம்மா கேரவன், அசத்தும் ஹைடெக்...!

சட்டமன்ற தேர்தல் பிரசாரம் முழுவதையும் ஹெலிகாப்டரில் பறந்து கொண்டே செய்ய இருக்கிறார் ஜெயலலிதா. ஐந்து சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய பிரசார ரூட்களை தீர்மானித்துவிட்டு, ஹெலிபேடில் இருந்து அந்தந்த பாயிண்டுகளுக்கு ஜெயலலிதாவின் கேரவன் வேன் பயணிக்குமாம். இதற்காக, அந்தந்த ஹெலிபேடுகளுக்கு அருகிலேயே கேரவன் வாகனம் தயார் நிலையில் இருக்குமாம். இதற்காக, கோவையில் உள்ள கோயாஸ் அண்ட் சன்ஸ் நிறுவனத்தில் வேலைகள் ஜரூராக நடந்து வருகிறது. முன்பெல்லாம், வாகனத்தின் உள்புறம் ஹாலோஜன் விளக்குகளை ஒளிரவிட்டு தொண்டர்களுக்கு தரிசனம் தருவார் ஜெயலலிதா. அதுவும் குழந்தைகளைக் கொஞ்சுவது, பெயர் வைப்பது போன்றவை எல்லாம் அந்த விளக்கின் ஒளியிலேயே நடக்கும். வெளியில் இருந்து பார்க்கும் பொதுமக்கள் ஜெயலலிதாவின் இந்தச் செயலால் பரவசமடைவார்கள். இந்த முறை ஜெயலலிதாவின் பிரசார வேன்களில் முழுக்க எல்.ஈ.டி விளக்குகளுக்கு மாற்றிவிட்டார்கள். காரணம், ஹாலோஜன் விளக்குகளால் வேனுக்குள் வெப்பத்தின் அளவு அதிகரிப்பதுதான். ஜெயலலிதாவின் பிரசாரத்திற்காக, கோவையில் உள்ள கோயாஸ் ஆட்டொமொபைல் நிறுவனத்தில் நான்கு வாகனங்கள் தயாராகி வருகின்றன. பிரசார வேன்கள் அனைத்தும் வோல்க்ஸ் வேகன் நிறுவனத்தைச் சேர்ந்தவை. இதில், இரண்டு வாகனங்கள் பிரசாரத்திற்கும் இரண்டு வாகனங்கள் ஓய்வு எடுப்பதற்கும் என பிரித்து வைத்துக் கொண்டு டிசைன் செய்து வருகின்றனர்.


வேனுக்குள் செய்ய வேண்டிய வசதிகள் என்ன என்பது பற்றி கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவர், கேரவன் தயாராகும் இடத்தில் இருந்து கொண்டு தினமும் கவனித்து வருகிறார். முதல்வருக்காகத் தயாராகும் இந்தப் பிரத்யேக கேரவனில் ஜி.பி.ஆர்.எஸ் வசதி, அதிவேக வைஃபை வசதி, நவீன கழிப்பறை, ஓய்வெடுக்கும் அறை எனப் பார்த்து பார்த்து தயார் செய்கிறார்கள். சினிமா நடிகர்களுக்கு உள்ளதுபோல, அதிக செலவில் இந்தக் கேரவன்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதுதவிர, வி.ஐ.பி கேரவன் என தனியாக இரண்டு வாகனங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த வாகனத்தின் உள்ளே இருக்கும் வசதிகள் மிரள வைக்கின்றன. பங்களாவிற்குள் அமைக்கப்படும் நவீன வசதிகள் அனைத்தும் இந்த வாகனத்தில் உள்ளன. தவிர, முன்பெல்லாம் பேப்பரில் பெரிய கொட்டை எழுத்தில் எழுதி வைத்துக் கொண்டு படிப்பார் ஜெயலலிதா. அதையே டேப்லெட் ஃபார்மெட்டுக்கு மாற்றி கையடக்கமாகக் கொடுக்கும் வகையில் தயார் செய்கின்றனர். அந்த மாவட்டங்களில் பேசப்படும் விஷயங்களைத் தொகுக்கும் வேலைகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதுதவிர, வேலூர் உள்பட சில மாவட்டங்களில் நவீன பிரசார வாகனங்களை வாங்கியிருக்கிறார்கள். எல்.இ.டி புரஜக்டரோடு கூடிய திரையில் எந்தப் பக்கம் இருந்து பார்த்தாலும், ஆட்சியின் சாதனைகள் தெரியும் காட்சிப் படங்கள், ஜெயலலிதா புராணங்களைப் பாடும் அதிநவீன ஆடியோ, இணையத்தள வசதி என கரன்சியைக் கரைத்திருக்கிறார்கள். இதில் ஒரு வாகனத்திற்கான செலவு மட்டும் அறுபது லட்ச ரூபாய். மேலும், அ.தி.மு.க. ஐ.டி விங் நிர்வாகிகளை மாற்றி அமைத்திருக்கிறார் ஜெயலலிதா. இந்தக் குழுவின் நோக்கமே, சமூக வலைத்தளங்களில் தி.மு.கவின் பிரசாரத்திற்கு உடனுக்குடன் பதில் கொடுப்பதுதான். இதற்காக, வாட்ஸ்அப் குரூப், பேஸ்புக் குரூப் என குழுவாக இயங்குகிறார்கள். இவர்கள்தான் டீம் அம்மா விஷன்234, வாட்ஸ்அப்பில் பாட்டி பேசும் வீடியோ, யூ ட்யூப்பில் ஜெயலலிதா அரசின் சாதனைகள் என கலங்கடிக்கின்றனர்.

ஏப்ரல் முதல் வாரத்தில் முதல்வரின் பிரசார வாகனம் டாப் கியரில் பறக்கப் போகிறது. இதில், சீனியர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்களோ இல்லையோ, அடிமட்டத் தொண்டர்களுக்கு கூடுதல் டானிக்காக இருக்கும் என்கிறார்கள் கார்டன் வட்டாரத்தில்.

-ஆ.விஜயானந்த்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close