Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தண்ணீருக்காக நம் குழந்தைகள் பிச்சை எடுப்பது நமக்கு விருப்பமா...?

‘காவோடு அறக்குளம் தொட்டல் மிக இனிது’ - இனியவை நாற்பது
(குளம் அமைப்பதோடு சோலைகளை அமைத்தல் அறச்செயல்)

 

விஞர் ஆடன் கூறியது போல் காதலில்லாமல் ஆயிரக்கணக்கானோர் வாழ்ந்திருக்கிறார்கள்; ஆனால் தண்ணீர் இல்லாமல் யாரும் வாழ்ந்ததில்லை.  ஆம், தண்ணீர் இன்றி இங்கு ஒரு அணுவும் அசையாது. தமிழர் பண்பாட்டில், நிலம் என்பது உடம்பு; நீர் என்பது உயிர். நிலம் எனும் உடலை காக்கவேண்டுமென்றால் நீரை காக்க வேண்டும். இதையே திருமூலர், “உடம்பால் அழியின் உயிரால் அழிவர் ” என்றார். ஆனால், நாம் நீர்நிலை அழித்து கட்டடம் சமைக்கிறோம்.

The world watch என்ற அமைப்பு, “நாம் வாழும் காலத்தில் மிகவும் முக்கியத்துவம் கொடுக்கப்படாத உலகளாவிய சுற்றுச்சூழல் சவால் தண்ணீர் பற்றாகுறையாக இருக்கலாம்” என்கிறது. ஆம். நாம் ஆபத்தின் விளிம்பில் இருக்கிறோம். ஒரு பக்கம் நீர் நிலைகள்  மூடப்பட்டு, கட்டடங்கள் முளைத்து கொண்டிருக்கின்றன, இன்னொரு பக்கம் நன்னீர் முழுவதும் கார்ப்பரேட்டுகளின் கைகளுக்கு அசுர வேகத்தில் போய் கொண்டிருக்கிறது.  நம் நிலப்பரப்பு அனைத்து திசைகளிலும் நீரால் சூழப்பட்டுள்ளது என்றால்,  அந்த நீர் நிறுவனங்களால் சூழப்பட்டு இருக்கிறது.

நன்னீர் மாசுபடுதலும், நிறுவனங்களும்:

உலக நாகரிகங்கள் எல்லாம் நீர்நிலைகள் அருகிலேயே தோன்றின. ஆனால், இன்று மூன்றாம் உலகம் நாடுகளில், பொது சமூகத்திலிருந்து ஒதுக்கப்பட்டவர்கள் எல்லாம் மாசடைந்த நீர் நிலைகள் அருகிலேயே தான் வாழ்கிறார்கள். நாம் அசுத்தமானவர்கள், ஏழைகள் என்று வரையறுத்துள்ள பலர், நீர் நிலைகளின் ஓரமாகத்தான் வசிக்கிறார்கள். நம் பொதுபுத்திக்கு இவர்கள்தான் நீர் நிலைகளை மாசுப்படுத்தியவர்கள், நம் நீர் நிலைகள் எல்லாம் இவர்களால்தான் மாசடைந்தது என்ற எண்ணம் வரும். ஆனால், அந்த தோற்றம் வெற்றிகரமாக அரசாலும், நிறுவனங்களாலும் ஏற்படுத்தப்பட்டவை. ஆம். எந்த நீர் நிலைகளும், அதை சார்ந்து வாழ்ந்தவர்களால் மாசடையவில்லை, அனைத்தும் நிறுவனங்களாலும் அரசுகளாலும் மட்டுமே மாசடைந்துள்ளது. அதற்காக, மக்களின் கைககளில் கறை இல்லை என்று சொல்லவில்லை. பொது சமூகத்திடமும் தவறு இருக்கிறது. ஆனால், நீர் நிலைகளை திட்டமிட்டு கொலை செய்தது நிறுவனங்கள் தான். இந்தியா என்று இல்லை, உலகம் முழுவதும் இதுதான் நிலை.

நீர் நிலைகள் மாசடைவதில், நிறுவனங்களுக்கு இரண்டு லாபங்கள் இருக்கிறது. ஒன்று அரசு நீர் மேலாண்மையில் தோல்வி அடைந்துவிட்டது என்று ஒரு பிம்பத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவது. இதன் மூலம்,  நீர் நிலைகளை தனது கட்டுப்பாட்டிற்கு கொண்டு சென்று, நீரை இயற்கையின் கொடையாக கருதாமல், முழு விற்பனை பண்டமாக மாற்றி, அதிக இலாபம் சம்பாதிப்பது.  இந்த தந்திரத்தை உலகம்  முழுவதும் உள்ள தண்ணீர் நிறுவனங்கள் வெற்றிகரமாக செய்து கொண்டிருக்கினறன.

உலகமயத்தின் தொடக்க காலத்தில், தண்ணீர்  சார்ந்த விற்பனை பொருள்கள்  அதிகம் இலாபம் தரக்கூடியதாக கருதப்படவில்லை. ஆனால், இப்போது நிலை அப்படி இல்லை.  அமெரிக்க தண்ணீர் தொழில் துறையில்,  இலாபம் மட்டும் 300 சதவீதத்திற்கு மேல் அதிகரித்து இருக்கிறது. அப்படியென்றால், உலக தண்ணீர் சந்தையையும், அதன் மூலம் நிறுவனங்கள் ஈட்டும் இலாபத்தையும் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.  உலகம் முழுவதும், ஏறத்தாழ ஐம்பது நிறுவனங்கள் மட்டுமே, உலக தண்ணீர் சந்தையில் ஆதிக்கம் செலுத்துகின்றன. இந்த நிறுவனங்கள்தான், அரசின் நீர் கொள்கையை தமக்கு சாதகமாக வடிவமைக்க அரசுகளை  நிர்பந்திக்கிறது.  தண்ணீரின் உலக சந்தை மதிப்பு 2020 ல் 279.65 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கும் என்று ஒரு ஆய்வறிக்கை சொல்கிறது. இந்த பெரும் தொகையே, நிறுவனங்கள் நீர் மீதுள்ள தன் பிடியை அவ்வளவு சுலபமாக விடாது என்பதை காட்டுகிறது.


தண்ணீருக்காக ஒரு உலக யுத்தம் :

'ஏன் இந்த வெற்று பிதற்றல்...? இலவசமாக கொடுத்ததால்தான் மக்களுக்கு தண்ணீர் மீது ஒரு மரியாதை இல்லாமல் போய்விட்டது, அதற்கொரு விலை வைப்பதுதான் நியாயம்... ' என்பது உங்கள் வாதமாக இருந்தால், ஒன்றை புரிந்து கொள்ளுங்கள், இங்கு இது வரை எதுவும் இலவசமாக வழங்கப்படவில்லை. ஆம். தண்ணீருக்கான விலை என்பது, நீர் நிலைகளை பாதுகாப்பதாக மட்டுமே இருத்தல் வேண்டும். அதைதான் அரசு மக்களிடம் கோர வேண்டும். அது பணமாக ஒரு போதும் இருக்கக் கூடாது. பணமாக ஆகும் பட்சத்தில் மக்களின் நல்வாழ்வு என்பதை விட நிறுவனங்களின் இலாபம் என்பது முதன்மையாக மாறுகிறது. பணம் படைத்தவர்களுக்குகே ஆரோக்கியமான, பாதுகாப்பான குடிநீர் என்று மாறுகிறது.


சராசரியாக பணம் படைத்த ஒரு வட அமெரிக்கர் ஒரு நாளைக்கு 600 லிட்டர் நீரை நுகர்கிறார். ஆனால், ஆப்பிரிக்காவை சேர்ந்த ஒருவர் வெறும் 6 லிட்டர் நீரைத்தான் பயன்படுத்துகிறார். உலகத்தின் வடகோளத்தில் பிறந்த ஒரு குழந்தை தென்கோளத்தில் பிறந்த குழந்தையைவிட  40 மடங்கிலிருந்து 70 மடங்கு அதிகமான நீரை நுகர்கிறது. இதன் மூலமே நீரில் உள்ள அசமத்துவத்தையும், அதில் படர்ந்துள்ள அரசியலையும் நீங்கள் புரிந்து கொள்ளலாம். சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே நீர்...

உலக வங்கியை இயக்கும் பெரு நிறுவனங்கள், மூன்றாம் உலக நாடுகள் வாங்கிய கடனுக்கு பதிலாக, மூன்றாம் உலக நாடுகளின் தண்ணீர் வளத்தை தனியார் மயமாக்க மறைமுகமாக நிர்பந்திக்கின்றன. ஏழை நாடுகள்,  தங்கள் நாட்டின் பொது குடிநீர் வினியோகத்திற்காக கேட்கும் கடனை உலக வங்கி தர மறுக்கிறது அல்லது ஒரு நிபந்தனையை விதிக்கிறது. “ஏதாவது ஒரு தனியார் தண்ணீர் நிறுவனத்தை அனுமதியுங்கள் அல்லது நிதியில்லை போங்கள்,” என்கிறது. ஆம் தண்ணீர் நீல தங்கம். அதை கவர, அதன் சந்தையை கைப்பற்ற அனைவரும் துடிக்கிறார்கள்.

இது சாதாரண பிரச்னை அல்ல. ஆம். 2025 -ம் ஆண்டுக்குள், இவ்வுலகில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் தண்ணீர் பிரச்னையை சந்திப்பார்கள். இனியொரு போர் வந்தால், அது நிச்சயம் தண்ணீருக்கானதுதான். அப்போது நிறுவனங்கள் ஒதுங்கிக் கொள்ளும், பாதுகாப்பான இடத்தில் அது இருக்கும். நாமும், நம் குழந்தைகளும்தான் சாவோம்.

இந்த நிலை நடக்க கூடாதென்றால், தண்ணீர் மீது மக்களின் உரிமையை நிலை நிறுத்துவோம்.


இன்று உலக தண்ணீர் தினம்

- மு. நியாஸ் அகமது


 

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ