Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விஜயகாந்திற்காக காத்திருக்கும் அதிமுக வேட்பாளர் பட்டியல்!

தேமுதிக வட்டாரத்தில் இப்படி பேசிக் கொள்கிறார்கள்....

'வேட்பாளர் பட்டியலை வெளியிடுவதில் அதிமுக பெரிதும் தயங்குவதற்கு எங்கள் கேப்டனே காரணம்.  தேமுதிகவின் முடிவை எதிர்நோக்கியே, அதிமுக காத்திருக்கிறது. அன்று பர்கூரில் அதிமுகவின் ஸ்டார் வேட்பாளர் ஜெயலலிதாவை எதிர்த்து  சாதாரண நிலையிலிருந்த திமுக வேட்பாளர் சுகவனம் தேர்தலில் வென்றார்... சுகவனத்தை , யானை காதில் நுழைந்த கட்டெறும்பு என்று தேர்தல் வெற்றிக்கு பிறகு கருணாநிதி வர்ணித்தார்... இப்போது தேமுதிகவின் சுகவனம் எங்கள் கேப்டன்'  என்கின்றனர்.

தமிழக அரசியலில் என்னதான் நடக்கிறது? 


பாஜகவின்  மாநில, தேசிய அளவிலான லீடர்கள் பலமுறையும், மக்கள் நலக் கூட்டணியினர் பலமுறையும் தேமுதிகவை தங்கள் கூட்டணிக்குள் கொண்டுவரும் முயற்சியில் நேரடியாக ஈடுபட்டனர். திமுக அப்படி நேரடியாக இறங்காமல் மறைமுகமாக தூதுப் படலத்தை தொடர்ந்தது. ஒரு கட்டத்தில் திமுகவின் தலைமையும், திமுகவின் கூட்டணியில் இருக்கும் காங்கிரசும் தேமுதிக எங்களோடு கைகோர்க்க வேண்டும் என்று நேரடியாகவே அழைப்பை விடுத்தன. 

திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு எத்தனை சீட் என்றே பேசி முடிவாகி விட்டதாக ஒருபுறமும்... இல்லை, இல்லை தேமுதிகவின் கேப்டன் எங்களோடுதான் இருக்கிறார் என்று பாஜக ஒருபுறமும்  தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பிக்கொண்டிருந்தன. இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான், சென்னை ராயப்பேட்டையில் பொதுக்கூட்ட மேடையிலேயே,  கூட்டணிக்கு வரச்சொல்லிக் கூப்பிட்டவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டதோடு, " தேமுதிக தனித்தே களம் காணும்... வேண்டுமென்றால் எங்கள் தலைமையை ஏற்கிற கட்சிகள் எங்களைத் தேடிவரலாம்" என்று பகிரங்கமாக தன்னுடைய நிலைப்பாட்டை அறிவித்தார் விஜயகாந்த்.

விஜயகாந்தின் இந்த அறிவிப்பானது தமிழகத்தின் 2016-ன் அரசியல் சூழலை அப்படியே மாற்றிப் போட்டது. இனி, யார்- யாருடன் இருப்பார்கள் ? இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ,  ம.தி.மு.க. , விடுதலைச் சிறுததைகள் என்ற நால்வர் அணி ஐவராக தேர்தலைச் சந்திக்கும் ஒரு எதிர்பார்ப்பும் இதனால் தகர்ந்தது.

தேமுதிக,  கூட்டணிக்குள் வருவதாக இருந்தால் அவர்களுக்கு கொடுக்கும் இடங்கள் போக,  சூழல் பார்த்து காங்கிரசுக்கு எவ்வளவு கொடுக்கலாம் என்ற கணக்கில் இருந்த திமுகவின் ஃபார்முலாவும் உடைந்தது.
 "யார் தயவும் எங்களுக்குத் தேவையில்லை... நாங்கள் சிங்கிளாகவே ஜெயிப்போம்" என்று தன்னுடைய பயத்தை வெளிக் காட்டாமலே சவால் விட்டுக் கொண்டிருந்தது அதிமுக. அவர்களைப் பொறுத்தவரையில் தேமுதிகவும், பாமகவும் திமுக கூட்டணிக்குள் போகாதவரை பெரிய பாதிப்பு ஒன்றுமில்லை என்ற அளவிலேயே நின்றனர்.

தமிழக சட்டமன்றத் தேர்தலில்,  கூட்டணி வைக்காமலே தனித்து நிற்பதாக விஜயகாந்த் போல அதிமுக இந்த நிமிடம் வரை வெளிப்படையாக அறிவிக்காமலே இருக்கிறது. கடைசி கட்டத்தில் தேமுதிக, தன்னுடைய நிலைப்பாட்டில் மாற்றத்தை கொண்டு வந்து விட்டால் என்னாகும் என்ற எண்ணம் அதிமுகவுக்குள் தொடர்ந்து கிலியை கிளப்பிக்கொண்டிருக்கிறது.

இதுபற்றி அதிமுகவின் சீனியர்கள் தரப்பில் பேசியபோது, '' அதீத பீதியின் காரணமாகவே இதுவரையில்   கட்சியில் இல்லாத புது பாணி நேர்காணல் நடக்கிறது, நடக்கிறது, நடந்து கொண்டே இருக்கிறது. அது மட்டுமல்ல, தமிழ்மாநில காங்கிரசுக்கு கூட்டணியில் இடம் உண்டு என்ற நிலையிலும் அதுபற்றி வாசனோ, அதிமுக தலைமையோ எந்த வார்த்தையையும் வெளியில் விடவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் கட்சித் தலைமையே கடுங் குழப்பத்தில் இருப்பதால்தான் பிரசாரத்துக்கும், வேட்பாளர் பட்டியலை ரிலீஸ் செய்வதற்கும் எப்போதும் முந்திக் கொண்டு நிற்கும் அதிமுக இந்த முறை 'சைலண்ட்-மோடில்' இருக்கிறது...'' என்கின்றனர்.

தேமுதிகவின் முடிவைப் பொறுத்தே நாம் ஒரு முடிவை எடுக்கலாம் என்று அதிமுக தலைமை தன்னுடைய அடியை  கவனத்துடன் எடுத்து வைக்கிறது.

தேமுதிகவோ மக்கள் நலக்கூட்டணித் தலைவர்கள் நம்மைத் தேடி வந்து, ' இந்தக் கூட்டணிக்கு நீங்களே முதல்வர் வேட்பாளர் ' என்று அறிவிப்பார்கள் என்று ஒரு பக்கம் காத்திருப்பதால் அவரும் தன்னுடைய வேட்பாளர் பட்டியல் குறித்த அறிவிப்பை வருகிற 30-ம் தேதி வரை தள்ளிப் போட்டிருக்கிறார். (இன்னும் எட்டே நாள்தான் இருக்கிறது, மக்களே) ம.ந.கூ, பதில் என்னவாக இருக்கும்? 30-ம் தேதிக்குப் பிறகு தமிழக அரசியல் கட்சிகளின் முடிவுகள் எப்படியிருக்கும்? என்பதெல்லாம் யோசிக்க வைக்கும் கேள்விகளே.

- ந.பா.சேதுராமன்


 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close