Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அன்று ஒற்றர்கள்... இன்று ஸ்மெல்...! (இன்டலிஜென்ஸ் அரசியல்: மினி தொடர்-5)

சிக்குத்து தலைவர் கூட்டணிக்கு மடங்கிய கதை, தேர்தல் நேரத்து போஸ்டிங்குகள், கூட்டணி முறியடிப்புகளும், தூது டெக்னிக்குகளும் ஆகிய தலைப்புகளில் 'இன்டலிஜென்ஸ் அரசியல்' மினி தொடரை மூன்று பகுதிகளாக வெளியிட்டு வந்தோம். நான்காவது பகுதியில், போஸ்டர் மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் நடத்தப்படும் அரசியலையும், அரசியல் கட்சியில் சீட் கேட்டு போடச் சொல்லும் ரிப்போர்ட்கள் வரையில் சொல்லியிருந்தோம். இது, இறுதி (ஐந்தாவது) பகுதி.

'இன்ட்' - எனப்படும் உளவுப்பிரிவின் பணிகள் ஒவ்வொரு காலகட்டத்திலும் எப்படி அரசியலோடு பின்னிப் பிணைக்கப்பட்டிருக்கிறது என்பது குறித்த என்னுடைய சேகரிப்பினை நானே குறுக்காய்வு (கிராஸ்-செக்) செய்த பின்னரே பதிவிட வேண்டும் என்ற முடிவுடன் பலரைச் சந்தித்தேன். அதில் ஒருவர், உச்சி முதல் பாதம் வரை என்பார்களே அது போல இன்ட் விவகாரத்திலேயே ஊறித் திளைத்தவர். அவரைப் பற்றியும், அவர் அனுபவத்தில் ஒன்றைப் பற்றியும் இங்கே பதிவிட்டு தற்போது இந்த மினி தொடரை முடிக்கிறேன்.

முப்பதாண்டு காலம், ஏழு முதல்வர்களை தன்னுடைய சர்வீசில் பார்த்தும், சர்வீஸ் முடிந்த நிலையிலும் இவருடைய பழுத்த அனுபவத்தை  டிபார்ட்மெண்ட் பல்லாண்டுகள் பயன்படுத்திக் கொள்ளும் அளவு இவரின் தேவை கவனிக்கப்பட்டிருக்கிறது. நாம் தொகுத்தளித்த பல விபரங்களை இவரிடம் 'க்ராஸ் செக்' செய்த போது 'டிபார்ட்மெண்ட் பாசம்' இன்னும் பட்டுப் போகாமல் இருப்பதை உணர முடிந்தது. ஆம், அந்த ஒற்றுப்புலி ஆம் என்றோ, இல்லை என்றோ நம்முடைய பயணக்குறிப்பை மறுதலிக்கவில்லை. மாறாக, மெல்லிதாய் ஒரு புன்னகையை மட்டுமே உதிர்த்தது. கழுகின் கூர்மையைக் கொண்ட அவர், எண்பதைக் கடந்தவர். சென்னையில் பலருக்கு ஸ்மெல் என்றால் என்ன என்று வகுப்பெடுத்தவர். டெக்னாலஜி வளராத காலத்திலேயே பல விஷயங்களில் அசத்தியவர். அவருடைய நினைவுப் பதிவிலிருந்து வெளிப்பட்ட ஒரு சாம்பிள் இது.
 
''சமாதியாகி விட்ட வழிபாட்டுக்குரிய தலைவர் அவர். முதல்முறை முதல்வரான சமயம் அது. அவருடைய மூவ்மென்ட்டை பார்த்துச் சொல்ல அவருடைய தோட்டத்துக்கே நம்பகமான நால்வரை ஏதோ ஒரு ரூட்டில் வேலைக்கு அனுப்பி வைத்தார், இப்போதும் இருக்கின்ற அந்தத் தலைவர். ஆரம்பத்தில் அவர்கள் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் 'அவையில்' பொளந்து கட்டி வந்தார், ஆட்களை அனுப்பி வேவு பார்க்கச் சொன்ன அந்த எதிர்க்கட்சித் தலைவர்.

வேவு பார்க்கப் போனவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், ஒவ்வொரு கூட்டத்திலும் எதிர்க்கட்சித் தலைவர், புள்ளி விபரங்களாய் போட்டுத்தாக்க, முதல்வர் சீட்டில் இருந்த அந்தத் தலைவர் பதில் சொல்ல திணறினார். எதிர்க்கட்சிதலைவர் இதை வெகுவாக ரசித்தார், வெற்றிப் புன்னகை புரிந்தார். முதல்வர் சீட்டுக்குச் சொந்தக்காரர் தலையைப் பிய்த்துக்கொண்டு, ஒவ்வொரு நாளையும் திணறலாகவே கழித்தார். ஒருநாள் முதல்வர் மிகவும் சோர்வுடன்  கார்டனில் இருந்ததைப் பார்த்த அன்றைய ஒருங்கிணைந்த மாவட்டச் செயலாளர், பதறிப் போயிருக்கிறார். ''தலைவரே உங்களுக்கு என்னாச்சு?'' என்று விசாரித்துத் தெரிந்து கொண்டுவிட்டு, "தலைவரே இன்னும் சில மணி நேரத்தில் உங்க பிரச்னையை சரி செஞ்சுடறேன்" என்று ஆறுதலைக் கொடுத்துவிட்டு எங்களை வந்து பார்த்தார். ''சீக்ரெட் எப்படி வெளியே போகுதுன்னு எனக்குத் தெரிஞ்சாகணும். உங்ககிட்டே வந்தால் எல்லாம் சரியாகிடும்ணு  தலைவர்கிட்டே சொல்லிட்டுதான் வந்திருக்கேன். உங்க பதிலைத்தான் தலைவரும் எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கிறார்'' என்றார். இதைத் தொடர்ந்து, நாங்களும் அதில் தீவிரமாக கவனம் செலுத்தினோம். மொத்தக் கதையும் வெளியே வந்து விட்டது.

முதலில் தலைவரின் (முதல்வர்) ரூட், அவர் எங்கெங்கு போகிறார்? என்னவெல்லாம் சாப்பிடுவார்? யார், யாரை எப்போதெல்லாம் சந்திப்பார், அவருடைய உதவியாளர்கள், சமையல்காரர்கள் யார்? அவர்களின் வீடுகள் எங்கு இருக்கிறது? தலைவரோடு நெருக்கத்தில் இருக்கும் நண்பர்கள் யார்? தலைவர் பொதுவாக எந்த மாதிரியான இடங்களில் இயல்பாகப் பேசுவார். இப்படி அவருடைய ஒரு மூவ்மெண்ட்டையும் தனித்தனியாக 'நோட்' போட்டுக் கொண்டு வேலையில் இறங்கினோம்.

மொத்தம் ஏழு டீம். யார் கையில் என்ன வேலை கொடுக்கப்பட்டிருக்கிறது என்று இந்த டீமில் உள்ளவர்களுக்கே தெரியாதபடி கவனித்துக் கொண்டோம். அதுதான் முதலில் முக்கியமான விஷயம். இல்லையென்றால் வேலை நடக்காது, குழப்பங்கள்தான் மிஞ்சும். தலைவரிடம் நான்கு நாள் மட்டுமே அவகாசத்தைக் கேட்டு வாங்கினோம். இப்போது போல் அந்த காலத்தில் செல்போன் வசதிகள் இல்லை. எங்கள் டிபார்ட்மெண்ட்டிலேயே இன்ஸ்பெக்டர் லெவலுக்குத்தான் டேபிளில் லேண்ட் லைன் போன் இருக்கும். அதற்குக் கீழே உள்ளவர்கள் இன்ஸ்பெக்டர் இல்லாத நேரமாகப் பார்த்து அந்த அறையில் சென்று போன் பேசிவிட்டு வருவார்கள். சரி, இதைப் பேசுவோம். நாங்கள் செலக்ட் செய்த ஆறு டீமும் குறித்த நேரத்தில் சரியாக வந்து தங்களின் ரிப்போர்ட்டைக் கொடுத்து விட்டார்கள். ஏழாவது டீம் கொடுத்த ரிப்போர்ட்டை நானே ஸ்பாட்டுக்குப் போய் கிராஸ்- செக் செய்தேன். எல்லாம் நல்லபடியாக முடிந்தது.

பெரும்பாலும் தோட்டத்தில் கயிற்றுக் கட்டிலை போட்டு வைத்துக் கொண்டு இயற்கையான வெளிக்காற்றை திறந்த மார்போடு அனுபவித்தபடி தலைவர் இருப்பது வழக்கம். அங்கிருந்தபடியே பல விஷயங்களை முக்கியமான கட்சியினரிடம் விவாதத்தில் ஈடுபட்டு வந்திருக்கிறார். அங்கிருந்துதான் தகவல் 'லீக்' ஆகியிருக்கிறது. தலைவர் வீட்டுத் தோட்டக்காரர்களாய் வந்த அந்த நான்கு பேர்தான் இதற்கெல்லாம் காரணம் என்பதைக் கண்டு பிடித்தோம். வீட்டு வேலைக்கென்று தனி உதவியாளர் யாரையும் தலைவர் அப்போது வைத்துக் கொண்டிருக்கவில்லை. முக்கியமானவர்கள் யாராவது வீட்டுக்கு வந்து விட்டால், இளநீர் பறித்து வெட்டிக் கொடுக்கவும், சுக்கு காப்பி போட்டுத் தரவும் இந்த நான்கு பேர்தான் இருந்துள்ளனர். நான்கு பேருமே வெவ்வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். திடகாத்திரமான பட்டதாரி இளைஞர்கள். எங்களுடைய டிபார்ட்மெண்டைச் சேர்ந்தவர்கள். இவர்கள் யார் மூலமாக தலைவர் வீட்டுக்கு வேலையாட்களாக நுழைந்தார்கள் என்பது உள்பட அத்தனை தகவலையும் திரட்டி விட்டோம்.

அங்கிருந்த மரங்களிலும், முக்கிய இடங்களிலும் 'பொருத்தப்பட்டிருந்த' சமாச்சாரங்களையும் தலைவரிடம் காட்டினோம். (அதற்குப் பிறகு அந்த இடத்துக்கு வந்து நிற்கும் போதெல்லாம் தலைவரும் அப்படியே பிளேட்டை திருப்பி விடுவது போல் குழப்பமான விஷயங்களாக அள்ளி விட்டதும் மறுநாள் அது எதிர்முகாமில் அதைவிட குழப்பங்களை ஏற்படுத்தியதும் மறக்க முடியாத நினைவலைகள்)

கையும் களவுமாக சிக்கிக் கொண்ட அந்த இளைஞர்கள், "எங்களை மன்னிச்சுடுங்க ஐயா, ஏதோ ஒரு வேகத்தில் நடந்திடுச்சு. வேலையை விட்டு மட்டும் அனுப்பிடாதீங்க" என்று கெஞ்ச ஆரம்பித்து விட்டனர். அந்த இளைஞர்களைப் பார்த்து தலைவர் இப்படி சொன்னார், "தம்பீங்களா, அங்கே உங்களுக்கு என்ன கொடுக்கறாங்களோ அதை நீங்க எப்போதும்போல மறுக்காமல் வாங்கிடுங்க, அவங்களுக்கு எந்த சந்தேகமும் உங்க மேலே வந்திடாமல் பார்த்துக்கங்க. நான் உங்களுக்கு செய்ய வேண்டியதை நிறையவே செய்யறேன். இதில் ஏதாவது குளறுபடி ஆச்சுன்னா, நான் ஒரிஜினல் ஸ்டைலுக்கு மாறிடுவேன்" என்றார். அந்த இளைஞர்கள் இதற்குப்பின்னும் மாறுவார்களா, என்ன?

இதற்குப் பின் வந்த நாட்களில் அவையில் புள்ளி விபரங்களோடும், தலைவர் நாளைக்கு என்ன செய்யப் போகிறார் என்பதை அதற்கு முதல்நாளே அச்சு அசலாக பேசிய அந்த எதிர்க்கட்சித் தலைவர், பின்னர் தவறான, ஆதாரமற்ற விஷயங்களை பேசி அடிக்கடி சிக்கலில் மாட்டிக் கொண்டார். பிற்காலங்களில், அந்த எதிர்க் கட்சித்தலைவர் ஏன் இப்படி நடந்து கொண்டார் என்று விசாரித்தேன். நெருக்கடி காலங்களில் தனிப்பட்ட கோபம் காரணமாக, தன்னையும், தன் பிள்ளையையும் தப்பிக்க முடியாதபடி சிக்க வைத்தவர் இந்த தலைவர்தான், ஆகவே அவரை பழி வாங்கவே இப்படி நடந்து கொண்டேன் என்று அந்த எதிர்க்கட்சி தலைவர் பலரிடமும் சொல்லியதாக அறிந்து கொண்டேன்.

ஆக, இந்த ஸ்மெல் விவகாரம் ஏதோ இன்று நேற்று புதிதாய் முளைத்தது அல்ல. மன்னர் காலத்தில் ஒற்றன் எப்படியெப்படி பயன் பட்டாரோ அப்படித்தான் இன்றும் நடைமுறை இருக்கிறது. இன்று மன்னர்கள் இல்லை, மந்திரிகள் இருக்கிறார்கள். ஒற்றர்களுக்குப் பதிலாக நாங்கள் இருக்கிறோம் அவ்வளவுதான் இதில் வித்தியாசம்" என்றார், சாதாரணமாக...!
 
ந.பா.சேதுராமன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close