Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கோயம்பேட்டில் கொள்கைகளை தேடும் அரசியல் தலைவர்கள்!

ரு வழியாக தமிழக தேர்தல் களத்தில் நிலவி வந்த குழப்பம் தீர்ந்துவிட்டது. வெற்றிகரமாக பழம் நழுவி பாலில்  விழுந்துவிட்டது. என்ன... சின்ன மாற்றம்,  இன்னொருவர் கோப்பையில் இருந்த பாலில் விழுந்து இருக்கிறது.

எந்த பெரிய கட்சிகளும் கூட்டணியில் இல்லாமல் திமுகவும், அதிமுகவும் தேர்தலை சந்திக்க உள்ளன. தேர்தல் களத்தில் ஆறு முனைப் போட்டி. சமீபகால தேர்தல் வரலாற்றில், இத்தனை முனைப் போட்டிகள் இருப்பது, இதுவே முதன்முறை. இனி கட்சிகள், தேர்தல் அறிக்கை, பிரசாரம் என்று பரபரப்பாகும். தலைவர்கள் உங்கள் வீதிக்கு வருவார்கள். நீங்கள் அந்தப் பகுதி முக்கியஸ்தராக இருந்தால்,  உங்கள் வீட்டிற்கே கூட வருவார்கள். தேனொழுக பேசுவார்கள், மன்னிப்பு கேட்பார்கள், வேட்பாளர்கள் உங்கள் காலில் விழுவார்கள். நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், அனைத்து கூத்துகளும் நடக்கும்....இது அனைத்தும் யாருக்காக அல்லது எதற்காக...? கொஞ்சம் விழிகளை மூடி யோசியுங்கள்.

நம் நலனுக்காக தான், இவர்கள் இவ்வளவு தியாகம் செய்கிறார்களா...?

என்ன யோசித்து விட்டீர்களா...?  நம் நலனுக்காகவும், நம் முன்னேற்றத்திற்காகவும்தான் இவர்கள் தம் சுயமரியதையை இழந்து, இவ்வளவு தியாகங்களை செய்கிறார்கள் என்பது நிச்சயம் உங்கள் பதிலாக இருக்காது என்று நம்புகிறேன். பிறகு ஏன் இவர்கள் இவ்வளவையும் செய்கிறார்கள்...? குறிப்பாக தங்கள் கொள்கைகளுடன் ஒத்துப் போகாத கட்சிகளுடன் ஏன் கூட்டணி அமைக்கிறார்கள்...? சின்ன விடைதான். அரசியல் அதிகாரம், அதை தேர்தல் வெற்றி மூலமாக பெறுவது. அதாவது, கொள்கைகள் கூட இரண்டாம் பட்சம் தான், தேர்தல் வெற்றி மட்டும்தான் இலக்கு. இதில் திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட் என்று எந்த கட்சிக்கும் வித்தியாசம் இல்லை. சில கட்சிகள் இந்த தேர்தலில் தனியாக தேர்தலை சந்திப்பது, தங்களுடன் யாரும் கூட்டணி அமைக்க முன்வராத காரணத்தினால் மட்டுமே. மற்றபடி அவர்களுக்கும், மற்றவர்களுக்கும் எந்த பெரிய வித்தியாசமும் இல்லை...

“உண்மைதான். மறுப்பதற்கில்லைதான். ஆனால், தேர்தல் களத்தில் பலமாக இருக்கும் கட்சிகளை வேறு எப்படி எதிர் கொள்வது...? அவர்கள் தொடர்ந்து மக்கள் விரோதமாக நடந்து கொள்ளும்போது, அவர்களை வீழ்த்த சில தந்திரங்களை செய்யத்தானே வேண்டும்...? அதுவும், அனைத்து கட்சிகளும் தேர்தலில் தனித் தனியாக நின்றால் வாக்குகள் சிதறும், அது ஏற்கெனவே வலுவாக இருக்கும் கட்சிகளுக்குதானே நன்மை பயக்கும். அதனால் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பதில் எந்த பிழையும் இல்லை...” - இவை நமக்கு நாமே சொல்லிக்கொள்ளும் சமாதானங்கள். இதை நீங்கள் தர்க்கமாக யோசித்தால், சரி என்பதுபோல்தான் இருக்கும். ஆனால், தந்திரங்கள் எப்போதும் அறமாக இருக்க முடியாது.

ஒத்த கொள்கைகள் உடையவர்களை கொண்டு தேர்தலில் கூட்டணி அமைப்பதில் பிழை இல்லை. சில உதிரிகள், தங்கள் பிரதிநிதித்துவத்திற்காக, பெரிய கட்சியுடன் கூட்டணி வைப்பதை கூட புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், சித்தாந்தத்தால் மாறுபட்டவர்கள், சித்தாந்தம் என்றே ஒன்று இல்லாதவர்கள் இணைந்து கூட்டணி அமைப்பது எத்தைகைய அரசியல் அல்லது யாருக்கு நன்மை பயக்கும் அரசியல்...?  

இது அப்பட்டமான அரசியல் சுயநலம்:

மக்களை இந்த கட்சிகள் எவ்வளவு முட்டாளாக நினைக்கின்றன என்பதற்கான சான்று, தேமுதிகவை தங்கள் கூட்டணியில் சேர்த்துக் கொள்ள அவர்கள் அலைந்ததுதான். நிச்சயம். தேமுதிகவையோ அதன் தலைவர் விஜயகாந்தையோ நான் குறை கூறவில்லை. தம் கட்சிக்கென எந்த கொள்கைகளையும் வரையறுக்காமல், இன்னும் திரை கதாநாயகன் போல் வாழ்ந்து வருபவர் அவர். ஆனால் தம்மை கொள்கை குன்று எனக் கருதி கொள்ளும் திமுக, மக்கள் நலக் கூட்டணியில் இருக்கும், தங்களை புரட்சிகரமான இயக்கம் என்று பறைச்சாற்றி கொள்ளும் கம்யூனிஸ்ட்கள், ஈழம் தொடங்கி காஷ்மீர் வரை என அனைத்திலும் ஒரு கருத்து வைத்திருக்கும் மதிமுக என அனைத்து கட்சிகளும் அவருக்கு அழைப்பு விடுத்தன. அவரை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக் கொள்கிறோம் என்று உறுதியளித்தை அடுத்து, மக்கள் நலக் கூட்டணியில் அவர் இணைந்துள்ளார். 

இது எந்த கொள்கையின் மீது எழுப்பப்பட்ட கூட்டணி...? எந்த கொள்கை கவர்ந்ததால் அவரை முதல்வராக முன்னிறுத்த கம்யூனிஸ்ட்டுகள் ஒத்துக் கொண்டார்கள்...? தமிழகத்தில் எதிர்கட்சியாக இருந்த தேமுதிக, சாதிய படுகொலைகளுக்கு எதிராக தொடர்ந்து போராடி இருக்கிறதா...? பின், ஏன் விடுதலை சிறுத்தைகள் அவருடன் கரம் கோர்க்கிறது....?  இவர்கள், ஒரு வேளை நாளை வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் கூட எத்தகைய மாற்றத்தை கொடுத்துவிட முடியும்...?

எதற்கெடுத்தாலும் ஆரிய - திராவிடக் கதை சொல்லும், திராவிடக்  கொள்கைகளின் மொத்த பிரதிநிதியாக காட்டி கொள்ளும் கருணாநிதி, விஜயகாந்திற்காக காத்து இருந்தது ஏன்...? பால், பழம் எனக் கதை சொல்லியது ஏன்...? விஜயகாந்தும் திராவிடர் என்ற ஒற்றை காரணம் போதுமா...? வீதி... வீதியாக சென்று மக்களை சந்தித்து,  மக்களிடம் மன்னிப்பு கேட்ட ஸ்டாலினுக்கு தன் ஆற்றலைவிட... விஜயகாந்த் மீதுள்ள பிம்பத்தின் மீதுதான் நம்பிக்கை அதிகமா...?  சமத்துவ மக்கள் கட்சியை இரண்டாக உடைத்து, இப்போது இருவருடனும் கூட்டணி பேசி கொண்டிருக்கிறார் ஜெயா. இது என்ன டிசைன் என்றே புரியவில்லை.

பா.ஜ.க யார் வந்தாலும்  வண்டியில் ஏற்றிக் கொள்ளும்  மனநிலையில் தான் இருக்கிறார்கள்.நேற்று வரை விஜயகாந்த் என்ற பழம் நமக்குதான் என்ற நினைப்பில் இருந்தவர்கள், இன்று அவர் மக்கள் நலக்கூட்டணி பக்கம் சாய்ந்தவுடன் அழுகிய பழம் என்று வசைபாடுகிறார்கள். காங்கிரஸை பற்றி குறிப்பிடவேண்டியதே இல்லை.

ஆக. கொள்கைகள் பற்றி கவலையில்லை... தேர்தல் வெற்றி மட்டும்தான் ஒரே நோக்கம்.

தேர்தல் வெற்றியால் மட்டும் சமூக மாற்றம் சாத்தியமா...?

தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்றத்தில் நுழைவதால் மட்டும், சமூக மாற்றத்தை ஏற்படுத்தி விட முடியுமா...? நிச்சயம் முடியாது. தேர்தலும், சட்டமன்ற விவாதங்களும் நல்ல ஜனநாயகத்திற்கான அடையாளங்கள் என்றாலும், சமூகத்தில் அதன் மூலமாக மட்டும் மாற்றங்களை ஏற்படுத்தி விட முடியாது. பல மாற்றங்கள் கீழ் இருந்து கொடுத்த அழுத்தங்கள் மூலமாகதான் சாத்தியமாகி இருக்கிறது. 
 

நீங்கள் இடதுசாரிகள், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் மக்கள் நலனுக்காக மேற்கொண்ட போராட்டங்கள் குறித்து அறியாமல் எழுதுகிறீர்கள். அனைத்து விஷயங்களிலும் நாங்கள் மக்கள் பக்கம் நின்றிருக்கிறோம் என்கிறீர்களா...?. ஆம். ஒத்துகொள்கிறேன். வாச்சாத்தி சித்ராவிடம் கேட்டால் மார்க்சிஸ்ட்டுகள் வாசாத்தியில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தொடுத்த சட்டப்போராட்டத்தை கண்ணீருடன் விவரிப்பார்,  மன்னார்குடி முருகையனிடம் கேட்டால்,  வைகோ மீத்தேன் திட்டத்தை எதிர்த்து களத்தில் போராடியதை சொல்வார்...  புரிகிறது. ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகளாக எதிர்க்கட்சி தலைவராக இருந்தும், மக்கள் நலனுக்காக எந்த பெரிய போராட்டத்தையும் முன்னெடுக்காத தேமுதிகவுக்காக நீங்கள் காத்திருந்தது எதற்காக...?   உங்களை நம்பி மக்கள் வாக்களிக்கமாட்டார்கள் என்று நீங்கள் நம்புவீர்கள் என்றால்,  மக்களின் நம்பிக்கையை பெறத்தான் உழைக்க வேண்டுமே தவிர, கூட்டணி அமைத்து குறுக்கு வழியில் வென்றுவிடலாம் என்று நினைக்கக் கூடாது. மக்கள் நம்பிக்கையை பெற சில காலம் பிடிக்கும். ஆனால், அது தான் சரியான வழி. நீங்கள் உடனடி அற்ப நலனுக்காக, இது போல் கூட்டணி அமைப்பது, மக்கள் உங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையைதான் சிதைக்கும்.  
 

மக்கள் மீது உண்மையான அக்கறையும், அவர்களின் நலனும்தான் பிரதானமென்றல், தேர்தல் வெற்றிகளை முதன்மையாக கொள்ளாமல், அரசியல் கட்சிகள் மக்கள் தளத்தில் தொடர்ந்து வேலை செய்ய வேண்டும். அவர்களின் நம்பிக்கையை பெற வேண்டும். மக்கள் தளத்தில் தொடர்ந்து வேலை செய்யும் ஒத்த கருத்துடையவர்கள் இணைந்து கூட்டணி அமைக்க வேண்டும். அதுதான் உண்மையான மாற்றாக இருக்கும். இல்லையென்றால், இது மற்றுமொரு கூட்டணியாகதான் இருக்கும்.

- மு. நியாஸ் அகமது
 

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ