Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'இன்னும் பேப்பரே படிக்கலை' என்பவர்தான் 'மாற்று அரசியல்' முதல்வர் வேட்பாளரா?

'அ.தி.மு.க, தி.மு.க.வுக்கு மாற்று’ என்கிற குரல், தமிழக அரசியல் அரங்கில் அவ்வப்போது எழுந்து அடங்குவதுண்டு. ஆனால் இந்த முறைதான் அது அழுத்தமாக ஒலித்திருக்கிறது, அதுவும் அ.தி.மு.க.வுக்கு எதிராக தி.மு.க. வலுவான கூட்டணியை அமைக்கமுடியாத அளவுக்கு.

நாற்பது ஆண்டுகளுக்கு மேலான திராவிடக் கட்சிகளின் ஆட்சி, மக்கள் மத்தியில் ஒரு சலிப்பை ஏற்படுத்தியிருப்பதை உணரமுடிகிறது. ஒட்டுமொத்தமாக திராவிடக் கட்சிகளின் ஆட்சிகளால் தமிழ்நாடு நாசமாய்ப் போனது என்று சொல்லிவிட முடியாது. இட ஒதுக்கீடு, கல்வி வளர்ச்சி, தொழில் வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி ஆகியவை,  மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும்போது திராவிடக் கட்சிகளின் ஆட்சிகளில் தமிழகம் அடைந்த பலன்கள். அதேநேரம் ஊழல், வாரிசு அரசியல், குடும்ப அரசியல், தனிமனிதத் துதி, எதேச்சதிகாரம் ஆகியவை திராவிடக் கட்சிகளின் ஆட்சிகள் தமிழகத்துக்கு இழைத்த தீங்குகள். இவற்றை அடியோடு அழிக்க ‘மாற்று’ வேண்டும் என்று சொல்வதில் எந்தத் தவறுமில்லை. ஆனால், அதேநேரத்தில் தாங்கள்தான் ‘மாற்று’ என்று சொல்லிக்கொள்கிறவர்களின் தகுதிதான் என்ன?


குடும்ப அரசியல், வாரிசு அரசியல் பாட்டாளி மக்கள் கட்சியிலும் இருக்கிறது. அன்புமணியும் மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கிய ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியிருக்கிறார். ஆடம்பரமான அதன் விளம்பரங்கள் கேலிப்பொருளாகியிருக்கின்றன. ‘ஐயா, சின்ன ஐயா’ போன்ற தனிமனிதத் துதிகளுக்கும் குறைச்சல் இல்லை. கூடுதலாக தலித் மக்களுக்கு எதிராக ஆதிக்கச் சாதிச் சங்கங்களை அணிதிரட்டி, சாதியப் பதட்டத்தை உருவாக்கிய பா.ம.க, ஆட்சியில் அமர்ந்தால் என்ன ஆகுமோ என்ற அச்சமும் இருக்கிறது. தேசிய நாயகனாக முன்னிறுத்தப்பட்ட மோடியின் பிம்பம் உடைந்தநிலையில், தமிழகத்தில் வேரோ வாக்குவங்கியோ இல்லாத பாரதிய ஜனதா ‘மாற்று’ என்னும் சொல்லுக்கு அருகில்கூட வரத் தகுதியற்றது. ’நாம் தமிழர்’ கட்சி தங்களை மாற்று என்று முன்னிறுத்திக்கொண்டாலும்,  தூய இனவாதமும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக சீமானால் அரங்கேற்றப்படும் நகைக்க வைக்கும் நிகழ்வுகளும் அந்தக் கட்சியின் மீதான மதிப்பைக் கீழிறக்குகிறது.

தேர்தலுக்கு முன்பே மக்கள் பிரச்னைகளுக்காகப் போராடுவதற்காக ஒரு கூட்டமைப்பை ஏற்படுத்தியவகையில் ‘மக்கள்நலக் கூட்டமைப்பு’ கவனம் பெற்றது. மனிதநேய மக்கள் கட்சி அதிலிருந்து வெளியேறியபோதும், ஒற்றுமையான செயல்பாடுகளாலும் தொடர்ச்சியான அரசியல் நடவடிக்கைகளாலும் ‘மக்கள்நலக்கூட்டணி’க்கு சாதகமான மனநிலை கணிசமான அளவு வளர்ந்துவந்தது. குறிப்பாக இடதுசாரி சிந்தனை கொண்டவர்கள், சாதி எதிர்ப்பாளர்கள் போன்றவர்கள் இந்தக் கூட்டணியை நம்பிக்கையோடு நோக்கினார்கள். ஊழல், வாரிசு அரசியல், குடும்ப அரசியல், எதேச்சதிகாரம், தனிமனித வழிபாடு ஆகியவை இந்தக் கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகளிடம் பெரும்பாலும் இல்லை என்பது ஆறுதல் அளிக்கக்கூடிய விஷயமாக இருந்தது. தனிமனிதத் தலைமையை முன்னிறுத்தாமல் கூட்டுத்தலைமை, கூட்டுச்செயல்பாடு ஆகியவற்றை முன்னிறுத்தியும், தமிழக கூட்டணி வரலாற்றில் முதன்முறையாக ‘குறைந்தபட்ச செயல்திட்டம்’ ஒன்றை உருவாக்கியதும் மக்கள்நலக்கூட்டணி மீதான மரியாதையை அதிகப்படுத்தியது. மேலும் இந்த நான்கு கட்சிகளும் தாங்கள் ஏற்றுக்கொண்ட கொள்கைகளுக்காக, ஒப்பீட்டளவில் உறுதியாக நிற்பவர்கள். ஈழப்பிரச்னை, முல்லைப் பெரியாறு பிரச்னை போன்றவற்றில் சி.பி.எம்முக்கும்,  ம.தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளுக்கும் கொள்கை வேறுபாடுகள் இருந்தாலும்கூட, ஊழல் எதிர்ப்பு, மதுவிலக்கு, சமூகநீதி போன்ற பல கொள்கைகள் இவர்களுக்கு இடையே ஒத்துப்போனவை.

இப்படிப் பல சாதகமான அம்சங்களைக் கொண்ட மக்கள் நலக்கூட்டணி, விஜயகாந்தை முதல்வர் வேட்பாளர் என்று அறிவித்து, பெரும்பாலான தொகுதிகளை அவருக்குத் தூக்கிக்கொடுத்திருப்பதன் மூலம் அத்தனை நம்பிக்கைகளையும் நற்பெயரையும் குழிதோண்டிப் புதைத்திருக்கிறது.

திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் ஏற்பட்ட தீங்குகளில் எது தே.மு.தி.க.வில் இல்லை? குடும்ப அரசியல்... தே.மு.தி.க.வில் குடும்பம்தான் அரசியல். தனிமனிதத் துதி பற்றிச் சொல்ல வேண்டியதேயில்லை. விஜயகாந்தைப் பொறுத்தவரையில் அவர் எடுத்ததுதான் முடிவு என்கிற எதேச்சதிகாரம்தான் கட்சியின் நிலைமை. இதுவரை ஆட்சி அதிகாரத்தில் இல்லாததால் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகாமல் இருக்கலாம். ஆனால் விஜயகாந்த் ஒரு எதிர்க்கட்சித் தலைவராக என்ன கடமைகளை ஆற்றியிருக்கிறார்? அவர் சட்டமன்றத்துக்குச் செல்லவில்லை என்பதைக்கூட விட்டுவிடலாம். அங்கு எதிர்க்கட்சிகள் பேசுவதற்கே வாய்ப்பு இல்லாதபோது, எப்படி எதிர்க்குரல் எழுப்ப முடியும் என்று கேள்வி எழும்பலாம். ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகளில் ஆளும் கட்சியின் செயல்பாடுகளை எதிர்த்து விஜயகாந்த் எத்தனை போராட்டங்கள் நடத்தியிருக்கிறார்? சிறை சென்றிருக்கிறார்? போராட்டங்களுக்கும் சிறை செல்வதற்கும் பெயர்பெற்ற வைகோவும், திருமாவளவனும், கம்யூனிஸ்ட்களும் போராட்டம் என்றால் என்ன என்றே தெரியாத விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக அறிவிப்பதுதான் மாற்று அரசியலா?


ஓர் அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சித் தலைவர் என்ற நிலையில் அல்ல, ஓர் அரசியல் கட்சித் தலைவர் என்ற நிலையில்கூட பொதுவெளியில் நிதானத்தைக் கடைப்பிடிக்கத் தெரியாத, கருத்துகளைச் சரியான முறையில் வெளிப்படுத்தத் தெரியாத ஒருவரை முதல்வர் ஆக்குவதற்குப் பெயர்தான் மாற்று அரசியலா? ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம். விஜயகாந்துக்கும் மக்கள்நலக்கூட்டணித் தலைவர்களுக்கும் இடையில் கொள்கை வேறுபாடுகள் வரப்போவதே இல்லை. விஜயகாந்துக்குக் கொள்கை என்று ஏதாவது இருந்தால்தானே கொள்கை வேறுபாடுகள் எழும்...?

ஈழப்பிரச்னை பற்றி விஜயகாந்துக்கு என்ன நிலைப்பாடு...? இட ஒதுக்கீடு, சாதிப் பிரச்னை, தீண்டாமை, புதிய பொருளாதாரக் கொள்கை, மதச்சார்பின்மை, நதிநீர்ப் பிரச்னை...? எதிலாவது விஜயகாந்துக்குத் திட்டவட்டமான கொள்கை, செயல்திட்டம் இருக்கிறதா? சாதாரண நாட்டு நடப்புகளைப் பற்றிக் கேள்வி கேட்டாலே, ‘இன்னும் பேப்பரே படிக்கலை’ என்பவர்தான் ‘மாற்று அரசியல்’ முதல்வர் வேட்பாளரா? கருணாநிதி முதல்வராக இருக்கும்போது, திராவிட இயக்கக்கொள்கைகளுக்கு மாறாக நடக்கும்போது கொள்கை அடிப்படையில் கேள்வி கேட்கலாம். ஜெயலலிதாவுக்கு அப்படி கொள்கை என்று எதுவும் பெரிதாக இல்லாவிட்டாலும், அ.தி.மு.க. பெயரளவுக்காவது ஒரு திராவிடக் கட்சி என்ற அளவில் கேள்வி கேட்கலாம். ஆனால், நாளை விஜயகாந்த் முதல்வர் ஆகி தவறு இழைத்தால், எந்தத் தார்மீக அறத்தின் அடிப்படையில் கேள்வி கேட்க இயலும்?

‘மாற்று’ என்ற வார்த்தை, சிந்தனைக்களத்தில் விளைந்த அருமையான வார்த்தை. உலகம் முழுவதும் மாற்றுச் சிந்தனை, மாற்று அரசியல், மாற்றுக் கல்வி, மாற்று மருத்துவம், மாற்றுக் கலாசாரம் என்று உருவான சிந்தனைக் கொடைகள் எல்லாமே மனித வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தையும் மாற்றத்தையும் அடிப்படையாகக் கொண்டு உருவானவை. ஆளும், ஆண்ட அமைப்புகளுக்கு எதிரானது மட்டும் ‘மாற்று’ அல்ல. பலசமயங்களில் நிலவும் ‘எதார்த்தத்துக்கு’ எதிராக, வெகுமக்களின் நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள், சடங்குகளுக்கு எதிராகவும்தான் மாற்று என்பது இருக்கும். ’உலகம் தட்டையானது’ என்ற வெகுமக்களின் நம்பிக்கைக்கு எதிராக, ‘உலகம் உருண்டையானது’ என்ற மாற்றுச் சிந்தனை முன்வைக்கப்பட்டது.


ஆனால் மக்கள்நலக்கூட்டணி முன்வைக்கும் ‘மாற்று அரசியலோ’ , இருக்கும் அரசியல் சூழ்நிலைகளை அப்படியே தக்கவைப்பதோடு மட்டுமல்லாது, மோசமான அரசியல் முடிவுகளுக்கும் வழிவகுக்கிறது.

ம.தி.மு.க ஆரம்பித்து 22 ஆண்டுகள் ஆகின்றன. வைகோ பொதுவாழ்க்கையில் 50 ஆண்டுகளைக் கடந்தவர். தமிழகத்தில் இருந்து நாடாளுமன்றம் சென்றவர்களில் முக்கியமானவர். ஈழப்பிரச்னை, கூடங்குளம் பிரச்னை, ஸ்டெர்லைட் பிரச்னை என பல பிரச்னைகளில் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்தவர். தான் நம்பிய கொள்கைகளுக்காகப் பலமுறை சிறை சென்றவர். ஆனால் அவர் முதல்வர் வேட்பாளர் ஆகமுடியாது. விஜயகாந்துக்கு சால்வை போர்த்தி தர்மன் - அர்ஜூனன் கதை சொல்லத்தான் முடியும். திருமாவளவன் இன்றுள்ள தலித் தலைவர்களில் மக்கள் செல்வாக்கு அதிகம் உள்ளவர். வெறுமனே ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர் என்பதைத் தாண்டி ஈழப்பிரச்னை, தமிழ்த்தேசியப் பிரச்னை என பல பொதுப்பிரச்னைகளுக்காகப் போராடிக்கொண்டிருப்பவர். அவராலும் முதல்வர் வேட்பாளர் ஆக முடியாது. கம்யூனிஸ்ட்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். எந்தக் கூட்டணியில் இருந்தபோதும் மக்களுக்கான போராட்டங்களை முன்னெடுப்பவர்கள். ஆனால் அவர்களில் யாரும் முதல்வர் வேட்பாளர் ஆகமுடியாது.

’தலித் முதல்வர்’ என்ற கோரிக்கை எழுந்தபோது ‘முதல்வர் வேட்பாளரே கிடையாது’ என்று திருமாவளவனே மறுத்தார். ஏனெனில் ஒரு தலித்தை முதல்வர் வேட்பாளராக நிறுத்தினால் வாக்குகள் விழாது என்பதுதான் எதார்த்தம் என்பது மக்கள்நலக்கூட்டணியின் நம்பிக்கை. ’நல்லகண்ணு முதல்வர் வேட்பாளர்’ என்ற குரல்களையும் மக்கள்நலக்கூட்டணி பொருட்படுத்தவில்லை. ஆக, இவையெல்லாம் ‘எதார்த்தங்கள்’ என்றால், அந்த எதார்த்தத்தை மாற்றுவதற்கான எந்த முயற்சியையும் எடுக்காமல் விஜயகாந்தை முதல்வர் வேட்பாளர் என்று அறிவிப்பதற்குப் பெயர்தான் மாற்று அரசியலா?ஆக போராட்டங்களுக்குப் பெயர்போன வைகோ முதல்வர் வேட்பாளர் ஆகமுடியாது, ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலை முன்வைக்கும் திருமாவளவன் முதல்வர் வேட்பாளர் ஆகமுடியாது, நேர்மையின் அடையாளமான நல்லகண்ணு முதல்வர் வேட்பாளர் ஆகமுடியாது, கொள்கையே இல்லாத விஜயகாந்த்தான் முதல்வர் வேட்பாளர் என்றால், அப்புறம் என்ன அதற்குப் பெயர் ‘மாற்று’?

- ரீ.சிவக்குமார்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close