Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

முதலமைச்சர் அவர்களே...! உங்கள் கண்களுக்கு இந்த ஹெப்சிபா தெரிகிறாளா? #supportstreetchilds

சென்னை, மீனம்பாக்கம் விமானநிலையம். பிப்ரவரி 24. கையில் சூட்கேஸை தள்ளிக் கொண்டு வரும் அந்தச் சிறுமியைப் பார்க்கும்போதே மனம் பதைபதைக்கிறது.

சர்வதேச தடகள விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற சிறுமி அவர். அவரை வரவேற்க ஒருவரும் இல்லை. எந்த மாலை மரியாதையும் இல்லை. அதை அந்தச் சிறுமி எதிர்பார்ப்பது போலவும் தோன்றவில்லை. அவள் எப்போதும் போல இயல்பாக இருக்கிறாள். அவளை வரவேற்க எந்த அரசு இயந்திரமும் வரவில்லை. அரசுத் துறைப் பட்டியலில் விளையாட்டுத்துறை என்ற ஒன்று இருப்பதும் நமக்கு மறந்தே போய்விட்டது. சிறுமி நின்ற இடத்தில் விஸ்வநாதன் ஆனந்தோ, சதீஷ் சிவலிங்கமோ இருந்திருந்தால், விமான நிலையமே அதகளமாகி இருக்கும். என்ன செய்வது, அந்தச் சிறுமி தங்கம் வென்றது தெருவோரக் குழந்தைகளுக்கான ஒலிம்பிக் போட்டியில் அல்லவா?

ஹெப்சிபா. சென்னை டவுட்டன் அரசுப் பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் மாணவி. இவரோடு பிறந்தது நான்கு அக்காக்கள். தந்தை இறந்துவிட்டார். அம்மா ஆராயி பூ வியாபாரம் செய்து வருகிறார். இவர்கள் தங்கியிருப்பது சென்னை மாநகராட்சியின் வீடற்றோர் விடுதியில்தான். விடுதி என்றால் தனித் தனி குடும்பங்கள் தங்கியிருப்பார்கள் என்று கற்பனை செய்து வேண்டாம். நீண்ட ஹாலில் ஆறு குடும்பங்கள் வரையில் திரைச்சீலை கட்டி குடியிருப்பார்கள். நல்ல கழிப்பிடம், நல்ல உணவு, நல்ல உடை என எதற்கும் வழியற்ற, ஏழ்மை மட்டுமே வாசம் செய்யும் இடம் அது. இப்படிப்பட்ட சிறுமிதான் 100 மீட்டர் தடகள ஓட்டத்தில் தங்கப் பதக்கமும், 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப் பதக்கமும், 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டப்பந்தயத்தில் வெண்கலப் பதக்கமும் குவித்திருக்கிறார்.

'ஸ்ட்ரீட் சைல்டு யுனைடெட்' என்ற லண்டனைச் சேர்ந்த நிறுவனம், பிரேசிலில் தெருவோரக் குழந்தைகளுக்கான ஒலிம்பிக் போட்டியை நடத்தியது. உலகில் முதல்முதலாக நடத்தப்படும் இந்தப் போட்டியில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரேசில், அர்ஜென்டினா, எகிப்து, மொசாம்பிக், பாகிஸ்தான் உள்ளிட்ட 9 நாடுகளைச் சேர்ந்த தெருவோரக் குழந்தைகள் இந்தப் போட்டியில் பங்கேற்றனர். கடந்த 20-ம் தேதி முடிவடைந்த ஸ்ட்ரீட் ஒலிம்பிக் போட்டியில்தான் ஹெப்சிபா இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

இவரைப் போலவே, பாரிமுனை, ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தின் பின்புறம் சாலையோரத்தில் ஒரு ஷெட்டில் குடியிருக்கும் சிநேகா, 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கம் வாங்கினார். ஆதரவற்றோர் விடுதியில் தங்கியிருக்கும் அசோக், குண்டு எறிதலில் வெண்கலப் பதக்கத்தை வாங்கினார். இவர்கள் வென்றது ஏதோ தெருவோரத்தில் நடக்கும் போட்டியில் அல்ல. சர்வதேச அளவில் நடந்த தெருவோர  குழந்தைகளுக்கான ஒலிம்பிக் போட்டியில். இவர்கள் எதிர்கொண்டது பிரேசில், மொசாம்பிக், அமெரிக்க அணிகளை.


ஹெப்சிபாவிடம் பேசினேன். " ரொம்ப சந்தோஷமா இருக்குண்ணா. இங்க பல நேரம் காலை சாப்பாடு கூட இல்லாம ஸ்கூலுக்குப் போவேன். பிரேசில் போக செலக்ட் ஆனதும் நேரு ஸ்டேடியத்துல பயிற்சி கொடுத்தாங்க. வெளிநாட்டுக்காரங்களை ஜெயிக்கறதுக்கு நல்ல பலம் வேணும்னு மூணு நேரமும் முட்டை, சுண்டல்னு சாப்பிடக் கொடுத்தாங்க. யுனைனெட் நேஷன்கிற பெயர்ல எல்லாம் டீம்ல இருந்தும் ஆட்களை தேர்வு பண்ணி போட்டி நடத்துனாங்க. இவ்வளவு செலவு பண்ணி நம்மளைக் கூட்டிட்டுப் போறாங்கன்னா, கண்டிப்பாக ஜெயிக்கனும்கிற வெறி மட்டும்தான் இருந்துச்சு. ரெடி, ஸ்டார்ட் சொன்னதும் வெறி கொண்ட மாதிரி ஓடினேன். தங்க மெடல் கொடுப்பாங்கன்னு நினைச்சுப் பார்க்கலை. ரொம்ப சந்தோஷமா இருக்கு. அங்கயும் நம்ம ஊர் அரிசி சாப்பாடு, பீன்ஸ் குழம்புன்னு நல்லா இருந்துச்சு. கிளைமேட்டும் நம்ம ஊர் மாதிரிதான் இருந்துச்சு. நாளைல இருந்து ஸ்கூலுக்குப் போகனும்" என்றார் உற்சாகம் குறையாமல். அவர் படிக்கும் பள்ளிக்கே, ஹெப்சிபா மெடல் வாங்கிய கதை தெரியுமா என்பது சந்தேகம்தான்.

இவரைப் போலவே, 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் வெண்கலம் வாங்கிய சிநேகாவுக்கு மதிய உணவு மறந்து போய் பல வருடங்கள் ஆகிவிட்டது. அப்பா வேலைக்குப் போகாமல் குடித்துவிட்டு வாழ்பவர். குடும்பத்தைக் காப்பாற்ற கொசு வலை கம்பெனி ஒன்றுக்கு தினசரி 100 ரூபாய் சம்பளத்திற்கு வேலைக்குச் செல்கிறார் சிநேகா. அவரிடம் பேசினேன்.

" குடும்பத்தை நடத்தவே அம்மா ரொம்ப கஷ்டப்படறாங்க. பத்தாம் வகுப்போட ஸ்கூலுக்குப் போகாமல் நின்னுட்டேன். நான் வேலை செஞ்சு குடும்பத்தைக் காப்பாத்த வேண்டிய நிலைமை. எங்க அப்பா ஒருநாள்கூட வேலைக்குப் போனதில்லை. பிரேசில் போட்டியில ஜெயிச்சா, படிக்க உதவி கிடைக்கும்னு சொன்னாங்க. இப்ப ஜெயிச்சு வந்துட்டேன். மறுபடியும் ஸ்கூலுக்குப் போக முடியுமான்னு தெரியலை" என்கிறார் கண்களில் ஏக்கத்தோடு.

இவர்களை வழிநடத்திக் கூட்டிச் சென்ற கருணாலயா அமைப்பின் நிர்வாகி பால் சுந்தர் சிங்கிடம் பேசினேன்.

" இவர்கள் நிகழ்த்திக் காட்டியது மிகப் பெரிய சாதனை. இன்னமும் மாநில அரசிடம் இருந்து எந்த பாராட்டு வார்த்தைகளும் வரவில்லை. ஹெப்சிபாவிடம் இருந்த அசாத்திய திறமை, போட்டியை நடத்திய லண்டன் அமைப்பு நிர்வாகிகளிடம் பிரமிப்பை ஏற்படுத்தியது. தெருவோரத்தில் எந்த வசதியும் இல்லாத இந்தச் சிறுமிக்குள் ஏதோ ஒரு அதிசயம் இருப்பதாக உணர்கிறேன். மொசாம்பிக், லண்டன் குழந்தைகள் நல்ல வலுவோடு இருந்தார்கள். ஆரம்பம் முதலே, வெற்றி பெறுவோம் என்பதில் எனக்கு குறைவான நம்பிக்கைதான் இருந்தது. அதையெல்லாம் நமது குழந்தைகள் தவிடுபொடியாக்கிவிட்டார்கள். தங்க மெடல் வாங்கியபோது, இந்திய தேசியக் கொடியோடு நமது தேசிய கீதம் அங்கே இசைக்கப்பட்டபோது, பேச வார்த்தையில்லாமல் கண்ணீர் வடித்துவிட்டேன். இவர்களைப் போல, இன்னும் தெருக்களில் முடங்கி கிடக்கும் ஆயிரக்கணக்கான குழந்தைகளை அடுத்த ஒலிம்பிக் போட்டிக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்ற வைராக்கியமே மனதில் ஏற்பட்டது. இனி இந்திய தெருவோரக் குழந்தைகளின் லட்சியத்தை இந்தக் குழந்தைகள் உலகின் கவனத்திற்கு எடுத்துச் செல்வார்கள். அடுத்தடுத்து வரக் கூடிய போட்டிகள் இதற்குக் களம் அமைக்கும்" என்றார் நெகிழ்ந்துபோய்.

முதலமைச்சர் அவர்களே....ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வாங்கிய ஹெப்சிபா வேறு யாருமல்ல. உங்கள் அரசு நடத்தும் பள்ளியில்தான் படிக்கிறாள். உங்கள் மாநகராட்சி நடத்தும் வீடற்ற விடுதியில்தான் தங்கியிருக்கிறாள். அரசின் பணத்தில் தங்கியிருந்து படிக்கும் ஒரு சிறுமி, சர்வதேச அளவில் தங்கம், வெள்ளி, வெண்கலம் என பதக்கத்தை குவித்ததில் உங்களுக்குப் பெருமையில்லையா? இப்படியொரு சிறுமி பதக்கம் வாங்கிய தகவலை நீங்கள் செய்தித்தாளில் படித்திருப்பீர்கள். ஒருவேளை உங்கள் ஆலோசகர்கள் உங்களுக்கு சொல்லியிருக்கக்கூடும். விஸ்வநாதன் ஆனந்த்துக்கு நீங்கள் வாரிக் கொடுத்த லட்சங்கள் இவர்களுக்குத் தேவையில்லை. அன்பான ஒரு தடவல் போதும். இன்னும் ஆயிரம் ஆயிரம் பதக்கங்களை அரசின் காலில் கொட்டுவார்கள்.
 
செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா? #supportstreetchilds

-ஆ.விஜயானந்த்
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close