Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இயற்கைக்கு திரும்புங்கள்... வாழ்வியலை கற்றுத்தரும் 'ஆடுகளம்' கிஷோர்...!

வரிடம் எல்லாம் பேச முடிகிறது. சினிமா, இலக்கியம், நாடகம், காந்தி, மசானபு ஃபுகோகா, சுற்று சூழல், மொழி, அரசியல், நுகர்வு கலாச்சாரம், சாதியம் என எதைப்பற்றியும் ஒரு தெளிந்த பார்வையை கொண்டிருக்கிறார். இவை அனைத்திலும் ஒரு தீர்க்கமான பார்வையும் அவருக்கு இருக்கிறது. காந்திய பொருளாதாரத்தின் மீது தீவிர காதல் கொண்ட அவர், எதைப் பற்றி உரையாடலை துவங்கினாலும், இறுதியில் காந்தியிடம் வந்து முடிக்கிறார்.

இன்றைய நெருக்கடிக்களுக்கு தன்னிடம் தீர்வு இருக்கிறது என்று ஆழமாக நம்புகிறார். இயற்கை விவசாயத்தின் மீது காதல் கொண்டவர் என்று முன்பே தெரியும். ஆனால், அதையெல்லாம் தாண்டி வாழ்தல் குறித்து மிக அற்புதமான புரிதல் கொண்டவர் என்பதை அவருடனான நான்கு மணி நேர உரையாடல் உணர்த்தியது.

ஆம்...பொல்லாதவன், ஆடுகளம், தூங்காவனம், விசாரணை, கபாலி என்று தமிழ் சினிமாவின் அனைத்து  முக்கிய படைப்புகளிலும் இடம் பிடித்திருக்கும் நடிகர் கிஷோருக்கு, வெளி உலகுக்கு அதிகம் தெரியாத இன்னொரு முகம் இருக்கிறது. அது உபதேசங்கள் செய்யாமல், வாழ்தல் மூலம் எல்லாவாவற்றையும் உணர்த்தும் ஒரு அசாதாரண மனிதர் என்ற முகம்.

முழுவதும் மக்கள் முயற்சியால், சேலம் மக்கள் குழுவால் புனரமைக்கப்பட்ட மூக்கனேரி ஏரி, தெப்பக்குளம் ஆகியவற்றை பார்க்க வந்திருந்த அவரை நேரில் சந்தித்தேன். பின்பு அங்கிருந்து தருமபுரி சென்று, தருமபுரி மக்கள் மன்றத்தால் புனரமைக்கப்பட்ட இலக்கியம்பட்டி ஏரியை பார்வையிட்டார்... ஒரு முழுநாள் அவருடன் சகப்பயணியாக பயணித்து அவருடன் உரையாடியதை இங்கு பதிவு செய்கிறேன்.

மெளனத்திற்கு கூட ஆழமான அர்த்தம் இருக்கும் போது, வெறும் சொற்கள் மூலமாக, இன்னொருவர் உடனான உரையாடலை, அப்படியே கடத்திவிட முடியும் என்று எனக்கு தோன்றவில்லை, இருந்தாலும் முயன்றிருக்கிறேன்.

அவருடனான நீண்ட உரையாடல் இதோ உங்களுக்காக...

இப்போது விவசாயம் செய்வது ஃபேஷன் ஆகிவிட்டதல்லவா... அதுவும் குறிப்பாக இயற்கை விவசாயம். பணம் படைத்த பலர் தங்கள் அழுத்தங்களிலிருந்து விடுபட விவசாயம் நோக்கி வருகிறார்கள்... உங்களையும் அந்த பட்டியலில் சேர்ந்து கொள்ளலாமா...?

(மென்மையாக சிரிக்கிறார்)...  “இல்லை. என்னை நீங்கள் அந்த பட்டியலில் சேர்க்க முடியாது... நான் கையில் ஒரு ரூபாய் கூட இல்லாத காலத்திலேயே, விவசாயம் செய்ய ஆசைப்பட்டு இருக்கிறேன். கடனுக்காக சில வங்கிகளையும் அணுகி இருக்கிறேன்... ஆனால், அவர்கள் கடன் தர மறுத்துவிட்டார்கள்.. ஒருவேளை கடன் தந்திருந்தால், இந்நேரம் விவசாயம் மட்டுமே என் வாழ்வாக இருந்திருந்தாலும் இருந்திருக்கும்...”

இன்று பலபேரால் லாபமற்ற தொழிலாக பார்க்கப்படும் விவசாயத்தின் மீது எப்படி உங்களுக்கு காதல் பிறந்தது... இத்தனைக்கும் நீங்கள் கல்லூரி விரிவுரையாளராக இருந்தவர் அல்லவா...?

“ஒரு வேளை அதற்கு நான் படித்த முதுகலை கன்னட இலக்கியமும் காரணமாக இருந்திருக்கலாம். இலக்கியம் என்னை இயற்கையோடு இயைந்து வாழ கற்று தந்தது. நான் விவசாயத்தின் மூலமாக மட்டுமே இயற்கையில் கரைய முடியும் என்று நம்பினேன். அதற்காக தான் விவசாயத்தை தேர்ந்தெடுத்தென். என் தேர்வு சரிதான் என்பதை இத்தனை ஆண்டு கால வாழ்வு உணர்த்தி இருக்கிறது. பணமும், பெருநகர சவுகரியங்களும் தராத சந்தோஷத்தை, எனக்கு மண்ணும், புழுவும், மரமும் தருகிறது...”

தவறாக எண்ணி கொள்ளாதீர்கள்... நான் இதை உங்கள் சுயநலமாக பார்க்கிறேன், அதாவது நீங்கள் வேறு தொழிலில் பணம் சம்பாதிக்கிறீகள், அதை விவசாயத்தில் செலவு செய்து நிம்மதியை தேடுகிறீர்கள்... சிலர், திரையரங்கள், மால்கள், சுற்றுலாக்களில் சந்தோஷத்தை தேடுவது போல...

(இடைமறிக்கிறார்...) “நான் முன்பே உங்களிடம் சொல்லிவிட்டேன்... என் கல்லூரி காலங்களிலிருந்தே விவசாயத்தை காதலிக்கிறேன் என்பதை... இப்போது 8 ஏக்கரில் விவசாயம் செய்கிறேன்... சினிமாவுக்கு வராமல் இருந்தால் கால் ஏக்கரிலோ அல்லது அரை ஏக்கரிலோ விவசாயம் செய்திருப்பேன்...”

பிறகு ஏன் சினிமா...?

“அதுவும் காதலால்தான்... கல்லூரி காலங்களிலிருந்தே, என் விருப்பங்கள் இலக்கியம், நாடகங்கள் என்றே இருந்தது... அதனால் இயல்பாக சினிமா மீது காதல் வந்தது... நல்ல வாய்ப்பும் வந்தது... அதிலும் நான் உச்சபட்ச நேர்மையை கடைப்பிடிக்கிறேன்... நான் உளப்பூர்வமாக நேசிக்கும் கதைகளில் மட்டும்தான் நடிக்கிறேன்... சில தவறுகளும் நடந்து இருக்கிறது... ஆனால், கூடுமானவரை அறத்துடனே வாழ்ந்து வருவதாக நினைக்கிறேன்...”

சினிமா போல் இல்லையல்லவா விவசாயம்... எவ்வளவு தான் காதலித்து உளப்பூர்வாக செய்தாலும், தோல்விகளும், லாபமின்மையும், அதனால் தற்கொலைகளும் நடப்பது சமீபகாலங்களில் தொடர்கதையாகிவிட்டதல்லவா...?

“ஆம். அதற்கு அரசின் கொள்கைகள் முதல் காரணம். பிறகு பணப்பொருளாதாரம். இங்கு அனைத்து மதிப்பீடுகளும் பணத்தின் மீதே கட்டமைக்கப்பட்டுள்ளது. பணம் இல்லாதவனை தோல்வி அடைந்தவனாக இந்த சமுதாயம் மதிப்பிடுகிறது. உண்மையில் விவசாயம் செய்வதற்கு பணம் தேவை இல்லை. இது ஒரு வாழ்க்கை முறை.  அதாவது நுகர்வு கலாசாரத்தில் சிக்கி கொள்ளாமல், இயற்கையோடு இயைந்து வாழ்வதுதான் விவசாயம். இதற்கான தீர்வாக நான் நம்புவது காந்தி முன்மொழிந்த மாதிரி கிராமத்தை தான்...”

இது குறித்து கொஞ்சம் விரிவாக பேசலாமா...?

“கண்டிப்பாக. காந்தி தெளிவான ஒரு மாதிரியை முன் மொழிந்து விட்டு சென்றுள்ளார். அதாவது, நமக்கு தேவையான அனைத்தையும்  உள்ளூரிலையே உற்பத்தி செய்வது. உதாரணத்திற்கு ஒரு கிராமம் இருக்கிறது, அங்கு விவசாயி, மீன் பிடிப்பவர், மண் பாண்டம் செய்பவர், நெசவாளர் எல்லாரும் இருக்கிறார்கள்; இவைதான் அடிப்படை தேவை... இதை அங்கேயே உற்பத்தி செய்து, அங்கேயே பண்டமாற்றி கொள்வது காந்தி முன்வைத்த கருத்து. இங்கு பணம் பிரதானம் இல்லை. சிறு கிராமமாக இருப்பதால் இயல்பாக மனிதர்களுக்குள் இணக்கம் ஏற்பட்டு விடும். நிச்சயம் இந்த சூழல் மகிழ்வான ஒன்றாக இருக்கும்.”

கற்பனை செய்து பார்ப்பதற்கு மிக இதமாக இருக்கிறது. ஆனால், இதெல்லாம் சாத்தியமா... நாம் பல தொலைவு கடந்து வந்துவிட்டோமே...?

“ஆம். பல தூரம் வந்துவிட்டோம். ஆனால், தவறான பாதையை நோக்கி போகிறோம்.  ஒன்று பாதையை மாற்ற வேண்டும் அல்லது திரும்ப செல்ல வேண்டும். நான் திரும்பி செல்லுங்கள் என்கிறேன்... ஒரு முறை ஃபுகோகாவை, ஒரு கருத்தரங்கம் ஒன்றிற்கு அழைத்தார்கள். ஆர்க்டிக் பெருங்கடல் மாசடைவதை குறித்த அந்த கருத்தரங்கத்தில்  அவரிடம் அதற்கான தீர்வை கேட்கிறார்கள். அவர், ‘அனைத்து ரசாயன தொழிற்சாலைகளையும் மூடிவிடுங்கள்’ என்றார்.

அழைத்தவர்கள் நெளிகிறார்கள். உண்மையில் அனைத்து சிக்கல்களும் நாம் ஏற்படுத்தியது, தீர்வும் மிக எளிமையானது. ஆனால், அதன் எளிமைக்காகவே நாம் உதாசீனப்படுத்துகிறோம் அவற்றை...”

இதுவெல்லாம் உடனே சாத்தியமா...?

அரசின் கொள்கைகள் மாற வேண்டும். என்னைக்கேட்டால் அரசே வேண்டாம் என்பேன்... நம்முடைய உற்பத்தி முறைகள் மாறி ஒவ்வொரு கிராமமும் தனக்குத் தேவையானவற்றை தானே உற்பத்தி செய்துக்கொள்ளும் தனிக் குடியரசாக மாறும் போது இதுவெல்லாம் சாத்தியப்படும். ஆனால், அரசு உடனே மாறாது, அது நிறுவனங்களுக்கும் அதற்கும் உண்டான பந்தம் அப்படி. அதே நேரம் தனி மனிதர்களாகிய நாமும் மாற வேண்டும்... அதாவது நுகர்வை குறைக்க வேண்டும்... என்னிடம் இரண்டு நல்ல பேண்ட் சர்ட்டும், நான்கு கிழிந்த ஜீன்சும் தான் இருக்கிறது. எனக்கு இது போதும் என்று நினைக்கிறேன்... இது போல் அனைவரும் மாறும்போது, சில மாற்றங்கள் தன்னால் நிகழும்...

ஆனால், நமக்கு சுற்றி உள்ள அனைத்தும் நுகர்வைத்தானே கற்று தருகின்றன....?

“ஆம்...  மறுக்கவில்லை... நான் கல்லூரி முடிந்து சில காலம் ஒரு விளம்பர நிறுவனத்தில் வேலைப்பார்த்தேன்... அங்கு எனக்கு கற்று தந்தது என்ன தெரியுமா...? ‘ஒருவனுக்கு ஆசையை உண்டாக்கு, அந்த ஆசையை அவனுக்கு அத்தியாவசியம் என்று நம்பவை, பின் அதற்கு அதிக தேவையை சந்தையில் உண்டாக்கு...” இது தான்...

நீங்கள் யோசித்து பாருங்கள்... நீங்கள் காலையிலிருந்து இரவு வரை எவ்வளவு தேவையற்றதை நுகர்கிறீர்கள்...

எல்லாம் சரி..இவை அனைத்தையும் அதிக நுகர்வைப் தூண்டும் சினிமாவில் இருந்து கொண்டு பேசுவது ஆச்சரியமாக இருக்கிறதே...

(சிரிக்கிறார்).  “ஏற்கெனவே சொன்னேன் அல்லவா... நான் சினிமாவை ஒரு கலையாகத்தான் பார்க்கிறேன்...  நான் சினிமாவின் மூலம் நான் நம்பும் வாழ்வியல் முறையை  தான் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்...

இப்போது துணை கதாபாத்திரத்தில் நடித்து வருவதால் அது சாத்தியமாகவில்லை... ஒரு வேளை நானே சினிமா இயக்கும்போது வேண்டுமானால் அது நடக்கும்...”

சினிமா பற்றி பேச்சு வந்ததால் இதை கேட்கிறேன்... நாம் பேசி கொண்டிருக்கும்போது... நீங்கள் சென்சார் போர்ட் தேவை இல்லை என்றீர்கள் அல்லவா...?

“ஆம். சென்சார் போர்ட் தேவையில்லை என்பது என் ஆழமான கருத்து.... நான் மையப்படுத்துதலை விரும்பவில்லை.  நான் எங்கள் பகுதியில் சாதாரணமாக பேசும் வார்த்தை, நகரமயமான அல்லது நாகரிகமானதாக கூறிக் கொள்ளும் இன்னொரு இடத்தில் ஆபாசமானதாக தெரியும். அந்த சமூகத்தில் இருந்து வந்திருக்கும் சென்சார் உறுப்பினர்கள், அதை எதிர்பார்கள்... எங்க வாழ்வியலை அடையாளம் காட்ட அந்த வார்த்தை பயன்படும்... ஆனால், எங்கள் வாழ்வியலை புரிந்து கொள்ள முடியாத சென்சார் நிர்வாகிகள் அதற்கு கத்திரி போடுவார்கள்... பின்பு எப்படி அவர்களை வைத்துக் கொண்டு நான் எங்கள் மக்களுக்கான சினிமாவை எடுப்பது...?”
 
இதையெல்லாம் உங்கள் குடும்பம் புரிந்து கொள்கிறதா...?

“என்னைவிட என் குடும்பம் இதை நன்றாக புரிந்து கொள்கிறது... நானாவது வாரத்தில் பாதி நாள் படப்பிடிப்பில் இருக்கிறேன். ஆனால், அவர்கள் தான் முழுநேரமும் நிலத்தில் இருக்கிறார்கள். அதுவும் என் மனைவி விஷாளா முழு நேரமும் நிலத்தில் இருக்கிறார். உண்மையில் என்னைவிட விவசாய நுணுக்கங்கள் அவருக்குதான் நன்றாக தெரியும்..”

நீங்கள் இயற்கை விவசாயம் மட்டும் செய்யவில்லை... அந்த பொருட்களை சந்தைப்படுத்தவும் செய்கிறீர்கள்...உண்மையை சொல்லுங்கள்... இப்போது இயற்கை விவசாயம் என்ற பெயரில் மிக பெரிய மோசடி நடக்கிறதல்லவா.... ஒரு பக்கம் அந்த சந்தையை பெருநிறுவனங்கள் கைப்பற்ற துடிக்கின்றன... இன்னொரு பக்கம் இயற்கை பொருட்கள் விலை மிக அதிகமாக இருக்கிறது... ரசாயன பொருட்களை, இயற்கை பொருட்கள் என்று சொல்லி விற்கும் மோசடியும் நடக்கிறதல்லவா....?

“ஆம்.  நாங்கள் சிறு அளவில் தான் இயற்கை பொருட்களை விற்பனை செய்கிறோம்...  எங்கள் நண்பர்களுக்கு, பிறகு உற்பத்தியில் பங்கேற்ற விவசாயிகளுக்கு போக தான் மிச்ச பொருட்களை விற்கிறோம்...  இதில் மக்கள் மீதும் பிழை இருக்கிறது. அதாவது அவர்கள் பணம் கொண்டு அனைத்தையும் வாங்கிவிட முடியும் என்று நினைக்கிறார்கள். பணம் படைத்த மக்கள், அனைத்தையும் எப்போது வேண்டுமானாலும் வாங்கலாம் என்று நம்புகிறார்கள். அந்த பருவத்தில் விளையாத பொருளை, அதிக பணம் கொடுத்தாவது வாங்க வேண்டும் என்கிறார்கள். இதைதான் நீங்கள் குறிப்பிடுகிற நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்கின்றன. மக்கள் சிறு கடையில் வாங்க வேண்டும், பணம் இருப்பதால் அனைத்தையும் நுகர்ந்துவிட வேண்டும் என்று நினைக்கக் கூடாது...”

மீண்டும் கேட்கிறேன்... உங்களிடம் பணம் இருக்கிறது... உங்களால் அசாத்தியமான விஷயங்களை கூட செய்ய முடியும்... இது சாமானியனுக்கு சாத்தியமா... அவனுக்கு குழந்தைகள் குடும்பம் அவர்களின் எதிர்காலம் என்ற நடைமுறை சிக்கல்கள் இருக்கிறதல்லவா... அதையும் கணக்கில் கொள்ள வேண்டும் அல்லவா...?

“இயற்கை நம் எல்லாவற்றையும் விட மிக பெரியது. பணம் கொண்டு எதையும் வாங்க முடியாது. அது அண்மையில் பெய்த பெருமழை நமக்கு உணர்த்தி விட்டு சென்றுவிட்டது. இயற்கை இதுபோல் தன்னை தானே சுத்தி கரித்து கொள்ளும். நாம் பெரும் அழுக்காக இந்த பூமிக்கு மாறும் போது நம்மையும் இல்லாமல் இந்த இயற்கை செய்துவிடும்...

ஒன்றை புரிந்து கொள்ளுங்கள், உலகம் அழியாது... நாம்தான் அழிவோம். இது போல் நடக்க கூடாது என்று நினைப்பீர்களானால் உங்கள் குழந்தைகளுக்கு சேமித்து வையுங்கள். சேமிப்பு என நான் குறிப்பிடுவது பணத்தை அல்ல; மலடாகாத பூமி, விஷமாகாத தண்ணீர், தூய்மையான காற்று இவை மூன்றையும்தான். இதுதான் பெருஞ் செல்வம்... என் இரு மகன்களுக்கும் அதைதான் தர வேண்டும் என்று நினைக்கிறேன்.

இயற்கைக்கு திரும்புங்கள் என்கிறீர்கள், ஆனால் வணிகமயமான சினிமாவில்தானே இன்னமும் நீங்கள் இயங்கிக்கொண்டிருக்கிறீர்கள்?

“முதலிலேயே சொல்லிவிட்டேன். நான் சினிமாவை கலையாக மதிக்கிறேன்... அதில் இடம் இருக்கிறது என்று நம்புகிறேன்... இப்போது பகுதிநேரமாக என் கூட்டில் இருக்கிறேன். கலைக்கு இடமே இல்லாமல் முழு வணிகமாக மாறும்போது நான் என் கூட்டிற்கு நிரந்தரமாக திரும்புவேன். அது வரை என்னால் இயன்ற வரை இயற்கையை மாசுப்படுத்தாமல், இயற்கையுடன் இயைந்து வாழ்வேன். இதை நீங்கள் என் உறுதிமொழியாக வேண்டுமானால் எடுத்து கொள்ளலாம்...”

- மு. நியாஸ் அகமது

படங்கள் : எம். விஜயகுமார்

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close