Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கைக்கு கை கொடுக்குமா கன்னியாகுமரி...ஒரு அதிரடி அலசல்!

குமரிமாவட்டம் காங்கிரஸ் கோட்டை என மார்தட்டி கொண்டிருந்த காலம் மலை ஏறிவிட்டது. அதற்கு அஸ்திவாரம் போட்டது வாசன். கடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு மூழ்கிய திமுக-காங்கிரஸ் கூட்டணியில் நீச்சலடித்து கரை ஒதுங்கியவர்கள் ஐந்து பேர் தான். அதில் மூவர் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள். 'குளச்சல்' பிரின்ஸ், 'கிள்ளியூர்' ஜாண்ஜேக்கப், 'விளவங்கோடு' விஜயதரணி.

மாநில தலைவர்கள் மாறும்போது கோஷங்களும் மாறும். அதுபோல இப்போது எங்கும் இளங்கோவன் மயம். அவரது ஆதரவாளரான அசோகன் சாலமன் குமரி மேற்கிற்கும், கண்ணாட்டு விளை பாலையா கிழக்கிற்கும் மாவட்ட தலைவர்கள். பாலையாவுக்கு வசந்தகுமார் தான் பதவி கொடுக்க சொன்னார் பின்னர் அவரையே பாலையா கண்டுக் கொள்வதில்லை என்கின்றனர். பல முறை எம்.பி.யாக காங்கிரசும், அதன் கூட்டணி கட்சிகளுமே குமரியை அலங்கரித்துள்ளன. வாசன் த.மா.கா.வை உருவாக்கிய பின் குமரி காங்கிரஸ் பலமான ஆட்டம் கண்டுள்ளது. அதன்  எதிரொலி இந்த தேர்தலில் தெரியும் என்கிறார்கள்.

காங்கிரஸ் பழைய பலத்தோடு உள்ளதா, இந்த முறை குமரியில் இருந்து எத்தனை சட்டமன்ற வேட்பாளர்களை காங்கிரஸ் கோட்டைக்கு அனுப்பும் என்று  பார்க்க குமரியை வலம் வந்தோம்.

கன்னியாகுமரி தொகுதியில் சுதந்திரத்திற்கு பின் காங்கிரஸ் நிற்கவில்லை. சில வார்டு கவுன்சிலர்களையும், பேரூராட்சி தலைவர்களையும் பெற்றிருக்கிறது.வர்த்தக காங்கிரஸ் தலைவர் வசந்தகுமார், குமரிஅனந்தன், விஜயதரணி என தமிழ்நாட்டுக்கு பரிச்சயமான முகங்கள் குமரியில் இருந்தாலும் அவர்களுக்கு உரிய மரியாதையை கொடுக்க தயங்குகிறார்கள் காங்கிரஸார். காரணம் எல்லாம் இளங்கோவன் துதி. பல கோஷ்டி பல பிரிவு. தற்போது ராஜிவ்காந்தி பஞ்சாயத்து ராஜ் சார்பில் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் வாரந்தோறும் ஒரு கூட்டத்தை போட்டு காங்கிரஸ் கன்னியாகுமரி தொகுதியில் இன்னும் காங்கிரஸ் இருக்கிறது என காட்டுகிறார்.

திராவிட கட்சிகள் ஆழமாக வேரூன்றி விட்டன. பாஜக வும் இங்கு சுமார் 20000 வாக்குகளை வைத்துள்ளது. ஆனால் காங்கிரஸின் ஓட்டுவங்கி கேள்வி குறிதான். ஆனால் கணிசமாக வசந்தகுமாரின் விசுவாசிகள் உள்ளனர். இங்கு காங்கிரஸ் போட்டியிடாது என சின்ன குழந்தையும் சொல்லும்.

நாகர்கோவில் தொகுதியில் கொஞ்சம் சுறுசுறுப்புடன் இருக்கிறது மாவட்ட அலுவலகம் , வாசன் காங்கிரஸில் இருந்து போன அதிர்வு இன்னும் நாகர்கோவில் தெரிகிறது. நகர தலைவர் மாகின், இளங்கோவன் ஆசியோடு சில மாதங்களுக்கு முன் பதவிக்கு வந்தார். கட்சிக்கு பணத்தை அள்ளி வீசி கூட்டத்தை நடத்துகிறார், வாரந்தோறும் ஒவ்வொரு வார்டுகளிலும் கூட்டம்தான். ஆனால் மக்கள் கூட்டத்தை தான் காணோம்.

சில நாட்களுக்கு முன் குஷ்புவை அழைத்து வந்து பொதுக்கூட்டம் போட்டார். நாகர்கோவிலில் காங்கிரஸ் முழு பலத்தோடு இருப்பதாக ஒரு பிம்பத்தை மாகின் உருவாக்கி விட்டாலும், அதனால் வாக்கு வருமா என்பது சந்தேகம். இங்கு போட்டியிட வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், பாலையா, இன்னும் சிலர் ஆர்வமாக இருந்தாலும் திமுக தொகுதியை விட்டுக் கொடுக்குமா என்பதும் இன்னொரு சந்தேகம். காரணம் கடந்த முறை 6000 ஓட்டுவித்தியாசத்தில் தொகுதியை இழந்தது திமுக.

ராதாகிருஷ்ணனுக்கு சீட் கொடுத்தால் போட்டி கடுமையாக இருக்கும். தொகுதியில் அனைவருக்கும் தெரிந்த முகம் என்பதாலும் ,சிவாஜி கணேசனின் தமிழக முன்னேற்ற முன்னணியில் இருந்து போட்டியிட்டவர்  என்பதும் ஒரு காரணம். திமுக-காங்கிரஸ் கூட்டணி  என்றால் இழுத்து பிடித்து ஜெயிக்கலாம். தற்போது திமுக மாவட்ட செயலாளர் சுரேஷ்ராஜன் நாகர்கோவிலில் துண்டு போட்டு இடம் பிடித்துவிட்டாராம்.

குளச்சல் தொகுதி தற்போது காங்கிரஸ் வசம். அடுத்து யார் வசம் என்பதற்கு மக்கள் தான் பதில் தரவேண்டும். த.மா.கா. உருவானதில் காங்கிரஸிற்கு  மரண அடி. பழைய பலம் சுத்தமாக இல்லை. "உங்க எம்.எல்.ஏ.தானே சட்டசபையில அதிக கேள்வி கேட்டவருனு நாம் சொன்னால்," கேள்வி கேட்ட மட்டும் போதுமா தொகுதிக்கு எதும் செய்ய வேண்டாமா" என்று அதிருப்தி குரல் வருகிறது. மக்கள் குழப்பத்தில் இருக்க இந்த முறை அதிமுக குளச்சல் தொகுதியை கொத்திச் செல்ல தயாராகி விட்டது. அதிலும் முன்னாள்  அமைச்சர் பச்சைமால் என்றால் வெகு சுலபம் என்கின்றனர் தொகுதிவாசிகள்.

ஜெயலலிதா பச்சைமாலை கட்சியில் ஓரங்கட்டியது இன்னும் பலருக்கு தெரியவில்லை. சிட்டிங் எம்.எல்.ஏ பிரின்ஸ் மீது புகார்கள் என பதறிக்கிடக்கிறது குளச்சல். காங்கிரஸ் இந்த முறை குளச்சல் தொகுதியை தக்க வைப்பது சிரமம்தான்.

கிள்ளியூர் தொகுதி குளச்சலை விட காங்கிரஸிற்கு பலமானது. ஆனால் இப்போது த.மா.கா.வினால் குளச்சலை விட பலம் குன்றிப் போயுள்ளது. குமாரதாஸ், ஜாண்ஜேக்கப் என முக்கிய புள்ளிகள் தற்போது த.மா.கா கூடாரத்தில் உள்ளனர். இங்கு போட்டியிட மாவட்ட தலைவர் அசோகன் சாலமன் காய் நகர்த்தி வேலைகளை தொடங்கி விட்டார்.பணங்களை தண்ணியாக செலவு செய்கிறாராம்.கட்சியின் சில நிர்வாகிகளுக்கு ரூபாய் 69000 மதிப்புள்ள பைக்குகளை வாங்கி கொடுத்து வேலையை செய்து கொண்டிருக்கிறாராம்.

ஆனால் ராஜேஷ்குமார் என்பவர் எனக்கு கிள்ளியூர் வேணும் என்று முறுக்கி கொண்டு நிற்கிறார்.சிட்டிங் எம்.எல்.ஏ.ஜாண்ஜேக்கப் த.மா.க.வுக்கு போய்விட்ட நிலையில் கிள்ளியூர் காங்கிரஸின் தொடர் சிட்டிங் தொகுதி என்கிற பெருமை அடுத்த முறை கிடைக்கும்  அறிகுறி தூரத்தில் கூட இல்லை.அசோகன் சாலமனின் பலமும் பணமும் கைகொடுத்தாலும் வெற்றி என்பது குதிரை கொம்புதான் என்கின்றனர் கிள்ளியூர்காரர்கள்.

விளவங்கோடு தொகுதிக்கு தற்போது சிட்டிங் எம் எல்.ஏ.விஜயதரணி. வாசனின் த.மா.கா உருவாகும்போது விளவங்கோடு தொகுதியில் சிறு அதிர்வையும் உண்டாக்காமல் பார்த்துக் கொண்டவர். தொகுதி முழுவதும் இவர் கைவசம். காங்கிரஸ் இன்னும் பழைய துடிப்போடு இப்பது விளவங்கோட்டில்தான். ஆனால் இந்த முறை யாருக்கு சீட் கொடுத்தாலும் விஜயதரணி என்றால் ஈசியாக ஜெயிச்சிடும், ஆனா வேற யாராவது நின்னா கண்டிப்பா காம்ரேட்களிடம் தொகுதி போய் விடும் என்கின்றனர் விளவங்கோடு இளைஞர்கள்.

தொகுதிக்கு அடிக்கடி வராவிட்டாலும் அதிக  பலத்தை விஜயதரணி பெற்றிருக்கிறார். இளங்கோவனுடன் மோதல், கணவரின் மரணம், மாவட்ட காங்கிரஸ் காரர்களின் எதிர்ப்பு என தற்போது விஜயதரணி மனசோர்வில் உள்ளார். அவருக்கு சீட் கொடுக்க கூடாது  என சத்தியமூர்த்தி பவனுக்கு ஓலைகள் இன்னும் போய் கொண்டுதான் இருக்கின்றன. அதனால் காங்கிரஸ் மாற்று ஏற்பாடு செய்தால் விளவங்கோடும் காங்கிரஸிற்கு கை கொடுக்குமா என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

 பத்பநாபபுரம் தொகுதி தற்போது  சிட்டிங் எம்.எல்.ஏ. திமுக வசம். இங்கும் பலமும் பலவீனமும் காங்கிரஸில் இருக்கிறது. ஆனால் இங்கு வேட்பாளரை நிறுத்த வேண்டுமா என காங்கிரஸ் கட்சியே யோசிக்காது. அந்த அளவுக்கு மற்ற கட்சிகளின் ஆதிக்கம் நிறைந்தது. இங்கு வேட்பாளரை நிறுத்த காங்கிரஸ் யோசிக்கும்போது நாம் என்ன யோசிக்க இருக்கிறது.

ஒட்டுமொத்தத்தில் வாசன் த.மா.கா உருவாக்கியது தமிழ்நாடு காங்கிரஸிற்கு இழப்பாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், குமரிமாவட்டத்தில் காங்கிரசின் கைக்கு பெரும் இழப்பு . திமுக- காங்கிரஸ் கூட்டணி என்றாலும் காங்கிரஸ் மூன்று சிட்டிங்தொகுதிகளை தக்க வைக்குமா என்பது மே 19-ஆம் தேதிதான் தெரியும். குமரிமாவட்டம் காங்கிரஸின் கோட்டை என்று சொல்லுவார்கள். தற்போது கோட்டை சுவரில் பாதிக்கு மேல் காணவில்லை என்பதே நிதர்சன உண்மை.

- த.ராம்
படங்கள்.ரா.ராம்குமார்

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ