Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஊழலில் நம் பங்கை கேட்கிறோமா...?

தினமும் சமூக வலைத்தளங்களில் பொங்குகிறோம். அனைத்து அரசியல் கட்சிகளையும் பற்றி விவாதிக்கிறோம். இன்னும் கொச்சையாக சொல்ல வேண்டுமென்றால், கட்சி பாகுபாடில்லாமல் அனைத்து அரசியல் தலைவர்களையும் துவைத்து தொங்கப்போடுகிறோம். அவர்களின் ஊழல்கள், முறைகேடுகள் என அனைத்தும் இங்கு மீம்ஸ்களாக மாறுகிறது. இவற்றை பார்த்த உடன் நம்மையும் அறியாமல் சிரிப்பு வந்தாலும், கொஞ்சம் தீவிரமாக யோசித்தால் கோபம்தான் வருகிறது. ஆம். இப்போது நடைமுறையில் இருக்கும் ஆட்சிமுறைகளில் ஜனநாயகத்தைவிட சிறந்த முறை இல்லை என்றாலும்,  அது இந்தளவிற்கு கேலிக்கூத்தாவது, நிச்சயம் யாருக்கும் நன்மை பயக்காது. தண்ணீருக்குள் அழுத்தப்பட்டுள்ள காற்றடைத்த பந்து, நிச்சயம் ஒரு நாள் திமிறிக் கொண்டு வெளியே வரும்.

சரி...  முன்னுரை போதும். இப்போது விஷயத்திற்கு வருவோம்... நாம் தினமும் அரசியல் தலைவர்களின் நேர்மையை கேள்விக்குள்ளாக்குகிறோமே... விமர்சிக்கிறோமே... நாம் மட்டும் என்ன அப்பழுக்கற்றவர்களா...? ஊழல் கறை இல்லாத கரங்களா நம்முடையது...?   உணர்ச்சிவசப்படாமல் கொஞ்சம் நேர்மையாக விவாதிப்போம்.இன்று அதிகாலை ஊரிலிருந்து நண்பர் வந்திருந்தார். உண்மையில் மிகவும் நேர்மையானவர். பொருளாதார ரீதியாக சிரமத்தில் இருந்தாலும், எங்கும் யாரிடமும் கை நீட்டாதவர். இத்தனைக்கும் பண சபலம் அதிகம் உள்ள துறையில் இருப்பவர். “என்ன சார்...  நம்ம ஊர்ல தலைக்கு எவ்வளவு நிர்ணயச்சு இருக்காங்க... பணப்பட்டுவாடா ஆரம்பிச்சாச்சா...” என்று விளையாட்டாகதான் கேட்டேன். ஆனால், அவர் படு சீரியசாக, “எங்க சார்... நேர்மையா இவனுங்க தருவாங்கன்னு நம்பிக்கை இல்லை,” என்றார். எனக்கு பகீரென்று இருந்தது. அவர் தொழிலில் லஞ்சம் வாங்குவது வேறு, இது வேறு என்ற மனநிலைக்கு வந்துவிட்டரா என்று குழப்பமாக இருந்தது.

நம் நேர்மையை சிதைத்தவர்கள் யார்...?

அவர் மட்டுமல்ல, இன்று பலர் இந்த மனநிலையில்தான் இருக்கிறோம்.  அதாவது,  'தேர்தல் காலத்தில் கட்சிகள் பணம் தருவதும், அதை நாம் வாங்குவதும் ஒரு தேர்தல் செயல்பாடுதான். அதில் தவறொன்றும் இல்லை' என்ற மனநிலைக்கு வந்து குறைந்தது இரண்டு தேர்தலாக ஆகிறது. இதை நான் திருமங்கலம் ஃபார்முலா அல்லது ஏற்காடு ஃபார்முலா என்று சுருக்க விரும்பவில்லை. ஏனென்றால், 1994-ம் ஆண்டு, என்  சிறு வயதில் பார்த்த  ‘வரவு எட்டணா... செலவு பத்தணா...’ என்ற படத்திலேயே, தேர்தலில் பணம் கொடுப்பது போன்ற ஒரு வசனம், சாதாரணமாக வரும் . அதாவது, இது பல தசாபதங்களாக நடந்துதான் வருகிறது. இது முறைப்படுத்தப்பட்டது , கடந்த பத்து ஆண்டுகளில் என்று வேண்டுமானால் சொல்லலாம்.

சரி இதை நாம் எப்படி புரிந்து கொள்வது. நம் அறியாமையை பயன்படுத்திக் கொண்டு கட்சிகள் நம் நேர்மையை சிதைத்துவிட்டது என்றா... அல்லது அவர்கள் நம் நேர்மையின்மையை பயன்படுத்தி கொள்கிறார்கள் என்றா...? எனக்கு முதல் வாக்கியத்தில் உடன்பாடில்லை. முப்பது ஆண்டுகளுக்கு முன் வேண்டுமானால் மக்கள் அறியாமையில் இருந்தார்கள் என்று சொல்லாம். ஆனால், ஊடகங்கள் வளர்ந்து, ஒவ்வொரு தனி மனிதனும் ஊடகமாக மாறிய இந்த காலக்கட்டத்தில், மக்கள் அறியாமையில் இருக்கிறார்கள் என்று சொல்வது, நம்மை நாமே ஏமாற்றி கொள்வதற்கு சமம்.


ஊழலில் நம் பங்கை கேட்கிறோமா...?

பச்சையாக் சொல்லவேண்டுமானால், ஊழலில் நம் பங்கை கேட்கிறோம். 'நான் உனக்கு வாக்களிக்க, ஒரு வாய்ப்பை தந்தேன். அதை பயன்படுத்திக் கொண்டு, நீ சம்பாதித்தாய்... அதனால், என் பங்கை தா... அல்லது நீ கொள்ளை அடிக்க வாய்ப்பு கேட்கிறாய், அதனால் எனக்கு கப்பம் கட்டிவிட்டு செல்' என்பதாக நம் மனநிலை மாறிவிட்டது. 

“எல்லா கட்சிகளும்தான் பணம் தருகிறது, நாங்கள் என்ன எல்லாருக்குமா வாக்களிக்கிறோம். பணம் பெற்றாலும், வாக்களிப்பதில் நாங்கள் மிக தெளிவாக இருக்கிறோம். எல்லாரும் நாச சக்தியாக மாறிய பின்... யார் குறைந்து கெடுதல் செய்வாரோ... அவர்களுக்குதான் வாக்களிக்கிறோம்...” என்பது உங்களில் பெரும்பாலானவர்களின் எண்ணமாக இருக்கும்.  இது நம்மை சமாதானப்படுத்தி கொள்ள வேண்டுமானால் பயன்படுமே தவிர, நிச்சயம் நன்மை தரவல்லது அல்ல. நம் இந்த எண்ணத்தினால்தான் கட்சிகளும், மிக தைரியமாக, 'யாரிடம் வேண்டுமானாலும்  பணத்தை பெற்றுக் கொள்ளுங்கள். ஆனால், எங்களுக்கே வாக்களியுங்கள்' என்கிறது.படுமோசமான முரண்:

ஒவ்வொரு தேர்தல்களும், குரோனி கேபிட்டலிசத்தை வளர்ப்பதாகவே இருக்கின்றன. முன்பெல்லாம், அரசியல் கட்சிகள் வேறு, கம்பெனிகள் வேறாக இருந்தது. ஆனால், இப்போது இருவருக்குள்ளும் ஒரு நெருங்கிய பந்தம் உண்டாகிவிட்டது. நிறுவனங்களின் இயக்குனர்கள், எம்.பிக்களாக இருக்கிறார்கள்.  தேர்தல் கட்சிகள் இயங்க நிறுவனங்கள் பணம் தருகின்றன. கட்சிகளும் மிக விசுவாசமாக அவர்களுக்கு  சாதகமான முடிவை எடுக்கிறார்கள். இங்கு மணற் கொள்ளை, கிரானைட் கொள்ளையில், வாராகடன் வைத்திருக்கும் நிறுவனங்கள்தான் கட்சிகளுக்கு தாராளமாக பணம் தருகின்றன. அந்த பணம்தான், நமக்கு தேர்தல் நேரத்தில் வருகிறது. அதனால், இந்த பணத்தை பெற்ற அனைவருக்கும் தமிழகத்தின் இயற்கை வளக் கொள்ளையில் பங்கு இருக்கிறது, பொதுத் துறை வங்கிகளை சிதைப்பதில் பங்கு இருக்கிறது.  நம் கரங்களில் கறைகளை வைத்துக் கொண்டுதான், அந்த நிறுவனங்களுக்கு எதிராக முகநூலில் தட்டச்சு செய்து கொண்டிருக்கிறோம்... இது படுமோசமான முரண்.


சரி தீர்வுதான் என்ன...?

இவையெல்லாம் பிரச்னைகள். இது எதுவும் புதியதல்ல. இவை என்னை விட உங்களுக்கு நன்கு தெரியும். உங்களால் இன்னும் விரிவாகவே எழுத முடியும். ஆனால் தீர்வு என்ன...? அனைவரும் தேர்தலை புறக்கணிப்பது தீர்வாகுமா..? இல்லை. நிச்சயம் இல்லை. அது மோசமான கலகத்தில் போய் முடியும். நான் இரண்டு நடவடிக்கைகள் மூலம்தான் இதற்கு தீர்வு காண முடியும் என்று நம்புகிறேன். ஒன்று வாக்கிற்கு பணம் வாங்க மறுப்பது. பணம் தரும் அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் குறித்து தேர்தல் ஆணையத்திற்கு புகார் தெரிவிப்பது. இளைஞர்கள் கரம் கோர்த்து வீதிக்கு வீதி ஒரு குழு அமைத்து இதை செய்வது.

இரண்டாவது, வாக்களிப்பது மட்டும்தான் ஜனநாயக கடமை என்று எண்ணாமல், ஆட்சியை தொடர்ந்து கண்காணிப்பது, தவறு நிகழும்போது, அதற்கு எதிராக அனைத்து வழிகளிலும் போராடுவது. தவறை தடுப்பது. இது ஒன்றோடு ஒன்று தொடர்புடையது. நாம் சுத்தமாக இருக்கும்போதுதான் கட்சிகளின் தவறை சுட்டிக் காட்ட முடியும், கட்சிகள் தவறு செய்யாமல் இருக்கும்போதுதான்,  அவரிகளிடம் பணம் குவியாது, அவர்களும் தங்கள் தவறுகளில் நம்மை பங்குதாரர்களாக  சேர்க்க மாட்டார்கள். அதனால், நம் இரண்டையும் செய்ய வேண்டும்.

'யார் எக்கேடு கெட்டால் நமக்கு என்ன...? நாம் உண்டு... நம் வேலை உண்டு என்று இருப்போம்' என்று நினைப்பீர்களாயின், உங்கள் குழந்தைகளை மோசமான படுகுழியில் தள்ளுகிறீர்கள்  என்று அர்த்தம். ஆம், நான் முன்பே கூறியது போல தேர்தல் ஜனநாயகத்தை விட சிறந்த அமைப்பு எதுவும் இல்லை; அதை நாம் நம்மையும் அறியாமல் வலுவிழக்க செய்து வருகிறோம். அது ஒரு நாள் மோசமான விளைவை ஏற்படுத்தும். அதன் விளைவுகளை நம் பிள்ளைகள்தான் அறுவடை செய்வார்கள்.

நம் குழந்தைகள் அமைதியான அரசியல் சமூக சூழலில்  வாழ வேண்டும் என்று விரும்புவோம் ஆயின், இந்த அமைப்பை காக்கும் கடமை அனைவருக்கும் இருக்கிறது. அதற்கு நேர்மையான அரசியல் அவசியம்.

- மு.நியாஸ் அகமது

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close