Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'பிரியங்கா' மற்றும் 'ஆயுத எழுத்து' திரைப்படமும் உடுமலை கெளசல்யாவின் வாக்குமூலமும்!

 “ரோட்டுல யாரோ அடிபட்டுகிட்டு இருக்காங்களேன்னு எல்லாரும் வேடிக்கை பார்க்காம, அந்த இடத்துல ஒருத்தவங்க கல்லு எடுத்து வீசி இருந்தாலும் கூட அவனை காப்பாத்தி இருந்திருக்கலாம். யாருமே பக்கத்துல கூட வரல...” - இது அரை இருட்டில் எடுக்கப்பட்ட உடுமலைப்பேட்டை கெளசல்யாவின் வாக்குமூல வீடியோ.

இது கெளசல்யாவின் கேள்வி மட்டுமல்ல, நமக்குள்ளேயே நாம் பல முறை கேட்டுக்கொள்ளும் கேள்வி இது. எது நம்மை அநியாயங்களுக்கு எதிராக செயல்பட விடாமல் தடுக்கிறது...? எதை கண்டு நாம் அஞ்சுகிறோம். கெளசல்யா - சங்கர் கொடூரமாக தாக்கப்படுகிறார்கள், சுற்றி குறைந்தது நூறு பேருக்கு மேலாவது இருப்பார்கள். ஆளுக்கொரு கல்லை அவர்களை நோக்கி எரிந்திருந்தால் நிச்சயம் கெளசல்யா சொல்லியது போல் சங்கரை காப்பாற்றி இருக்கலாம். ஆனால், எது நம்மை செயல்பட விடாமல் தடுத்தது, தடுக்கிறது...?


பத்து ஆண்டுகளில் நடந்தது என்ன...?


என் சிறு வயதில் பார்த்த பிரியங்கா திரைப்படம் பசுமையாக நினைவிருக்கிறது. அந்த படத்தின் இறுதிகாட்சியில், ரேவதியை தாக்க ஒரு கூட்டம் துரத்தி வரும், அவர் ஓடி  கட்டட வேலை நடந்து கொண்டிருக்கும் இடத்திற்கு வருவார். அங்கிருந்த மக்கள் கல்லால் அடித்து, ரேவதியை துரத்தி வந்தவர்களை விரட்டுவார்கள். இதேபோல் என் மேல்நிலை பள்ளி காலத்தில் வந்த ஆயுத எழுத்து படத்தின் இறுதிக் காட்சியும் அவ்வப்போது நினைவில் வரும். சென்னையின் பிரதான சாலையில் ஒன்றான நேப்பியர்ஸ் பாலத்தில், மாதவனும், சூர்யாவும் சண்டை போட்டுக் கொண்டு  இருப்பார்கள். ஆனால், அதை பற்றியெல்லாம் கவலைப்படாமல் அந்த சாலையில் மக்கள் சுறுசுறுப்பாக போய் கொண்டிருப்பார்கள்.  இவை இரண்டும் சினிமாவில் இடம்பெற்ற வெறும் புனைவுதான் என்றாலும், நமக்கு இரண்டு வெவ்வேறு காலக்கட்டங்களில் வாழ்ந்த மனிதர்களின் மனநிலையை இந்த இரண்டு காட்சிகளும் நன்றாக உணர்த்துகிறது.


பிரியங்கா படம் வெளியானது 1994-ம் ஆண்டு, ஆயுத எழுத்து வெளியானது 2004- ம் ஆண்டு.  இந்த பத்து ஆண்டுகளில் மாறிய மனிதர்களின் மனநிலையை இந்த இரண்டு படங்களும் வெளிப்படுத்தி இருக்கிறது. இந்த பத்து ஆண்டுகளில், என்ன நடந்தது என்பதை நாம் புரிந்து கொள்ள முயற்சித்தால், கெளசல்யாவவின் கேள்விகளுக்கு மட்டுமல்ல, நம்மை சூழ்ந்துள்ள  பிரச்னைகளுக்கு விடை கிடைக்கும்.

நாம் சுயநலவாதியாக மாறியது எதேச்சையானதா...?

வெளிப்படையாக பேசுவோமானால், கடந்த இருபது ஆண்டுகளில் நாம் மிக மிக சுயநலவாதியாகிவிட்டோம்.  புறச்சூழல்கள் எப்படி இருந்தாலும், நாம் நமது பெண்டு பிள்ளைகள் என வாழப் பழகிவிட்டோம். இது ஏதோ எதேச்சையாக நடந்தது போல் இருக்கலாம். ஆனால் உண்மை அப்படி அல்ல, இதற்கு பின்னால் வணிகமயமான அரசியல், பெருநிறுவனங்களின் நலன் என அனைத்தும் இருக்கிறது. அரசுகளும், நிறுவனங்களும் திட்டமிட்டு நம்மை சுயநலவாதியாக ஆக்கி இருக்கின்றன. அரசு எப்போதும் மக்கள் ஒன்றுப்பட்டு விடக்கூடாது என்பதில் மிகத் தெளிவாக இருக்கும். மக்களும் எப்போதும் உதிரிகளாகவே இருக்க வேண்டும் என்றுதான் எல்லைகள் கடந்து எல்லா அரசுகளும் விரும்பும். அதற்கு இனம், சாதி, வர்க்க ஏற்ற தாழ்வுகள் என அனைத்து பாகுபாட்டையும் மிக தெளிவாக கையாளும். மக்கள் ஒன்றுபட்டால், நாம் அரசுகளின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராக கேள்வி எழுப்புவோம், போராடுவோம். இதை எந்த அரசும் விரும்பாது.

இதையெல்லாம் தாண்டி, நிறுவனங்களின் நலன் முதன்மையானதாக இருக்கிறது. பிரியங்கா படம் வந்த இந்த காலக்கட்டத்தில்தான், இந்தியாவில் பெரு நிறுவனங்கள் உள்ளே வர துவங்கியது. அது ஆயுத எழுத்து காலக்கட்டத்தில் உச்சத்தில் இருந்தது. இந்த  நிறுவனங்கள் தம் நலனை காத்துக் கொள்ள, மக்கள் அரசியல் விழிப்புணர்வு பெறுவதை விரும்புவதில்லை. அது ஒரு பிரிவினருக்கு மட்டும் அதிக ஊதியம் தந்து, அவர்களை பொருட்களை வாங்கி குவிக்க தூண்டும், அவர்களின் சூழல் அதிக கடனை வாங்க வைக்கும். அவர்களை எப்போதும் பணி பாதுகாப்பின்மையில் வைக்கும். கோடிகளில்  அடுக்குமாடி வீடு, சொகுசான கார் என வங்கி கடனில் வாங்கி, ஒரு சுழலில் சிக்கிய ஒருவனுக்கு, நிச்சயம் தம் நலனும், தம் குடும்ப நலனும்தான் முதன்மையானதாக இருக்கும். அவனால் தம் வாழ்வை, வளர்ச்சியை தாண்டி எதையும் சிந்திக்க முடியாது. தவறுகளை தட்டி கேட்பதை விட, அதற்கு தகுந்தாற் போல் நாம் வாழப் பழகி கொள்வோம்.  அதனால்தான் ஒரு மென்பொருள் நிறுவனம்,  கூட்டம் கூட்டமாக தன் ஊழியர்களை வேலையிலிருந்து அனுப்பிய போதும், வேலை நீக்கம் செய்யப்பட்டவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் விழிக்க மட்டுமே முடிந்தது. அதை தாண்டி அவர்களால், உருப்படியாக எதுவுமே செய்ய முடியவில்லை.  இந்த சூழல் எதேச்சையானது என்று நம்புவோமானால், நாம் வெகுளியாக இருக்கிறோம் என்றுதான் அர்த்தம்.

பொருளாதார காரணிகளால், பெரு நகரங்கள் எங்கும் படர்ந்த இந்த சுயநலமானது, இப்போது கொஞ்சம் கொஞ்சமாக நகரங்கள், கிராமங்கள் எங்கும் பரவி வருகிறது. ஏதோ கிராமங்களிலும், நகரங்களிலும் முன்பெல்லாம் சொர்க்கமாக, சமநிலையும் சமூக நீதியும் நிலவியது, பெரு நிறுவனங்கள் வந்த பின்புதான் அது சீர்கெட்டது என்று நான் நிறுவ வரவில்லை. அது என் நோக்கமல்ல. கிராமங்களில்தான் சாதி அனைத்து தளங்களிலும் தன் மேலாண்மையை நிறுவியது. இன்றும் எனக்கு தெரிந்து பல கிராமங்களில் ரெட்டை குவளை முறை இருக்கிறது. ஆனால், நிச்சயம் கிராமத்தில் யாரோ ஐந்து பேர் வந்து வெட்டி விட்டு சர்வ சாதாரணமாக சென்றுவிட முடியாது. நிச்சயம் மக்கள் தடுக்க முயற்சிப்பார்கள்.

கிராமங்களிலும் சுயநலம் இருக்கிறது. ஆனால், அங்கு ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ வேண்டிய தேவை இன்னும் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் நகரங்களில்,  அனைத்தையும் நாம் சந்தையில் வாங்கிவிடுவதால், அங்கு மக்களுடன் இணக்கமாக வாழ்வதை விட, பணம் பிரதானம் ஆகிவிடுகிறது.

சங்கர், கெளசல்யா, நாளை நாம்:

சங்கர், கெளசல்யாவை வெட்டியவர்களுக்கு வேண்டுமானால் சாதிய காரணங்கள் இருக்கலாம். ஆனால், அதை வேடிக்கை பார்த்த அனைவருக்கும் அந்த காரணம் இருக்கும் என்று நான் நம்பவில்லை. நமக்கேன் வம்பு என்ற மனநிலை மட்டுமே அதற்கு பின்னால் இருக்கும் ஒரே காரணம். இந்த மனநிலையிலிருந்து நாம் வெளியே வர மறுத்தோமானால், நேற்று சங்கர் கெளசல்யாவிற்கு நடந்தது, அதை வேடிக்கை பார்த்த நமக்கும் நாளை நடக்கலாம்.

- மு. நியாஸ் அகமது

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close