Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சாதியும்... உயர் கல்வியும்... 100 பில்லியன் பிஸ்னசும்!

மிழகத்தில் அதிக அளவு இடம்பெயர்வுகள் இருக்கின்றன. பெருவாரியான மக்கள் நகரங்களை நோக்கி இடம்பெயர்ந்து கொண்டிருக்கிறார்கள். வாழ்வாதாரம், கல்வி போன்றவை அதற்கான காரணங்களாக இருந்தாலும், பிரதான காரணமாக இருப்பது தம் சாதிய அடையாளங்களை மறைப்பதற்கானதாகவே இருக்கிறது.

ஆனாலும், நகரங்களிலும் நவீன தீண்டாமை நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. சாதியம் தமக்கு கிடைக்கின்ற அனைத்து வழிகளிலும் தம்மை புதுப்பித்துக் கொள்கிறது. வேறு கலாச்சாரம் கொண்டோர் அண்டை அயலாராக வசிப்பதை விரும்பாதவர்கள் பற்றிய பன்னாட்டு கணக்கெடுப்பு ஒன்றில் ஜோர்டானியர்களுக்கு அடுத்தபடியான இரண்டாமித்தை இந்தியர்கள் பெற்றிருக்கிறார்கள். இந்த நவீன காலங்களிலும்  இந்தியாவின் சாதி முறையானது, ஒவ்வொரு 18 நிமிடங்களுக்கும் ஒரு வன்முறையைக் கட்டவிழ்த்துவிடுகிறது. இது, நமது கல்விமுறை சாதிய பாகுபாட்டை ஒழிப்பதில் எந்த பங்களிப்பையும் செய்யவில்லை என்பதையே காட்டுகிறது.

இந்த சூழலில்,  கல்வி வளாக வன்முறைகள் குறித்து அண்மையில் ஆதவன் தீட்சண்யா ஆற்றிய உரை இயல்பாக முக்கியத்துவம் பெறுகிறது.
 

அவரின் உரையிலிருந்து....

சாதி படிநிலைகளை தற்காத்து கொள்வதற்கே, கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது :


"இந்திய மக்கள் பலர் பேசக் கேட்டு இருக்கிறோம், அதாவது, பிரிட்டிஷ் அரசு மட்டும் இங்கு வரவில்லை என்றால், நம் மக்கள் பலர் கல்வி நிலையங்களுக்குள் நுழைந்திருக்க முடியாது, கல்வி கற்று இருக்க முடியாது.  ஆனால், அது உண்மையில்லை. அவர்கள் கல்வியை இங்கு அறிமுகப்படுத்தியபோதே அனைத்து தீண்டாமைகளுடன்தான் அறிமுகப்படுத்தினார்கள். 

இந்தியாவை ஆண்டு கொண்டிருந்த பிரிட்டிஷ் அரசின் பாராளுமன்றம், 1813-ம் ஆண்டு நிறைவேற்றிய ஒரு மசோதா, “ இலக்கியத்தைப் புனரமைப்பதற்காகவும், மேம்படுத்துவதற்காகவும், அறிவு வளம் நிரம்பிய இந்தியர்களை ஊக்குவிப்பதற்காகவும், இந்தியாவிலுள்ள பிரிட்டிஷ் பிரதேசங்களில் வாழும் மக்களிடம் விஞ்ஞான அறிவைப் புகுத்தி வளர்ப்பதற்ககவும், இந்தியாவின் அதிக வருமானங்களிலிருந்து ஆண்டுதோறும் 1 லட்சத்துக்குக் குறையாத பணத்தை ஒதுக்கி மேலே கண்ட நோக்கங்களின் பொருட்டு செலவிட வேண்டும்...” என்று வலியுறுத்தியது.

இதற்கு  இங்கிருந்த பிரிட்டிஷ் அதிகாரிகள், " நாம் சமஸ்கிருத கல்வி கொடுப்தே போதுமானது..." என்று பதிலளித்தார்கள். அதன்பின்பு, இங்கு பல கல்வி நிலையங்கள் ஏற்படுத்தப்படுகிறது. ஆனால், எந்த கல்வி நிலையங்களிலும் பிற்படுத்தப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்படவில்லை. பின்பு, கல்வி தொடர்பான பல அறிக்கை பரிமாற்றங்கள் பிரிட்டிஷ் அதிகாரிகளுக்குள் நடந்தது. இந்த அறிக்கைகள் அனைத்தும், "நாம் அனைவருக்கும் கல்வி கொடுக்க தேவையில்லை. சமூகத்தில் மேற்தட்டில் இருப்பவர்களுக்கு மட்டும் கல்வி அளிப்பது போதுமானது. இதன் மூலமே நாம் அறிவார்ந்த சமூகத்தை கட்டமைத்துவிட முடியும்' என்பதாக இருந்தது. 1830ல் அனுப்பப்பட்ட ஒரு அறிக்கையானது,  “எண்ணிக்கையில் மிகப் பெருமளவில் உள்ள வகுப்பினரிடம் நேரடியாகச் செயல்படுவதன் மூலம் நாம் எதிர்பார்க்கும் பலனைவிட,  மேல்நிலை வகுப்புகளிடையே கல்வியின் தரத்தை உயர்த்துவதன் மூலம் சமுதாயத்தின் கருத்துகளிலும் உணர்வுகளிலும் மிகப் பெருமளவில் அனுகூலமான மாற்றத்தை ஏற்படுத்த முடியும்" என்றது.”

பிரிட்டிஷ் அரசு கல்விநிலையங்களில் நிலவிய தீண்டாமை:

கல்வி அளிப்பதில் மட்டும் தீண்டாமை இல்லை. கல்வி நிலையங்களிலும் தீண்டாமை நிலவியது. அகமத் நகர் பிற்படுத்தப்பட்ட மக்கள்,  "எங்களுக்கும் கல்வி அளிக்க வேண்டும்" என்கின்றனர். தங்களுக்கான கல்வி நிலையத்தை ஏற்படுத்த ஆகும் செலவையும் தாங்களே ஏற்றுக் கொள்ள முன் வருகின்றனர். இதற்கு அனுமதியளித்த பிரிட்டிஷ் அரசு, அதற்கான அனுமதி அறிக்கையை இட்டாலிக் எழுத்துருவில் (italic font) எழுதியது. அதற்கான காரணமாக, "இதுபோல் அனுமதி அளிப்பது, இதுவே முதன்முறை. அதை குறிப்பிடவே, இவ்வாறு எழுதப்படுகிறது" என்று சொல்லப்பட்டது . 1855 நவம்பர்  மாதம், அகமத் நகர் வாசிகளது பங்களிப்புடன் கீழ்ச் சாதியினர் கல்வி பயில முதன்முதலாக ஒரு பள்ளிக்கூடம் திறக்கப்பட்டது. பின்பு அனைத்து பள்ளிகளிலும் தாழ்த்தப்பட்ட மக்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். ஆனால், அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. தாழ்த்தப்பட்ட மக்களுடன் ஒன்றாக, உயர் சாதி மக்கள் படிக்க விரும்பாத காரணத்தினால், பல பள்ளிகள் மூடப்பட்டன. சில தாழ்த்தப்பட்ட மக்களின் குடியிருப்புகள் உயர் சாதி மக்களால் தீக்கிரையாக்கப்பட்டன.

சுதந்திர இந்தியாவில் கல்வி நிலையங்களில் பாகுபாடுகள்:

கல்விக்கூடங்கள் பொதுவானவை,  சாதியுணர்வோடு சிலர் இருப்பது தனிப்பட்ட பிரச்னை என சொல்லப் படுகிறது. கல்வி அமைப்பையே சாதியப் பாகுபாட்டுடன்தான் பிரிட்டிஷ் ஆட்சி உருவாக்கி வைத்து விட்டுப் போனது. இதில் பெயரளவுக்கு கூட எவ்வித மாற்றமுமின்றி, அதனை பாதுகாப்பதற்கான முயற்சி சுதந்திர இந்தியாவில் நடந்தது, நடக்கிறது.

பெரும்பாலும் பள்ளிகள் ஊருக்குள்தான் இருக்கும், உயர்சாதி மக்கள் குடியிருக்கும் தெருவுக்குள் அனுமதிக்கப்படாத தாழ்த்தப்பட்ட மக்கள், எப்படி ஊருக்குள் இருக்கும் பள்ளிக்குள் செல்ல முடியும்...? சாதி கடந்து பழகாதபடி   மாணவர்கள் பிரித்தே அமரவைக்கப்படுகின்றனர். மதிய உணவு, விளையாட்டு, கலை நிகழ்ச்சிகளிலும் இது தொடர்கிறது. இது தாழ்த்தப்பட்ட மாணவருக்கு ஆளுமை சிதைவை ஏற்படுத்துகிறது. இந்த உளைச்சலால் வகுப்பில் கவனம் செலுத்த முடியாமலும்,  கற்கும் ஆர்வம் குன்றி, பள்ளிக்கு வருவது குறையவும் காரணமாக அமைகிறது. இந்த காரணங்களால், மாணவன் மன உளைச்சலுக்கு உள்ளாகி, சில சமயம் தற்கொலை முடிவுக்கே தள்ளப்படுகிறான். 

கோட்டாவும், இட ஒதுக்கீடும்: 

 பட்டியல் இன,  பிற்படுத்தப்பட்ட  மாணவர்களுக்கு அருகாமை கல்லூரிகளும், மரபான படிப்புகளுமே தெரிந்திருக்கின்றன.  இவர்களுக்கு, மத்திய பல்கலைக்கழகங்கள், ஐஐடி, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்கள் குறித்து போதிய அறிமுகமில்லை. தெரிந்திருந்தாலும், நுழைவுத்  தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் பெரும் செலவு பிடிக்கக்கூடியதாகவும், அவை நகரங்களில் மட்டுமே நடப்பதாலும்  பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களால் பங்கேற்க முடிவதில்லை.

அசோசெம் (ASSOCHAM, The Associated Chambers of Commerce of India) மதிப்பீட்டின்படி, 100 பில்லியன் ரூபாய் புழங்கும்  தொழிலாக ராஜஸ்தான் மாநிலம் 'கோட்டா' என்ற ஊரில் நடக்கும் ஐஐடி நுழைவுத்தேர்வு பயிற்சி வகுப்பு  உருவெடுத்துள்ளது. ஐஐடியில் படிக்கும் நான்கில் ஒருவர் 'கோட்டா' வில் பயிற்சி பெற்றவர்கள்.   அதாவது மேட்டுக்குடி, உயர்சாதி, நகரப் பின்புலமுள்ளவர்கள், கல்வி பெற்ற முதல் தலைமுறை பட்டியலின, பிற்படுத்தப்பட்ட குடும்பங்களில் இருந்தும், அரிதாக ஊரகப் பகுதிகளில் இருந்தும் சில மாணவர்கள் இந்த நிறுவனங்களுக்குள்  நுழைகின்றனர். சுயமான தயாரிப்பில் நுழைவுத்தேர்வு எழுதும் இவர்களது மதிப்பெண்,  தரவரிசை பின்தங்கும். எனவே இடஒதுக்கீட்டில் நுழைகிறார்கள். மேட்டுக்குடி, உயர்சாதி, நகரப் பின்புலமுள்ளவர்கள் போதிய பயிற்சி, வழிகாட்டுதலுடன் நுழைவுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று மெரிட்டில்  நுழைகிறார்கள்.

பொதுப்போட்டிக்குரிய மதிப்பெண் பெற்றாலும் பட்டியல் இன, பிற்படுத்தப்பட்ட மாணவர்களை அவரவர் சாதிக்குரிய இடஒதுக்கீட்டிற்குள் அடைத்துவிட்டு பொதுப்போட்டிக்குரிய  மொத்த இடங்களையும்  உயர்சாதியினருக்கு ஒதுக்கிக்கொள்ளும் மோசடி நடந்துவருகிறது. இதன் காரணமாக, மெரிட்வாலாக்கள்  திறமைசாலிகள்,  இடஒதுக்கீட்டில் நுழைகிறவர்கள் திறமைக் குறைவானவர்கள் என்கிற கற்பிதமான முன்முடிவு,  உயர் கல்வி நிறுவனங்களில் வலுவாக ஆதிக்கம் செலுத்துகிறது. இந்த முன் முடிவுடன்தான் தேர்வு தாள்களும் திருத்தப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு, டெல்லி வர்த்தமான் மருத்துவக் கல்லூரியில்,  பிஸியாலஜி என்கிற பாடத்தில் மட்டும் பட்டியல் இன மாணவர்கள் திரும்பத்திரும்ப ஃபெயில் ஆகி இருக்கிறார்கள். இதில் உயர் நீதிமன்றம் தலையிட்ட பின் நடந்த பொது தேர்வில், பங்கேற்ற 25 மாணவர்களில்  24 பேர் தேர்ச்சி அடைந்து இருக்கிறார்கள்.  இது அப்பட்டமாக, தேர்வு தாள்கள் முன்முடிவுடன் திருத்தப்படுவதை காட்டுகிறது.

ஏன் ரோஹித் வெமுலாக்களும் மரணிக்கிறார்கள்...?

உயர் கல்வி நிறுவனத்தில் படிப்பவர்களுக்கு அது தரும்  பெருமிதம் மகிழ்வானதாக இருந்தாலும், தகுதி குறைந்தவர் என்பதன் பேரால் அன்றாடம் சந்திக்கிற  அவமதிப்புகள், புறக்கணிப்புகள் மிகுந்த  மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. இதனால்தான் நாம் செந்தில் குமார்களையும் ரோஹித் வெமுலாக்களையும் இழக்கிறோம்.

சரி தீர்வன்ன...?


சாதியை பற்றி பேசாமல், நாம் சாதியை ஒழிக்க முடியாது. சாதி ஒழிப்பு கூட்டங்களில் கலந்து கொள்வது மட்டும் முற்போக்காளர்களின் வேலை இல்லை. வாய்ப்பு கிடைக்கும் எல்லா இடங்களிலும் சாதியின் தீமைகளை பேசுங்கள், குறிப்பாக, குழந்தைகளிடம் பேசுங்கள். அனைவரையும் சமமாக மதிக்க கற்று தாருங்கள். இப்போது பிரசாரத்தில் மூலமாக மட்டும் சாதியை ஒழித்துவிட முடியும் என்ற எண்ணம் இருக்கிறது. அது நிச்சயம் முடியாது. பிரசாரத்தின் மூலமாக சாதியை ஒழிக்க முடியுமென்றால், அதே பிரசாரத்தின் மூலமாக சாதியை தக்கவைத்து கொள்ள முடியும்தானே...? சாதியை ஒழிப்பதற்கு முதலில், முற்போக்காளர்கள் சாதி ஒழிப்பை தம் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டும். சாதி குறித்த கூட்ட மனநிலையிலிருந்து வெளியே வர வேண்டும். அப்போது தான் சமநிலை சமூகத்தை கட்டமைக்க முடியும்.

இவ்வாறாக இருந்தது அவரின் உரை.


- மு. நியாஸ் அகமது


 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close