Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தேமுதிக- மக்கள் நலக் கூட்டணியில் ஜி.கே.வாசன்?

திமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு,  தமிழக சட்டமன்ற தேர்தலின் கள வியூகத்தை வகுத்துள்ளார் ஜெயலலிதா. இதில் சிற்சில மாற்றங்கள் நடந்தாலும் அது,  வியூகத்தை பாதிக்காத வகையில் அதிமுக தலைமை பார்த்துக்கொள்ளும்.

சர்ச்சைக்குள்ளான அமைச்சர்களுக்கு மீண்டும் சீட், தொகுதியில் சொந்தக் கட்சியினர் மத்தியில் அதிருப்தியை பெற்றவர்களுக்கு சீட் என்று பலமுனைக் குற்றச்சாட்டுகள் இந்த வேட்பாளர் பட்டியலில் உள்ளவர்கள் மீது வீசப்பட்டு வருவதால்,  ஒருவேளை இதை தேர்தலுக்கு முந்தைய வெள்ளோட்டமாகவும் ஜெயலலிதா கருத இடமுண்டு என்பது அரசியல் நோக்கர்கள் கணிப்பு. அதனால் எதுவும் மாறலாம்.

ஒருவகையில் தமிழக சட்டமன்றத் தேர்தல் களம், இறுதி வடிவத்திற்கு வந்துள்ளது. திமுக- காங்கிரஸ் கூட்டணி, அதிமுக மற்றும் தோழமைக் கட்சிகள் ஒரு அணி, பாமக தனி அணி, பாஜக தனி அணி, சீமான் தனித்துப் போட்டி,  தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி என்று ஆறுமுனை போட்டியாகக் காட்சியளிக்கிறது.இது முன்பு எப்போதும் இல்லாத போட்டியை  அரசியல் கட்சிகள் மத்தியில் உண்டாக்கியுள்ளது.

வழக்கமாக கடந்த 1991 க்கு பிறகு அதிமுக 5 ஆண்டுகள் என்றால்,  திமுக 5 ஆண்டு என்பதே தமிழக மக்கள் காணும் ஆட்சி மாற்றமாக இருந்துவந்தது. ஆனால் இந்த முறை திமுக, அதிமுகவிற்கு மாற்று என்று  பாமக, பாஜக, தேமுதிக-மக்கள் நலக் கூட்டணி என பலமுனை போட்டி காணப்படுவதால் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல்  இருக்கிறது தமிழக அரசியல் களம். அதுவே ஆளும் அதிமுகவிற்கும், ஆண்ட திமுகவிற்கும் ஒருவித நெருக்கடியை உண்டாக்கியிருக்கிறது.

இந்நிலையில், இன்று (திங்கள்) காலை திமுக-காங்கிரஸ் தொகுதி உடன்பாடு இறுதி செய்யப்பட்டு காங்கிரஸ் 41 இடங்களில் போட்டியிடுவதென்று முடிவுகள் வெளியானது. இனி எந்தக் கட்சிக்கும் திமுக கூட்டணியில் இடமில்லை என்றும் செய்திகள் வெளியானது. இதற்கு பிறகு அடுத்த சில மணிநேரங்களிலேயே அதிமுக 227 இடங்களில்  போட்டி என்றும்,தோழமைக் கட்சிகளுக்கு 7 இடங்கள் என்றும் அறிவிக்கப்பட்டு,வேட்பாளர் பட்டியல் படுவேகமாக  வெளியானது.

அதில், தமிழக வாழ்வுரிமைக் கட்சி கடும் அப்செட் ஆகியுள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்தே அரசியல் நடத்திவந்த  பண்ருட்டி வேல்முருகன் இனி என்ன செய்வது என்று தமது ஆதரவாளர்களோடு  தீவிர  ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக வாழ்வுரிமைக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதே போல ஜி.கே.வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ்,  அதிமுக கூட்டணியில் இடம்பிடிக்கும் என்று  அரசியல் ஆருடம் கூறப்பட்டு வந்த நிலையில், அதிமுக தலைமை  வேட்பாளர் பட்டியலையே வெளியிட்டுவிட்டது. திமுகவும் வாசனை சேர்க்காது என்று உறுதியான செய்திகள் வெளியாகியுள்ளதால் அவரின் அடுத்த ஒரே வாய்ப்பாக  தேமுதிக- மக்கள் நலக் கூட்டணி திகழ்கிறது.

ஏனெனில் தமிழ் மாநில காங்கிரஸ்  தனித்துப் போட்டி என்று முடிவெடுத்து இருந்தால் இந்நேரம் சீமான் போன்று வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, பிரசாரக் களத்தில் பயணித்துக் கொண்டிருக்கும். ஆனால் தொடக்கத்தில் இருந்தே கூட்டணி கனவோடுதான் தமிழ் மாநில காங்கிரஸ் இயங்கிவருகிறது என்பதை, வாசனின் பேட்டிகள் உணர்த்தி வந்துள்ளன. மார்ச் 30 -ம் தேதிக்குள் கூட்டணியை இறுதி செய்வோம் என்று கூறிவந்த தமாகா, இப்போது என்ன செய்வது என்று திகைத்துப்போய் நிற்கிறது.

வாசன் யாருடன் செல்வார் என்பதே பெரிய கேள்வியாக எழுந்துள்ள சூழலில், இது தொடர்பாக,தேமுதிக-மக்கள் நலக் கூட்டணின் மூத்த நிர்வாகிகளிடம் கேட்டபோது, " மக்கள் நலக் கூட்டணி,  வாசனுக்கு விடுத்துள்ள அழைப்பு அப்படியே  இருக்கிறது. எங்களுடன் இணைவதில் அவர்தான் இறுதி முடிவு எடுக்கவேண்டும். வாசனின் தமிழக மற்றும் மத்திய அரசுக்கு எதிராக  அவர் நடத்திய போராட்டங்கள், அறிவிப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில்தான் அவரை எங்களது கூட்டணியில் சேர அழைப்பு விடுக்கப்பட்டது. மக்கள் நலன் காக்க எங்களுடன்  அவர் இணைய வேண்டும். அவ்வாறு த.மா.கா.,  எங்கள் கூட்டணியில் இணைந்தால், அவர்கள் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கையை தேமுதிக தலைவர் விஜயகாந்த் முடிவு செய்துகொள்வார்" என்று தெரிவித்தனர்.

இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்தோடு வாசன் தரப்பில் பேசி வருவதாகவும்,  தொகுதிகள் உடன்பாடு  எட்டப்படும் நிலையில் இருப்பதாகவும், மிக விரைவில் முடிவு எடுக்கப்பட்டு தேமுதிக-மக்கள் நலக் கூட்டணியில் வாசன் இடம் பிடிப்பார் என்றும்  கூறப்படுகிறது.

தேமுதிக-மக்கள் நலக் கூட்டணியின் தேர்தல் மாநாடு, வரும் 10 ம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம் மாமண்டூரில் உள்ள ஆண்டாள் அழகர்  பொறியியல் கல்லூரியில் நடக்கவுள்ளது. அப்போது தேமுதிக-மக்கள் கூட்டணியில்  தமிழ் மாநில காங்கிரசின் இணைப்புக் குறித்து முறையான அறிவிப்புகள் வெளியாகலாம் என்றும் கூட்டணியின் தலைமை  வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

- தேவராஜன்                

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close