Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கட்சிக்குள் கலகக்குரல்: என்னவாகும் தேமுதிக-வின் எதிர்காலம்?

 

தே.மு.தி.க.வுக்கு இது நெருக்கடியான காலகட்டம். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி சேரும் என்று எல்லோரும் நினைத்திருக்க, தனித்து போட்டி என்று அதிரடியாக விஜய்காந்த் அறிவித்தபோதே அக்கட்சியினர் அதிர்ந்தனர். அடுத்து மக்கள் நலக் கூட்டணியில் இணைந்தபோது மனதுக்குள் புழுங்கினார்கள். ஒரு சில மாவட்ட நிர்வாகிகள் வெளியேறி, தி.மு.க.வில் இணைந்தனர். எதைப்பற்றியும் கவலைப்படாமல் பிரசாரத்தை துவக்கிய தே.மு.தி.க.வினர், தொடர்ந்து ஒவ்வொரு ஊராக தேர்தல் அறிக்கை பிரசார கூட்டங்களை நடத்தி வந்தார்கள்.

இந்த நிலையில்தான் தே.மு.தி.க.வுக்குள் மாவட்டச் செயலாளர்கள், சிட்டிங் எம்.எல்.ஏ.க்கள், விஜயகாந்தின் அரசியல் நிலைபாட்டுக்கு எதிராக கூடி பேசி வந்தார்கள். விஜயகாந்த் மருத்துவ சிகிச்சைக்காக ஓய்வு எடுத்து வரும் சூழலில், தே.மு.தி.க கொள்கை பரப்பு செயலாளர் சந்திரகுமார் இன்று பத்திரிகையாளர்களை அழைத்து, ''மக்கள் நலக் கூட்டணியுடன் தே.மு.தி.க இணைந்தது சரியல்ல, தி.மு.க.வுடன் இணைய வேண்டுமென்பதே 95 சதவீத தே.மு.தி.க.வினரின் விருப்பம். இதை நாங்கள் எதிர்க்கிறோம்'' எனக்  கூறினார். இவருடன் 3 எம்.எல்.ஏ.க்கள், பத்து மாவட்ட நிர்வாகிகள் உடன் வந்துள்ளனர்.

இது தி.மு.க.வின் சதி வேலை என்று வழக்கம்போல் தே.மு.தி.க.வும், மக்கள் நலக் கூட்டணி தலைவர்களும் கருத்து சொல்லி வரும் நிலையில், சமீபகாலமாக தே.மு.தி.க.வுக்கு ஏற்பட்டு வரும் பின்னடைவு பற்றி பின்னோக்கி பார்த்தால் எங்கே பிரச்னை என்பது நமக்கு தெரிய வரும்.

2005-ல் பெரிய எதிர்பார்ப்புடன் தே.மு.தி.க மதுரையில் துவங்கப்பட்டது. அப்போதைய அரசியல் சூழ்நிலையில் தி.மு.க., அ.திமு.கவுக்கு எதிரான மாற்று சக்தியாக விஜய்காந்த் பார்க்கப்பட்டார். அப்போது அவர் பேசிய பேச்சுக்களை மக்கள் ரசித்தார்கள். ஒரு மேடைப்பேச்சாளருக்கு உரிய திறமை இல்லாமலும், ஒரு அரசியல் தலைவர்போல் தத்துவார்த்த ரீதியாக இல்லாமலும் அவர் யதார்த்தமாக பேசியதை, ' நடிக்காமல் பேசுகிறார்' என்று எல்லோரும் பாராட்டினார்கள். மீடியாக்கள் அனைத்தும் தே.மு.தி.க.வுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தன. 2006 சட்டமன்ற தேர்தலில் யாருடனும் கூட்டணி வைக்காமல் தனித்து போட்டியிட்டார். அதில் விஜயகாந்த் மட்டும் விருத்தாசலத்தில் வெற்றி பெற்றார்.

அத்தேர்தலில் தே.மு.தி.க தனியாக நின்று, ஒரு 'சீட்' வெற்றி பெற்றது எல்லோராலும் கவனிக்கப்பட்டது. அதே தேர்தலில் அக்கட்சி வாங்கிய வாக்கு சதவீதம்தான் அ.தி.மு.க தோல்விக்கு காரணமாக அமைந்தது. அப்போதிருந்து தே.மு.தி.கவை அ.தி.மு.கவும் தி.மு.கவும் கரிசனமாக பார்க்க ஆரம்பித்தன. இப்படி அனைத்து கட்சிகளும் தே.மு.தி.க.வை மரியாதையாக பார்க்க ஆரம்பித்தவுடன், கட்சியில் விஜயகாந்தின் பவர் குறைக்கப்பட்டு அவர் மனைவி பிரேமலதா, மைத்துனர் சுதீஷின் ஆதிக்கம் தலை தூக்க ஆரம்பித்தது. கட்சி நிர்வாகிகள் அனைவரும் சுதீஷை சந்தித்து பேச வேண்டிய நிலை ஏற்பட்டது.

அதற்குபின் நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து நின்று கணிசமான வாக்குகளை வாங்கியது தேமுதிக. அந்த காலகட்டத்தில் தி.மு.க ஆட்சி மீதான ஊழல் குற்றச்சாட்டுகள், ஈழத்தமிழர் பிரச்னை போன்றவைகளால் அ.தி.மு.க.வுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரித்தது. அந்த நேரத்தில் தி.மு.க.வை முழுமையாக அகற்ற ஜெயலலிதா, தே.மு.தி.க.வுடன் கூட்டணி வைக்க ஆசைப்பட்டார், அப்போதும் வழக்கம்போல கூட்டணி இணைப்பு வேலைகளை கம்யூனிஸ்ட்களே பார்த்து,  ஒரு வழியாக அவருக்கு  41 சீட்டுகளை வாங்கி கொடுத்தார்கள். எந்த கட்சியும் அடையாத வகையில் குறுகிய காலத்தில், தி.மு.க.வை பின்னுக்கு தள்ளிவிட்டு, 41-ல் 29 சீட்டுகள் வெற்றி பெற்று விஜயகாந்த் எதிர்க்கட்சித்தலைவர் ஆனார்.

அருமையாக அமைந்த அந்த வாய்ப்பை சரியாகி பயன்படுத்தி இருந்தால், இந்நேரம் மக்கள் மத்தியில் பெரிய தலைவராக ஆகியிருப்பார் விஜயகாந்த். ஆனால், அது ஏதோ அதிர்ஷ்டத்தில் கிடைத்த வெற்றி போல் பார்த்ததால் நல்ல தலைவராக பரிமளித்திருக்க வேண்டியவர், மனம் போன போக்கில் செயல்பட்டதால் விமர்சனத்துக்குள்ளாக ஆரம்பித்தார். பொதுஇடங்களில் கட்சியினரை திட்டுவது, அடிப்பது, மேடைகளில் குண்டக்க மண்டக்க பேசி முகம் சுளிக்க வைப்பது என்று அட்டகாசத்தை ஆரம்பித்தார். அ.தி.மு.க உறுப்பினர்கள் கிண்டலாக பேசியிருந்தாலும், அதை கண்டுகொள்ளாமல் மக்கள் பிரச்னைகளை சட்டசபையில் பேசியிருந்தால் அவருடைய செல்வாக்கு கூடியிருக்கும். அதை விட்டு பதிலுக்கு பதில் சினிமா வசனம்போல பேச ஆரம்பிக்க, சட்டசபைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

சக கட்சி நிர்வாகிகளை மரியாதையாக நடத்தாததால் பண்ருட்டி ராமச்சந்திரன் உட்பட எட்டு பேர் அ.தி.மு.க பக்கம் இடம் பெயர்ந்தார்கள். தி.மு.க போலவே குடும்ப ஆதிக்கம் கட்சிக்குள் தலையெடுக்க ஆரம்பித்தது. இதற்கிடையே 2014 நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்து, அ.தி.மு.க அமோக வெற்றி பெற உதவினார். தி.மு.க.வுடன் கூட்டணி வைக்காமல் தவறான நடவடிக்கை எடுத்தார் என்று எல்லோராலும் விமர்சிக்கப்பட்டார். இத்தேர்தலில் தே.மு.தி.க.வின் வாக்கு சதவீதம் குறைய ஆரம்பித்தது. வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க ஆட்சியை தோற்கடிப்பேன் என்று பேசி வந்தவரிடம், தி.மு.க அதிகாரப்பூர்வமற்ற முறையில் பேச்சு வார்த்தை நடத்தியது.

தே.மு.தி.க.வை முற்றாக ஒழிக்க வேண்டுமென்று நினைக்கும் அ.தி.மு.க.வை தோற்கடிக்க,  அரசியல் தந்திரத்துடன் எதிரிக்கு எதிரி நண்பன் என்று தி.மு.க.வுடன் சேர வேண்டுமென்று கட்சியினர் எதிர்பார்த்தார்கள். அதேபோல் பா.ஜ.க, மக்கள் நலக் கூட்டணியினரும் விஜய்காந்தை இழுக்க முயற்சித்து வந்தார்கள்.

இந்த நேரத்தில்தான் தனித்து போட்டி என்று அதிரடியாக அறிவித்தார். ரசிகர் மன்றத்தில் பணியாற்றி தற்போது கட்சி நிர்வாகிகளாக இருக்கும் தே.மு.தி.க.வினர்,  இனி ஐந்து வருடங்களுக்கு எந்த முன்னேற்றமும் இல்லை என்று இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். அதற்கு பின் மக்கள் நலக் கூட்டணியினர் படையெடுத்து,  முதல்வர் பதவி ஆசையை காட்டி கூட்டணிக்கு சம்மதிக்க வைத்தனர்.


இந்த கூட்டணியால் பெரிய அளவில் வெற்றி பெற முடியாது. அ.தி.மு.க வெற்றி பெறவே உதவும் என்று விமர்சனங்கள் எழுந்தன. அப்போதே தே.மு.தி.க.வுக்குள் கசமுசா ஆரம்பித்துவிட்டது. கடந்த சில நாட்களாக விஜயகாந்த் ஓய்வெடுக்க, பிரேமலதா பிரசாரத்தை நாகர்கோயிலில் துவக்கி, இன்று சென்னையில் முடிக்கிறார்.

இந்த நிலையில்தான் தே.மு.தி.க. கொள்கை பரப்பு செயலாளர் ஈரோடு சந்திரகுமார் உட்பட 3 எம்.எல்.ஏக்களும், பத்து மாவட்டச் செயலாளர்களும் விஜய்காந்த் எடுத்திருக்கும் அரசியல் நிலைபாட்டை கடுமையாக விமர்சித்தும், தி.மு.க.வுக்கு ஆதரவாகவும் பேசி பரபரப்பை கிளப்ப, குழப்பத்தில் சிக்கி தவிக்கிறது தே.மு.தி.க.

அதே சமயம் இந்த தேர்தலில் விஜயகாந்த் எடுத்த நிலைப்பாடு அவரது கட்சியை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லுமா அல்லது மேலும் வீழ்ச்சி பாதைக்கு வித்திடுமா என்பது தேர்தல் முடிவுதான் தீர்மானிக்கும்!

- செ.சல்மான்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ