Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நம்மாழ்வார் பிறந்த நாளிற்கு நாம் வைக்கும் சிறந்த படையல் எது...?

மென்பொறியாளர் பாலா, பல லட்சங்கள் தந்த அமெரிக்க  வேலையை விட்டு தன் சொந்த ஊரில் எளிமையான விவசாய வாழ்க்கை வாழ்கிறார். கோவையில் வசித்து வரும் வங்கி மேலாளர் சுரேஷ், வேலையை விட்டு, தன் சொந்த ஊருக்கு திரும்பி விவசாயம் செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டுவருகிறார். தருமபுரியை சேர்ந்த விநோத், பொறியியல் படித்து விட்டு, மரபு ரக நெல் வகைகளை, தன் வயலில் பயிரிட்டு கொண்டிருக்கிறார். பல மூலைகளில் ஜனித்த ஆறுகள், கடலை நோக்கி வருவதை போல, இன்று பிழைப்பிற்காக சுழற்றி அடிக்கப்பட்ட இளைஞர்கள், மீண்டும் தங்கள் சொந்த ஊரை நோக்கி அந்த பெருங்கிழவன் தந்த தாக்கத்தினால் வந்து கொண்டிருக்கிறார்கள். ஆம். அந்த கிழவன் இங்கு பல இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்து, வாழ்க்கையின் பொருளை சிந்திக்க வைத்தார்.  அந்த கிழவனை சந்தித்தவர்கள், உரையாடியவர்கள், நிச்சயம் அவரிடமிருந்து ஏதாவது ஒரு நற்பண்பை கற்று இருப்பார்கள்.  இன்று அந்த பெருங்கிழவனின் பிறந்த நாள். ஆம். நான் நம்மாழ்வாரை பற்றிதான் பேசுகிறேன்.

வரலாறு,  தேவைப்படும்போதெல்லாம் தனக்கான நாயகர்களை தானே உற்பத்தி செய்து கொள்கிறது.  தஞ்சை மாவட்டம் இளங்காடு என்னும் சிறு கிராமத்தில் பிறந்து, அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வேளாண்மை அறிவியல் படித்து, கோவில்பட்டி வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் பண்ணை மேலாளராக பணிபுரிந்து, பிறகொரு நன்னாளில், இந்த நவீன வேளாண்மை எந்த நன்மையும் செய்யாது என்று அனைத்தையும் உதறி, அங்கக வேளண்மையை பிரசாரம் செய்ய புறப்பட்ட நம்மாழ்வாரை வேறு எப்படி அழைப்பது? ஆம். இந்த பெருங்கிழவன் வரலாற்று நாயகன்தான். 

எளிய மனிதர்களிடம் தீர்வு இருக்கிறது:

இப்போது நாமெல்லாம் பேசலாம், இயற்கை விவசாயத்தின் தேவையையும், சிறு தானியங்களின் முக்கியத்துவத்தையும். ஆனால், இரசாயன வேளாண்மை வீறு நடைப் போட்டு கொண்டிருந்த, பசுமை புரட்சியின் ஆரம்ப நாட்களில் நம்பமுடியாத பலன்கள் கிடைத்து கொண்டிருந்த போது, இந்த இரசாயன வேளாண்மை, நிச்சயம் யாருக்கும், எக்காலமும் நன்மை பயக்காது, இது பேரழிவை கொண்டு வரப்போகிறது என்று யாராவது சொல்லி இருந்தால், அவரை முட்டாள் என்றுதானே சொல்லி இருப்பார்கள்...? ஆம். இவரையும் அப்படிதான் அழைத்தார்கள். சென்ற இடங்களில் எல்லாம் அவமானங்களை சந்தித்தார்.  இவரது நீண்ட தாடியும், அழுக்கு படிந்த ஆடையும், இவரை சமூக விரோதி என்று சந்தேகப்படவைத்தது. பல இரவுகளை காவல் நிலையத்தில் கழித்து இருத்திருக்கிறார், மோசமான சித்ரவதைகளை அனுபவித்து இருக்கிறார். ஆனால், தன் நிலைப்பாட்டில், தான் நம்பியதில் அணு அளவும் பின் வாங்கவில்லை.

இந்த உறுதியும், அறிவும் எந்த பல்கலைக்கழகமும் விதைத்ததல்ல... எளிமையான மனிதர்கள் விதைத்தது. இவர் எளிய மனிதர்களிடம்தான் தீர்வு இருக்கிறது என்று நம்பினார், அவர்களிடம்தான் அனைத்தையும் கற்றார். வேளாண் பல்கலைக்கழக வேலையை விட்டவுடன், இவர் பயணித்தது  தருமபுரி, கிருஷ்ணகிரி மலைகளுக்கு. அங்கு இருந்த பழங்குடிகள்தான், நாம் நவீனத்தின் பெயரால் தொலைத்த மரபு வேளாண்மையை கற்று தருகிறார்கள். வேளாண்மை மட்டுமல்ல,  வாழ்க்கை முறையையே அவர்களிடமிருந்துதான் கற்றார். பழங்களை தின்ற பறவைகள் செல்லுமிடமெல்லாம், விதையை விதைப்பது போல, அவர்களிடம் பெற்ற மரபறிவை செல்லுமிடமெல்லாம் தூவினார்.

நம்மாழ்வார், ஒடுக்கப்பட்டோருக்கான குரல்:

நிச்சயம், நம்மாழ்வாரை வேளாண்மை என்ற வட்டத்தில் மட்டும் சுருக்க முடியாது. செல்லுமிடமெல்லாம், அநியாயங்களுக்கு எதிராக பேசியவர் அவர். நம்மாழ்வார் என்றால் யாரென்று தெரியாத காலம் அது. அப்போது அவர் சிறுமலை பகுதியில் எளிய மக்களிடம், கற்றும், கற்பித்தும் கொண்டிருந்தார். போலீஸ் கைது செய்கிறது, நக்சல் என்கிறது. ஒட்டிய வயிறும், நீண்ட தாடியும், அழுக்கு படிந்த  ஆடையும், இவரை நக்சல் என்று நம்ப காவல்துறைக்கு போதுமான காரணங்களாக இருந்தன. காவலர்கள் இவரை பற்றி குறிப்பெடுக்கிறார்கள். இவர் சாதி என்ன என்று கேட்கிறார்கள். இவர் சற்றும் யோசிக்கவில்லை, அந்த பகுதியில் என்ன தாழ்த்தப்பட்ட சாதியோ... அந்த சாதி பெயரை சொல்கிறார். ஆம். அவர் அப்போது அப்படி தான் பழக்கப்பட்டிருந்தார். எப்போதும் அவரிடம் யாராவது என்ன சாதி என்று கேட்டால், தாழ்த்தப்பட்ட சாதிகள் ஏதாவது ஒன்றைதான் சொல்வார்.   மராட்டிய மாநிலத்தில் அடக்குமுறைகளுக்கு எதிராக போராடிய ஒடுக்கப்பட்ட மக்களுக்கு,  இயற்கை விவசாயம் கற்பித்தார். அவர்களின் கதையை கேட்டார், நம் கீழ்வெண்மணி கதையையும் அவர்களுக்கு சொன்னார். 

 நம்மாழ்வார், இயற்கையின் குரல்:

இந்த பிரபஞ்சம் எப்படி பஞ்சபூதங்களால் ஆனதோ அதுபோல் தான் மனித உடலும். நற்பண்புகள் மட்டும்தான் இயற்கையானது. ஒழுக்க குறைப்பாடுகள் நிச்சயம் செயற்கையானதாகதான் இருக்க முடியும். எந்த வக்கிரங்களும், பொறாமையும் இல்லாமல், நாம் திறந்த மனதுடன் இயற்கையின் படைப்புகளான மரம், செடி கொடிகளுடன் பேசும்போது, நம் உணர்வுகளை அவைகளிடம் சுலபமாக கடத்த முடியும் என்று நம்பினார். அதை செய்தார்.

பத்து ஆண்டுகள் இருக்கும் என்று நினைக்கிறேன். விழுப்புரத்தில் உள்ள சிறு கிராமத்தில், ஒரு விவசாயியிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது, அங்கு ஒரு மரம் வெட்டுபவர் வருகிறார். நம்மாழ்வார் என்ன என்று விசாரிக்கிறார்.

அதற்கு அந்த விவசாயி, “ ஐயா.. இந்த பலா மரம் ஏறத்தாழ இருபது ஆண்டுகளாக இருக்கு... ஆனால், இது நாள் வரை ஒரு பழம் கூட தரல.. இந்த மரத்தின் நிழலால், பயிர்களும் வளர்வதில்லை... அதான், வெட்டிடலாம்னு  இருக்கேன்” என்கிறார்
 
“பறவையெல்லால் கூடு கட்டி இருக்கே...?” என்று உடைந்த குரலில் கேட்கிறார் நம்மாழ்வார்.

“இல்லைங்கய்யா... நமக்கு எந்த பயனும் இந்த மரத்தால இல்லை...”

இதை கேட்டவுடன் ஓடி சென்று, நம்மாழ்வார் மரத்தை கட்டிப்பிடித்து கொள்கிறார்... ஓவென்று அழுகிறார்... பின்பு மரத்திடம், “உன்னை பிரயோஜனம் இல்லாதவன்னு சொல்றானே.. அவனுக்கு நீ ஏன் பழம் தர மாட்டேங்கிற...?” என்று மரத்துடன் உணர்வுப்பூர்வமான, ஒரு நீண்ட உரையாடல் நடத்துகிறார்.  இதை பார்த்த விவாசியியின் மனம் மாறுகிறது. மரத்ட் வெட்ட வேண்டாம் என்று முடிவு செய்கிறார்.

ஆனால், இத்துடன் இது முடியவில்லை... ஓராண்டுக்கு பிறகு, அந்த விவசாயி ஒரு பெரிய பலாப்பழத்துடன் திருச்சி மாவட்ட திருவானைக்காவலில் இருந்த விவசாயியை சந்திக்க வருகிறார். “அய்யா... அந்த மரத்துல காய்ச்ச பழம்யா...” என்று உச்சகட்ட சந்தோஷத்தில் அழுது கொண்டே பழத்தை கொடுக்கிறார்.

ஆம். இயற்கையின் அனைத்து படைப்புகளுடனும் உரையாட தெரிந்த தகப்பன் அவர்.

இப்படி நாம், அந்த பெருங்கிழவனை பற்றி சிலாகித்து எழுதிக் கொண்டும், பேசிக் கொண்டும் இருக்கலாம். ஆனால்,  வேப்பமரமாக முளைத்து நிற்கும் அவர், இதை நிச்சயம் விரும்பமாட்டார். அவர் செயல்களைதான் விரும்புவார். நாம் அந்த பெருங்கிழவனை நேசிக்கிறோமென்றால், அவரை எந்த விஷயத்தில் எல்லாம் பின்பற்ற முடியுமோ, அதில் எல்லாம் பின்பற்றுங்கள். நியாயத்தின் பக்கம் நில்லுங்கள். நுகர்வை குறையுங்கள். ஒடுக்கப்பட்டோருக்காக பேசுங்கள். இவைதான்  அவர் பிறந்த நாளிற்கு நாம் வைக்கும் சிறந்த படையல்.     
 

- மு. நியாஸ் அகமது

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close