Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

அடுத்தடுத்து வேட்பாளர் மாற்றம்... கதிகலங்கும் அதிமுகவினர்... அதிரவைக்கும் பின்னணி தகவல்கள்!

        

மிழக சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை முதலில் அறிவித்து, திமுக உள்ளிட்ட மற்ற கட்சிகளுக்கு 'ஷாக்' கொடுத்த ஜெயலலிதா தற்போது, ஏற்கனவே அறிவித்த வேட்பாளர்களை தொடர்ந்து மாற்றி அறிவித்து வருவதன்மூலம் சொந்தக் கட்சியினரையே கதிகலங்க வைத்து வருகிறார்.

வேட்பாளர் பட்டியலை முதலில் வெளியிடுவதும், பின்னர் மாற்றம் செய்து அறிவிப்பதும் அதிமுகவிற்கு புதியதல்ல. கடந்த 2011-ம் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் பட்டியலில் பல்வேறு திருத்தங்கள் செய்து அறிவித்தது அக்கட்சியின் தலைமை. அந்தப் பட்டியலை சசிகலா ஜெயா டி.வி. மூலம் முதலில் அறிவித்தார் என்றும்,  அதனால் கடுப்பான அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, அந்தப் பட்டியலைத் திருத்தி மீண்டும் புதிய வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் என்றும் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.

ஆனால் இந்த முறை  அதற்கு மாறாக, ஜெயலலிதாவே விருப்பமனு அளித்த நபர்களில் கணிசமானோரை தேர்வு செய்து, நேரில் அழைத்து  நேர்காணல் நடத்தி,  227 பேரை அதிமுகவின் வேட்பாளர்களாக அறிவித்தார். ஆனால் அடுத்த நாளே அதில் அருப்புக்கோட்டைக்கு  வைகைச் செல்வனை வேட்பாளராக அறிவித்து, அக்கட்சியினரை அலறவிட்டார்.

இந்த முறை ஜெயலலிதா தேர்வு செய்த வேட்பாளர் பட்டியலை அவரின் தோழி சசிகலா மாற்றியிருக்கிறார் என்று  கூறுகின்றனர் அதிமுகவினர். இதன் மூலம் இன்னமும் சசிகலாதான் அதிமுகவின்  அதிகார மையம் என்பது வெளிப்படையாகவே தெரிவதாகவும் அதிமுகவினர் தெரிவிக்கின்றனர். இதன் அடிப்படையில் வேட்பாளர் பட்டியலில் உள்ள புதிய முகங்கள்,  நிறைய மாற்றம் பெரும் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதே நேரத்தில் வேட்பாளர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ள அமைச்சர்கள், அதிமுக முக்கிய மாவட்ட பிரதிநிதிகள் மீது குவியும் புகார்கள் 'போயஸ் கார்டன்' வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.

அந்தியூர் தொகுதியில் அதிமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள ஈ.எம்.ஆர்.ராஜா (எ) ராஜாகிருஷ்ணனுக்கு எதிராக 150 பேர் புகார் மனுக்களை  அளித்துள்ளனர் கார்டன் அலுவலகத்தில். அநேகமாக ஒரு வேட்பாளர் மீது அவரின் சொந்தத் தொகுதி அதிமுகவினர்  அளித்த அதிகபட்ச புகார் மனுக்கள் இவர் மீதுதான் இருக்கும் என்கிறார்கள் அக்கட்சியினர்.

ஈ.எம்.ஆர்.ராஜா (எ) ராஜாகிருஷ்ணன் மீது நில அபகரிப்பு வழக்கு,கட்டப் பஞ்சாயத்து வழக்குகள் உட்பட 4 வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. கட்சியின் ஒன்றிய பொறுப்பு ஒன்றில் இருந்து, இவரின் முறைகேடுகளை அறிந்த ஜெயலலிதா நீக்கமும் செய்துள்ளார். இது போல, கட்சி பெயரைப் பயன்படுத்தி  நிறைய முறைகேடுகளை ராஜா செய்தார் என்பதால் அவருக்கு அந்தியூர் தொகுதியில் அதிமுகவினர் மத்தியிலேயே செல்வாக்கு இல்லாமல் இருக்கிறது என்றும்,  அதனால் இவர் அங்கு வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளது அதிமுகவின் தோல்விக்கு காரணமாக அமைந்துவிடும் என்றும் அலையலையாய் கார்டனுக்கு புகார்களை தட்டிவிடுகிறார்கள் அதிருப்தியாளர்கள்.

கடந்த 4 ம் தேதி வேட்பாளர் பட்டியல் வெளியானதிலிருந்து,  தமிழகத்தின் அனைத்துப் பகுதியில் இருந்தும் அதிமுகவினர் கூட்டம்  கூட்டமாக வேட்பாளர்கள் மீதான பகீர் புகார் மனுக்களோடு போயஸ் கார்டன் பகுதியில் குவிந்து வருகின்றனர். காலை முதல் மாலை வரை கார்டன் அலுவலகத்தில் புகார் மனுக்களை சளைக்காமல் அதிமுகவினர் அளித்து வருகின்றனர்.

அதே போல தியாகராயர் நகர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சரஸ்வதி ரெங்கசாமிக்குப் பதிலாக சத்தியநாராயணன் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் முன்னாள் அமைச்சர் ரகுபதியின் ஆதரவாளராக இருந்து அதிமுகவில் அடி எடுத்து வைத்தார். அதன்பிறகு கே.ஏ.செங்கோட்டையன் ஆதரவாளராக  மாறி, தற்போது ஓ.பி.எஸ்.ஆதரவாளராக வலம் வருகிறார். மேலும் அவர் சென்னை மாநகராட்சி நியமனக் குழு உறுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இவர் மீது உறவுக்கார பெண் ஒருவர் கார்டனில் அளித்துள்ள புகார் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றும்,  அதனால் அவர் பெயரும் வேட்பாளர் பட்டியலிலிருந்து நீக்கப்படலாம்  என்றும் கூறப்படுகிறது.  சத்திய நாராயணன் மீது அவரின் அண்ணன் மகள் அளித்துள்ள புகார் மனுவில்," சாதி மாறி நான் திருமணம் செய்துகொண்டதால்  எனக்கு வரவேண்டிய சொத்துக்களை சத்திய நாராயணன் அபகரித்து வைத்துக் கொண்டார். மேலும் ஆணவக் கொலை செய்து விடுவதாகவும் அவர் எனக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருகிறார்.  இந்நிலையில் அவர் எம்.எல்.ஏ.வாக ஆனால் எனது உயிருக்கும் எனது குடும்பத்தினர் உயிருக்கும்  ஆபத்தைக் கண்டிப்பாக ஏற்படுத்துவார் "  என்று கூறியுள்ளார்.

இப்படி ஒவ்வொரு வேட்பாளர் மீதும் அதிரடிக்கும் புகார்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது அதிமுக தலைமைக்கு பெரும் நெருக்கடியைக் கொடுத்துள்ளது. அதனால் இந்தவாரம் முழுக்க வேட்பாளர் பட்டியல் மாற்றம் தொடரும் என்று  கூறப்படுகிறது.

சொந்தக் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை பெற்றுள்ள நபர்களை அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக ஜெயலலிதா அறிவித்துள்ளது நிச்சயமாக தேர்தலில் எதிரொலிக்கும் என்றும், எதிர்ப்பு வாக்குகளாக மாறும் என்றும்  உறுதியாகக் கூறுகின்றனர் அதிமுகவினர்.

இதனால் வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்கள் தங்கள் கதி என்னவாகுமோ என்ற பரிதவிப்புடனேயே தொலைக்காட்சி முன்னர் தவமிருந்து கொண்டிருக்கின்றனர்.

 - தேவராஜன்
 

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ