Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

முக்கோண தேர்தல் கதை: அரவக்குறிச்சி தொகுதி பரபரப்பு!

             

ட்டமன்றத் தேர்தலின் பரபரப்பை வேறு எந்தத் தொகுதியை விடவும்,   கரூர் மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சி தொகுதி வாக்காளர்கள் அதீதமாக அனுபவித்து வருகிறார்கள் என்பதை அங்கிருந்து வரும் செய்திகளே காட்டுகின்றன. அதிலும் திமுக- காங்கிரஸ் கூட்டணியில்,  அரவக்குறிச்சி தொகுதியை திமுகவிற்கு  விட்டுக் கொடுத்துவிட்டதாக தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனை கடுமையாக சாடி வருகிறார் , இப்பகுதியில் கடந்த பல மாதங்களாக வாக்காளர்களை நேரில் சந்தித்து பிரசாரம் செய்து வரும் ஜோதிமணி.

தொகுதியை விட்டுக்கொடுத்துவிட்டதாக  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மீது கடும் அதிருப்தியை வெளியிட்டு வரும் ஜோதிமணி, இத்தொகுதியில் தாம் கண்டிப்பாக போட்டியிடப்போவதாக கூறி வருவதால் அத்தொகுதி மீது கூடுதல் கவனமும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி,  அரவக்குறிச்சியில் அதிமுக சார்பில் போட்டியிடுவதால் அவர் வெல்வாரா? இல்லை மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்படுவாரா? என்று அதிமுகவினர் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது. ஏனெனில் அரவக்குறிச்சியில் திமுக சார்பில் கே.சி. பழனிச்சாமி நிறுத்தப்படவுள்ளார் என்பதாலும், அவர் செந்தில் பாலாஜிக்கு 'குரு' என்பதாலும் தனக்குத் தோல்வி ஏற்பட்டாலும் பரவாயில்லை என்று தனது ஆதரவாளர்கள் மத்தியில் பாலாஜி கூறிவருவதாக கரூர் அதிமுக வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

ஆனால் தற்போது, சிஷ்யனுக்காக குரு தொகுதி மாற முடிவு செய்துள்ளதாகவும், அரவக்குறிச்சி வேண்டாம் என்றும் அதற்கு மாறாக குளித்தலை தொகுதியில் தனக்கு வாய்ப்பு வழங்கிட திமுக தலைமையிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும்  கரூர் மாவட்ட திமுகவினர் தெரிவிக்கின்றனர். இது அதிமுக தலைமையே எதிர்பார்க்காத 'மூவ்' என்கின்றனர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள்.

மேலும், அப்படி கே.சி.பழனிச்சாமி குளித்தலையில் போட்டியிட்டால் அரவக்குறிச்சியில் தனக்குப் போட்டி குறையும் என்றும்,  அதனால் எளிதாக வெல்ல முடியும்  என்று செந்தில் பாலாஜி கருதுவதாகக் கூறப்படுகிறது. இதன் அடுத்தக்கட்ட  நகர்வாக  காங்கிரஸ் மீது அதிருப்தியை காட்டிவரும் ஜோதிமணியை,  'நீங்க நில்லுங்க..நான் பார்த்துக்கிறேன்' என்று கூறி பாலாஜி தரப்பில் உற்சாகப்படுத்தி வருவதாகவும், ஜோதிமணி போட்டியிட்டால் ஓட்டுக்கள் பிரிந்து, தான் எளிதாக  வெற்றிபெற முடியும் என்று அவர் கணக்குப் போடுவதாகவும் கூறப்படுகிறது.

திமுக சார்பில் கே.சி.பழனிச்சாமிக்குப் பதிலாக வேறு ஒருவரை அக்கட்சி தலைமை நிறுத்த விரும்பினால், அநேகமாக அரவக்குறிச்சியில் இஸ்லாமிய பிரமுகர் ஒருவர் நிறுத்தப்படலாம் என்று திமுகவினர் பரபரப்பாக பேசிவருகின்றனர். இதனால் அதிமுகவின் வெற்றி எளிது என்று கூறப்படுகிறது. ஆனால் பல்வேறு ஊழல் குற்றச் சாட்டுகளில் சிக்கி, அமைச்சர் பதவியையும் இழந்த நிலையில், தான் முன்பு நின்று வென்ற கரூர் தொகுதியில் இருந்து அரவக்குறிச்சிக்கு மாற்றப்பட்டாலும் வாக்காளர்கள் தன்னை ஆதரிப்பார்களா? என்று செந்தில் பாலாஜி,   அடிக்கடி ஆதரவாளர்கள் மத்தியில் விசாரித்துக் கொள்வதாகவும் கூறுகின்றனர் கரூர் அதிமுகவினர்.

அரவக்குறிச்சியில் முக்கோண தேர்தல் கதை நடக்கிறது. கதையின் முடிவு என்னவாகும் என்பதை தேர்தல் முடிவுதான் சொல்லும்.

- தேவராஜன்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ