Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜெயலலிதா பிரசாரங்களில் மக்களுக்கு இதுதான் மரியாதை!

ஜெயலலிதா விருத்தாசல தேர்தல் பொதுக்கூட்டத்திற்கு பேச வந்தபோது 2 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்தனர் என்பது ஒருவரிச் செய்தியாக கடக்கப்பட்டு விட்டது. அதற்கு ஜெயலலிதாவும்,  ஒரு சின்ன அறிக்கையில் தனது இரங்கலைத் தெரிவித்துவிட்டு, அடுத்த கூட்டத்திற்கு ஹெலிகாப்டரில் பறக்கத் தொடங்கிவிட்டார்.

ஜெயலலிதா பிரசாரத்திற்கு வரும் மக்கள் உண்மையில் எப்படி நடத்தப்படுகிறார்கள்? இரண்டு ஜெயலலிதா கூட்டங்களில் ஒரு நிருபராக பங்கு பெற்ற எனது அனுபவத்தைச் சொல்கிறேன்!

காட்சி 1 :

அது நாடாளுமன்ற தேர்தல் பிரசாரம். 2014 ஏப்ரல் 13-ம் தேதி தம்பிதுரையை ஆதரித்துப் பேச கரூர் வந்தார் ஜெயலலலிதா. இதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு இருந்தே அ.தி.மு.க-வினரால் அலப்பறைகள் தொடங்கி இருந்தன.

கரூரில் உள்ள திருமானிலையூரில் பிரமாண்டமாக அமைக்கப்பட்ட பிரசார மேடைக்கு,  மதியம் 2 மணிக்கு ஜெயலலிதா வருவதாக இருந்தது. காலை 8 மணி முதலே பிரசாரம் நடக்கும் இடத்துக்கு மக்களை குவிக்க தொடங்கி இருந்தனர் ரத்தத்தின் ரத்தங்கள். கரூரில், மணல் மாஃபியா ராஜ்ஜியம் என்பதால், கரூரில் உள்ள ஒரு பெரிய புள்ளியின் உத்தரவின் பெயரில்,  அன்று மணல் அள்ள வந்த லாரிகள் அனைத்தும் மக்களை அள்ளி வந்தது. சுமார் 100 லாரிகளில் மக்களை 'கவனிப்போடு' அழைத்து வந்திருந்தனர். அப்போதும் இதேபோல சுட்டெரிக்கும் வெயிலில். அந்த வெயிலில் காய்ந்து நின்ற மக்களை கலையவிடமால் இருக்க வேண்டும் என்றுதான் அ.தி.மு.க கட்சிகாரர்களும், காக்கிகளும் நினைத்தார்களே தவிர... மக்களைப் பற்றி யாரும் அக்கறை கொள்ளவில்லை.

கூட்டத்திற்கு வந்தவர்களுக்கு,  பிளாஸ்டிக்கில் செய்த இரட்டை இலை சின்னத்தைக் கொடுத்துப் பிரசார கூட்டத்துக்கு உள்ளே அனுப்பினார்கள். அங்கு நின்று கொண்டிருந்த அப்போதைய போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி,  " மேடையில் அம்மா வந்ததும் எல்லோரும் ஆரவாரமாகக் கைத்தட்டணும். யாரும் சேர் மேல ஏறி நிற்கக் கூடாது. அம்மா பேசும்போது கத்தாதீங்க. அம்மா பேசி நிறுத்தும் இடங்களில் எல்லாம், பலமா உங்கள் கரவொலியை எழுப்புங்கள்'' எனச் சொல்லி மக்களுக்கு கிளாஸ் எடுத்துக்கொண்டிருந்தார். மேடையை சுற்றி பல ஏர் கூலர்கள் பொருத்தி இருந்தார்கள். 'அம்மா'-வுக்கு வெயில் அனல் தெரியக்கூடாது என்பதால் இந்த ஏற்பாடுகள். அதன்பின் ஜெயலலிதா ஹெலிகாப்டரில் இருந்து வந்து இறங்கி,  பேசி முடித்துவிட்டுப் போக ஒன்றரை மணி நேரமானது. காலையில் 8 மணிக்கு எல்லாம் இந்த கூட்டத்திற்கு வர வழைக்கப்பட்ட மக்கள்,  மதியம் 3 மணிக்குத்தான் வீடு திரும்பினார்கள்!

காட்சி 2 :

2016 தமிழக சட்டமன்றத் தேர்தல் பிரசாரம். சென்னை வெள்ளப் பாதிப்புகளுக்குப் பின்னர் 21 வேட்பாளர்களை அறிமுகம் செய்து ஆதரித்து பிரசாரம் செய்ய, தீவுத்திடலுக்கு கடந்த வாரம் 9-ம் தேதிதான் வந்தார் ஜெயலலிதா. இந்தக் கூட்டத்திற்கு சென்னை மாநகராட்சியை சுற்றியுள்ள மக்களை வேன்களில் அழைத்து வந்தனர். இங்கும் சுமார் 500 வேன்களில், டெம்போக்களில் மக்களை அழைத்து வந்திருந்தனர். 

ஜெயலலிதா 6 மணிக்குத்தான் கூட்டத்திற்கு வருவதாக இருந்தாலும்,  3.30 மணிக்கே மக்கள் சேர்களில் உட்கார வைக்கப்பட்டனர். வெயிலில்,  உட்காரும் அந்த சேர்கள் கூட சுட்டெரித்தது. நிழலுக்கு ஓரமாக ஒதுங்கக் கூட எதுவுமில்லை. சில மரங்கள் மட்டும் தீவுத்திடலின் ஒரத்தில் இருந்தது. அந்த மரத்தடியில் சிலர் நிழலுக்காக நின்று கொண்டிருந்தனர். சுமார் 4.45 மணிக்கு எல்லாம் ஜெயலலிதா பிரசாரம் செய்யும் மேடையை சுற்றிப் பார்த்தார்கள் தம்பிதுரை, கோகுல இந்திரா, வளர்மதி ஆகியோர். மேடையின் வடது, இடது என இருபுறங்களிலும் மட்டும் சுமார் 10 ஏ.சி மற்றும் ஏர் கூலர்கள் இருந்தது. அதை ஆன் செய்தபோது பத்திரிகையாளர்களுக்காக கொடுக்கப்பட்ட இடம் வரை ஜில் என குளிர்ந்த காற்று வீசியது. (மேடைக்கும் பத்திரிகையாளர்கள் இருந்த இடத்துக்கும் சுமார் 50 அடி தூரமாவது இருக்கும்). அதன்பின் மைக் பிடித்த வளர்மதி,  'மரங்களுக்கு கீழே உள்ள தொண்டர்கள் எல்லாரும் சேரில் வந்து அமருங்கள்' என்றார். வெயிலில் தங்களைக் காத்துக்கொள்ள மரங்களின் நிழலில் நின்றவர்களை போலீஸ் கெடுபிடி காட்டி வலுகட்டாயமாக இருக்கைகளில் அமர்த்தினார்கள். அதன் பின் ஜெயலலிதா வந்து பேசி, வாக்களிக்க உத்தரவாதம் வாங்கிக் கொண்டு சென்றார்.
   
இப்படித்தான் விருத்தாசலம் பொதுக் கூட்டத்திலும் நடந்திருக்கும். அதில் உயிரிழப்புகள் நிகழ்ந்து விட்டது. கூட்டத்திற்கு வரும் கல்லூரிப் பெண்கள், குடும்ப பெண்கள், குழந்தைகள், பாட்டிகள், தாத்தாக்கள் என அனைவரும் வேகாத வெயிலில் வந்து நின்றாலும்,  யாரும் அவர்களை பற்றி கவலைப்பட்டதாக தெரியவில்லை. அவர்களுக்கு முக்கியம் ஜெயலலிதா வரும்போது லட்சக்கணக்கில் மனித தலைகள் தெரிய வேண்டும், அவ்வளவுதான்.

ஜெயலலிதா பிரசாரங்களை எல்லாம் ஒரு மினி திருவிழாவைபோல நடத்த முயற்சிக்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள். ஆனால், இந்த திருவிழாக்களின் ’பலி ஆடுகள்’ யார்?
 


- நா.சிபிச்சக்கரவர்த்தி

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close