Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

குற்றவாளி பட்டியலில் உள்ளவர் அதிமுக வேட்பாளர்: ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்!

வேட்பாளர் பட்டியலை அறிவித்தது முதல் இதுவரை 7 முறை வேட்பாளர் மாற்றம் செய்துள்ள அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, தங்களது தொகுதியில் அதிமுக சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளரை மாற்றி அறிவிக்கமாட்டரா என்று கள்ளக்குறிச்சி பகுதி மக்கள்  எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

விழுப்புரம்  மாவட்டம்  தியாகதுருகத்தைச்   சேர்ந்தவர்  அய்யப்பா. அதிமுக பிரமுகரான இவர், தியாகதுருகம்  ஒன்றியத்தின் அ.தி.மு.க கழக  செயலாளராக   உள்ளார். இவருடைய   மகன்  பிரபுவிற்கு  கள்ளக்குறிச்சியில்  ஜெயலலிதா  சீட்  கொடுத்துள்ளதுதான் கள்ளக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி மக்களைக் கொந்தளிக்க வைத்துள்ளது.

அய்யப்பா மற்றும் பிரபு இருவரின்  மீதும்  நில அபகரிப்பு   வழக்கு  தியாகதுருகம்  காவல்நிலையத்தில் பதிவு  செய்யப்பட்டுள்ளது.  இது முதல்வருக்கு தெரிய வாய்ப்பில்லையா என்றும்,வேட்பாளரின் நன்னடத்தைக்  குறித்து அதிமுக தலைமை ஏன் விசாரிக்கவில்லை என்றும் தியாகதுருக  மக்கள் கேள்வி மேல் கேள்வி எழுப்புகின்றனர்.

ரியல் எஸ்டேட்   தொழில்  செய்து  வரும்  அய்யப்பாவும்,  அவரது மகன்  பிரபுவும், பாபு -பரிமளா  என்ற  தம்பதியர்  நடத்தி  வந்த  ஹோட்டலை அராஜகமாக இடித்துள்ளனர் . மேலும் ஹோட்டல் இருந்த இடத்தைக் கைப்பற்றி,  போலியாக  ஆவணம் தயாரித்து மற்றொரு  நபருக்கு விற்றுள்ளனர். அரசியல் செல்வாக்கு மற்றும் அரசு அதிகாரிகளைக் கைக்குள் வைத்துக் கொண்டு இருவரும் நடத்திய இந்த அராஜகம்,  அந்தப் பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் அதிமுக மீது அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.  

ஹோட்டலை இழந்து நடத்தெருவிற்கு வந்துள்ள, பாதிக்கப்பட்ட பாபு - பரிமளா தம்பதியர்,  தியாக துருகம்  காவல் நிலையத்தில் புகார்  கொடுத்துள்ளனர் . ஆனால்  அவர்களுடைய புகாரை   போலீசார்  வாங்க மறுத்துள்ளனர். அதோடு, 'பிரபுவுக்கு   எதிராக  நாங்கள்   எதுவும்   செய்யமுடியாது'  என்று   போலீசார்  கூறியுள்ளனர்.  ஆனாலும் சோர்வடையாத   அவர்கள்,  கள்ளக்குறிச்சி  குற்றவியல்  நீதித்துறை  நடுவர்  நீதிமன்றத்தை அணுகி, அவர்கள்  மீது  வழக்குப்  பதிவு  செய்ய  வைத்துள்ளனர்.  போலீசார்  வழக்குப் பதிவு  செய்தாலும்,  அய்யப்பன்  மற்றும் பிரபு  மீது  எந்த  நடவடிக்கையும்  எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பாபு-பரிமளா தம்பதியர்,  தொடர்ந்து  நீதி கேட்டு  மீண்டும்  நீதிமன்றத்தில் முறையிட்டனர். இவர்களின் நிலையை அறிந்து முறையீட்டை விசாரித்த   நீதிமன்றம்,  விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு விளக்கம்  கேட்டு  நோட்டீஸ்  அனுப்பியுள்ளது. 

பின்னர் தங்களின் புகார் குறித்து விளக்கம் பெற மீண்டும் காவல்துறையை  அணுகிய  தம்பதியருக்கு, "நாங்கள் தெரிவிக்க வேண்டியதை நீதிமன்றத்தில் தெரிவித்து  விட்டோம்  உங்களிடம்   சொல்வதற்கு எதுவும் இல்லை நீங்கள்  போகலாம்"  என்று  காவல்துறை அதிகாரிகள் மெத்தனமாகப் பதில் கூறியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட பாபு - பரிமளா , தம்பதியர்  குடியரசுத் தலைவர்,  முதல்வரின் தனிப்பிரிவு ,  லஞ்ச ஒழிப்புத் துறை ,  அதிமுக தலைமை கழகம், ஆகியவற்றிற்கு சலிக்காமல் புகார்   மனுக்களை  அனுப்பியுள்ளனர். ஆனால் இதில், லஞ்ச  ஒழிப்புத்துறையில் இருந்து  மட்டும்  வழக்கை  விசாரிக்குமாறு   மாவட்ட காவல்துறைக்கு  கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

ஆனாலும் உரிய நீதி கிடைக்காமல் மனம் வெதும்பிய நிலையில், பாபு-பரிமளா தம்பதியர் கடந்த வாரம் ஜெயலலிதா இல்லம் அமைந்துள்ள சென்னை போய்ஸ்  தோட்டத்தில் தீக்குளிக்கும் போராட்டம் நடத்த முயன்றனர். அப்போது அங்கிருந்த போலீசார் அவர்களை மீட்டு எச்சரித்து அனுப்பியுள்ளனர்.

ரியல்  எஸ்டேட்   தொழிலில், கட்ட பஞ்சாயத்து செய்தும்,  வன்கொடுமை  தடுப்புச்  சட்டத்தை தவறான முறையில்  பயன்படுத்தி சிலர் மீது வழக்கு பதிவு  செய்தும் அரசியல் நடத்திவரும் அய்யப்பாவின் மகன் பிரபுவிற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் இவர்கள் மீது கூலிப்படை துணையுடன் நடத்தப்பட்ட ஆள்  கடத்தல், கட்ட பஞ்சாய்த்து, நில அபகரிப்பு   என்  பல்வேறு   புகார்கள் உள்ளன என்றும், அவர்களால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் அ.தி.மு.க.வினரே என்றும் கூறப்படுகிறது.

இப்படி சொந்தக் கட்சியினர் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் கடும் அதிருப்தியை சம்பாதித்துள்ள பிரபுவிற்கு கள்ளக்குறிச்சி தொகுதியில் வெற்றிவாய்ப்பு இல்லை என்றே அதிமுகவினர் தெரிவிக்கின்றனர்.

இந்தப் புகார்கள் குறித்து கள்ளக்குறிச்சி அதிமுக வேட்பாளர் பிரபுவிடம் நாம் கேட்டோம். அதற்கு அவர், 

"இதை நான்  மறுக்கிறேன். அவர்கள்  அரசியல்  நோக்கத்திற்காக   என்மீது  இது போன்ற  குற்றச்சாட்டுகளைக் கூறுகின்றனர்.   நான்  அவர்கள்  நிலத்தை அபகரிக்கவில்லை. நான்  யாருடைய  சொத்திற்கும் ஆசைப்படவில்லை. எனக்கு தேவையான  பணம்  என்னிடம் உள்ளது. வேட்பாளராக நான் நிறுத்தப்பட்டவுடன்   இதுபோன்ற  பொய்யான  புகாரை  கொடுத்துள்ளனர். எனக்கும்  அந்த புகாருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நான்  ஒரு குழந்தை மாதிரி. நான்  உண்டு  என்  கட்சி பணி  உண்டு என்று  உள்ளேன்.  உள்நோக்கத்தோடு இவ்வாறு  என் மீது   பழி  போடப்பட்டுள்ளது. இந்தச் செயலுக்கு பின்னால் பெரிய அரசியல் இருப்பதால் இதை செய்கின்றனர். அது என்ன? யார்? என்பதை  இப்போது என்னால்  தெரிவிக்க முடியாது . என்னைப் பற்றி காவல்துறையில் கேட்டுப்பாருங்கள் தெரிந்து கொள்வீர்கள்" என்றார்  .

-கே புவனேஸ்வரி

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close