Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சென்னையின் 4 'வீக்' தொகுதிகள்... ஜெ.வை அதிர்ச்சிக்குள்ளாக்கிய 'ஷாக்' ரிப்போர்ட்!

.தி.மு.க. வேட்பாளர் பட்டியலில், அதிமுக பொதுச் செயலாளரான ஜெயலலிதா தொடர்ந்து  மாற்றம் செய்து வருகிறார். லேட்டஸ்ட்டாக,  சென்னையிலேயே இன்னும்  ஐந்து இடங்களை மாற்றுவதற்கான வாய்ப்பு அதிகம் என்று பரவலாக பேசப்படுகிறது.

இந்நிலையில், ஒவ்வொரு மாவட்டமாக இதை சரி செய்யலாம் என்ற அவசர ஆய்வில் கை வைத்த ஜெ., முதலில் ஒவ்வொரு மாவட்டமாக  சீரமைப்பில் இறங்கிக் கொண்டே வந்தார். லேட்டஸ்ட்டாக அவர் கையில் வந்த ரிப்போர்ட், தலைநகர் சென்னையைப் பற்றியது. ' அம்மா, சென்னையில் நாலு தொகுதி நமக்கில்லே' என்பதுதான் அந்த ஷாக் ரிப்போர்ட்.

அண்ணா நகர், துறைமுகம், கொளத்தூர், ஆயிரம் விளக்கு ஆகியவைதான் அந்த 4 தொகுதிகள். அவை ஏன் பலவீனமாக இருக்க வேண்டும்.

கார்டனுக்கு அளிக்கப்பட்ட  அந்த விபரங்கள் இதோ...

" சென்னை அண்ணாநகர் தொகுதியை,  அதிமுக கூட்டணியில் , 1991-ல் காங்கிரஸ் கைப்பற்றியது.  திமுகவின் மெத்தனத்தால், 2011-ல் அதிமுகவின் கோகுல இந்திரா கைக்கு தொகுதி போனது. 1977-ல் உருவான இந்த தொகுதி, கருணாநிதி, சோ.மா.ராமச்சந்திரன், மூன்றுமுறை ஆற்காடு வீராசாமி என்று  திமுக வசம்தான் அதுவரையில்  இருந்து வந்தது.

நாயுடு, இஸ்லாமிய வாக்காளர்களை பெரும்பான்மையாகக் கொண்ட தொகுதி இது. இந்த முறை ஸ்டாலினின் ஆதரவாளரான தொழிலதிபர் எம்.கே.மோகன் திமுக சார்பில் களம் இறக்கப்பட்டுள்ளார். இந்தத் தொகுதிதான் சென்னையின் முதல் வீக் தொகுதி என்று ஜெயலலிதாவுக்கு ரிப்போர்ட் போயுள்ளது.

சென்னை துறைமுகம் தொகுதியின் அதிமுக வேட்பாளராக வடசென்னை தெற்கு மாவட்டச் செயலாளர் கு.சீனிவாசன் நிறுத்தப்பட்டிருக்கிறார்.  சில ஆண்டுகள் முன்பு அதிமுக  மா.செ.வாக இருந்து, இப்போது திமுகவின்  மா.செ.வாக மாறி இருக்கும் பி.கே.சேகர் பாபுவின் சீடர்தான்  கு.சீனிவாசன். சீனிவாசனின் பெயரை அறிவித்ததுமே தொகுதி திமுகவுக்குதான் என்று முடிவு செய்து விட்டோம் என லோக்கல் அதிமுகவினர் சொல்லி இருக்கிறார்கள். 

அடுத்ததாக சிட்டிங் வில்லிவாக்கம் அதிமுக எம்.எல்.ஏ.வான ஜே.சி.டி. பிரபாகரன். திமுகவின் மு.க.ஸ்டாலின்  போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார். கொளத்தூர் தொகுதியில்  வலுவான நபரை  நிறுத்தா விட்டால் தொகுதி கைநழுவிப் போவது நிச்சயம்.

ஆயிரம் விளக்குத் தொகுதியில் படை பரிவாரங்கள், பணபலம், ஸ்டாலினின் முழு ஆதரவுடன் களத்தில் இறக்கி விடப்பட்டிருப்பவர் கு.க.செல்வம்.  அதிமுகவில், ஜா-ஜெ அணி என்றான போது, செல்வம் ஜா அணியில் இருந்தவர். அதன் பின்னர்  ஆர்.எம்.வீ. மூலம்  திமுகவில் நுழைந்து ஸ்டாலினின்  சென்னைத் தளபதிகளில் ஒருவரானவர்.

ஆயிரம் விளக்கில் களம் காணும் சிட்டிங் எம்.எல்.ஏ. கம் மந்திரி பா.வளர்மதிக்கு தொகுதியின் மொத்தமுள்ள 12 வட்டங்களில், 107, 108, 109, 110,112 மற்றும் 113 ஆகிய வட்டங்களில் சொந்தக் கட்சியினரின் எதிர்ப்பு அதிகமாக இருக்கிறது. வளர்மதிக்கு எதிராக, வி.பி.கலைராஜன் அணி ஒரு பக்கம் நிற்கிறது.

ம.ந.கூட்டணியின் வேட்பாளரான , மதிமுகவின் ரெட்சன் அம்பிகாபதியும்  மறுமுனையில் பணபலம் மிக்க வேட்பாளராக களத்தில் இருப்பதால், போட்டியே செல்வத்துக்கும், அம்பிகாபதிக்கும்தான் ''.

இப்படிப் போயிருக்கிறது தகவல்.

அநேகமாக, வேட்பு மனுத் தாக்கல் வரை அ.தி.மு.க வேட்பாளர்களுக்கு நித்யகண்டம் பூர்ண ஆயுசுதான் போல!

- ந.பா.சேதுராமன்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close