Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜெயிக்கிற கட்சிக்குத்தான் என் ஓட்டு...இது சரியான மன நிலையா?

மிழக சட்டமன்றத் தேர்தல் பரபரப்பு எல்லா தளங்களிலும் பரவியுள்ளது.காலை கண்விழித்தது முதல் கண்ணுறங்கும் இரவு நேரம் வரை கண்ணில் படுகின்றன அரசியல் கட்சியின் பரப்புரை வாசகங்கள். காதுகளை நிரப்புகின்றன 'நாடு வளம்பெற எங்களை ஆதரிப்பீர்'  போன்ற தேர்தல் முழக்கங்கள். செய்தித்தாள் முதல் எஃப்.எம். ரேடியோ வரை எங்கெங்கு காணினும்,கேட்டாலும் அத்தனையும் அரசியல் கட்சிகளின் முழக்கங்களால் அதிர்ந்து கிடக்கின்றன.

அத்தோடு இந்திய தேர்தல் ஆணையமும்,  'வாக்களியுங்கள்... அது உங்கள் ஜனநாயகக் கடமை!' என்று விழிப்புணர்வு பிரசாரம் செய்கிறது. மொத்தத்தில் தமிழகம் முழுக்க தேர்தல் ஜுரம் பரவியுள்ளது. இந்த நேரத்தில் 'ஜெயிக்கிற கட்சிக்குத்தான் என் ஓட்டு' என்று சிலர் ஆங்காங்கே சொல்வதையும் கேட்கமுடிகிறது. இது உண்மைதானா? இது என்ன மாதிரியான நிலைப்பாடு அல்லது 'டிசைன்' என்று கேள்விகள் கண்டிப்பாக நமது மனதுக்குள்  எழத்தான் செய்கின்றன.

இவர்களால் வாக்களிப்பதற்கு முன்பே, வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் முன்பே எப்படி  ஒரு இயக்கம் அல்லது கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என்று கணிக்க முடிகிறது அல்லது இவர்களை இது போன்று  கணிக்க  எது உந்துகிறது?  இவர்களையெல்லாம் எந்தக் கருத்துக் கணிப்பு நிறுவனமும் ஏன் கண்டு  கொள்வதில்லை? என்ற கொசுறு கேள்விகளும் அவ்வப்போது மனதில் நிழலாடத்தான் செய்கின்றன.  

தமிழகத்தில் வாக்குகள் மூலம் ஆள்வோரைத் தேர்ந்தெடுக்கும் ஜனநாயக மரபு நெடுங்காலமாகவே இருக்கிறது.சோழர் கால குடவோலைமுறை தொடங்கி, காகித ஓலை (வாக்குச் சீட்டு) கடந்து தற்போது மின்னணு வாக்குப் பதிவு எந்திரம் வரை  வந்துள்ளது வாக்களிக்கும் முறை. இதில் வாக்களிக்கும் ஜனநாயகக் கடமை மட்டும் எந்த காலத்திலும் மாறவில்லை. ஓட்டுப் போடும் மக்களின் எண்ணிக்கை மட்டுமே அவ்வப்போது மக்கள் தொகைக்கு ஏற்பவும், அவர்களின் விருப்பத்திற்கு ஏற்பவும் மாறிவந்துள்ளது.

2016 தமிழகச் சட்டமன்றத் தேர்தல் என்பது அதி முக்கியத்துவம் வாய்ந்தது. இதற்கு முந்தைய எந்த சட்டமன்றத் தேர்தல் அல்லது நாடாளுமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் என்று எதையும்விட முக்கியத்துவம் வாய்ந்தது  என்றால் மிகையில்லை. காரணம், 50 ஆண்டுகளாக திமுக, அதிமுக கட்சிகளையே ஆட்சி பீடத்தில் அமரவைத்து  வந்த தமிழக வாக்காளர்களின் கவனத்தை மாற்றுக் கூட்டணி, கட்சிகள் இன்று ஈர்த்துள்ளன.

தேமுதிக-தமாகா-மக்கள் நலக் கூட்டணி, பாமக, பாஜக கூட்டணி, நாம் தமிழர் கட்சி என்று மாநிலம் முழுக்க  புதிய குரல்கள்  வாக்காளர்கள் மத்தியில் உலாவருகின்றன.

இந்நிலையில்,ஜெயிக்கிற கட்சிக்குத்தான் என் ஓட்டு என்பது  எப்படி சாத்தியமாகும்? என்றால்,  சாத்தியம் என்கிறார் ஒருவர்.

" ஆமாங்க...ஜெயிக்கிற கட்சிக்குத்தான் என் ஓட்டு. அதில் எந்த சந்தேகமும் இல்லை. முன்னாடி எல்லாம் அப்படித்தானே நான் ஓட்டு போட்டு வந்தேன். இப்பவும் அப்படித்தான் போடுவேன். அதனால் இந்த முறையும் ஜெயிக்குற கட்சிக்குத்தான் என் ஓட்டு"  என்றார் அந்த வாக்காளர். ஆனால் எந்தக் கட்சி ஜெயிக்கிற கட்சி? என்று அவர் கடைசி வரை  சொல்லவே இல்லை. ஆனால் 5 ஆண்டுக்கு ஒருமுறை ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதை அவர் வலியுறுத்தவும் தவறவில்லை.

வாக்கு அளிப்பவர் தனது வாக்கை யாருக்கு, எந்தக் கட்சிக்கு அளிப்பது என்பதை எப்படி முடிவு செய்கிறார் என்றால்,  இவரைப் போன்றவர்களின் வாய்மொழி பிரசாரத்தினால்தான். இதற்கு எந்த விளம்பரமும், பிரசாரமும் உதவாது. அந்த நாளில் அல்லது அந்த நேரத்தில் எந்தக்  கட்சி  மனதில் தோன்றுகிறதோ அதற்கு ஓட்டு.  அப்புறம் ஏன் அரசியல் கட்சிகள் இத்தனை மெனக்கெட்டு பிரசாரக் கூட்டங்கள், பயணங்கள் நடத்துகிறார்கள் என்றால் அது வேறு கதை.

ஜனநாயக நாடுகளில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற அரசியல் நிலைகள் இயல்புதான் என்றாலும், அதில் சில மாற்றங்கள்,  சில நேரங்களில் தவிர்க்க முடியாமல் நடந்து விடத்தான் செய்கின்றன. அது தற்போது தமிழகத் தேர்தலிலும் நடக்கும் என்ற சாத்தியங்கள் இருப்பதாகவே அரசியல் நோக்கர்கள், சமூக ஆர்வலர்கள் கணிக்கின்றனர்.

பொதுவாக அரசு எந்திரம் கட்சிகள் இல்லாமலேயே இயங்கும் சக்தி கொண்டது. அது குடியரசுத் தலைவரால், மாநில ஆளுநர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் என்று உள்ள படிப்படியான அரசு அதிகாரத்தினரால் செயல்படும் என்ற சுதந்திரத்தை இந்திய அரசியல் சட்டம் வழங்கியுள்ளது. இதனை நன்கு அறிந்தவர்கள்  அரசியல் கட்சித் தலைவர்கள். அதனால்தான் அவர்கள் தேர்தல் நேரத்தில் வாக்காளர்களிடம், "எப்படியாவது எங்கள் கட்சியை ஆட்சியில் அமர வையுங்கள்" என்று கெஞ்சவும் செய்கிறார்கள்.

தானாகவே இயங்கும் அரசு எந்திரத்தை, மக்கள் நலத் திட்டங்களை அமல்படுத்தும் மக்கள் நல அரசாக மாற்றவேண்டும் என்றே அரசியல் நோக்கர்கள், சமூக ஆர்வலர்கள் விரும்புகிறார்கள். இதனை ஒவ்வொரு தேர்தலிலும் அரசியல் கட்சிகள் எதிரொலிக்கத்தான் செய்கின்றன. ஆனால் முழுமையான மக்கள் நல அரசாக இருக்கின்றனவா, இருந்தனவா என்றால் இல்லை என்றே பதில் கிடைக்கிறது அனைத்துத் தரப்பிலிருந்தும்.

ஒவ்வொரு ஐந்தாண்டு பதவிக்காலம் முடிகிறபோதும், ஆளும் கட்சியின் மீது குவியும் ஊழல் குற்றச் சாட்டுக்கள்  மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்ததான் செய்கின்றன. ஆனாலும் எதிர்க்கட்சி வரிசையில் இருப்பவர்கள், ஆளும் அரசு மீது  கடுமையான ஊழல் குற்றச்சாட்டை வைத்தவர்கள் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தாலும் மீண்டும் அதே நிலைதான் அவர்களுக்கும். இதுவே கடந்த 50 ஆண்டுகால தமிழக அரசியல் வரலாறாக இருக்கிறது. ஏன் இவ்வாறு ஏற்படுகிறது என்றால், மக்கள் நல அரசு என்பதை கொள்கையாகக் கொள்ளாமல், வாக்குறுதிகளை வெறும் அறிவிப்பாக மட்டுமே பார்ப்பதும், பெயரளவுக்கு மட்டுமே அளித்த மக்கள் நல வாக்குறுதிகளை  நிறைவேற்றுவதும் கோட்பாடாகக் கொள்வதால் இந்த சூழல் தமிழகத்தின் தலைஎழுத்தாகவே  இருக்கிறது. 

ஜெயிக்கிற கட்சி என்று வகைப்படுத்தப்படுவது இந்த இடத்தில்தான் நிகழ்கிறது. எந்தக் கட்சி அதிகம் மக்கள் நலத் திட்டங்களை அறிவிக்கிறது, உறுதி மொழிகிறது என்பதில்தான் கணிப்பு நிகழ்கிறது. பிரதானக் கட்சிகள்,  'நாங்கள்  ஆட்சிக்கு வந்தால்...' என்று கூறி அறிவிக்கும் நீண்ட பட்டியல், அவர்கள் ஆட்சியில் அமர்ந்த நிறைவேற்றப்பட்டனவா என்றால்,  மக்கள் இல்லை என்பார்கள். ஆள்வோர் முழுமையாக நிறைவேற்றி விட்டோம் என்பார்கள். அதனால்தான் இலவச அறிவிப்புகள் மக்களை மயக்கிவிடுகின்றன. இலவசங்கள் மட்டுமே ஒரு நாட்டின் முன்னேற்றம் ஆகுமா என்றால் இல்லை என்பதே பெரும்பாலான மக்களின் கருத்து.

கல்வியும்,வேலைவாய்ப்பும்,மருத்துவ வசதியும் அரசால் முழுமையாக வழங்கப்பட்டு ஐந்தாண்டு காலத்தில் ஒரு கட்சி மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி உள்ளதா ? என்று கேட்டால் இல்லை என்றே கடுமையாக மறுக்கிறார்கள்  சமூக ஆர்வலர்கள். ஏனெனில் 2 ஜி ஊழல் விவகாரமும், சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்று மேல் முறையீட்டு வழக்கு நடப்பதும் வாக்காளர்களின் மனதில் நிழலாடிக் கொண்டுதான் இருக்கின்றன. 

ஜெயிக்கிற கட்சிக்குத்தான் என் ஓட்டு என்கிற மன நிலைகுறித்து பத்திரிக்கையாளர், அரசியல் விமர்சகர் ஞானியிடம்  கேட்டோம்.

அதற்குப் பதிலளித்த அவர், " அது தவறான கருத்து. அப்படி ஒரு நிலை என்பதே இல்லை. நான் நினைக்கிற கட்சி என்று  வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம்" என்றார். மேலும் அவர், " திமுகவும் அதிமுகவும் தாங்கள்தான் ஜெயிக்கிற கட்சி என்று கூறி, வாக்காளர்களின் மன நிலையைத் தங்களுக்கு சாதகமானதாக மாற்ற முயற்சி செய்கிறார்கள். ஆனால் அவ்வாறு நடக்க வாய்ப்பில்லை. இந்தத் தேர்தலில்,  ஜெயிக்கிற கட்சி  என்று கூறி ஒரு கட்சியை அடையாளப்படுத்த முடியாத நிலை தற்போது நிலவுகிறது' என்று கூறினார்.

ஆக, கட்சி சார்ந்தவர்களே ஜெயிக்கிற கட்சி என்ற தோற்றத்தை பொதுத் தளங்களில் உருவாக்குகிறார்கள் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. இந்தத் தேர்தலிலும் இது எதிரொலிக்கிறது. ஆனால்,மக்கள் நலம் சார்ந்து இயங்குகிற கட்சியை, கூட்டணியை வாக்காளர்கள் தேர்ந்தெடுத்து ஆட்சிக் கட்டிலில் அமரவைக்க விரும்புகிறார்களா? என்பது தேர்தல் நாளன்று தெரிந்துவிடும்.

- தேவராஜன்
      

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close