Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சுட்டெரிக்கும் வெயிலுக்கு நாமும் ஒரு வகையில் காரணம் என்பது உங்களுக்கு தெரியுமா....? #WhereIsMyGreenWorld

நாம் உண்ணும் ஒவ்வொரு பருக்கை அரிசியிலும்,  வெயிலும் மழையும் கலந்து இருக்கிறது. அரிசியில் மட்டுமல்ல, காய்கறிகள், பழங்கள், நீர் என இயற்கையின் அனைத்து கொடையிலும் வெயில் இருக்கிறது; மழை இருக்கிறது. நாம் இதனைதான் அள்ளி பருகுகிறோம், உண்கிறோம். ஆனால், மோசமான அரசு நிர்வாகம் வெயிலையும், மழையையும் நமக்கு அந்நியமாக்கிவிட்டது, எதிரியாக்கிவிட்டது. மழையை, வெயிலை தூற்றத் துவங்கிவிட்டோம். 


“மழையும், வெயிலும் சரியான விகிதத்தில் இருந்தால் மகிழலாம், இரு கரம் நீட்டி வரவேற்கலாம். ஆனால், நிதர்சனம் அப்படி இல்லையே...” என்னும் சாமான்யனின் வாதத்தையும் புறம்தள்ளிவிட முடியாது. ஆம், காலநிலை மோசமாக மாறி இருக்கிறது. நாம் இயற்கையை வரம்பு மீறி சுரண்டிவிட்டோம். அது தன்னை புதுப்பித்துக் கொள்ள அதிக மழையையும், வெயிலையும் தருகிறது.  பருவ நிலை மோசமாக ஆனதற்கு  யார் காரணம் ? அரசுகள் மட்டும்தானா ? தனி மனிதனின் பொறுப்பின்மை, அலட்சியம்  காரணம் இல்லையா ? சீரழிந்த சூழலுக்கு நாம் அரசுகளை மட்டும் குற்றம் சொல்ல முடியாது. அரசு நிர்வாகம் பிரதான காரணமென்றாலும், அரசு மட்டும் காரணமில்லை. ஒவ்வொரு தனி மனிதனின் கரங்களிலும் கறை இருக்கிறது.


அதை அலசும் மினி தொடர் இது...

நாம் ஒரு பக்கம் மணற் கொள்ளை, கனிம வளக் கொள்ளையை பற்றிப் பேசுகிறோம். இன்னொரு பக்கம், பணம் இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக நம் தேவைக்கு அதிகமாக பல மாடி கட்டடங்கள் கட்டுகிறோம், கிரானைட் கல் பதிக்கிறோம். அதாவது ஒரு பக்கம், ஒரு குற்றத்தில் பங்கெடுத்துக் கொண்டே, நாம் இன்னொருவர் மீது பழி சுமத்துகிறோம். இது முரண் இல்லையா ? மணற் கொள்ளை, கனிம வளக் கொள்ளையில் ஈடுபடுபவர்களை சட்டத்தின்படி தண்டிக்க வேண்டும். இதில் மாற்று கருத்தில்லை. ஆனால், அதே நேரம் நாமும் நம்மை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.  நாம் தங்கும் வீட்டிலிருந்தே ஆரம்பிப்போம்.


வீடெனப்படுவது யாதெனில்...

நமக்கு வீடு என்றவுடன் உடனே நினவுக்கு வருவது என்ன...? அண்மையில், ஒரு தினசரியில் வந்த 2BHK house, starts from 35 lakhs, 3BHK house starts from 40 lakhs என்ற விளம்பரம் அல்லது சென்னைக்கு அருகே,  மிக அருகில் 200 கி.மீ தொலைவில் என்று வீடு வாங்க பரிந்துரைக்கும் சின்னதிரை நடிகை. இவை நம் நினைவுக்கு வந்தால், நாம் உலகமயமாக்கலுக்கு பிறகு பிறந்தவராய் இருக்கலாம் அல்லது கால சுழற்சியில் நமது வேர்களை தொலைத்தவராக இருக்கலாம். ஆனால், உலகமயமாக்கலுக்கு பிறந்த குழந்தைகள் கூட, வீடு வரைய சொன்னால் மரத்துடன்தான் வீடு வரைகின்றன. இந்த பண்பு, அதன் மரபில் படிந்து இருக்கிறது. ஆனால், வளர்ந்த நாம்தான் மரத்தை மறந்து விட்டோம். சரி விஷயத்திற்கு வருவோம்.


அகிலனின் வரிகளில், “வீடெனப்படுவது யாதெனில், பிரியம் சமைக்கிற கூடு.....”.

வீடு கட்டுவதற்கு வாங்கிய தவணை கடன் கழுத்தை நெரிக்கும்போது எப்படி பிரியம் சமைக்க முடியும் என்கிறீர்களா? ஆம் நிஜம்தான். கடன் என்பதையெல்லாம் தாண்டி, இப்போது எங்குமே வீடுகள் பிரியம் சமைக்கிற கூடுகளாக இல்லை. வெப்பம் கக்கும் கான்கரீட் சிலுவைகளாக மட்டுமே இருக்கிறது. வீடுகள் தன் பன்முகத் தன்மையை, நம் மண்ணிற்குரிய தன்மையை இழந்து, சுயத்தை இழந்து வெறும் கூடாக நிற்கிறது. இந்த வீடுகள் நம் சூழலை சிதைக்கிறது. மோசமான நம் உடல் உபாதைகளுக்கு நாம் தங்கி இருக்கும் வீடுகளும் ஒரு காரணம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

நாம் வீட்டில் வசிக்கிறோமா அல்லது கல்லறையிலா...?

நாம் வசிப்பது நிச்சயம் வீட்டில் அல்ல... கல்லறையில். அதிர்ச்சியாக இருக்கிறதா... ஆம்.  பொக்கலைன்களின் இயந்திர கைகள், பெரும் வெறிகொண்டு பாறைகளை கொன்று ஜல்லி சமைத்து, சாத்தான் வண்டிகள் ஆற்றின் மடியை சுரண்டி, கோடரிகள் பெரும் வெறிகொண்டு மரங்களை வெட்டி எழுப்பிய வீடு எப்படி வீடெனப்படும், அது நிச்சயம் கல்லறைதான். மலைகளின், மரங்களின், ஆற்றின் கல்லறை.

முட்டாள் தனமாக யோசிக்காதே.... மண் அள்ளக் கூடாது, பாறையை வெட்டக்கூடாதென்றால் பிறகு எதைக்கொண்டு வீடு கட்டுவது... எங்குதான் வசிப்பது என்பது உங்கள் கேள்வியா?  வீடு கட்ட மண் தேவை, கல் தேவை, மரம் தேவைதான். ஆனால் அது எந்த மண், எந்த கல், எந்த மரம் என்பதில்தான், சூழலியலுக்கான மொத்த விஷயமும் இருக்கிறது.  நாம் எங்கு வசித்தோம் என்ற தேடலில்தான், நாம் எங்கு வசித்தல் நலம் என்ற பதிலும் இருக்கிறது.

நகரத்திலேயே பிறந்தவர்களுக்கு இது தெரிய வாய்ப்பில்லை. கிராமத்தில் பிறந்தவர்கள், பால்யத்தை செலவிட்டவர்கள், இரண்டொரு நிமிடம் கண்களை மூடி, கால இயந்திரத்தில் பயணித்து உங்கள் பால்ய நினைவுகளை மீட்டெடுங்கள்... உங்களால் உங்களது கிராமத் தெருவின் புழுதி வாசனையை நுகர முடிகிறதா... ? உங்கள் முகத்தில் வீசிய இளந்தென்றல் காற்றை உணர முடிகிறதா...? கீற்றோ, பனை ஓலையோ அல்லது நாட்டு ஓடோ வேய்ந்த உங்கள் வீட்டில் காலையில் நுழையும் ஒளியை பார்க்க முடிகிறதா...?. வீடெனப்படுவது அதுதான்....

சரி... விழிகளை திறங்கள்... நிகழ்காலத்திற்கு வாருங்கள். அடுக்குமாடி குடியிருப்பில் மின்சார விளக்குகளை போடாமல் உங்களால் ஒளியை பெற முடிகிறதா, மின்விசிறி இல்லாமல் காற்று வருகிறதா...? இயற்கையின் அனைத்து பந்தமும் அறுபட்டிருக்கும் அந்த கான்கிரீட் குவியல் எப்படி வீடெனப்படும்?

கிராமத்திற்கு செல்ல சொல்லவில்லை, கிராமத்தை உருவாக்க சொல்கிறேன்:

கிராமத்திற்கு செல்ல சொல்கிறாயா... சும்மா பிதற்றாமல் நடைமுறையை பேசு என்கிறீர்களா...? ஆம் அனைவருக்கும் உகந்த நடைமுறையை முன்மொழிவதுதான் இந்த தொடரின் நோக்கம்.  நான் கிராமத்திற்கு திரும்பி செல்ல சொல்லவில்லை, நீங்கள் வசிக்கும் இடத்திலேயே கிராமச் சூழலை உருவாக்க சொல்கிறேன். ஓலை குடிசை வீட்டில் வாழச் சொல்வது இந்த தொடரின் நோக்கம் அல்ல. அது மாநகர நடைமுறைகளுக்கு சாத்தியமானதும் இல்லை. ஆனால், ஆரோக்கியமான, தரமான மாற்று வழிகளை காட்டுவது மட்டுமே நோக்கம்.

 

நாம் ஆசை ஆசையாக பெரும் பொருட்செலவில் கட்டிய வீட்டில்,  மின்சாரம் இல்லாமல், UPS இல்லாமல்  ஒரு மணிநேரத்தை நம்மால் செலவிட முடிகிறதா. நம் நவீன கான்கிரீட் குவியல், நம்மை  சந்தையை சார்ந்திருக்க வைக்கிறது. அதிக மின்விளக்குகளை வாங்க வைக்கிறது, அதிக மின்விசிறி மற்றும் ஏசி  யூபிஎஸ் வாங்க வைக்கிறது. அதாவது, நம்மை மேலும் மேலும் சந்தையை நோக்கி சார்ந்து இருக்க செய்கிறது.

நம் வீடுகள் இப்படிதான் இருக்குமென்றால், நமக்கு அதிக மணல், அதிக ஜல்லி, அதிக மின்சாரம் தேவை. அதற்கு நாம் இயற்கையை சுரண்டதான் வேண்டும். வேறு வழியில்லை. ஆனால்,  வீடென்பது இதுவல்ல... வீடு நமக்கு சுதந்திரம் அளிக்க வேண்டும், முழு விடுதலை பெற்றவனாக நம்மை உணர செய்ய வேண்டும், இயற்கையின் ஒரு அங்கமாக இருக்க வேண்டும். அப்படிதான் வீடுகள் முன்பு இருந்தது.

30 கி.மீ சுற்றுவட்டத்தில் நம் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள வேண்டும்:

நாம் கட்டும் வீடு எப்போதும்,  ஒரு 30 கி.மீ வட்டத்தில் என்ன மூலப்பொருள் கிடைக்கிறதோ அதிலிருந்து கட்டியதாக இருக்க வேண்டும். நீங்கள் பழங்குடிகள் வசிப்பிடத்தையோ, நவீன குளிர்பானங்கள் நுழையாத ஒரு குக்கிராமத்தையோ பார்வையிடுங்கள். அங்கு மக்கள் இன்னும் அப்படிதான் வீடு கட்டுகிறார்கள். அவர்கள் இயற்கையை சுரண்டுவதில்லை, அருகில் என்ன மூலப்பொருள் கிடைக்கிறதோ அதைக்கொண்டே வீடு கட்டுகிறார்கள்.  அது உயிருள்ள வீடாக இருக்கிறது. நம் தமிழர் கட்டடக் கலை அத்தகையது தான். ஆனால், வழக்கம் போல நமக்கு நம் மரபு மீது உள்ள தாழ்வு மனபான்மையில், அடிப்படை தேவையான வீடு கட்டுவதற்கு கூட மேற்கத்திய நாடுகளின் வழியை பின்பற்றுகிறோம். ஆங்கிலேயர்கள் இங்கு வருவதற்கு முன்பு நாம் என்ன வெறும் வனாந்திரத்திலேயா வசித்தோம்...? ஆனால், இப்போது மேற்கத்திய நாடுகள் தெளிவாகிவிட்டன. நம் நிலைதான் புலியை பார்த்து பூனை சூடுபோட்டு கொண்டதாக ஆகிவிட்டது.

மாநகரங்களுக்கு இது எப்படி பொருந்தும்?

 

சரி. புரிகிறது. இது எப்படி மாநகரங்களுக்கு பொருந்தும் என்கிறீர்களா...? நிச்சயம் பொருந்தும். நம் மக்களிடம் பழகி, நம்மிடமிருந்து வீடுகட்ட பாடம் படித்தவர் ‘லாரி பேக்கர்’ (Laurie Baker).  அவர் சூழலியலை கெடுக்காத மரபு வீடுகள் குறித்து நிறைய ஆய்வு செய்து பல வீடுகளை கட்டி உள்ளார். அவர் சொல்கிறார்,  “வீடுகள், உள்ளூரின் தட்ப வெப்ப நிலைமைகள், நிலவியல், பிரதேசத்தின் இயல்புகள், கனிமபொருட்கள், தாவரங்கள், பூச்சிகள், பறவைகள், விலங்குகள், ஆகியவற்றை கருத்தில் கொண்டதாகாவும், இயற்கை இடர்பாடுகளுக்கு தாக்குபிடிக்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும்” என்று.

இவர் முன் மொழிந்து சென்ற வீடுகட்டும் முறை நவீனத்தையும் பழமையையும் இணைப்பது, இயற்கையை அதிகம் சுரண்டாதது, செலவு குறைவானது. காற்றும் வெளிச்சமும் இயல்பாக உள்ளே வரவல்லது.

லாரி பேக்கர் மட்டுமல்ல, நம் சமகாலத்திலேயே எத்தனையோ பொறியாளர்கள் இந்த வகை கட்டடங்களை கட்டிவருகிறார்கள். கர்நாடகத்தை சேர்ந்த, மெக்சிகோவில் படித்த வருண் இது போன்ற கட்டங்களை கட்டி வருகிறார். அவர், “இயற்கையோடு இயைந்து வாழ இதுவே சிறந்த வழி”என்கிறார்.


நாம் நம் அளவில் இயற்கையை சுரண்டுவதை குறைத்துக் கொள்ள, இது போன்ற மாற்று வீடுகளை முயற்சிக்க வேண்டும். இது இயற்கையை காப்பதற்கான வழி என்று பெருமிதம் கொள்ள வேண்டாம், இயற்கை தன்னை தானே காத்துக் கொள்ளும். இது நம்மை காத்து கொள்வதற்கான வழி.

இதைபோன்ற வழிகளில் செல்லாமல், இயற்கையின் கொடையான வெயிலையும், மழையும் நாம் சபித்து ஒரு பயனும் இல்லை.
 

(தொடரும்)


- மு. நியாஸ் அகமது
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ