Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நீரின்றி அணைந்த உலகு (தொடர்-1) #WhereismyGreenworld

தி என்பது நீர் என்ற சொல்லினால் அர்த்தப்படுத்தப்படும். நதி மட்டும் அல்ல. ஏரிகள், குளங்கள், குட்டைகள் என நீரினால் ஆன அத்தனைக்கும் அடையாளம் அதுவே. கோடை விடுமுறையில் சொந்த ஊருக்கு சென்று, தாத்தாவின் விரல் பிடித்து, காய்ந்த ஆற்றுமணலில் சாயங்கால நேரங்களில் நடை பழகிய நாட்கள் நம் வெம்மையின் சாட்சி. 
 
இன்று வருடத்தின் அத்தனை நாட்களும் கோடைதான். ஆறுகளில் நீர் மட்டுமல்ல; 'மண்ணின் மைந்தர்கள் கைங்கர்ய'த்தால் மணலும் இல்லை இன்று. இதனால் அம்மைத் தழும்புகள் நிறைந்த உடலாய் அவலப்பட்டு நிற்கிறது நதிகள்.

மலையில் உருவாகி பூமியை தழுவி ஓடும் நதி, இன்று உலகின் அத்தனை அசுத்தங்களையும் கரைத்துக்கொண்டு ஓடுகிறது. ஒட்டுமொத்தமாய் இயற்கை மீது பழி போட்டுவிட்டு  தப்பிக்கும் மனித மனம்தானே அனைவருக்கும் வாய்த்திருக்கிறது. என்ன செய்யப் போகிறோம்?
 
என் பால்ய வயதில் பேருந்தில் பயணிக்கும்போதும்  ஜன்னல் வழி தெரியும் கொள்ளிடம் ஆற்றின் இரண்டு பக்க வெள்ளப்பெருக்கு மிகப் பெரிய ஆச்சர்யமூட்டும். இப்போதும் கடக்கிறேன் அந்தப் பாலத்தை. நீரற்று வறண்டு ஆங்காங்கே மணல் தோண்டப்பட்டு தன் பிரம்மாண்டத்தையெல்லாம் இழந்து காட்சியளிக்கிறது. ஒரு பெருநதியின் கையறு நிலை கண் முன்னே விரிய, ஒரு காலத்தில் ஆச்சர்யமூட்டிய அதே நதி இன்று அச்சமூட்டுகிறது. நீர் வரும் பாதையெல்லாம் அடைத்தது நாம்தான். வறண்டிருந்த ஆற்றில் மணலை அள்ளி லாரிகளில் ஏற்றி, மிச்சமிருந்த கடைசி ஈரம் சொட்டச் சொட்ட ஒரு உயிர்க்கொலைபோல நிகழ்த்தி பிற மாநிலங்களுக்கு கடத்தியதும் நாம்தான். என்ன செய்யப் போகிறோம்?
 
பழங்காலப் புராணங்களும் நிஜ வரலாறும் சொல்வதெல்லாம், தாகமென்று வந்து நிற்பவர்களுக்கு தண்ணீர் தருவதில் நாம் எவ்வித யோசனையும் காட்டியதில்லை. ஆனால் இன்று உள்ளங்கையில் உலகம் என்று டெக்னாலஜி வளர்ந்துவிட்ட காலத்தில்  ஒரு டம்ளர் தண்ணீர் கேட்கத் தயங்குகிறோம். அல்லது கேட்பவர்களுக்கு கொடுக்கத் தயங்குகிறோம். 
 
 
கடைகளில் வாட்டர் பாக்கெட்டில் சுருங்கிவிட்டது அகண்ட காவிரி. பெருமழை பெய்து ஊரே மூழ்கினாலும் அடுத்த ஆறு மாதத்தில், அனல் வெயிலில் பிளாஸ்டிக் குடங்களோடு, வீதியில் தண்ணீர் வண்டி முன் சண்டை போடுகிறார்கள் மக்கள். மழைநீர் சேகரிப்புத் தொட்டிக்குள் இப்போது பாம்புகள் வளர்கின்றன. நீர் சேமிப்புக்கு ஏதும் வழியில்லை. எல்லா வழிகளையும் அடைத்துவிட்டு என்ன செய்யப் போகிறோம்?

இந்த உலகில் எந்தவொன்றுக்கும் மாற்றாக ஏதோ ஒன்று கிடைக்கிறது. விஞ்ஞானப் புரட்சியின் விளைவாக, உலகம் ஒற்றை கேப்ஸுயூலில் பசி அடக்கி வாழக் கற்றுக்கொண்டுவிட்டது. நீரையெல்லாம் அசுத்தப்படுத்திவிட்டு கற்றுக்கொள்வோம் நீரின்றி வாழ.
 
'நெருப்பில் வெந்து நீரில் மூழ்கி அழியும் உலகம்' என்கிறது மனு நீதி. அதற்கான  அத்தனை வாய்ப்புகளையும் உருவாக்குகிறோம் நாம். பனிக்குட நீரில் இருந்து பிறந்து ஒரு குடம் நீரில் முடியும் மனிதன் வாழ்வை நீர் தவிர்த்து அலட்சியப்படுத்துகிறோம். அசுத்தப்படுத்துகிறோம். நீரினைக் குற்றப்படுத்துகிறோம். பிறகு என்ன செய்யப்போகிறோம்?  
 

 'நடந்தாய் வாழி காவேரி மாறி, அடைத்தாய் வாட்டர் பாக்கெட்டில் காவேரி' என்றாகிவிட்ட சூழலுக்கு நாம்தான் காரணம். நதியை நதியாகவே இருக்கவிடாமல் நாம் என்னவெல்லாமோ செய்துவிட்டோம். சரி இப்போது என்ன செய்யலாம்? எதுவும் செய்ய வேண்டாம்.மழையை மழையாகவே, நதியை நதியாகவே, கடலினை கடலாகவே விட்டுவிட்டால் போதும். முப்புறமும் நீரால் சூழப்பட்ட கண்டம். எதை அலட்சியப்படுத்திவிட்டு நாம் எதைக் காப்பாற்றப் போகிறோம்?
 
பல வருடங்களுக்கு முன்பெல்லாம், மக்கள் இயற்கையோடு இணைந்து வாழ்ந்தார்கள். அவர்களுக்கு எல்லாமும் இயற்கைதான் தந்தது. மழைநீர் சேகரித்தார்கள். அது அவர்களுக்கு இயல்பான ஒன்றாயிற்று. காடுகளைக் காத்தார்கள். அது அவர்கள் வாழும் இடமாயிற்று. உழைத்த இடங்களில் தங்கள் வியர்வை தெளித்து உயர்ந்தார்கள். காற்றில் மாசில்லை. மனிதர் சுவாசப்பையில் அசுத்தங்கள் படியாத வாழ்வு வாழ்ந்தார்கள். இப்போது அட்வான்ஸ் டெக்னாலஜி முன்னேற்றத்துக்கு நாம் ஒன்றே ஒன்றைத்தான் பலி தந்திருக்கிறோம். அது இயற்கை.
 

'முடியை விற்று சீப்பு வாங்கியதுபோல ' காடழித்து கட்டடங்கள் எழுப்பி, பொழியத் தயாராயிருக்கும் மேகங்களின் கர்ப்பப்பையில் வாகனப்புகை பூசி மழை மறக்கடித்தோம். ஒன்றை அடைய இன்னொன்றை இழப்பது இயற்கை விதியென்று சமாதானம் கூறி நாம் இயற்கையையே இழந்தோம். 
 
பேசலாம்....

- கணேசகுமாரன்
படங்கள்: கே.குணசீலன்

எடிட்டர் சாய்ஸ்