Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'அதனால்தான் உன்னை காரில் அனுப்பாமல் ஆட்டோவில் பள்ளிக்கு அனுப்பினேன் மகளே...!'- இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தியின் கடிதம்!

ன்பு என நினைக்கும்போதே நமக்கு தோன்றுவது என்னவோ "அம்மா" என்ற சொல்தான். அன்பின் உருவமே அம்மாதான். ஆனால், ஒரு தந்தையின் அன்பை நாம் எவ்வளவு பெரிய மனிதராக ஆகிறோம் என்பதை வைத்துதான் அறிந்துகொள்ள முடியும். காரணம், தந்தையின் அன்பு அவரது கண்டிப்பில் தெரியும். அந்த கண்டிப்புதான் ஒருவனை வாழ்வின் உயரத்திற்குக் கொண்டு செல்கிறது.

இன்ஃபோஸிஸ் நிறுவனத்தின் நிறுவனரும், CEOவுமான நாராயண மூர்த்தி,  தன்னுடைய மகளுக்கு எழுதிய உருக்கமான கடிதம், இணையத்தில் வைரலாகி உள்ளது.

தன்னுடைய மூத்த மகள் அக்‌ஷதா பிறந்த பின்னர் தான் எவ்வாறெல்லாம் மாறினேன் என்பது உள்பட பல்வேறு நிகழ்வுகள் குறித்து நெஞ்சை நெகிழச் செய்யும் விதமாக அவர் எழுதிய அந்த கடிதம் இங்கே....


அக்‌ஷதா,

ஒரு அப்பாவாக ஆனது நான் நினைத்திராத அளவு என்னை மாற்றிவிட்டது. நான் மீண்டும் பழைய ஆளாக மாற முடிந்ததே இல்லை. உன்னுடைய வரவு கற்பனை செய்துகூட பார்க்காத அளவுக்கு மகிழ்ச்சியையும், ஒரு பெரிய பொறுப்பையும் எனக்கு தந்தது. இப்போது நான் வெறும் மகனோ, கணவனோ, வளர்ந்து வரும் நிறுவனத்தின் ஊழியரோ மட்டும் இல்லை.  நான் இப்போது ஒரு மகளின் வாழ்க்கையில் ஒவ்வொரு கட்டத்திலும் அவளின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப மாற வேண்டிய தந்தை.

உன்னுடைய பிறப்பு எல்லா வகையிலும் என் வாழ்வில் ஒரு அடையாளமாக மாறி விட்டது. வேலையிடத்தில் மிகவும் சிந்தித்தும், அளவிட்டும் மட்டுமே நான் பேச்சுவார்த்தை நிகழ்த்துகிறேன். வெளி உலகோடு நான் செய்யும் பரிமாற்றங்கள் அனைத்துமே மிகவும் கண்ணியமாகவும், முதிர்ந்த சிந்தனை உடையதாகவும் மாறி விட்டன. ஒவ்வொரு மனிதரையும் மிகவும் மரியாதையாகவும் கவனமாகவும் அணுக வேண்டிய அவசியத்தைப் புரிந்து கொண்டேன். ஏனெனில், என்றேனும் ஒரு நாள் நீ வளர்ந்து வெளி உலகை புரிந்து கொள்ளும்போது,  உன் தந்தை தவறிழைத்து விட்டார் என நீ எண்ணக் கூடாது.

அடிக்கடி என் மனம்,  நீ பிறந்த நேரத்திற்கு சென்று விடுகிறது. நானும் உன் அம்மாவும் அப்பொழுது மிகவும் இளமையானவர்கள். வாழ்க்கையில் தடம் பதிக்க அப்போதுதான் மிகவும் முயற்சித்துக் கொண்டு இருந்தோம். நீ பிறந்த 2 மாதங்களில் ஹூப்ளியில் இருந்து மும்பைக்கு வந்து விட்டோம். வெகு விரைவிலேயே, குழந்தையையும் வளர்த்துக் கொண்டு வேலையிலும் கவனம் செலுத்துவது மிகவும் கடினம் என உணர்ந்து விட்டோம். அதனால், சிறிது காலம் நீ உன் தாத்தா, பாட்டியோடு ஹூப்ளியில் இருக்க வேண்டும் என முடிவு செய்தோம். அந்த முடிவிற்கு வர நான் மிகவும் சிரமப்பட்டேன். ஒவ்வொரு வாரமும் பெல்காமிற்கு விமானத்தில் வந்து அங்கிருந்து ஹூப்ளிக்கு காரில் வருவேன். அதற்கு நிறைய பணம் செல்வானது. ஆனால், என்னால் உன்னைக் காணாமல் இருக்க முடியவில்லை.
என்னை மிகவும் கவர்ந்த விஷயம், நாங்கள் இல்லாமலும் உன்னைச் சுற்றி தாத்தா, பாட்டி, அத்தை என உனக்கென  ஒரு அழகிய உலகை நீ அமைத்துக் கொண்டதுதான். நாங்கள் இல்லாத குறை உனக்கு தெரிந்ததே இல்லை.

அடிக்கடி, 'என் குழந்தைகளுக்கு நான் என்ன அளித்துள்ளேன்?' எனும் கேள்வி என்னிடம் கேட்கப்படும். நான் அதற்கு கூறும் பதில், 'உங்கள் தாய்தான் இந்த பெரிய பொறுப்பை தன் தோளில் சுமந்தாள். இப்போது நீங்கள் இருக்கும் நிலைக்கு உங்களைக் கொண்டு வந்ததற்கு நான் அவளுக்கு நன்றி உள்ளவன் ஆவேன். அவள் உங்களுக்கு வார்த்தைகளைக் காட்டிலும் செயலில்தான் அனைத்தையும் கற்றுக் கொடுத்தாள். உனக்கும் ரோஹனுக்கும் அவள் எளிமை, சிக்கனம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தைக் கற்று கொடுத்திருக்கிறாள்' என்பதுதான். ஒரு முறை பெங்களூரில் இருக்கும் போது உன் பள்ளி விழாவிற்கு நீ ஒரு சிறப்பான உடையை அணிய வேண்டி இருந்தது. 80களில் Infosys தொடங்கிய காலம் அது. அப்போது அடிப்படையான விஷயங்களைத் தவிர்த்து, வேறு ஏதும் வாங்க எங்களிடம் வசதி கிடையாது. உன் அம்மா உன்னிடம்,  'அந்த உடையை வாங்க முடியாது, அதனால் நீ அந்த போட்டியில் பங்கேற்க வேண்டாம்' எனக் கூறினாள். வெகு நாட்களுக்குப் பிறகு, நாங்கள் ஏன் அப்படி உன்னிடம் நடந்துகொண்டோம் என புரியவில்லை எனக் கூறினாய். அன்று ஒரு குழந்தையாக பள்ளியில் அந்த விழாவில் கலந்து கொள்ளாமல் நீ வருத்தப்பட்டது தெரியும். ஆனால், அது உனக்கு வாழ்க்கையில் சிக்கனத்தைப் பற்றிய மிகப் பெரிய பாடமாக அமைந்தது.

ஆனால், வாழ்க்கை இப்போது மாறி விட்டது. நம்மிடம் போதுமான அளவு பணம் உள்ளது. ஆனால், உனக்குத் தெரியும். நம் வாழ்க்கைமுறை எளிமையானது என்று. ஒரு முறை நமக்கு சிறிது பணம் வந்ததும், உங்களை காரில் பள்ளிக்கு அனுப்பலாம் எனக் கூறினேன். ஆனால் உன் அம்மா, 'நீயும் ரோஹனும் எப்போதும் போல் ஆட்டோவில் மற்ற மாணவர்களுடன் செல்லட்டும்' எனக் கூறினாள். நீ ஆட்டோவின் ஓட்டுனர் 'மாமா'வுடனும் மற்ற குழந்தைகளுடனும் நல்ல நட்பு கொண்டு மகிழ்ச்சியோடு சென்றாய். சில நேரத்தில் இப்படி சின்ன சின்ன விஷயம்தான் வாழ்வில் மகிழ்ச்சி.

நீ அடிக்கடி என்னிடம், 'மற்ற குழந்தைகள் வீட்டில் தொலைக்காட்சி இருக்கும்போது ஏன் நம் வீட்டில் மட்டும் இல்லை?' எனக் கேட்பாய். ஆனால் உன் தாய்,  'படிப்பதற்கும், விளையாடுவதற்கும், நண்பர்களைச் சந்திப்பதற்கும் நேரம் இருக்காது' எனக் கூறி தொலைக்காட்சி வாங்க வேண்டாம் எனக் கூறிவிட்டாள். அதனால், தினமும் இரவு 8  மணியிலிருந்து 10 மணி வரை நம் குடும்பத்தோடு சேர்ந்து ஏதாவது பிரயோஜனமாக செய்ய முடிவெடுத்தோம்.


ஒரு மகள் திருமணமாகி செல்லும் போது, தந்தையின் மனநிலை மிகுந்த குழப்பத்தில் இருக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. அவளுடைய வாழ்வில் எல்லாமுமாக இருந்த அப்பாவின் இடத்தை,  நம்பிக்கையுடைய வேறு ஒரு இளைஞன் பிடிப்பான். அவனிடம்தான் இனி அவள்,  அவளது சோகம், மகிழ்ச்சி என அனைத்தையும் பகிர்ந்து கொள்வாள் என்னும் விஷயத்தை அனைத்து அப்பாவும் வெறுப்பார்கள். நீ உன் வாழ்க்கை துணையைக் கண்டுவிட்டாய் எனக் கூறியதும் எனக்கும் சிறிது சோகமாகவும், பொறாமையாகவும்தான் இருந்தது. ஆனால், நான் ரிஷியைச் சந்தித்ததும் அவனது தோற்றமும், தைரியமும், அனைத்திற்கும் மேலாக அவன் நேர்மையும் என்னைக் கவர்ந்த போதுதான்,  'நீ ஏன் உன் மனதைப் பறிகொடுத்தாய்?' எனத் தெரிந்து கொண்டேன். அதன் பிறகுதான் நீ அவனுடன் உன் வாழ்க்கையை வாழ நான் ஒப்புக் கொண்டேன்.

சில மாதங்களுக்கு முன்பு, என்னை நீ ஒரு தாத்தாவாக மாற்றி பெருமைபடுத்தினாய். ஒரு அப்பாவாக உன்னை தூக்கிய மகிழ்ச்சியை வார்த்தைகளால் விளக்க முடியாது என்றால், உன்னுடைய இல்லமான சாண்டா மோனிகாவில் (Santa Monica),  உன் அழகிய மகள் க்ரிஷ்ணா (krishnaa)வைத் தூக்கிய அனுபவம் முற்றிலும் மாறுபட்டது. நான் இனி ஒரு ஞானமுள்ள வயதானவனாக நடந்துகொள்ள வேண்டுமோ என ஆச்சர்யப்பட்டேன்! இனி ஒரு அழகிய குட்டிச் செல்லத்தை வளர்க்கும் இன்பத்தை நான் அனுபவிப்பேன். உனக்கு தெரிந்திருக்கும், தாத்தா பாட்டிக்கும் பேத்திக்கும் உள்ள பொதுவான எதிரி யாரென்று- பெற்றோர்கள்! எனக்கு நன்கு தெரியும், நானும் கிருஷ்ணாவும் உன்னைப் பற்றி பேசினால் ஒத்த கருத்து உடையவர்களாகத்தான் இருப்போம்...

உன் திருப்தியான வாழ்வில்,  உன் லட்சியத்தை நோக்கி நீ சென்று கொண்டு இருக்கையில், ஒன்றை மட்டும் நினைவில் கொள். நாம் வாழ இருப்பது ஒரு கிரகம்தான். அதுவும் இப்போது ஆபத்தில் உள்ளது. நன்றாக ஞாபகம் வைத்துக்கொள். நாங்கள் எப்படி நீ வாழ ஒரு நல்ல இடமாக பூமியைத் தந்தோமோ அதேபோல் கிருஷ்ணாவிடம் இப்பூமியை ஒப்படைப்பது உன் கடமை!

பத்திரம் அன்பு மகளே!
அன்புடன்,
அப்பா

-ந. ஆசிபா பாத்திமா பாவா

(மாணவப் பத்திரிகையாளர்)

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close