Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இப்போதும் கோபி செங்கோட்டையனின் கோட்டைதானா?! - ஸ்டார் வேட்பாளர் ஸ்டேட்டஸ்

வேட்பாளர் : கே.ஏ.செங்கோட்டையன்  (குள்ளம்பாளையம் அர்த்தநாரி கவுண்டர் செங்கோட்டையன்), அ.தி.மு.க

சிறப்புகள் : முன்னாள் அமைச்சர், அ.தி.மு.க-வின் முன்னாள் தலைமை நிலையச் செயலாளர்

தொகுதி : கோபிச்செட்டிபாளையம்

தொகுதியின் இயல்பு : இயற்கை அழகு கொட்டிக்கிடக்கும் ஏரியா. கோபிச்செட்டிபாளையம் நகராட்சியுடன், லக்கம்பட்டி, எலத்தூர், காசிபாளையம், கொளப்பலூர், நம்பியூர் ஆகிய பேரூராட்சிகளையும் உள்ளடக்கிய தொகுதி இது. 45 கிராம ஊராட்சிகள் இந்தத் தொகுதியில் உள்ளன.

கொங்கு வேளாளக்கவுண்டர், வன்னியர், தலித், பழங்குடி, நாடார், வேட்டுவக்கவுண்டர், மொடவண்டி கவுண்டர்  உள்ளிட்ட சாதியினர் பரவலாக இருக்கிறார்கள். பாரியூர் கொண்டத்து காளியம்மன், பச்சமலை, பவளமலை முருகன் என பிரசித்தி பெற்ற கோவில்கள் இந்த தொகுதியில் அமைந்துள்ளன.

வாக்காளர்கள் விவரம்:

மொத்த வாக்களர்கள்    :   2,41,198

ஆண்கள்                              :  1,18,017
பெண்கள்                          :     1,23,105
திருநங்கைகள்                    :  6
          
அ.தி.மு.க. கோட்டை... செங்க்கோட்டையன் பேட்டை:

இந்த தொகுதியில் காங்கிரஸ் 3 முறையும், சுதந்திரா கட்சி 1 முறையும், தி.மு.க 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன. 8 முறை அ.தி.மு.க வெற்றிபெற்றிருக்கிறது. இதில், 6 முறை (1980, 1984, 1989, 1991, 2006, 2011) செங்கோட்டையனே வெற்றிபெற்றிருக்கிறார். கடந்த தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தி.மு.க கூட்டணி வேட்பாளர் சிவராஜை விட, 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் செங்கோட்டையன் வெற்றிபெற்றார்.

முந்தைய தேர்தல் விவரம்: 

கே.ஏ.செங்கோட்டையன் (அ.தி.மு.க) :    94,872
என்.எஸ்.சிவராஜ்    (கொ.மு.க )      : 52,960

செங்கோட்டையனின் அரசியல் பயணம் :

ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையம் அருகில் உள்ள குள்ளம்பாளையம், செங்கோட்டையனின் ஊர். 1971-ல் குள்ளம்பாளையத்தின்  ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்குச் சுயேட்சையாகப் போட்டியிட்டு வென்றதன் மூலம், பொது வாழ்வில் அடியெடுத்து வைத்தார் செங்கோட்டையன்.

இவர், எம்.ஜி.ஆரின் தீவிர விசுவாசியாக தி.மு.க-வுக்குள் வலம் வந்தார். தி.மு.க-வில் இருந்து பிரிந்து 1972-ல் அ.தி.மு.க-வை எம்.ஜி.ஆர் தொடங்கியபோது, அ.தி.மு.க-வில் ஐக்கியமானார். முன்னாள் அமைச்சர் கே.ஏ.கிருஷ்ணசாமியின் ஆதரவாளராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். அ.தி.மு.க-வின் முதல் பொதுக் குழு கோவையில் நடைபெற்றது. அதற்காக, உணவு ஏற்பாடு உள்ளிட்ட பொறுப்புகள் செங்கோட்டையனிடம் ஒப்படைக்கப்பட்டது. அதைச் சிறப்பாக செய்து முடித்ததன் மூலம், எம்.ஜி.ஆரின் கவனம் கவர்ந்தார். 1977-ல் முதல் பொதுத் தேர்தலை அ.தி.மு.க சந்தித்தபோது, அக் கட்சியின் வேட்பாளராக சத்தியமங்கலம் தொகுதியில் போட்டியிட்டார்.

கோபி தொகுதியில் வழக்கறிஞர் கே.என்.கே.ராமசாமி என்பவர் அ.தி.மு.க சார்பில் நிறுத்தப்பட்டார். அந்த தேர்தலில் அமோக வெற்றி பெற்று ஆட்சியமைத்த எம்.ஜி.ஆர்., மந்திரி பதவியை கே.என்.கே.ராமசாமிக்குக் கொடுக்காமல், சுப்புலெட்சுமி ஜெகதீசனுக்குக் கொடுத்தார். அதனால் அதிருப்தி அடைந்த ராமசாமி, தன் செயல்பாடுகளைக் குறைத்துக் கொண்டார். அந்த வெற்றிடத்தை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார் செங்கோட்டையன்.
1980-ல் நடைபெற்ற பொதுத்தேர்தலில், கோபி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக களம் இறங்கி வெற்றி பெற்றார் செங்கோட்டையன். அவரை ஆவின் சேர்மனாக எம்.ஜி.ஆர் நியமித்தார். பெரியார் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பொறுப்பும் கூடுதலாக அவருக்கு வழங்கப்பட்டது.

எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு ஜெ. அணி, ஜா. அணி என்று அ.தி.மு.க இரண்டாகப் பிரிந்தபோது, ஜெ. அணியில் ஒட்டிக்கொண்டார் செங்கோட்டையன். 1989-ல், தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவரான ஜெயலலிதாவுக்கு தி.மு.க. உறுப்பினர்கள் சிலரால் சிக்கல் உண்டானபோது, அவர்கள் மீது பாய்ந்தார் செங்கோட்டையன். தான் அவமானப்படுத்தப்பட்டபோது, தன்னைப் பாதுகாப்பதற்கு முன்வந்த செங்கோட்டையனைத் தனது நம்பிக்கை மனிதர்கள் பட்டியலில் வைத்துக் கொண்டார் ஜெயலலிதா. 1991-ல் அ.தி.மு.க. ஆட்சி அமைத்ததும், செங்கோட்டையனை அமைச்சராக்கிய ஜெயலலிதா, அவருக்கு செல்வாக்கு மிக்க போக்குவரத்துத் துறையைக் கொடுத்தார்.


போக்குவரத்துத் துறை அமைச்சர், அ.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர், கழகத் தலைமை நிலையச் செயலாளர் என கட்சியிலும் ஆட்சியிலும் பல முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார்.

செங்கோட்டையனின் பிளஸ் :

தொகுதி மக்களுடன் நெருக்கமாக இருப்பது இவரது பிளஸ். கல்யாணம், காதுகுத்து என எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும், யார் அழைப்பிதழ் கொடுத்தாலும் தவறாமல் ஆஜராகிவிடுவார். சம்பந்தப்பட்ட குடும்பங்களின் நிலையறிந்து அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வார். பெரும்பாலும், ஜெயலலிதாவுடன் பிரசாரத்துக்குச் சென்றுவிடுவதால், இவரது தொகுதியில் வாக்குச்சேகரிக்க போதிய நேரம் ஒதுக்க முடியாது. ஆனாலும், வெற்றிபெற்றுவிடுவார். அதற்குக் காரணம், கணக்கு வழக்கு பார்க்காமல் செல்வழிக்கும் குணம்! 

மைனஸ் :

2011-ல் அ.தி.மு.க ஆட்சியில் அமர்ந்ததும், செங்கோட்டையனுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. ஆனால், பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி  சர்ச்சைகளில் சிக்கியதால், செங்கோட்டையனிடம் இருந்து அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. கட்சியில் இருந்தும் ஓரங்கட்டப்பட்டார். இந்த நிலையில், கடந்த 5 ஆண்டுகளில் தொகுதிக்கு அவர் பெரிதாக ஒன்றும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு தொகுதி மக்களிடையே உள்ளது.

எதிர்த்து போட்டியிடும் மற்ற பிரதான கட்சி வேட்பாளர்கள் :

சரவணன், காங்கிரஸ்:  


(+)


*இவர், மாவட்ட ஊராட்சித் தலைவராக இருந்தவர். அப்போது, தொகுதிக்குள் இவரால் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் இவருக்கு இப்போது கைகொடுக்கின்றன.

* பதவியில் இருந்தபோது தொகுதிவாசிகள் பலரிடம் நெருங்கிப் பழகியிருக்கிறார்.

* ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் ஆதரவாளர் என்பதால், சரவணனின் வெற்றிக்காக கங்கனம் கட்டி களத்தில் குதித்திருக்கிறார்கள் காங்கிரஸார்.

(-)

* காங்கிரஸ் இரண்டாக உடைந்தபோது, த.மா.கா-வுக்கு பல பெருந்தலைகள் சென்றுவிட்டனர். அதனால், குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்கு இங்கு காங்கிரஸ் பலமாக இல்லை.

* இங்கு போட்டியிட தி.மு.க-வின் என்.கே.கே.பி.ராஜா சீட் கேட்டிருந்தார். அவருக்காகவே இந்த தொகுதியை காங்கிரஸுக்கு தள்ளிவிட்டிருக்கிறது தி.மு.க தலைமை. இதனால் தி.மு.க-வினரின் ஒத்துழைப்பு சரியாக இல்லாததும் இவருக்கு மைனஸ்.

  முனுசாமி, இந்திய கம்யூனிஸ்ட்:

(+)

* தே.மு.தி.க- மக்கள் நலக்கூட்டணி, த.மா.கா அணி சார்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக முனுசாமி போட்டியிடுகிறார்.

* விவசாயிகளின் பிரச்னைகளுக்காக ஏராளமான போராட்டங்களை நடத்தியவர்.

* நலவாரியம் மூலம் தொழிலாளர்களுக்குக் கிடைக்க வேண்டிய சலுகைகளை பெற்றுத் தந்திருக்கிறார்.

* விவசாயிகள், தொழிலாளர்கள் மத்தியில் இவருக்கு நல்ல அறிமுகம் இருக்கிறது.


(-)

ஈரோடு வடக்கு மாவட்ட தே.மு.தி.க செயலாளர் உள்ளிட்ட சில நிர்வாகிகள், அதிருப்தி அணி சந்திரகுமாருடன் போய்விட்டனர்.

* புதிதாக நியமிக்கப்பட்ட தே.மு.தி.க பொறுப்பாளர்களிடம் சுறுசுறுப்பும், ஆர்வமும் இல்லை.

* பொதுவாக கூட்டணி கட்சியினரின் ஒத்துழைப்பு இல்லாதது இவரது மைனஸ்.

ஃபைனல் பன்ச்

தொகுதி மக்களின் குறையாத பாசம், வாரி வாரி வழங்கப்படும் கரன்சி என கள நிலவரம் என்னவோ செங்கோட்டையனுக்கே தற்போது சாதகமாக உள்ளது!




-ஆ.பழனியப்பன், வீ.மாணிக்கவாசகம்

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ