Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்த புவியின் அடுத்த டைனோசர்களா நாம்...? #WhereIsMyGreenWorld

 

'மனிதன், வரவிருப்பதை அறிந்து தடுக்கும் திறமையை இழந்து விட்டான். அவன் இறுதியில் உலகையே அழித்துவிடுவான்' என்றார் சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த தத்துவ ஞானி ஆல்பர்ட் ஷ்வைசர்.  உலகம் அழிகிறது என்றால் நேரடியாக உலகம் அழிவதில்லை. அது உவமயம். உலகம் அழிவது என்றால், உலகில் உள்ள உயிரினங்கள் அழிவது, மனிதன் அழிவது.அதுதான் இப்போது நிகழ்ந்து கொண்டிருக்கிறது. நாம் நம் மோசமான கண்டுபிடிப்புகள், வாழ்வுமுறையால் புவியை நாசமாக்கிவிட்டோம். தன் சொந்த வீட்டை அசுத்தப்படுத்திவிட்டோம். இப்போது அதன் துர்நாற்றத்தில் சிக்கி தவிக்கிறோம்.

ஆம். டெல்லியில் ஆண்டொன்றுக்கு சராசரியாக காற்று மாசுபாட்டால் பத்தாயிரம் முதல் முப்பதாயிரம் மரணங்கள் நிகழ்வதாக அறிவியல் மற்றும் சுற்றுச்சூழலுக்கான மையம் சொல்கிறது. 2014 ம் ஆண்டு, டெல்லியை உலகின் மிக மோசமான சூழலியல் கேட்டிற்கு உள்ளான நகரம் என்று உலக சுகாதார மையம் குறிப்பிட்டது இந்த தருணத்தில் இயல்பாக முக்கியத்துவம் பெறுகிறது.

டெல்லியின் நிலை மட்டும் இதுவல்ல:

டெல்லியின் நிலை மட்டும் இதுவல்ல. மொத்த இந்தியாவின் நிலையும் இதுதான்.  இந்தியாவில் மரணத்திற்கான் பத்து காரணங்களில், காற்று மாசுபாடு ஐந்தாவது காரணியாக இருப்பதாக  அந்த மையத்தின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. இந்திய அளவில் சென்ற ஆண்டு, ஆறு லட்சத்திற்கும் மேலான மரணங்கள்  காற்று மாசுபாட்டால் நிகழ்ந்து இருக்கிறது.

மோசமான சூழல் கேடுகள் பருவநிலை மாற்றத்திற்கும் இட்டு சென்றுள்ளது. பருவநிலை மாற்றம் டெங்கு, மலேரியா  உள்ளிட்ட பல நோய்களுக்கும் காரணமாக இருப்பதாக அந்த ஆய்வு சொல்கிறது. முன்பு மலேரியா பரவுவதற்கு சாத்தியமான காலங்களாக ஆறு மாதங்கள் இருந்தது, இப்போது பன்னிரெண்டு மாதங்களும் மலேரியா பரவும் காலமாக இருக்கிறது, என்கிறது அந்த அறிக்கை.

2015 ல் மட்டும் 600 பேர் அனல்காற்றால் ஆந்திரா மற்றும் ஒடிசாவில் இறந்து இருக்கிறார்கள். வெப்பம் தாங்காமல்  அகமதாபாத்தில் இருந்த மருத்துவமனைகள்,  மேல் தளத்தில் இருந்த மகப்பேறு பிரிவை கீழ் தளத்திற்கு மாற்றி உள்ளன.

தமிழகத்தின் நிலையும் இதற்கு சற்றும் குறைந்ததல்ல, தகித்துக் கொண்டிருக்கிறது.

கொசுவும் வளர்ச்சியின் சின்னம் தான்:

சரி. இதற்கு தீர்வென்ன?  மலேரியாவும், டெங்குவும் இந்தளவிற்கு ஏன் பரவுகிறது என்ற கேள்வியில்தான். இதற்கான தீர்வும் ஒளிந்து இருக்கிறது. ஆம். கொசுவும், ஈ யும் இந்த பத்தாண்டுகளில் இந்த புவியில் புதிதாக ஜனித்தவை அல்ல. அது பல நூற்றாண்டுகளாக இந்த புவியில் இருக்கத்தான் செய்கிறது. ஆனால், சில தசாப்தங்களாக மட்டும் டெங்கு உள்ளிட்ட நோய்கள் இந்த அளவிற்கு பரவ காரணம் என்ன...? சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், நீர் நிலைகளின் மரணம் தான் காரணம்.

முன்பெல்லாம் கொசு, நீர் நிலைகளில் முட்டை இடும், அந்த முட்டையை தலைபிரட்டை உண்ணும். ஆனால்,  நாம் போற்றி வளர்த்த வளர்ச்சி,   நீர் நிலைகளை கழிவுநீர் கால்வாயாக மாறிவிட்டது, தலைபிரட்டையை காணாமல் போகச் செய்துவிட்டது. கொசுக்கள் வீரியம் கொண்டுவிட்டன. கொசுவும் வளர்ச்சியின் சின்னமாக மாறிவிட்டது. நமக்கு வளர்ச்சி வேண்டும் தான்; ஆனால் அது அனைத்தையும் ஒருங்கிணைத்தாக இருக்க வேண்டும். நீர் நிலைகளை, காற்றை மாசுப்படுத்தாததாக இருக்க வேண்டும். நம் பொருளாதார கொள்கைகளை அதற்கு தகுந்தாற்போல் வடிவமைத்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால், டைனோசருக்கு ஏற்பட்ட  நிலைதான் நாளை நம் சந்ததி சந்திக்கும்.


ஆம், இந்த புவியில் பொருத்தமானது மட்டுமே வாழும்.

- மு. நியாஸ் அகமது 
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ