Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அதிமுக தேர்தல் அறிக்கைக்கும் அமைதி, வளம் மற்றும் வளர்ச்சிக்கும் என்ன சம்மந்தம்...?



வ்வொரு தேர்தலிலும் ஏதோவொரு கட்சி, ஒரு அரசியல் தலைவர் ஜெயித்துவிடுகிறார். ஆனால், தோற்பது என்னவோ கடைக்கோடி வாக்காளன் தான்...” என்று பொதுவாக சொல்லப்படுவது உண்டு. அதற்கு இந்த தேர்தலும் விதிவிலக்கு அல்ல என்பதற்கு அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையே மிகச் சரியான சான்று.

மக்கள் இலவசங்கள் வேண்டாம் எங்களுக்கு உண்மையான வளர்ச்சி திட்டங்களை தாருங்கள்... எங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துங்கள் என்று நடத்திய போராட்டங்கள் அனைத்து கட்சிகளின் தேர்தல் அறிக்கையிலும் பிரதிபலித்துள்ளது. கட்சிகள் மக்கள் நலனில் உண்மையாக அக்கறை கொண்டுள்ளதோ இல்லையோ... குறைந்தபட்சம் மக்களை கவர்வதற்காக வேண்டியேனும் சில வளர்ச்சி திட்டங்களை முன் வைத்துள்ளன.  ஆனால், அ.தி.மு.க. இலவசங்களை... மன்னிக்கவும், விலையில்லா பொருட்களை முன் வைத்து மீண்டும் மீண்டும் தவறான முன் உதாரணத்தை ஏற்படுத்தி உள்ளது.

யார் வளர்ச்சிக்கு இலவச பொருட்கள்...?

விலையில்லா பொருட்களை முற்போக்காளர்கள் எதிர்க்கும் போதெல்லாம், ஆட்சியாளர்களால் ஒன்று சொலப்படுகிறது, “இங்கு சமூக ஏற்றதாழ்வுகள் அகலும் வரை... விலையில்லா பொருட்கள் அத்தியாவசியம்” என்று. இதில் உண்மை இல்லாமலும் இல்லை. நமது பொருளாதார கொள்கையால், வலியவன் மட்டும் மேலும் மேலும் வாழ்ந்து கொண்டிருக்கும்போது, எளியவனின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த சில இலவசங்கள் முக்கியம் தான். அதை நிச்சயம் மறுப்பதற்கில்லை.

ஆனால், இவர்கள் முன் வைக்கிற இலவசங்கள் மக்களின் வாழ்வாதாராத்தை மேம்படுத்துவதாகவா இருக்கிறது. கைப்பேசியால் நிறுவனங்களின் வருடாந்திர வருமான கணக்கு வேண்டுமானால் மேம்படுமே தவிர, அது எப்படி தனி மனிதனின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும்...? அது மட்டுமல்ல, இப்போது மிக குறைந்த விலையிலேயே சந்தையில் மிக தரமான கைப்பேசிகள் கிடக்கும்போது, அதைகூட வாங்க முடியாத நிலையிலா இந்த நாட்டின் குடிகள் இருக்கிறார்கள்...?

ஆமாம் என்று சொல்வீர்கள் என்றால், அதற்காக நீங்கள் நிச்சயம் வெட்கப்பட வேண்டும். வருத்தப்பட வேண்டும். ஆம் அது உங்களின் தோல்வி அல்லவா...? நியாயமாக அலசுவோம் என்றால், இது உங்கள் தோல்வி மட்டுமல்ல உங்களுக்கு முன்னால் ஆண்ட தி.மு.க.வின் தோல்வியும்கூட தான்.

தருமபுரி மாவட்டம், பென்னகரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வட்டுவனஹள்ளி பஞ்சாயத்தில் உள்ள அலக்கட்டு மலை கிராமத்தில் ஏறத்தாழ எழுபது குடும்பங்கள் வசிக்கிறார்கள். அங்கு செல்வதற்கு சாலை வசதிகள் எல்லாம் கிடையாது. நல்ல உடல்வாகு உள்ளவரே குறைந்தது மூன்று மணி நேரம் நடந்து தான் செல்ல வேண்டும்.  எப்போது மின்சாரம் வரும், எப்போது போகும் என்று தெரியாது.

ஆனால், அவர்கள் அனைவருக்கும் இலவச தொலைக்காட்சி பெட்டி கொடுக்கப்பட்டு இருக்கிறது. பாருங்கள்... எங்கள் ஆட்சியில், திட்டங்கள் கடைக்கோடி கிராமம் வரை சென்று இருக்கிறது என்று நீங்கள் பெருமை பீற்றி கொள்ளலாம். ஆனால், உண்மையாக அந்த மக்களுக்கு தேவை என்ன...? சாலை வசதியா இல்லை தொலைக்காட்சியா...?

நாம் இப்போது மத்திய பிரதேச, மகாராஷ்டிர குடிநீர் பஞ்சத்தை பற்றியெல்லாம் பேசுகிறோம். ஆனால், அலைக்கட்டு மக்கள் பல கி.மீ நடந்து கிணற்றுக்குள் இறங்கி தான் பல தசாப்தங்களாக தண்ணீர் பிடித்து கொண்டிருக்கிறார்கள். அந்த தண்ணீரும் கோடையில் வற்றிவிடும். அவர்கள் நிலையாவது பரவாயில்லை, அதே பஞ்சாயத்தில் இருக்கும் இன்னொரு மலை கிராமமான ஏரிமலை மக்களுக்கு இன்றும், பாசி படர்ந்த, புழுக்கள் நிறைந்த தண்ணீர் தான்  குடிநீர்.

இத்தனைக்கும் அவர்கள் அனைவருக்கும் வாக்கு சீட்டு இருக்கிறது.  ஆனால், நீங்கள் உங்கள் அன்பார்ந்த வாக்காளர்களுக்கு என்ன பரிசை தந்து இருக்கிறீர்கள்...? மோசமான குடிநீரையும்... பாட்டில் நீர் வாங்க பரிந்துரைக்கும் தொலைக்காட்சி பெட்டியையும்.  இது எவ்வளவு மோசமான முரண்பாடு. இது ஒரு பஞ்சாயத்தின் நிலை மட்டுமல்ல. தமிழகத்தின் பல பஞ்சாயத்துகளின் நிலையும் இது தான்.

எத்தகைய விலையில்லா பொருட்கள் வேண்டும்...?

0

 நிச்சயம் விலையில்லா பொருட்கள் வேண்டாமென்று சொல்லவில்லை.  பலர் கிண்டல் செய்திருந்தாலும், நீங்கள் சென்றமுறை அறிவித்து வழங்கிய இலவச ஆடு, மாடு திட்டம் உண்மையில் வரவேற்பிற்குரியது தான்.  நீங்கள் வழங்கிய ஆடுகளால், பல குடும்பங்களின் வாழ்க்கை தரம் முன்னேறி இருக்கிறது, வருவாய் கூடி இருக்கிறது.  இதை, மிகவும் பின் தங்கிய வடக்கு மாவட்டங்களில் நான் கண் கூடாக பார்த்து இருக்கிறேன். 

அது போல தான் மிதிவண்டியும், மடிக்கணினியும். இதனால், பள்ளி இடைநிற்றல் குறைந்து இருக்கிறது. ஆனால், கைப்பேசி எந்த வகையில் மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் என்று நினைக்கிறீர்கள் என்று புரியவில்லை.

நீங்கள் விஷன் 2023 அறிக்கையை வெளியிட்ட போது, அமைதி, வளம், வளர்ச்சி என்றீர்கள்...? இது தான் நீங்கள் குறிப்பிட்ட வளர்ச்சியா...?

மீண்டும் பின்னோக்கி அழைத்து செல்லாதீர்கள்!

பின் குறிப்பு:

இது அனைத்து கட்சிகளுக்குமானது... 

விவசாய கடன் தள்ளுபடி நிச்சயம் பாராட்டுக்குரியது தான். அனைத்து கட்சிகளும் இதை முன் வைத்து இருக்கிறார்கள். ஆனால், விவசாயத்தை இலாபகரமான தொழிலாக மாற்றாமல், மீண்டும் மீண்டும் கடன் அளிப்பது, அதை தள்ளுபடி செய்வதன் மூலம், ஒரு பொது சமூகத்தின் மத்தியில் தொடர்ந்து விவசாயிகளை இழிவு படுத்தி வருகிறீர்கள். நீங்கள் யார் ஆட்சிக்கு வந்தாலும், உங்களது முதன்மையான நோக்கம் விவசாயத்தை இலாபகரமானதாக மாற்றுவது என்பதாகவே இருக்க வேண்டும்.

- மு. நியாஸ் அகமது

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் - ஸ்பெஷல் ஆல்பம்!
Advertisement

MUST READ

Advertisement
[X] Close