Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அம்மா, உன்னிடம் இருந்து கற்க ஒவ்வொரு நாளும் புதிது புதிதாய் ஒரு பாடம்!

அம்மா,

எல்லாரும் சொல்வது மாதிரி நீ தேவதை, கடவுளின் அவதாரம் அப்படி எல்லாம் நான் சொல்ல மாட்டேன். ஏன் என்றால் "அம்மா" என்ற சொல்லே அனைத்திற்கும் மேலானது. உனக்கு ஈடு வேறு எதுவுமே இல்லை.

 

அதை எல்லாம் இந்தக் கடிதத்தில் தெளிவாக சொல்லும் நான், சில நேரங்களில், இல்லை பல நேரங்களில் நீ திட்டும்போது உன் அன்பும், அக்கறையும் புரியாமல் கோபத்தில் பதில் பேசி விடுவேன். ஆனால், அப்பொழுதும் நீ என்னை மன்னித்து விடுவது வினோதமாக உள்ளது. இதுவரை பல முறை "இதுதான் உன்ட நான் பேசுற கடைசி வார்த்தை" எனக் கூறி இருக்கிறாய். ஒவ்வொரு முறையும் தப்பு செய்து விட்டோமே என்று தனியாக அமர்ந்து அழுத நாட்கள் பல. ஏனெனில், என்னை பாதிக்கும் ஒரே ஆயுதம் உன் மௌனம் என நீ அறிந்தாய். பல கெஞ்சல்களுக்குப் பிறகு பேசி விடுவாய். ஒவ்வொரு முறை இப்படி நிகழும் போதும் என்னிடம் ஒரு மாற்றம் உருவாவது நிச்சயம். என்னை "பாரதிக் கண்ட புதுமைப் பெண்ணாக" வளர்க்க நீ நினைக்கவில்லை. பாரதியும் கண்டிராத ஒரு பெண்ணாக நான் மாற வேண்டும் என கனவு காணுகிறாய்.

நான் பிறந்ததில் இருந்து, நான் என்ன உடை அணிய வேண்டும், என்ன சாப்பிட வேண்டும், எப்படி வளர வேண்டும் என ஒவ்வொரு விஷயத்திலும் எனக்காக கனவு கண்ட நீ, காலத்தின் சுழற்சியில் உன் கனவுகளை எங்கோ தொலைத்து விட்டாய். இன்று வரை உன் கனவுகளும் நினைவுகளும் என்னை மையமாக வைத்தே நகர்கின்றன என்பதை நான் அறிவேன். உன் நினைவுகளில் இருக்கும் சுகம் போல வேறு எங்கு இருந்தாலும் கிடைக்காது என்ற காரணத்தினால் நானும் அந்த சுகத்தை அனுபவிக்கிறேன்!

தடுக்கிவிழும் ஒவ்வொரு முறையும் என்னைத் தாங்குவது நிலமாக இருக்காது. உன் கைகளாக இருக்கும். விழுவதின் வலி தெரிந்தால்தான் எழ முடியும் என்ற பாடத்தை எனக்கு கற்பிக்க, சில வேளைகளில் என்னை விழும் வரைப் பார்த்துக் கொண்டு இருந்த பிறகு வந்து கைகொடுப்பாய்.

வாழ்க்கையில் எப்படி வாழ வேண்டும் என்பதை எனக்கு சொல்லிக் கொடுக்காமல், வாழ்ந்து காட்டுகிறாய். உலகமே என்னை எதிர்த்து நின்றாலும், அதை சமாளிக்கும் திறனை நானே அறியாமல் என்னுள் வளர்த்து இருக்கிறாய். எனக்கே தெரியாமல், தவறை தட்டிக் கேட்கும் துணிச்சலையும் ஊட்டி இருக்கிறாய். இதை நான் இப்போது உணர்கிறேன்! உன் கனவுகள் அனைத்தையும் என்னுள் விதைத்து என்னை வளர்த்திருக்கிறாய். இன்று நான் நானல்ல. உன்னுடைய பிம்பமே. நீ எதுவாக இந்த சமுதாயத்தில் மாற நினைத்தியோ அதுவாக இன்று நான் இருக்கிறேன். ஆனால், உன் ஆசைகளை ஒரு நாளும் என்மீது நீ திணித்த ஞாபகம் எனக்கு இல்லை.

 

 

 

வாழ்க்கையில் சரியான நேரத்தில் எனக்கு எனிட் ப்லைடனையும்(Enid Blyton), பாலகுமாரனையும், சுஜாதாவையும் அறிமுகம் செய்து வைத்தாய். நான் படிக்கும் புத்தகம்தான் என்னுடைய ஆளுமைத் திறனை வளர்க்கும் என எனக்கு சொல்லாமல் சொல்லிக் கொடுத்தாய்.

என்னை ஒழுக்கமாகவும் கட்டுப்பாட்டுனும் வளர்க்க நீ கையில் எடுத்த மிகப் பெரிய ஆயுதம், நம்பிக்கை. என்னுடைய வளர்ச்சியின் ஒவ்வொரு நிலையிலும், நான் தடுமாறும்போதும், தடம் மாறும் போதும் என் கையைப் பிடித்து வழிநடத்திக் கொண்டு இருக்கிறாய். ஒரு மனிதனைக் கட்டுப்படுத்துவதற்கு நம்பிக்கையைத் தவிர வேறு எதாலும் முடியாது. என்னைக் கண்மூடித்தனமாக நீ நம்பியதால்தான் என்னவோ உன்னிடம் பொய் சொல்லவே முடியவில்லை!

உன்னைப் பற்றி பேச எனக்கு நேரமும் போதாது, வார்த்தைகளும் காணாது. அதனால், சுருக்கமாக சொல்லி முடிக்கிறேன்! என் வாழ்வின் முதல் காதல், உண்மையான காதல் உன்னுடையது மட்டுமே. உனக்கு நிகர் இந்த உலகில் வேறு எதுவும் இல்லை அம்மா. பெரியாரைப் போல சமத்துவம் பேசுவதிலும் சரி, காமராசரைப் போல கல்வி பேசுவதிலும் சரி, அனைத்தையும் ஆழமாகப் பேசுவதற்கு உன்னிடம் இருந்துதான் கற்றேன். உன்னிடம் இருந்து கற்க ஒவ்வொரு நாளும் புதிது புதிதாய் ஒரு பாடம் தோன்றுகிறது.

ஒரு தந்தை மகளை நோக்கிப் பாடும் பாடலில் ஒரு வரியை உனக்காக சமர்ப்பிக்கிறேன்:
 " உந்தன் கைகள் பிடித்து போகும் வழி அது போதவில்லை இன்னும் வேண்டுமடி".
தவம் ஏதும் செய்யாமல் எனக்கு கிடைத்த இறைவியே, காலம் முழுவதும் உன்னை  சுமக்க, எனக்கு வரம் தா!

இப்படிக்கு உன் செல்ல மகள்...

-ந.ஆசிபா பாத்திமா பாவா
(மாணவப் பத்திரிக்கையாளர்)

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close