Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டாஸ்மாக்குக்கு தேவை தேர்தல் விடுமுறை அல்ல...!

ல்லா செய்திகளையும் போல் அந்த செய்தியையும் ஒரு சொடுக்கில் கடந்து விட முடியாது. ஒரு வகையில் அந்த செய்தி,  அரசு நிர்வாகமே கொடுத்த ஒப்புதல் வாக்குமூலம். ஆம், ஒரு அரசு,  'நாங்கள்தான் வன்முறையைத் தூண்டுகிறோம்' என்று மறைமுகமாக ஒத்துக்கொண்டுள்ளது. அந்த செய்தி இதுதான், “தேர்தலை முன்னிட்டு நான்கு நாட்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து மதுபானக் கடைகளும் மூடப்படும்”.

அதாவது, 'மதுபானக் கடைகள் திறந்திருந்தால், மது அருந்திவிட்டு சிலர் வாக்குச்சாவடிகளில் பிரச்னை செய்வார்கள். அதனால் அசாம்பாவிதங்களை தவிர்க்கும் விதமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நான்கு நாட்களுக்கு கடைகள் மூடப்படும்' என்பதுதான் அந்த நான்கு வரி செய்தியில் அடங்கி உள்ள உட்பொருள். ஒரு தேர்தலைஅமைதியாக நடத்துவதற்கே மதுபானக்கடை இடையூறாக இருக்குமென்று தேர்தல் ஆணையம் கருதும்போது, ஒரு ஆட்சி நிர்வாகத்தை அமைதியாக, செழுமையாக நடத்த மதுபானக்கடைகள் இடையூறாக இருக்காதா...?

எத்தகைய சமூகத்தை நாம் உருவாக்குகிறோம்...?

உங்களுக்கும் எனக்கும் மிகவும் பிடித்தமான பெயர்தான் அவளுக்கு. நான்காம் வகுப்பு படித்து வந்தாள்.  அவளது மழலைத் தமிழை ஊரே ரசிக்கும். பட்டாம்பூச்சி போல் சிறகடித்து திரிந்து வந்தாள். ஒரு நாள் அந்த பட்டாம்பூச்சி மோசமாக சிதைக்கப்பட்டு இறந்து கிடந்தது. காவல் துறை நான்கு பேரை கைது செய்தது. குடித்துவிட்டு அந்த பட்டாம்பூச்சியை சிதைத்தாக தன் முதல் தகவல் அறிக்கையில் எழுதியது. இது ஏதோ ஒரு சிறு கிராமத்தில் நடந்த ஒரு நிகழ்வு அல்ல. தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கிராமங்களிலும் அவ்வப்போது நடக்கும் நிகழ்வு.

குடித்துவிட்டு பெற்ற மகளிடம் தவறாக நடந்து கொண்ட தந்தை, திருச்செங்கோட்டில் மது அருந்திவிட்டு பள்ளிக்கு வந்த  மாணவிகள்,  சேலத்தில் மதுவின் தாக்கத்தில் 80 வயது பாட்டியை பலாத்காரம் செய்த 40 வயது ஆசாமி. இவை எதன் குறியீடு... எதை உணர்த்துகிறது...? ஒரு சமூகம் பண்பாட்டுத் தளத்திலும், ஆரோக்கிய தளத்திலும் சீரழிந்து கொண்டிருக்கிறது என்பதைத்தானே!

தமிழகத்தில் நடக்கும் பெரும்பாலான குற்றச்செயல்களுக்கு காரணமாக, மது இருக்கிறது. நீங்கள் தமிழகத்தில் நடந்த  குற்றச்செயல்களுக்காக போடப்பட்ட முதல் தகவல் அறிக்கையைப் படித்து பார்த்தீர்களானால்,  ‘மது’ அந்த குற்றச்செயலில் முக்கியப் பங்கு வகித்திருப்பதை நாம் உணர முடியும். தமிழகத்தின் நிலை மட்டுமல்ல அது, உலகெங்கும் இதுதான் நிலை.  மதுவும், குற்றமும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள்.

அண்மையில் கேரளாவில் மது தடை சம்பந்தமாக உச்ச நீதிமன்றத்தில் நடந்த  ஒரு வழக்கில், கேரலாளும் கட்சி சட்டமன்ற உறுப்பினர் பிரதாபன் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தில்,  “மதுபான விற்பனை தடை செய்யப்பட்டவுடன், கேரளாவில் குற்ற எண்ணிக்கை நம்பமுடியாத அளவில் குறைந்துள்ளது” என்றார்.

இதுதான் நிதர்சனம். இது நம் ஆட்சியாளர்களுக்கு நன்கு தெரியும். பின் ஏன், மதுபான விற்பனக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறார்கள்...? வருமானம் மட்டும்தான் காரணமா...? இல்லை நிச்சயம் இல்லை. மக்களின் சுயமாக சிந்திக்கும் திறனை, போராட்ட குணத்தை அழிக்க வேண்டும். அப்போதுதான் சுகமாக ஆட்சி செய்ய முடியும்... அதற்கு அவர்கள் கண்டுபிடித்த வழிதான் மதுபான விற்பனை.     

திறமையற்ற நிர்வாகம்:

கடந்த பத்து ஆண்டு (2004 - 2014) காலகட்டத்தில் மட்டும்,  தமிழகத்தில் போலி மதுபானங்களை குடித்து இறந்தவர்களின் எண்ணிக்கை 1509. இது அரசே ஒப்புக் கொண்ட கணக்கு. ஆனால், மதுபானம் விற்பனை தடையில் இருக்கும் குஜராத்தில், இந்த எண்ணிக்கை 843. அதாவது, மது விற்பனையை தடை செய்வதற்கும்,  போலி மதுபானங்கள் பரவுவதற்கும் எந்த தொடர்பும் இல்லை. உண்மையில் நிர்வாகத் திறமை உள்ள ஒரு அரசு நினைத்தால், கள்ளச்சாராய விற்பனையையும், அதனால் ஏற்படும் மரணங்களையும் தடுக்கலாம் என்பதுதான் இந்த புள்ளி விபரம் சொல்லும் செய்தி.


தேசத்தின் உண்மையான சொத்து எது...?

வின்ஸ்டன் சர்ச்சில், “ஆரோக்கியமான குடிமகன்களே தேசத்தின் உண்மையான சொத்து” என்றார்.  தமிழகம் எத்தகைய குடிமகன்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறது என்பதை விரிவாக எழுத தேவையில்லை. இந்தக் கட்டுரையைப் படிக்கும் அனைவருமே அதற்கு சாட்சி. தமிழகத்தில் பிறந்த அல்லது வசிக்க நேர்ந்த அனைவருக்குமே மது குறித்த ஒரு அனுபவம் நிச்சயம் இருக்கும். அவர் வீட்டில் யாராவது மதுவினால் பாதிக்கப்பட்டு இருக்கலாம்,  பள்ளி மாணவர்கள் மது அருந்துவதைக் கண்டு பதைபதைத்து இருக்கலாம் அல்லது குடித்துவிட்டு பொது இடத்தில் அநாகரிகமாக நடந்து கொள்பவர்களை கடந்து வந்திருக்கலாம் அல்லது உங்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள மதுபானக்கடைகளை வேறு இடத்திற்கு மாற்ற சொல்லி நீங்கள் மிக கடுமையாக போராடி இருக்கலாம்.  ஆக, தமிழகத்தில் உள்ள அனைவரும் நிச்சயம் மது அரசியலை கடந்து வந்திருப்போம். 

இனி,' மது கொஞ்சம் கொஞ்சமாக தமிழகத்தை சிதைத்து கொண்டிருக்கிறது' என்று நாம் நிதானமாக எழுத முடியாது. ஆம் கொஞ்சம் கொஞ்சமாக இல்லை, முழுவதுமாக சிதைத்து கொண்டிருக்கிறது. நிச்சயம் குடி,  உடல் சார்ந்த உபாதைகளை மட்டும் கொண்டு வருகிறது என்று நாம் சுருக்கி மதிப்பிட முடியாது. அது பண்பாட்டை, மனித உறவுகளை, மனிதனின் இயல்பான போராட்டக் குணத்தை,  மிக முக்கியமாக அமைதி சூழலை சிதைத்து வருகிறது. இதற்கு ஒரு தீர்வு காணவில்லை என்றால், நிச்சயம் தமிழகத்தின் எதிர்காலம் மிக மோசமான ஒன்றாக இருக்கும்.

தேர்தல் ஆணையத்தின் அந்த ஒரு வரி அறிவிப்புக்கு பின்னால் இந்த உண்மைகள்தான் ஒளிந்து இருக்கிறது. தேர்தலை நடத்தி முடிப்பது ஒரு நிர்வாகத்தின் ஜனநாயகக் கடைமையாக இருக்க முடியாது. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும் வளம், அமைதி, முன்னேற்றம் என்பதை உத்தரவாதப்படுத்துவதே ஜனநாயகத்தின் குறிக்கோளாக இருக்கும்... இருக்க வேண்டும்!

- மு. நியாஸ் அகமது
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close