Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கேரளாவில் நிகழ்ந்தது, தமிழகத்தில் நடக்கக் கூடாது! - புதிய அரசுக்கு ஒரு கோரிக்கை

வள் பெயர் சஹானா. வயது 13. அவள் அந்த பேரழிவு நிகழ்ந்தபோது பிறக்கவில்லை. சொல்லப்போனால், அவளுக்கு அவள் ஊரில் அப்படியொரு மிகப் பெரிய பேரழிவு நிகழ்ந்ததே தெரியாது. இப்போது சொன்னாலும் புரியாது. புரிந்து கொள்ளும் மனநிலை அவளுக்கு இல்லை. அவள் மனநலம் பாதிக்கப்பட்டவள். அதற்குக் காரணம் அவள் பிறப்பதற்கு முன்பே நிகழ்ந்த பேரழிவு.  ஆம், அந்தப் பேரழிவுக்கு எந்த வகையிலும் தொடர்பில்லாத அவள், அந்தப் பேரழிவின் வடுக்களை சுமக்கிறாள். 

அவள் மட்டுமல்ல, அந்தப் பேரழிவிற்கு பின் பிறந்த மூன்றாம் தலைமுறைக்கூட இன்னும் அந்தப் பேரழிவின் வடுக்களைச் சுமக்கிறது. அந்தப் பேரழிவு நிகழ்ந்த இடம் கேரள மாநிலம் ‘காசர்கோடு’. திட்டமிடப்படாத எந்த நவீனமும், விஞ்ஞானமும் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்கான நம் சமகாலத்தில் சாட்சியாக இருக்கும் ஊர். 

அது ஒரு கொடுங்காலம்:

நீங்கள் கேரள மாநிலத்தில் இருக்கும் காசர்கோடு ஊருக்குச் செல்லாதவராக இருக்கலாம்... ஏன்  நீங்கள் அந்த ஊர் பெயரை கேள்விப்படாதவராக  கூட இருக்கலாம். ஆனால், உங்களுக்கும் அந்த ஊருக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கிறது. இன்று நீங்கள் நஞ்சு குறைவான உணவை உண்பதற்கு அந்த ஊர் ஒரு முக்கிய காரணம். ஆம். அந்த ஊர் மட்டும்,  தம் அழுத்தமான எதிர்ப்பை பதிவு செய்யாமல் இருந்திருந்தால், இன்றும் நம் அரசுகள் நமக்கு விஷத்தைதான் அளித்து வந்திருக்கும்.

அது பசுமை புரட்சி அறிமுகமான காலம். ரசாயன உரங்கள், களைக் கொல்லி, பூச்சிக் கொல்லி என்று அனைத்து விஷங்களும் 'வளர்ச்சி' என்ற பெயரில் சந்தையை ஆக்கிரமித்தக் காலம். 'இவை அனைத்தும்  நாட்டின் உற்பத்தியை பெருக்க தேவை, தேசத்தின் வளர்ச்சிக்கு மிக அவசியம்' என்று என்னென்னவோ கற்பிதங்களை நமக்கு நாமே கற்பித்துக் கொண்டு இருந்த காலம். ஒவ்வொரு விவசாயியும், தம் வாழ்வில் மிகப்பெரிய மாற்றம் வரப்போகிறது என்று நம்பிய காலம். இதனால் ஒரு ஊரின் ஆன்மாவே அழியப்போகிறது என்று கனவிலும் நினைத்து பார்க்காத காலம்.

‘70’ களின் மத்தியில், கேரள தோட்டக் கழகம் (Kerala Plantation Corporation) தன் 4,800 ஹெக்டேர் நிலத்தில் உள்ள முந்திரி பயிர்களில் உள்ள பூச்சிகளை அழிப்பதற்காக வான்வழியாக பூச்சிக் கொல்லியான எண்டோசல்பானை தெளிக்கிறது. சுதந்திர இந்தியாவிலேயே முதன்முறையாக வான்வழியாக தெளிக்கப்பட்ட  பூச்சிக் கொல்லி எண்டோசல்பானாகதான்  இருக்கும். முதலில் இது வளர்ச்சி என்று பார்க்கப்பட்டது. முந்திரி செடியில் இருந்த பூச்சிகள் செத்து மடிந்தன. கேரள தோட்ட கழகத்தில் வேலைப் பார்த்த விவசாயிகள் மகிழ்ச்சியில் திளைத்தனர். ஆனால், அந்த மகிழ்ச்சி அதிக காலம் நீடிக்கவில்லை. 

பூச்சி மருந்து வானிலிருந்து தெளிக்கப்பட்ட சில ஆண்டுகளிலேயே அந்த பகுதி நீர்நிலைகளில் இருந்த மீன்கள் செத்து மிதக்க ஆரம்பித்தன. தேனீக்கள் மடிந்தன. பிறகு அப்பகுதி மக்களுக்கு அடிக்கடி தலைவலி, காய்ச்சல் வரத் துவங்கியது. அந்த எளிய மக்கள்,  இதற்கு என்ன காரணம் என்று தெரியாமல் திகைத்து நின்றனர். அவர்களால் பூச்சிக் கொல்லிக்கும் தங்கள் உடல் உபாதைகளுக்கும் உள்ள தொடர்பை இணைத்து பார்த்து புரிந்து கொள்ள முடியவில்லை. முதலில் அதுதான் காரனம் என்று முணுமுணுக்கப்பட்ட போதும், அவர்கள் நம்ப மறுத்தனர். 'நம் அரசு எப்படி நமக்கு தீங்கு செய்யும்...? நிச்சயம் இருக்காது, நம் பிரச்னைகளுக்கு வேறேதோ காரணம்' என்றனர்.  அந்த காலத்தில் பிறந்த குழந்தைகளும் உடல் குறைபாட்டுடன் பிறக்க துவங்கிய பின், இவர்கள் அச்சம் அதிகரித்தது.

பின் ஒரு ஆங்கில ஊடகத்தில்,  இந்த பூச்சிக்கொல்லிதான் அனைத்திற்கும் காரணம் என்று மிக விரிவாக ஒரு கட்டுரை வந்தது. அதே காலக்கட்டத்தில், மருத்துவர் ஒய். எஸ். மோகன்குமார், அந்த மாவட்டத்தை பார்வையிட்டு, பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து, அவர்களை பரிசோதித்து, எண்டோசல்பான்தான் இவர்கள் உடல் உபாதைகளுக்கு காரணம் என்று நிரூபிக்கிறார். அதற்கு பின்னர்தான் மக்கள்,  கேரள தோட்டக் கழகத்தை சந்தேக கண்ணுடன் பார்க்க துவங்கினர். உடனடியாக, 'பூச்சிக்கொல்லிகளை வான் வழியாக அடிப்பதை நிறுத்துங்கள்' என்று முறையிட்டனர். ஆனால், அவர்களது கோரிக்கையை தோட்டக் கழகம் மதிக்கவே இல்லை. இது அந்த மக்களை கோபமூட்டியது.

மக்கள் தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தினார்கள். கேரள தோட்டக் கழகமும் பூச்சிக் கொல்லி அடிப்பதை அதி தீவிரப்படுத்தியது. 1998 -ம் ஆண்டு செயற்பாட்டாளர் லீலாகுமாரி,  சட்டரீதியான போராட்டத்தை முன்னெடுத்தார். அரசும் இது குறித்து ஆராய  நிபுணர் குழுவை அமைத்தது. பல சட்டப் போராட்டங்களுக்குப் பின் 2000 ம் ஆண்டு, எண்டோசல்பானுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.

எண்டோசல்பான் பற்றியும், அதன் விளைவுகளையும், பின் அதற்கு விதிக்கப்பட்ட தடையையும்  நான் நான்கு பத்தியில் சுருக்கமாக எழுதி இருக்கலாம். ஆனால், அவர்கள் வலி பெரிது, போராட்டம் பெரிது. இந்த எண்டோசல்பானால் மட்டும் அந்தப் பகுதியில் பாதிக்கப்பட்டவர்கள் 4122 பேர். 

அரசு தெரிந்தே செய்தது:

எண்டோசல்பானால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ‘எண்டோசல்பான் பீடித்த ஜனகீயா முன்னணி’ என்ற அமைப்பை ஏற்படுத்தி, கடந்த பல ஆண்டுகளாக போராடி வருகிறார் குஞ்சி கிருஷ்ணன். அவருடனான உரையாடலிலிருந்து...எண்டோசல்பான் பிரச்னை எத்தகைய தாக்கத்தை உங்கள் பகுதியில் ஏற்படுத்தி உள்ளது...?

எண்டோசல்பான் உடல் சார்ந்த பிரச்னையை மட்டும் கொண்டு வரவில்லை. அது எங்கள் ஊரின் ஆன்மாவையே அழித்துவிட்டது. ஒவ்வொரு குடும்பத்திலும் இந்த எண்டோசல்பானின் தழும்புகள் இருக்கும். நீங்கள் பூச்சிக் கொல்லி விவகாரத்துகளை கேள்விப்பட்டு இருக்கிறீர்களா...? அது எங்கள் பகுதியில் அதிகம்.

பூச்சிக் கொல்லி விவாகரத்தா...?

ஆம். எண்டோசல்பானால் பெரிதும் பாதிக்கப்பட்டது குழந்தைகள்தான். மன வளர்ச்சி குன்றி, உடல் சிதைத்து, பார்வையற்று பல குழந்தைகள் பிறந்தன. அந்த குழந்தைகளை வளர்க்க விரும்பாமல் பல ஆண்கள் தங்கள் குடும்பத்தை நிர்கதியாக விட்டு சென்று விட்டனர்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு உரிய இழப்பீடு தந்துவிட்டதா...?

இல்லை. ஏறத்தாழ 20 ஆண்டுகளாகப் போராடி வருகிறோம். ஆனால், இன்னும்  பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்களுக்கு உரிய இழப்பீடு கிடைக்கவில்லை. இதுவரை கிடைத்தது கூட அரசு தானாக முன் வந்து வழங்கியது இல்லை. கடும் போராட்டத்திற்கு பின் கிடைத்தவை. ஆனால், தேர்தல் காலத்தில் அனைத்து கட்சிகளும், 'எண்டோசல்பானால் பாதிக்கப்பட்ட்வர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும்' என்று சொல்லும். ஆனால், எது அவர்களை தடுக்கிறது என்று தெரியவில்லை.
 
உங்கள் மக்களின் போராட்டம்தான் எண்டோசல்பானை முற்றிலுமாக தடை செய்ய காரணமாக அமைந்தது. பூச்சிக் கொல்லிகள் குறித்த ஒரு புரிதலை உலகிற்கு உண்டாக்கியது, அரசு தன் கொள்கையில் மாற்றம் கொண்டு வர காரணமாக அமைந்தது.  ஆனால், உங்கள் பகுதியில் நடந்தது ஒரு விபத்துதானே... இதற்கு எப்படி அரசை குறை சொல்ல முடியும்..?

எது விபத்து...? விபத்துதான் என்பதற்காக நீங்கள் வைத்திருக்கும் அளவுகோல் என்ன...?  ஒரு விஷத்தை, அரசு பூச்சி மருந்து என்று சொல்லி, மக்கள் கையில் திணித்ததே அது விபத்தா... உண்மையாக அப்போது பூச்சிக் கொல்லி, விஷம் என்ற பதத்தை பயன்படுத்தி இருந்தால், துவக்கத்திலேயே இதை தெளிப்பதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து இருப்பார்கள். ஆனால், அரசு மருந்து என்றது. மெத்த படித்த விஞ்ஞானிகளுக்கு இது விஷம் என்று தெரியும் இல்லையா...? பின் ஏன் வான்வழியாக தெளித்தார்கள் ? வான்வழியாக தூவினால் நீர்நிலைகளை இது நஞ்சாக்கும் என்று அவர்களுக்கு தெரியாதா...? சரி ஒரு வாதத்திற்கு தெரியாது என்றே வைத்துக் கொள்வோம். விளைவுகள் தெரிந்த உடனாவது, வான் வழியாக தெளிப்பதை நிறுத்தினார்களா...? இல்லைதானே...   இது விபத்து அல்ல... திட்டமிட்ட பேரழிவு... அரசு இதை தெரிந்தே எங்களுக்கு செய்து இருக்கிறது.    

உங்கள் வலி புரிகிறது... ஆனால் வளர்ச்சிக்காக சில விஷயங்களை முன்னெடுக்கும்போது, எதிர்பாராத எதிர்மறையான விளைவுகளும் இருக்கும்தானே...?

ஒரு புது விஷயத்தை முன் வைக்கும் போது அனைத்து பரிமாணங்களையும் ஆராய வேண்டும். அரசு அதை அப்போது செய்யவில்லை...நீதிமன்றத்தில் எண்டோசல்பான் தொடர்பான வழக்கு நடந்த போது,  அரசு முன் வைத்த வாதம் என்ன தெரியுமா...? 'கிடங்குகளில் இன்னும் பல்லாயிரம் லிட்டர் எண்டோசல்பான் மிச்சம் இருக்கிறது. அதனால், அது தீரும் வரை எண்டோசல்பானுக்கு தடை விதிக்க கூடாது' என்பதுதான். அதாவது, அரசுக்கு மக்கள் நலனை விட லாபம்தான் முக்கியமென்றால் என்ன செய்வது..? இது எப்படி எதிர்மறையான விளைவுகள் ஆகும்.


உங்கள் மாநிலத்தில் நடக்கும் கூடங்குளம் போராட்டத்தையும் நாங்கள் கவனித்து வருகிறோம். அந்த மக்களின் போராட்டம் மிக நியாயமானது. நேற்று எங்களுக்கு நடந்தது நாளை அவர்களுக்கு நடக்காது என்று என்ன நிச்சயம்...?

ஏன் ஆரம்பத்திலிருந்தே உங்களுக்கு இழப்பீடு வழங்குவதில் அரசு சுணக்கம் காட்டி வருகிறது...?

அது பன்னாட்டு உர, பூச்சிக் கொல்லி நிறுவனங்கள் இந்தியாவை முற்றுகையிட்ட காலம். எங்களுக்கு இழப்பீட்டை துவக்கத்திலேயே வழங்கி இருந்தால், தங்களுக்கும் இது போன்ற நிலை நாளை ஏற்பட்டு விடுமோ என்று அந்த நிறுவனங்கள் அஞ்சி இருக்கும். அவர்களின் நலனைக் காக்கதான், இத்தனை நாள் இழப்பீடு வழங்குவதை அரசு  இழுத்தடித்து வருகிறது என்று நினைக்கிறேன்.

அங்கிருந்து கிளம்பும் போது, எண்டோசல்பானால் பிறவியிலேயே பார்வையிழந்த அம்பலத்ரா முனிஷாவை சந்தித்தோம்.

அவர் மிகத் தீவிரமாக பூச்சிக்கொல்லி பயன்பாட்டிற்கு எதிராகப் போராடி வருபவர். அவர், “இன்றும் எங்கள் ஊரில் பல குழந்தைகள் முடமாக, மன வளர்ச்சி குன்றிப் பிறக்கின்றன. ஏன் எங்கள் அரசு, இதை எங்களுக்கு பரிசளித்தது என்ற எண்ணம் ஒவ்வொரு நாளும் வரும். ஆனால், இது எங்கள் அரசு மட்டுமல்ல... திட்டமிடப்படாத வளர்ச்சியை முன் முன்வைக்கும் ஒவ்வொரு அரசும்,  தன் குடிகளுக்கு இதைதான் செய்து வருகிறது. இதை எங்கள் பிரச்னையாக நாங்கள் குறுக்கி பார்க்க விரும்பவில்லை...”
 
இப்போது ஏன் இந்த கட்டுரை...?

எண்டோசல்பான் தடை செய்யப்பட்டுவிட்டது. ஆனால், இன்றும் சந்தையில்,  அதுவும் நம் தமிழக சந்தையில் வெவ்வேறு பெயரில் ஆபத்தான பூச்சிக் கொல்லிகள் உலா வருகின்றன.

மீண்டும் மீண்டும் வளர்ச்சி என்ற பெயரில் நம்மை ஏமாற்றிக் கொள்ளாமல், விஷங்கள் இல்லாத விவசாயத்தை முன்னெடுப்பதுதான் மக்கள் நலனில் அக்கறை கொண்ட அரசின் கடமையாக இருக்க வேண்டும். தமிழகத்தில் யார் ஆட்சி அமைத்தாலும் இதைதான் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தவே காசர்கோட்டை நினைவு கூர்ந்துள்ளோம்.

அந்த அரசு அந்த மக்களுக்கு செய்ததை... எந்நாளும் எங்கள் அரசு எங்களுக்கு செய்யாது என்று நம்புகிறோம்!

- மு.நியாஸ் அகமது

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close