Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

திருப்பூரில் பறிமுதலான ரூ. 570 கோடி: தேர்தல் ஆணையத்தின் சந்தேகமும் தீராத மர்மங்களும்!

திருப்பூரில் பிடிபட்ட ரூ.570 கோடிக்கு இதுவரை யாரும் உரிமை கோரவில்லை என்றும், இது முதலிலேயே சந்தேகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது என்றும் தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள நிலையில்,  இதன் பின்னணியில் பல மர்மங்கள் புதைந்து கிடைக்கின்றதோ என சந்தேகங்கள் கிளம்பி உள்ளன.

கோவையில் இருந்து சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இன்று அதிகாலை 1 மணியளவில் 3 கன்டெய்னர் லாரிகளும், அதற்கு முன்னும் பின்னும் 3 இன்னோவா கார்களும் என மொத்தம் 6 வாகனங்கள் அடுத்தடுத்து வந்துள்ளன. இதில் சந்தேகமடைந்த தேர்தல் அதிகாரி விஜயபாஸ்கர் தலைமையிலான அதிகாரிகள், உடனே அந்த வாகனங்களை நிறுத்தி விசாரித்திருக்கின்றனர்.

அப்போது, கன்டெய்னர்கள் முழுக்க பணம் இருப்பதாகவும், அந்த பணம் கோவை பாரத ஸ்டேட் வங்கியில் இருந்து விசாகப்பட்டினம் பாரத ஸ்டேட் வங்கிக்கு கொண்டு செல்லப்படுவதாகவும் உடன் வந்தவர்கள் தெரிவித்திருக்கின்றனர். கன்டெய்னர் வாகனத்திலும், இன்னோவா காரிலும் ஒவ்வொரு ஆந்திர மாநில போலீசாரும் இருந்துள்ளனர். ஆனால் அந்த போலீசார், காவல்துறையின் சீருடை அணிந்திருக்கவில்லை. ஆந்திரா மாநில எல்லைக்கு சென்ற பின் சீருடை அணிந்து கொள்ளலாம் என இருந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதில் சந்தேகமடைந்த தேர்தல் அதிகாரிகள், 3 கண்டெய்னர் லாரிகளையும் பறிமுதல் செய்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு, மத்திய பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணிக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். இந்த கன்டெய்னர்  லாரிகளில் மொத்தம் 570 கோடி ரூபாய் இருப்பதாக செய்திகள் வெளியானது. 

இது தொடர்பாக தமிழக தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானியிடம் கேட்டபோது, ''அந்த மூன்று கன்டெய்னர் லாரிகளில் 570 கோடி ரூபாய் இருப்பதாக வெளியான தகவல் உறுதி செய்யப்படவில்லை. கன்டெய்னர் கள் திறந்து சோதிக்கப்படவில்லை. அவர்களிடம் உள்ள ஆவணங்களின் அடிப்படையில், அந்த கன்டெய்னர் களில் 195 கோடி ரூபாய் இருப்பதாக தெரிகிறது.

தேர்தல் பார்வையாளர்கள், அதிகாரிகள், வருமான வரித்துறையினர் ஆகியோர் இது குறித்து தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.முழுமையான விசாரணைக்கு பின்னர் ஆவணங்கள் இருந்தால் பணம் விடுவிக்கப்படும்" என்று கூறி இருந்தார்.

இந்நிலையில், டெல்லியில் இன்று மாலை இது தொடர்பாக பேசிய தேர்தல் ஆணைய அதிகாரி, திருப்பூரில் 570 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது முதலிலேயே சந்தேகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது என்றும், இது சந்தேகத்திற்குரிய பணமாக காட்சியளிக்கிறது என்றும் தெரிவித்தார்.

மேலும் இது தொடர்பாக இதுவரை எந்த ஒரு ஏஜென்சியோ அல்லது நிறுவனமோ இந்த பணத்திற்கு உரிமை கோரவில்லை என்றும், வருமான வரித்துறை அனைத்து ஏஜென்சிகளையும் இதுகுறித்து முறையான விசாரணையை தொடங்குமாறு கேட்டுக்கொண்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.

தலைமை தேர்தல் ஆணையம் தரப்பில் இவ்வாறு சந்தேகம் தெரிவிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்திய உடன், எஸ்பிஐ வங்கி தரப்பில் மாலையில் அவசரமாக விளக்கம் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த அந்த வங்கியின் தலைமை பொது மேலாளர் ரமேஷ் பாபு, " ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளின் படி பணம் எடுத்து செல்லப்படுவது வழக்கமானதுதான். விதிமுறைகளை மீறி எந்தவித பணப்பரிமாற்றமும் நடக்கவில்லை. உரிய ஆவணங்களை கொடுத்து அந்த பணம் பெற்றுக்கொள்ளப்படும்" என தெரிவித்தார். 

மேலும் இது தொடர்பான ஆவணங்களும் எஸ்பிஐ வங்கி தரப்பில் வெளியிடப்பட்டன.

ஆனால் எஸ்பிஐ வங்கியின் இந்த விளக்கத்தை ஏற்க மறுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்த பண பறிமுதல் விவகாரம் மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது என்றும், இதன் பின்னணியில் பல மர்மங்கள் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய அவர், " இவ்வளவு பெரிய தொகை கொண்டு செல்லப்படும்போது,  வங்கி அதிகாரி ஒருவர் கூட உடன் செல்லாதாது ஏன்? உரிய ஆவணங்கள் இல்லாமல் இவ்வளவு பெரிய தொகையை எப்படி கொண்டு சென்றார்கள். பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்தின் ஆர்.சி. எண்ணுக்கும், வாகனத்தில் எழுதப்பட்டுள்ள எண்ணிற்கும் வித்தியாசம் உள்ளது. கொண்டு செல்லப்பட்டது வங்கி பணம்தான் என்றால், பறக்கும் படை அதிகாரிகள் சோதனைக்காக வாகனத்தை நிறுத்தியபோது, அதில் இருந்தவர்கள் தப்பி ஓட முயற்சித்தது ஏன்?

250 கோடி ரூபாய் வரை கொண்டு செல்லலாம் என வங்கி அதிகாரிகள் சொல்லும் வாதம் உண்மையானது என்றால், அதற்கான உரிய ஆவணங்களை காண்பிக்க இவ்வளவு தாமதம் ஏன்? இதன் பின்னணியில் உள்ள மர்மத்தை கொண்டு வரும் கடமை ரிசர்வ் வங்கிக்கு உள்ளது. பறக்கும் படை அதிகாரிகளை தவிர்த்து, ரிசர்வ் வங்கியே உயர்மட்ட கமிட்டி ஒன்றை அமைத்து உண்மைகளை வெளிக்கொண்டு வரவேண்டும்" என்று  வலியுறுத்தினார்.

கடந்த சில மாதங்களுக்கு முன், சென்னையில் பல முக்கிய தியேட்டர்கள் குறிப்பிட்ட முக்கிய புள்ளிக்காக வாங்கப்பட்டதாக சில கட்சிகள் குற்றம் சாட்டி இருந்தன. அது தொடர்பான செய்திகள் அப்போது ஊடகங்களிலும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தன. இந்நிலையில் அந்த தியேட்டர்களை வாங்குவதற்கு, கோவையில் உள்ள சில வங்கிகளில்தான் கடன் வாங்கப்பட்டதாக அப்போது ஆவணங்கள் காட்டப்பட்டதாக ஒரு தகவல் வெளியாகி இருந்தது.

மேலும் அரசியல் புள்ளிகள் மற்றும் பிசினஸ் பெரும் புள்ளிகள், தங்களது மெகா பண பரிவர்த்தனைகளுக்கு என்றே தங்களுக்கு சாதகமான சில வங்கிகளை வைத்துக்கொள்வது உண்டு. அவற்றின் உதவியுடனேயே தங்களது பெரும் முதலீடுகளை உரிய விதத்தில் மேற்கொள்வார்கள் அல்லது இடமாற்றம் செய்வார்கள். அந்த வகையில் தற்போது தேர்தலுக்கு இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில், தேர்தல் முடிவுகள் எப்படி வேண்டுமானாலும் அமையலாம் என்பதால், வெளியில் தெரிவிக்க முடியாத பெரும் முதலீடு பணத்தை இடமாற்றம் செய்ய முடிவெடுத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும், இதற்கு தேவையான பாதுகாப்பு மற்றும் இதர உதவிகளை மரியாதைக்குரிய அந்த புள்ளிதான் செய்து கொடுத்திருப்பதாகவும், மொத்தம் 8 கன்டெய்னர்களில் 5 கன்டெய்னர்கள் ஏற்கனவே ஆந்திரா சென்று சேர்ந்துவிட்டதாகவும் சொல்லி அதிரவைக்கிறார் இருதரப்பின் நடவடிக்கைகளை நன்கு அறிந்த வங்கி அதிகாரி ஒருவர். 

அதே சமயம் இதுகுறித்து, நம்மிடம் பேசிய ஸ்டேட் வங்கி அதிகாரி ஒருவர், " அலுவல் ரீதியான விளக்கத்தை மட்டுமே எங்களால் தர முடியும். கன்டெய்னர்களின் அனுப்பப்பட்ட பணம் ரிசர்வ் வங்கிக்குச் சொந்தமானது. ஒவ்வொரு முறையும் ஸ்டேட் வங்கிகளில் கூடுதலாக பணம் இருந்தால், எந்த ஊரில் தேவை இருக்கிறதோ அங்கு அனுப்புவோம். அதன் அடிப்படையில் ஒரு வாரத்திற்கு முன்பே, 'ஐதராபாத்துக்கு பணம் அனுப்ப வேண்டும்' என ரிசர்வ் வங்கியில் இருந்து தகவல் வந்தது. 'தேர்தல் நடப்பதால் அனுப்ப முடியாது' எனத் தெரிவித்தோம். ஆனாலும், 'பணத்தை அனுப்பியே ஆக வேண்டும்' என அதிகாரிகள் கட்டாயப்படுத்தியால்தான், ஐதராபாத்துக்கு பணம் அனுப்பினோம்" என்றார்


உண்மை என்னவோ...எல்லாம் அந்த ஏழுமலையானுக்கே வெளிச்சம்!

-ஆ. விஜயானந்த்
 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close