Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தேர்வு முடிவுகள்... பெற்றோர்கள் கவனத்துக்கு சில விஷயங்கள்!

 ன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவு வெளியாகிவிட்டது... தேர்வில் முதல் மதிப்பெண் எடுத்தவர்களின் கனவுகளை பெரும்பாலும் ஊடகங்களே நிரப்பிக் கொள்ளும், ‘அவர் மருத்துவர் ஆக விரும்புகிறார்... அவர் மாவட்ட ஆட்சியர் ஆக விரும்புகிறார்...’ என்று  மாணவர்களின் எதிர்காலத்தை,  அவர்களை சுற்றி நின்று கொண்டிருப்பவர்கள் நிர்ணயம் செய்வார்கள்.

குழந்தைகளும்,  தங்கள் பெற்றோர்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்த திருப்தியுடன் பாவமாக நின்று கொண்டிருப்பார்கள். இது வழமையான நிகழ்வுதான். ஆனால், இதில் கொடுமையான நிகழ்வு என்னவென்றால், மதிப்பெண் குறைந்தவர்கள் அல்லது தேர்வில் தோல்வியுற்றவர்கள், உன்னதமான வாழ்வின் மீது அனைத்து நம்பிக்கைகளையும் இழந்து, இதுதான் ‘அடையாளங்கள்’ என்று கற்பிக்கப்பட்ட அனைத்தையும் இழந்து நின்று கொண்டிருப்பார்கள். மதிப்பெண் மட்டும்தான் வாழ்வு என்று நம்பும் சமூகம் அவன் மீது மேலும் மேலும் அழுத்தங்களை திணிக்கும். வாழ்வு சூன்யமாகி விட்டது என்று நம்ப வைக்கும்.  ஏன் அவனோ/ அவளோ தன்னைத் தானே மாய்த்துக் கொள்ளக் கூட தூண்டும். இப்போதுதான் அந்த மாணவனுக்கு பள்ளியின், ஆசிரியரின், பெற்றோரின் அரவணைப்பு தேவைப்படுகிறது...

'கல்வி, வாழ்விற்கு நல்ல ஊன்று கோல்' என்றாலும், இங்கு அனைவரும் சுயமான கால்களுடன் பிறந்தவர்கள் என்ற நினைவூட்டவேண்டியது, இப்போது அந்தக் குழந்தைகளின் எதிர்காலத்தின் மீது அக்கறை கொண்ட அனைவரின் கடமை.

வெற்றியாளர்கள்  படுதோல்விகளை சந்தித்தவர்கள்:

இது வழக்கமான் ஆறுதல் வார்த்தைகள்தான் என்றாலும், இதில் உண்மையில்லாமலும் இல்லை.  பெரும்பாலான வெற்றியாளர்கள் தங்கள் இளமை காலத்தில் படுதோல்விகளை சந்தித்தவர்கள்.ஆல்பர்ட் என்ஸ்டீன்:

இன்று மேதை என்ற வார்த்தைக்கு அர்த்தமாக பார்க்கப்படும் ஆல்பர்ட் என்ஸ்டீன், தன் இளமை காலத்தில் முட்டாளாக பார்க்கப்பட்டவர்.  நான்கு வயது வரை அவருக்கு பேச்சு வரவில்லை. ஏழு வயது வரை எதையும் வாசிக்க முடியாமல் திணறி இருக்கிறார். பள்ளி நிர்வாகம் இவருக்கு கல்வியளிப்பது சமூகத்திற்கு எவ்விதத்திலும் பயன் தராது என்று வெளியே அனுப்பியது. ஆனால் இன்று...?

சார்லஸ் டார்வீன்:

டார்வீன்,  தன் இளமை காலத்தில் சோம்பேறி என்றே அனைவராலும் அழைக்கப்பட்டார். தன் சோம்பேறி தனத்திற்காக பள்ளி நிர்வாகத்திடமும் , அப்பாவிடமும் கடும் தண்டனைகளையும் பெற்று இருக்கிறார்.

ஐசக் நியூட்டன்:

பள்ளி  காலத்தில் படுதோல்விகளை சந்தித்தவர் ஐசக் நியூட்டன். பள்ளி படிப்பு வராததால், தங்கள் பூர்வீக பண்ணையை கவனித்துக் கொள்ள அவர் பணிக்கப்பட்டார். ஆனால், அதிலும் தோல்வியை சந்தித்தவர் அவர்.

தாமஸ் எடிசன்:

தாமஸ் எடிசனும் இதற்கு விதிவிலக்கல்ல. பள்ளி காலத்தில் எதற்கும் லாயக்கற்றவர் என்றே அடையாளம் காணப்பட்டவர் அவர். ஒரு அறிவியலாளராக, மோசமான 1000 தோல்விகளுக்கு பின்னரே மின்சார விளக்கை கண்டுபிடித்தார்.

வின்ஸ்டன் சர்ச்சில்:

போர் காலத்தில் பிரிட்டனை வழிநடத்திய வின்ஸ்டன், தனது ஆறாம் வகுப்பில் தோல்வியுற்றவர் என்றால் நம்ப முடிகிறதா...? ஆம். மோசமான தோல்விகளுக்கு பின்னரே அவர் சிகரம் தொட்டார்.
 
இவர்கள் மட்டுமல்ல, ஹாலிவுட் இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பர்க், ஹாரி பாட்டர் நாவலை எழுதிய ஜே.கி ரவுலிங் என்று உலக அளவில் இந்த பட்டியல் மிக நீளம். நமக்கு இந்திய அளவிலும் நடிகர் கமல் துவங்கி, பல முன்னுதாரணங்கள் இருக்கின்றன.

இவை வெற்று சமாதானங்கள் அல்ல:

இவை வெற்று சமாதானங்கள் அல்ல. இதுதான் நிசர்சனமும் கூட.  நாம் இயல்பாக குழந்தைகளுக்கு என்ன வருகிறதோ, அதை மெருகேற்ற உதவி புரியாமல், சந்தைக்கு என்ன தேவையோ அதை திணிக்க முயல்கிறோம். சந்தை நிலை இல்லாதது, அது காலத்திற்கு ஏற்றார் போல் மாறும். அதற்கு ஏற்றார் போல் தம் பிள்ளைகள் ஆட வேண்டும் என்று நினைப்பது முட்டாள் தனம் மட்டும் அல்ல. நிலையான வெற்றிக்கு உகந்ததும் அல்ல.  ஆம். உங்கள் பிள்ளைகள் உண்மையாக வாழ்வில் வெற்றி பெற வேண்டுமென்று விரும்புவீர்களாயின், அவர்கள் பறவைகள் என்று உணருங்கள். அவர்களது சிறகுகளை வெட்டி ஓட்டப்பந்தயத்தில் ஓட விடாதீர்கள்.

லிங்கனிடமிருந்து பயிலுங்கள்:

அமெரிக்க ஜனாதிபதி ஆப்ரஹாம் லிங்கன்,  தனது மகன் படித்துக் கொண்டிருந்த பள்ளித்தலைமை ஆசிரியருக்கு எழுதிய கடிதம்,  கல்வி குறித்து பல புரிதல்களை ஏற்படுத்தக் கூடியது.

அதில் அவர், “என் மகனுக்கு... தோல்வியிலிருந்து படிப்பினை பெறவும் வெற்றியை அனுபவிக்கவும் கற்றுக் கொடுங்கள், பொறாமையில் இருந்து விலகி நிற்க, அவனுக்குப் பயிற்றுவியுங்கள். ஆரவாரமில்லாமல் அமைதியாக இருந்தால் வாழ்வு இன்பத்தைத் தரும் என்று உணர்த்துங்கள். புத்தகங்களில் பொதிந்துள்ள அற்புதங்களை அவனுக்கு சொல்லி கொடுங்கள். அதே சமயம் நீலவானில் சிறகடித்துப் பறக்கும் பறவைகளின் புதிரையும், சூரிய ஒளியில் கண்சிமிட்டும் தேனீக்களின் சுறுசுறுப்பையும் பச்சைப்பசேல் என்ற மலைப்பரபில்  விரிந்து பரந்திருக்கும் பூக்களின் மலர்ச்சியையும்  ரசிக்க, சிந்திக்க அமைதியான மனநிலையை அவனுக்கு அளியுங்கள்...

பள்ளியில் ஏமாற்றுவதைவிட, தோல்வி அடைவது பல மடங்கு கண்ணியமானது என்பதை அவனுக்கு உணர்த்துங்கள். மற்றவர்கள் அனைவரும் தவறு என்று தகிடுதத்தம் செய்தாலும் தனது எண்ணங்கள் சரியானவை என்று உறுதி கொள்ளும் அளவுக்கு அவனுக்கு தன்னம்பிக்கை ஊட்டுங்கள்...

குறிப்பாக, தன் மீது அபரிமித நம்பிக்கை வைத்துக் கொண்டிருக்க அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்; அப்போதுதான் மனிதகுலம் மீது அவன் அபரிமித நம்பிக்கை கொண்டிருப்பான்." என்று எழுதினார்.  
 
ஆனால், இப்போது வணிகமயமான கல்வி சூழலில், ஆசிரியருக்கும் மாணவருக்கும் எந்த உணர்வுபூர்வமான பந்தமும் இல்லாதபோது, இத்தகைய கடிதத்தை நாம் எழுத முடியாது. ஆனால்,  தங்களது பிள்ளைகள் மீது உண்மையாக பாசமும், அக்கறையும் இருக்குமாயின், பெற்றோர்கள் லிங்கன் எழுதியதைதான் செய்ய வேண்டும்.

தேர்வு தோல்விகள், வாழ்கை மீதான குழந்தைகளின் நம்பிக்கைகளை எக்காரணம் கொண்டும் சிதைத்துவிட அனுமதிக்கக்கூடாது.

- மு. நியாஸ் அகமது
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close