Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சென்னையில் கனமழை என்றால் மனம் பதறுவது ஏன்...?

யற்கை மழை, செயற்கை பிழை எனப் பெரும் பேரிடராகவும் அமைந்த டிசம்பர் மாத சென்னை மழை உண்டாக்கிய விளைவுகளால், சென்னைவாசிகள் அதிகம் அச்சப்படும் வார்த்தையாக 'மழை' ஆகிவிட்டது. வரலாற்றை ஒப்பிட்டு பார்த்தால் நேற்று இரவு பெய்ததது மெலிதான் தூறல்தான். ஆனால், அதற்கே தெருவெல்லாம் தண்ணீர் தேங்கி நிற்கிறது. கோடை வெயிலுக்கு நாம் இதமான மழை வேண்டுமென்று எதிர்பார்க்கிறோம். ஆனால், அப்படி மழை பெய்தால் அதை வரவேற்க தயாராக இருக்கிறோமா...?

தண்டனைகள் தவறுகளை உணர்வதற்கும், திருத்தி கொள்வதற்கும்தான். டிசம்பர் மழை அப்படிப்பட்ட தண்டனைதான். ஆனால், அதிலிருந்து நாம் கற்றுக் கொண்டது பூஜ்யம்தான்.  மீண்டும் மீண்டும் பூமியை மாசுபடுத்தி வருகிறோம். தன்னைத்தானே புதுப்பித்துக் கொண்ட கூவத்தை, மூன்று நாட்களில் மீண்டும் மாசாக்கினோம். கழிமுகங்களில் மாநகர கழிவுகள் மட்டுமே நிற்கிறது.  இது எதைப் பற்றியும் கவலை இல்லாமல் நம் அன்றாட பணிகளில் மூழ்கிவிட்டோம்.

பெருமழைக்கான வாய்ப்பிருக்கிறது

தமிழகத்தின் வெதர்மேன் (Weatherman) என்று அழைக்கப்படும் பிரதீப் ஜான், மீண்டும் நல்ல மழைக்கு வாய்ப்பிருக்கிறது என்று எச்சரித்துள்ளார் (கோடை மழை மகிழ வேண்டிய ஒன்று. ஆனால் அதையே எச்சரிக்கை என்று குறிப்பிட வேண்டி இருக்கிறது). அவர் தன் முகநூல் பக்கத்தில், 'மீண்டும் நல்ல மழைக்கு வாய்ப்பிருக்கிறது. பத்திரமாக இருந்து கொள்ளுங்கள்' என்று குறிப்பிட்டுள்ளார். நகரத்தில் இப்போது மழை ஓய்ந்தது போல் இருந்தாலும், மீண்டும் மழை வருவதற்கான வாய்ப்புகள்  அதிகம் என்று குறிப்பிட்டுள்ளார்.
 

சென்னை மழையிலிருந்து நாம் கற்றுக் கொண்ட பாடம் என்ன?

இத்தகைய சூழ்நிலையில் பேரிழப்புகளை உண்டாக்கிய சென்னை மழையிலிருந்து நாம் கற்றுக் கொண்ட பாடம் என்ன?அண்மையில் 'நீர்வழி'  என்ற அமைப்பு, 2015 சென்னை பெருமழை குறித்த குடிமக்கள் சாசனத்தை வெளியிட்டது.

அதில்,  சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவன பேராசிரியர் ஜனகராஜன்,  " சென்னை நகரம், பெருநகரம், காஞ்சிபுரம், திருவள்ளூர் பகுதிகளில் உள்ள கோயில் குளங்கள், பாசனக் குளங்கள் உள்ளிட்ட நீர் தேக்கங்கள் குறித்த ஒரு முழுமையான கணக்கெடுப்பை மேற்கொண்டு, அதில் தூர்ந்து போய் இருக்கும் நீர் நிலைகளை புதுப்பிக்க வேண்டும். இந்தப் பகுதியில் இருக்கும் ஆறுகள், ஓடைகள்,  வடிகால் அமைப்புகள் ஆகியவை குறித்த வரைபடங்களை உருவாக்க வேண்டும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் முழுவதையும் சூழலியல் ரீதியாக, எளிதில் பாதிக்கப்படக்கூடிய பிராந்தியம் என அறிவிக்க வேண்டியது மிகமிக முக்கியம். மாபெரும் நீர்வழிப் பாதையாக இந்தப் பிராந்தியத்தைக் குறிக்க வேண்டும். இங்கிருக்கும் நீர் நிலைகளையும் வெள்ளச் சமவெளிகளையும் சட்டவிரோத ஆக்கிரமிப்பிலிருந்து பாதுகாக்க வேண்டும்" என்பது உள்ளிட்ட சில  பரிந்துரைகளை முன்மொழிந்து இருந்தார்.

ஆனால், சென்னை மழை வெள்ளத்தை ஒரு தற்காலிக பிரச்னையாக மட்டும் பார்த்த அரசு, அதற்கு நிவாரணம் வழங்குவது மட்டும்தான் தன் கடமை என்பதோடு நிறுத்திக் கொண்டது. நிரந்தர தீர்வை தேட அது முன் வரவில்லை என்பதுதான் வெள்ளத்தை விட பெருஞ்சோகம்.

புதிதாக எந்த அரசு பொறுப்பேற்றாலும், அவர்கள் உடனடியாக செய்ய வேண்டியது, இந்த பரிந்துரைகளை நிறைவேற்றுவதாகத்தான் இருக்க வேண்டும்.

- மு. நியாஸ் அகமது


 

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ