Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மழையில் மூழ்கிய 2 ஆயிரம் கோடி ஊழல்! -அம்பலப்படுத்தும் அரசு பொறியாளர்கள்

" டாக்டர் மட்டும்தான் நோயாளிக்கு சிகிச்சை அளிக்க முடியும். கோர்ட்டில் வக்கீல்தான் வாதாட வேண்டும். பொறியாளர்தான் கட்டமைப்பு திட்டங்களை வடிவமைக்க வேண்டும். ஆனால் நாங்கள் சொல்லும் எந்தக் காரணத்தையும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கேட்பதில்லை. தொழில்நுட்பம் தெரிந்த பொறியாளர்களுக்கு இங்கு மரியாதை இல்லை. சென்னை ஒட்டுமொத்தமாக சீரழிந்து போவதற்கு இவர்கள்தான் காரணம். சென்னைக்கு என வகுக்கப்பட்ட திட்டங்களில் பல்லாயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்திருக்கிறார்கள். மழை நீர் வடிந்து போகாமல், தெருவில் வெள்ளம் சூழ்வதற்கு இவர்கள்தான் காரணம்" என கொந்தளிப்போடு பேசுகிறார் சென்னை குடிநீர் வடிகால் வாரியத்தின் முன்னாள் மூத்த பொறியாளரான சி.ஆர். ராஜன். இவர் தமிழ்நாடு பொறியாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் முன்னாள் தலைவராகவும் இருந்தவர்.

" தமிழகத்தில் தி.மு.க, அ.தி.மு.க என மாறி மாறி ஆட்சி அமையும்போது  அவர்கள் கண்களில் மின்னுவது சென்னை நகரத்தின் கழிவுநீர் அகற்றும் திட்டம் மற்றும் சாலை மேம்பாட்டு திட்டம் ஆகியவைதான். 'சென்னையின் அவல நிலையை மாற்றிக் காட்டுகிறோம்' என்று கவர்ச்சிகரமாக பேட்டியளிப்பார்கள். அப்படித்தான் கடந்த 10 ஆண்டுகளில் சென்னையின் வரைபடத்தையே மாற்றிவிட்டார்கள். இவர்களின் செயல்பாடுகளால்தான் பாதாள சாக்கடை குழாய்கள் அடைபட்டு, வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. கடந்த டிசம்பர் மாதத்தின் கொடூரத்தை மக்கள் அனுபவித்தார்கள். அதில் இருந்தும் ஆட்சியாளர்கள் பாடம் கற்கவில்லை.

வெள்ளைக்காரர்கள் சென்னையை ஆண்டபோது, கழிவுநீர் செல்லும் பாதையில் 15  வகையிலான முறைகளில் பராமரிப்பை செய்தார்கள். சாக்கடை செல்லும் பாதையை தெளிவாக வைத்திருப்பது, பம்பிங் ஸ்டேஷன்களின் முறையான வடிவமைப்பு, சோதனை ஓட்ட முறை என அவர்கள் கையாண்ட வழிமுறைகள் வியப்பை ஏற்படுத்துகின்றன. மழைநீர் வாய்க்கால்கள், சாக்கடை செல்லும் பாதைகள் என வரையறை இருந்தது. இதனால் எந்தவிதமான பாதிப்புக்கும் சென்னை ஆளானதில்லை. கடந்த 2001-ம் ஆண்டில் இருந்து சென்னை சீரமைப்புக்கு எனக் கொண்டு வரப்பட்ட திட்டங்களில் நடந்த ஊழல்களின் பலனை, மக்கள் அனுபவிக்கிறார்கள்" என ஆதங்கப்பட்டவர், சென்னை குடிநீர் வாரியத்தின் குளறுபடிகளைப் பட்டியலிட்டார்.

கரைந்து போன 1,200 கோடி!

" சென்னை நதி நீர் பாதுகாப்புத் திட்டம்(சி.சி.ஆர்.சி.பி) என்ற பெயரில் 1,200 கோடி ரூபாய் மதிப்பில் 2001-ம் ஆண்டு ஒரு திட்டம் வந்தது. இதுதான் சென்னை பேரழிவுக்குக் காரணமான பிரதான திட்டம். சி.சி.ஆர்.சி.பி. திட்டத்தின்படி, பம்பிங் ஸ்டேஷன்களுக்குக் கொண்டு வரப்படும் சாக்கடை நீர், சுத்திகரிப்பு மையங்களுக்குக் கொண்டு செல்லப்பட வேண்டும். சாக்கடைகள் செல்லும் வழிகளில், புவி ஈர்ப்பு விசை தொழில்நுட்பத்தின் மூலம் நேரடியாக சுத்திகரிப்பு மையங்களுக்குக் கொண்டு செல்லும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டது.

16 பேக்கேஜ்கள் கொண்ட இந்தத் திட்டத்தின்படி, நான்கு கழிவுநீர் சுத்திகரிப்பு பிளாண்ட்டுகள் அமைக்கப்பட்டன. பெருங்குடி, நெசப்பாக்கம், கோயம்பேடு, கொடுங்கையூர் ஆகிய பகுதிகளில் இந்தப் பிளாண்ட்டுகள் அமைந்தன. இதற்காக, சுத்திகரிப்பு மையங்களுக்குச் செல்லும் குழாய்கள் அனைத்தும் கான்கிரீட் டைப்பில் போடப்பட்டன. 'இந்த பைப்புகள் தரமற்றவை' என்ற பேச்சும் எழுந்தது. ஆங்கிலேயர்கள் இரும்பு வார்ப்பு பைப்புகளை பொருத்தியிருந்தனர். அதனால் இத்தனை ஆண்டுகாலம் தாக்குப்பிடித்து நிற்கிறது.

இவர்கள் பொருத்திய பைப்புகளில் ஜாயிண்டுகள் சரியாக இணையவில்லை. தவிர, மேன் ஹோல் எனப்படும் மனித நுழைவாயில்களை அமைப்பது போன்ற பணிகளும் நடந்தன. இதில், ஒரு பகுதியாக அடையாறு, கோட்டூர்புரம், சத்யா ஸ்டூடியோ, காந்தி நகர், பெசன்ட் நகர் பம்பிங் ஸ்டேஷன்களில் இருந்து பெருங்குடி பிளான்ட்டுக்குச் செல்லக் கூடிய கழிவுநீர் குழாய்கள் அமைக்கப்பட்டன. இதில், பெருங்குடிக்கு கடைசி இரண்டு கிலோமீட்டருக்கு முன்பாக குழாய் போடாமல் விட்டுவிட்டனர்.

காரணம், ராஜீவ்காந்தி சாலைகள் அமைக்கும் வேலைகள் அப்போது நடந்ததால், திட்டம் சில காலம் நிறுத்தப்பட்டது. இப்போது வரை  இந்தப் பணி முடிவடையாததால் நீலாங்கரை, எம்.ஜி.ஆர். நகர் அருகில் உள்ள பக்கிங்காம் கால்வாய்க்குள் சாக்கடை நீர் கலக்க விடப்படுகின்றன. இன்று வரை நிலைமை சீரடையவில்லை. திட்டத்தின் வடிவமைப்பு மற்றும் பங்கேற்ற நிறுவனங்களின் தரம் பற்றியும் கேள்வி எழுப்பப்பட்டன. இவை எதற்கும் வாரியத்தின் பொறுப்பில் இருந்தவர்கள் பதில் சொல்லவில்லை.

பந்தாடப்பட்ட பம்பிங் ஸ்டேஷன்கள்

இதற்காக போடப்பட்ட குழாய்கள் மாவு போல் ஆகிவிட்டன. இதனால், திட்டத்திற்கான செலவுகளை, மீண்டும் முதலில் இருந்து தொடங்க வேண்டிய நிலை. முன்பு, ஒவ்வொரு நீர் இறைக்கும் மையத்திலும் 25 ஹெச்.பி முதல் ஆயிரம் ஹெச்.பி வரையிலான மோட்டார்கள் பயன்பாட்டில் இருந்தன. சி.சி.ஆர்.சி.பி. திட்டத்தின்படி அனைத்து பம்பிங் ஸ்டேஷன்களையும் அதிக ஹெச்.பி பவருக்கு(360 ஹெச்.பி வரை) மாற்றிவிட்டனர். இதனால் தண்ணீரின் வேகத்திற்கு ஏற்ப, மோட்டார்களால் இயங்க முடியவில்லை. டிசம்பரில் மழை பெய்த அன்று ஒரே நேரத்தில் இரண்டு மோட்டார்களை இயக்க முடியவில்லை.

பல இடங்களில் மோட்டார்கள் பழுதடைந்துவிட்டன. புவிஈர்ப்பு விசைப்படி அமைக்கப்பட்ட சாக்கடை நீரோட்டமும் பலன் தரவில்லை. இதனால் பெருக்கெடுத்த மழைநீரில் சாக்கடைகள் அடைபட்டு, தண்ணீர் திரும்பிவிட்டதால் சென்னை முழுவதும் மிதந்தது. உயிர்ப் பலிகளும் ஏற்பட்டன. நீரின் வேகத்திற்குத் தகுந்த மாதிரி ஏற்ற, இறக்க வேகத்தில் பம்பிங் ஸ்டேஷன் மோட்டார்கள் அமைக்கப்பட வேண்டும். திட்டத்தில் ஏற்பட்ட மிகப் பெரிய கோளாறு இது. காரணம், பொறியாளர்களின் கருத்துக்களை காது கொடுத்துக்கூட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கேட்காததுதான். ஏற்கெனவே, நடைமுறையில் இருந்த பம்பிங் ஸ்டேஷன்களையும், சாக்கடை சென்ற பாதைகளையும் முறையாகப் பராமரித்திருந்தால் இழப்பின் அளவைக் குறைத்திருக்க முடியும்.

அதேபோல் தியாகராய நகர், அசோக் நகர், எம்.ஜி.ஆர். நகர், கோடம்பாக்கம் வழியாக நெசப்பாக்கத்தில் அமைக்கப்பட்ட சுத்திகரிப்பு பிளான்ட் சரியாக வேலை செய்யவில்லை. இங்கு வரும் கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல்,  அடையாறு ஆற்றில் கலந்துவிடப்படுகிறது. அதேபோல் புரசைவாக்கம், ராயபுரம் வழியாக போடப்பட்ட கொடுங்கையூர் சுத்திகரிப்பு பிளான்ட்டும் கைகூடவில்லை. இங்கு வந்து சேரும் சாக்கடை நீர், சுத்திகரிப்பு செய்யப்படாமல் ஓட்டேரி நல்லா கால்வாயில் கலந்துவிடப்படுகிறது. பம்பிங் ஸ்டேஷன்களின் மோட்டார்களை குறைந்த ஹெச்.பி பவருக்கு மாற்றி, சுத்திகரிப்பு மையங்களை சரியான முறையில் கையாண்டால் மட்டுமே பாதிப்புகளில் இருந்து மக்களைக் காக்க முடியும்" என மேலும் சொல்லி அதிர வைக்கிறார் ராஜன்.

அடங்கிப் போன ரூ. 50 கோடி!

 

நம்மிடம் பேசிய அரசுப் பொறியாளர் ஒருவர், "  மனிதக் கழிவுகளை மனிதன் அள்ளக் கூடாது என உயர் நீதிமன்றம் கடும் உத்தரவைப் பிறப்பித்தது. இதுதொடர்பாக, அன்றைக்கு கோர்ட்டில் சாட்சியம் அளித்த சென்னை குடிநீர் வாரிய நிர்வாக இயக்குநர் சுனில் பாலிவால் ஐ.ஏ.எஸ்., ' இனிமேல் சாக்கடை செல்லும் மேன் ஹோல்களில் மனிதர்கள் இறங்க மாட்டார்கள்' என உத்தரவாதம் அளித்தார். மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியில் நீதிமன்ற உத்தரவுக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது. இதற்குப் பதிலாக, ஒவ்வொரு மெட்ரோ வாட்டர் டிப்போக்களிலும் ஜெட் ராடிங் மிஷின் எனப்படும் கழிவுநீர் அகற்றும் மெஷின்கள் தலா 25 லட்சம் செலவில் வாங்கப்பட்டன.

இந்த மெஷின்கள் மூலம் தற்காலிகமாகத்தான் சாக்கடைகளை அள்ள முடிந்தது. கூடவே, பால் பாசிங் எனப்படும் ஊமத்தங்காய் வடிவில் இருக்கும் முள் போன்ற பந்து, பக்கெட் கிளீனிங் மிஷின் போன்றவை பயன்பாட்டில் இருந்திருந்தால் நிரந்தரத் தீர்வு கிடைத்திருக்கும். இதன் விளைவு என்னவென்றால், சாக்கடைகளுக்குள் தேங்கிய கழிவு நீர் அப்படியே கட்டியாக மாறிவிட்டது. அதை அகற்றுவது என்பது அவ்வளவு சாத்தியப்படவில்லை. இதனால் மேன் ஹோல்களின் துவாரம் வழியே சாக்கடை நீர்  நிரம்பி வழிந்தன. சுமார் ஆயிரம் இடங்களில் இந்த அவலநிலை ஏற்பட்டது.

சாக்கடையை சுத்தப்படுத்தும் பணிகளில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட உடல் கவசம் போன்றவை பயன்படுத்தப்படாமல், 200 மெட்ரோ டிப்போ அலுவலகங்களிலும் தூங்கிக் கொண்டிருக்கிறது. இதனால் ஏற்பட்ட இழப்பு மட்டும் 50 கோடி ரூபாய்க்கும் மேல். வெளிநாடுகளில் இருப்பது போன்ற மிகப் பெரிய சாலை வசதிகளோ, சாக்கடை அள்ளும் நவீன இயந்திரங்களோ நம்மிடம் இல்லை. வாங்கிய இயந்திரங்களை முறையாகக் கையாளாத போக்குதான் நிலவுகிறது. சி.சி.ஆர்.சி.பி. திட்டம் படுதோல்வி என சிஏஜி அறிக்கையும் சுட்டிக் காட்டியது. தென்சென்னையில் அமைக்கப்பட்ட 88 மேன் ஹோல்கள் (மனித நுழைவாயில்) தரமற்றவையாக இருந்ததால் உடைந்து நொறுங்கின. இந்தத் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட பணம் முழுவதும் அரசியல்வாதிகள் பிளஸ் அதிகாரிகள் கூட்டணியால் கரைக்கப்பட்டது என்றும் அப்போது புகார் எழுந்தது" என தெரிவித்தார். 

அதிர வைத்த ரூ. 500 கோடி!


" இதுதவிர, சென்னையில் பிரதானமாக இருந்த 29 ஏரிகளை பத்து ஆண்டுகளுக்கு முன்பு சென்னைக் குடிநீர் வாரியம் வசம் பொதுப்பணித்துறை ஒப்படைத்தது. இந்த ஏரிகளில் ஒன்பது ஏரிகள் முழுமையாக ஆக்ரமிக்கப்பட்டுவிட்டன. அந்தப் பகுதிகளுக்குள் மெட்ரோ அதிகாரிகளால் நுழைய முடியவில்லை. பொதுப்பணித் துறை ஒப்படைத்த மொத்த ஏரிகளின் நீளம் 1 கோடி சதுர மீட்டர். இதில், 50 லட்சம் சதுர மீட்டர் பரப்பளவு நிலம் சென்ற இடம் தெரியவில்லை. இதன் பின்னணியில் குடிநீர் வாரிய அதிகாரிகள் சிலரும் இருக்கிறார்கள்" என வேறொரு கோணத்தில் விவரித்தார் குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் ஒருவர்.

அவரே தொடர்ந்து, " சி.சி.ஆர்.சி.பி. திட்டம் போலவே, ஜே.பி.ஐ.சி. எனப்படும் ஜப்பான் திட்டமும் சென்னைக்கு வந்தது. 500 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட இந்தத் திட்டத்தின் நோக்கம். கொடுங்கையூர் சுத்தகரிப்பு மையத்தில் சேகரமாகும் கழிவுநீரை சுத்தப்படுத்தி, எண்ணூர் தொழிற்சாலைகளுக்குக் கொடுப்பதுதான். 16.2 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இத்திட்டத்தில், 16 கிலோமீட்டர் வரையில் குழாய் பதித்தார்கள். ஜப்பானிடம் இருந்து பணம் வராததால், தமிழக அரசின் கஜானாவில் இருந்து செலவிடப்பட்டது. இறுதியில், திட்டம் சரியாக செயல்படுத்தப்படவில்லை. பல துறைகளின் கிளியரன்ஸ் வாங்கவில்லை என ஜப்பான் ஒதுங்கிக் கொண்டது. இந்தத் திட்டமும் அந்தரத்தில் தொங்கிக் கொண்டு இருக்கிறது.

இதுவரையில் 2 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் ஊழல் நடந்திருக்கிறது. ஒரு திட்டம் கொண்டு வரும்போது, அதன் நடைமுறை சாத்தியங்கள் எதுவும் ஆராயப்படுவதில்லை. தங்களுக்கு வேண்டியவர்களுக்கு டெண்டர் கொடுக்க வேண்டும் என்ற மனநிலைதான் ஆளும் ஆட்சியாளர்களுக்கு இருக்கிறது. மக்களுக்கான திட்டங்களில் அரசியல் பார்க்காமல் நடந்து கொண்டாலே, வெள்ளத்திற்கு மக்கள் அச்சப்பட வேண்டிய அவசியம் இருக்காது. பெருகி ஓடிய மழைநீரை கடலில் விட்டுவிட்டு, கடல்நீரை சுத்திகரித்து மக்களுக்கு நல்லநீர் வழங்கும் ஆட்சியாளர்கள்தான் இங்கு அதிகம் இருக்கிறார்கள்” என்றார் வேதனை கலந்த முகத்துடன்.

சென்னை மக்களின் துயரத்திற்கு விடிவு காலம் எப்போதோ...?

-ஆ.விஜயானந்த்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close