Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சென்னை பல்கலை.யில் பதவியேற்பு ஏன்? ஜெயலலிதாவின் சென்டிமென்ட்

.தி.மு.க.வின் நிறுவனத் தலைவரான எம்.ஜி.ஆரின் சாதனை சமன் செய்யப்பட்டிருக்கிறது. எம்.ஜி.ஆர் பாணியில் மீண்டும் ஆட்சியில் இருந்த அ.தி.மு.க.வை வெற்றி பெற வைத்து, அதே ஆட்சியைத் தொடர வைத்திருக்கிறார், முதல்வர் ஜெயலலிதா.

முப்பதாண்டுகள் வரை முறியடிக்கப்பட முடியாத சாதனையாகவே இது கருதப்பட்டு வந்த நிலையில், அதே சாதனையை அதே கட்சியின் லீடரான ஜெயலலிதாவே தகர்த்திருக்கிறார்.

மே16, தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்தது. 19 ம் தேதி வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணியளவில் ஆரம்பித்தது. அடுத்த மூன்று மணி நேரத்திலேயே முன்னணி நிலவரங்கள் வெளியில் வர, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பொக்கேவுடன்,  ஜெயலலிதா வீட்டுக்கு படையெடுக்கத் தொடங்கினர்.

வரிசையாக அணிவகுத்த வாழ்த்துகளை பெற்றுக் கொண்ட ஜெயலலிதா, காத்திருந்த மீடியாக்களுக்கு, 'முழு முடிவுகளும் தெரிய வரட்டும், பேசுகிறேன்' என்று பதிலளித்தார்.

மறுநாள் 20-ம் தேதி காலை தந்தை பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தவுள்ளார் என்ற தகவலால் முன்தினம் இரவே சிலைகள், பொதுப்பணித்துறை அதிகாரிகளால் புதுப்பிக்கப்பட்டன.

இருபதாம் தேதி காலை, குறிப்பிட்ட மூன்று சிலைகளுக்கும் மாலை அணிவிக்க வீட்டிலிருந்து கிளம்பிய ஜெயலலிதாவுக்கு வழக்கம் போலவே, போயஸ் தோட்டத்தில் இருந்து அண்ணா சாலை வரை வரவேற்பு பேனர்கள், கொடிகள், தோரணங்களுடன் வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

அதன் பின்னர் ஜெயலலிதா, சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். தமிழக முதல்வராக வருகிற 23-ம் தேதி சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் ஜெயலலிதா பதவியேற்கிறார்.

ஜெயலலிதா தலைமையிலான தமிழக அமைச்சரவை அமையும் போதெல்லாம், நந்தம்பாக்கம் வர்த்தக மையம் உள்ளிட்ட சில இடங்கள், அவர் பதவியேற்பு நிகழ்வுக்காக புதுப்பிக்கப்படும். ஆனால், அவர் சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கத்தையே சென்டிமென்ட்டாக தேர்வு செய்வார்.

முதன்முறையாக 2001-ல் மட்டும்தான் ஜெயலலிதா, கவர்னராக பாத்திமா பீவி இருந்தபோது, கவர்னர் மாளிகையில் வைத்து முதல்வராக மே 14 அன்று பதவியேற்றுக் கொண்டார்.

இதை எதிர்த்து தொடரப்பட்ட பொதுநல வழக்கில், 'டான்சி வழக்கின் தீர்ப்பைப் பெற்றுள்ள ஒருவரை பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள் பலத்தைப் பெற்றிருக்கிறார் என்ற ஒரே காரணத்துக்காக கவர்னர், பதவிப் பிரமாணம் செய்து வைத்தது செல்லாது' என்று அறிவிக்க கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

மனுவை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம், ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்றது செல்லாது என்று அறிவித்ததோடு, கவர்னரையும் கண்டிக்கவே, ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சரானார்.

இதற்கு பின்னர் சென்டிமென்ட்டாக, சென்னை பல்கலைக்கழகத்தின் மணிவிழா மண்டபத்தையே தொடர்ச்சியாக தேர்வு செய்து, அங்கு வைத்தே பதவியேற்பு விழாவில் ஜெயலலலிதா பங்கேற்கிறார்.

23-ம் தேதி  சென்னை பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடைபெற உள்ள   பதவியேற்பு விழாவில், கவர்னர் ரோசய்யா ஜெயலலிதாவுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.

அமைச்சரவையில் ஓ.பன்னீர்செல்வம், ஜெயக்குமார், செங்கோட்டையன் போன்ற மாஜிக்களுக்கும்  இடமுண்டு என்கிறார்கள் அதிமுகவினர்.

சென்னையின் மாவட்டச் செயலாளர்களான விருகை ரவி, வெற்றிவேல் மற்றும் ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ் நடராஜ் ஆகியோரும் அந்த லிஸ்ட்டில் இருக்கிறார்களாம்.

-ந.பா.சேதுராமன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close