Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உயிரோடுதான் இருக்கிறாரா வேந்தர் மூவீஸ் மதன்? உலாவரும் அதிர்ச்சித் தகவல்கள்!

வேந்தர் மூவிஸ் நிறுவன அதிபர் எஸ்.மதன், காணாமல் போனதாக சொல்லப்பட்டு 6 நாட்கள் கடந்துவிட்ட நிலையில்,  அவரின் நடமாட்டம் குறித்து எந்தத் தகவலும் கிடைக்காமல் உறவினர்களும், விசாரணை மேற்கொண்டுள்ள போலீசாரும் குழப்பத்திலும் தவிப்பிலும் இருக்கிறார்கள். இதனால் அவர்  உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்ற கோணத்திலும் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர் போலீசார்.

தமிழகத்தின் பல்வேறு தனியார் கல்லூரிகளுக்கு பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளுக்கு 'சீட்' வாங்கிக்கொடுக்கும் ஏஜென்ட் வேலையைச் செய்துவந்தவர் மதன். கடந்த 20 ஆண்டுகளாக இதே வேலையில் ஈடுபட்டதால் தமிழகம் மற்றும் வடமாநிலங்களில் நிறையத் தொடர்புகளை வளர்த்துக் கொண்டார்.

மேலும் திரைத்துறையிலும் கால்பதிக்க எண்ணி, கடந்த 2011 ம் ஆண்டு 'வேந்தர் மூவிஸ்' என்ற  சினிமா கம்பெனியைத் தொடங்கினார். அதிலும் கிடுகிடு வளர்ச்சியை எட்டி,  தமிழகத்தின் முன்னணி பட நிறுவன அதிபரானார். அதன் மூலம், 'தில்லுமுல்லு, புலிப்பார்வை, பாயும் புலி, அரவான், ராட்டினம், சகுனி, பாகன், வன யுத்தம், கௌரவம், குட்டி புலி, எதிர்நீச்சல், தலைவா, லிங்கா, சுட்ட கதை, நாடோடி மன்னன், ஆரம்பம், பாண்டியநாடு, ஈகோ, நான் சிகப்பு மனிதன்,  உயிருக்கு உயிராக,சண்டியர், பொறியாளன்,பூஜை என்று பல்வேறு திரைப்படங்களைத் தயாரித்தும், விநியோகித்தும் ,வெளியீடு செய்தும் பல முன்னணி தமிழ் சினிமா கம்பெனிகளுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தினார்.

இதனால் அவருக்கு தமிழ் சினிமாவில் முக்கிய இடம் கிடைத்தது. இதனையடுத்து பல முன்னணி இயக்குநர்கள், ஹீரோக்கள்,  ஹீரோயின்கள் என்று எல்லோரும் வேந்தர் மூவிஸ் மதன் அப்பாயின்ட் மென்ட்டுக்காக காத்திருக்கத் தொடங்கினர். ஏனெனில் கடந்த 2006-2011 கால திமுக ஆட்சியில், தமிழகத்தின் சினிமா துறையினருக்கு, அப்போதைய அதிகார மையத்திற்கு நெருக்கமான தொலைக்காட்சி நிறுவனம், ஏரளாமான நெருக்கடிகளைக் கொடுத்தது  என்பதால், எந்த அரசியல் அதிகார பிரஷரும் இல்லாத நிறுவனம் வேந்தர் மூவிஸ் நிறுவனத்துக்கு தமிழ் திரைப்பட உலகினர் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது.   

இந்நிலையில், மதன் தனது நிறுவன பெயரில் வெளியான சில திரைப்பட விழாக்களுக்கு,எஸ்.ஆர்.எம். கல்லூரிகளின் அதிபரும், ஐ.ஜே.கே. கட்சியின் நிறுவனத் தலைவருமான பாரிவேந்தர் (எ) டி.ஆர். பச்சமுத்துவை சிறப்பு விருந்தினராக பங்கேற்க வைத்துள்ளார். இதனால் வேந்தர் மூவிஸ் பாரிவேந்தருக்கு சொந்தமானது என்று  பேச்சு அடிபட்டது.

ஆனால், ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகிய 'லிங்கா' திரைப்படத்தின் இழப்பீடு தொடர்பாக நடந்த  பிரச்னைகளின் போது,"வேந்தர் மூவிஸ் நிறுவனம் எனது சொந்த நிறுவனம் ஆகும். பாரிவேந்தர்  அவர்கள் மீது நான் கொண்டுள்ள பற்றும் பாசமும் மரியாதையின் காரணமாகவே எனது நிறுவனத்திற்கு  வேந்தர் மூவீஸ் என பெயர் வைத்துள்ளேன். இந்த நிறுவனத்திற்கும் பாரிவேந்தர் அவர்களுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன். " என்று மதன் விளக்கமளித்து அந்தப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இந்நிலையில், கடந்த 29ம் தேதி தனக்கு நிறைய நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் அவற்றை பாரிவேந்தர் தீர்த்து வைக்கவேண்டும் என்றும் கூறி, 'காசியில் கங்கையில் சமாதி அடையப் போகிறேன்' என்று வேந்தர் மூவிஸ் லெட்டர் பேடில் கடிதம் எழுதி, வாட்ஸ் அப்பில் பரப்பிவிட்டுத் தலைமறைவானார் மதன். கடந்த ஞாயிறு காலை ஆறு மணிக்கெல்லாம் மதனின் கடிதம் வாட்ஸ் அப்பில், அவரின் குடும்பத்தினர் நண்பர்கள் மற்றும் எஸ்.ஆர்.எம்.,ஐ.ஜே.கே. கட்சிப் பிரமுகர்களுக்கு வந்துள்ளது. இதனால் அப்போது இருந்தே பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் மதியம் 2 மணிக்கு மேல் மீடியா உலகில் மதனின் கடிதம் பரவி, தலைப்புச் செய்தியானது. இதனையடுத்து தமிழ் சினிமா உலகில் மதனின் மாயம் பதற்றத்தை உண்டாக்கியது.

அடுத்த நாளே மதனின் மனைவி மற்றும் தயாரிப்பாளர் சிவா, நடிகர் லாரன்ஸ் உள்ளிட்டவர்கள், மதன் குறிப்பிட்ட வாரணாசிக்கு சென்றனர். அங்கு அவரைப் பல இடங்களில் தேடினர். மதன் தங்கியிருந்த ஹோட்டல் மற்றும் அவர் அடிக்கடி  செல்லும் பகுதிகள், கங்கை நதியின் கரைகளிலும், படகுகள் மூலம் கங்கை நதியின் உள்ளேயும்  சென்று தீவிரமாகத் தேடினர். ஆனால் மதன் கிடைக்கவில்லை. அவரின் செல்போன் எண்ணும் தொடர்பற்ற நிலையில் இருந்துள்ளது. இதனால் ஏமாற்றம் அடைந்த அவர்கள், அடுத்த நாளே சென்னை திரும்பினர். இந்நிலையில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், காணாமல் போன மதனைக் கண்டுபிடித்துக் கொடுக்குமாறு  அவரின் இரண்டு மனைவிகளும், தாயாரும் புகார் மனு அளித்தனர். போலீசாரும் அவரைக் கண்டுபிடிக்கும் வேலையில் தீவிரமாகியுள்ளனர்.

இதனிடையே, இந்தக் கல்வியாண்டில் எஸ்.ஆர்.எம். மற்றும் பிற கல்லூரிகளில் 'சீட்' வாங்கித் தருவதாகக் கூறி ஏராளமான பெற்றோர்களிடம்  பல கோடி ரூபாய் மதன் சுருட்டியுள்ளார் என்று புகார்கள் கிளம்பின. இதனையடுத்து மதன் அலுவலகம் மற்றும் எஸ்.ஆர்.எம். அலுவலகம் முன்பாக மாணவர்கள், பெற்றோர்கள் திரண்டு போராட்டம்  நடத்தினர். தங்களிடம் மதன் வசூலித்த பணத்தைத் திரும்பக் கொடுக்கும்படியும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் போலீசாரிடம் 5 பேர்  மோசடி புகார்களை கொடுத்தனர். இதனால் அதன் மீதான நடவடிக்கையைத் தீவிரப்படுத்த சென்னை கமிஷனர் டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.இந்நிலையில் மதன் காணாமல் போய் 6 நாட்கள் ஆகின்றன. ஆனால் இதுவரை அவரைப் பற்றிய தகவல்கள் எதுவும் உறுதியாகக் கிடைக்கவில்லை என்பதால் அவரின் உறவினர்கள், நண்பர்கள் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர். மதனின் மனைவிகளிடம் இது குறித்து விசாரிக்கையில், 'அவரைக் கண்டுபிடித்துக் கொடுக்கும்படி போலீசாரிடம் கோரியுள்ளோம்' என்று மட்டும் தெரிவித்துவிட்டு,  மேற்கொண்டு பதிலளிக்க மறுத்துவிட்டனர்.

ஆனால், மதனின் சினிமா தொடர்புகள் மூலம் கிடைக்கும் தகவல்கள் அதிர்ச்சி  அளிப்பவையாக உள்ளன. அவருக்கு இன்னும் இரண்டு மனைவிகள் இருப்பதாகவும், அதில் நான்காவது மனைவி, சென்னை மருத்துவக் கல்லூரியில் படிக்கும் மாணவி என்றும் கூறப்படுகிறது. அந்த மருத்துவ மாணவியுடன் சென்னை விமான நிலையம் வந்து,  அங்கிருந்து டெல்லி சென்று, பின்னர்  வாரணாசி சென்றார் மதன் என்றும், பின்னர் அங்கிருந்துதான் அவர் மாயமானார்  என்றும் ரகசிய தகவல்கள் தற்போது ஒவ்வொன்றாகக் கசிந்து வருகின்றன. இதனை அவர் திட்டமிட்டே செய்துள்ளார் என்றும், அந்தப் பெண்ணுடன் அவர் செல்வதற்காக தயாராகவே இருந்துள்ளார் என்றும், அதற்காக நிறைய தங்க நகைகள்,ரொக்கப் பணம் ஆகியவற்றை பெட்டியில் எடுத்துச் சென்றுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

இது குறித்து மதனை நன்கறிந்த வட்டாரத்தில் விசாரிக்கையில், " அவர் வடமாநிலத்திலுள்ள சில சட்டவிரோத கும்பலுடன்  தொடர்பு வைத்துள்ளவர்.  அதேபோல  பெண்கள் சகவாசமும் அதிகம். அதனால் அவர் பற்றி இன்னும் தீவிரமாக விசாரித்தால் பல்வேறு திடுக்கிடும் உண்மைகள் வெளிவரலாம்" என்கிறார்கள் அதிர்ச்சியோடு.

மதன் குறித்த மர்மங்களை போலீசார் விரைவில் கண்டுபிடித்து  உண்மையை வெளிக் கொண்டு  வரவேண்டும்.

- தேவராஜன்.


 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close