Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ராஜா; சிறைவாசிகளின் குழந்தைகளுக்காக இறைவன் அனுப்பிய இன்னொரு தந்தை

‘‘மனைவியைக் கொன்ற குற்றத்துக்காக கணவன் ஆயுள் தண்டனை கொடுக்கப்பட்டு ஜெயிலுக்கு அனுப்பி வைக்கப்படுகிறான். இனி அம்மாவும் இல்லை, அப்பாவும் இல்லை என்கிற நிலையில் வளரும் அந்தக் குழந்தைகளின் எதிர்காலத்தை யாராவது நினைத்துப் பார்த்ததுண்டா?

எந்த தவறும் செய்யவில்லை என்றாலும், ‘அவன் கொலைக்காரன் பிள்ளையாச்சே! நிச்சயமா குற்றச் செயலை செய்வான்’ என்கிற பழிச்சொற்களையே கேட்டு வளரும் அந்தக் குழந்தைகள், எதிர்காலத்தில் நல்லவர்களாகத்தான் இருப்பார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்? குற்றம் செய்தவரை தண்டிப்பது நியாயம். குற்றவாளிக்குப் பிறந்த இந்தக் குழந்தைகள் என்ன பாவம் செய்தார்கள்? இவர்களை ஏன் தண்டிக்கிறது இந்த சமூகம்?’’...  இந்த குழந்தைகளின் நலன் பற்றி எந்த அரசோ, நீதித்துறையோ அறிய முற்படவில்லை என்றால் நம் நாட்டை  எப்படி நாம் குற்றமில்லாத அமைதி பூங்காவாக மாற்றமுடியம் என ஆதங்கமாகவும், அக்கறையாகவும் வெடிக்கிறது கே.ஆர்.ராஜாவின் குரல்.

யார் இந்த கே.ஆர். ராஜா?...மனைவியைக் கொலை செய்த குற்றத்துக்காக ஆயுள் தண்டனை  பெற்று  சிறைத்தண்டனை பெற்று சிறையில் இருக்கும் சிறைவாசிகளின் குழந்தைகளின் படிப்புக்காகவும், அவர்கள் எதிர்காலத்தில் நல்ல குடிமக்களாகவும் வளரத் தேவையான உதவிகளை நண்பர்கள் உதவியுடன் சேவையாக செய்து வரும் இளைஞர்!

முப்பது வயதாகும் ராஜா ஒரு மாற்றுத் திறனாளி. எட்டு மாத குழந்தையாக இருந்தபோது போலியோ தாக்கியதால் இரண்டு கால்களும் செயலிழந்தன. இன்னமும் அவரால் ஊன்றுகோல் இல்லாமல் நடக்க முடியாது. தனது தினசரி தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவே போராட வேண்டிய நிலையில் உள்ள ராஜா, தற்போது சிறை இல்லவாசிகளின் குழந்தைகளுக்கு எப்படி உதவத் தொடங்கினார்?

‘‘ப்ளஸ் டூ முடிக்கிற வரை என் வாழ்க்கை ஒரு மாற்றுத் திறனாளி சந்திக்கும் அனைத்துப் பிரச்னைகளுடன் சாதாரணமாக சென்று கொண்டிருந்தது. ப்ளஸ் டூ முடித்தபின் கல்லூரியில் படிப்பதைவிடஆசிரியர் பயிற்சி படித்தால் நல்ல எதிர்காலம் இருக்கும் என்று எல்லோரும் சொன்னார்கள். அந்தப் படிப்புக்கு விண்ணப்பித்தேன். ஆனால் இடம் கிடைக்கவில்லை.

அதன்பின் வாழ்க்கையில் சொல்லிக்கொள்ளும்படியான ஒரு நிலையை அடைய வேண்டும் என்ற இலட்சியத்துடன் இளங்கலை தத்துவம் படிக்க  சென்னை மயிலாப்பூர் விவேகானந்தா கல்லூரியில் சேர்ந்தேன். பிறகு பாண்டிச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் முதுகலை சமூகப் பணி (எம்.எஸ்.டபிள்யூ) படித்தேன். மனநலம் தொடர்பான பல நோய்களை பற்றி தெரிந்துகொண்டேன்.

ஒரு குற்றம் ஏன் நடக்கிறது? எப்படி ஒரு குற்றவாளி உருவாகிறான்? குற்றத்துக்கு என்ன காரணம்? என பல விஷயங்களை ஆராய்ந்து பார்த்தேன். இது தொடர்பாக பாண்டிச்சேரியில் உள்ள மத்திய சிறையில் இருந்த பல இல்லவாசிகளை சந்தித்து பேட்டி எடுத்தேன்.

அப்படி ஒரு ஆயுள் தண்டனை சிறை இல்லவாசியிடம் பேசியதுதான் என் வாழ்க்கை பாதையை மாற்றிவிட்டது. அந்த சந்திப்பில் அவரிடம் 'உங்கள் குழந்தை என்ன செய்கிறார்கள் என்று கேட்டேன்'. ‘‘என் குழந்தைகளைப் பார்த்து ஏழு ஆண்டுகள் ஆகிவிட்டன. என்னால் போய் பார்க்க முடியாது. அவர்களும் என்னை பார்க்க வரவில்லை’’ என்றார். ஒருகணம் விக்கித்துப்போனேன். ஒரு குடும்பத்தலைவன் தன் குழந்தைகளை பார்த்து 7 ஆண்டுகள் ஆகியிருப்பதும் அவர்களின் தற்போதைய நிலைகூட அறியாமல் இருப்பதும் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவரிடம் முகவரியை வாங்கிக் கொண்டு அந்தக் குழந்தைகளை பார்க்கப் போனேன்.

அந்த முகவரியில் குழந்தைகள் இல்லை. இரண்டு தெருக்கள் தள்ளி வேறொரு வீட்டில் தன் பாட்டியுடன் அந்தக் குழந்தைகள் வசிப்பதாக சொன்னார்கள். அங்கு போனேன். பகல் 12 மணி வேளையில் கதவைச் சாத்திக் கொண்டு அந்தக் குழந்தைகளுடன் உட்கார்ந்துகொண்டிருந்தார் அந்த பாட்டி. சிறையிலுள்ள உங்கள் மருமகன் அனுப்பித்தான் வருகிறேன் என்று சொன்னவுடன், என்னைக் கண்டபடி திட்ட ஆரம்பித்தார். அவர்களின் கோபம் கொஞ்சமும் குறையவில்லை என்பதை புரிந்துகொண்டு அமைதியாக இருந்தேன். திட்டித் தீர்ந்தபின், அவர்கள் அமைதியானார்கள். வறுமை காரணமாக குழந்தைகள் மேற்கொண்டு படிக்க முடியாமல், வேலைக்கு சென்றுகொண்டிருப்பதை தெரிந்துகொண்டேன்.

சந்தர்ப்ப சூழலால் சிறைசெல்கிற இப்படிப்பட்டவர்களின் குழந்தைகளுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்கிற எண்ணம் எனக்குள் தீவிரமானது. மேற்கொண்டு வேலைக்குச் செல்வதைவிட இது மாதிரி தமிழகம் மற்றும் இந்தியா முழுக்க இருக்கிற குழந்தைகளின் படிப்புக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன், அதன் முதற்கட்டமாக இந்தக் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க ஒரு பள்ளிக்கூடத்தை அணுகினேன். அவர்களிடம் விஷயத்தை சொன்னவுடன், பள்ளியில் அவர்களை சேர்க்கவே முடியாது என்று சொல்லிவிட்டார்கள்.

‘‘ கொலைகாரன் புள்ள, நாளைக்கு ஏதாவது பிரச்னை வந்தா யார் பதில் சொல்றது’ என்று சொல்லி என்னை விரட்டிவிட்டார்கள். இந்தக் குழந்தைகளின் நலனுக்காக வாழ்வதுதான் இனி என் வாழ்க்கை என்று நினைத்து உதவத் தொடங்கினேன்’’ - தனது போராட்ட வாழ்க்கையின் முதல் பாதியை முடித்த ராஜா, அடுத்த பாதியை சொல்ல ஆரம்பித்தார்.

‘‘கொலைக் குற்றத்துக்காக சிறையில் வாழும் கைதிகளின் குழந்தைகளின் நல்வாழ்வுக்காகப் பாடுபடும் அமைப்புகள் பற்றி உலகம் முழுக்க ஆராய்ந்தேன். விரல் விட்டு எண்ணக்கூடிய அமைப்புகளே இருந்தன. நேபாளத்தில் அப்படிச் செயல்பட்டுவந்த ஒரு தொண்டு நிறுவனத்தைக் கண்டுபிடித்து, அங்கு மூன்று மாத காலம் தங்கியிருந்து பயிற்சி பெற்றேன். மீண்டும் தமிழகத்துக்கு வந்து சிறை இல்லவாசிகளின் குழந்தைகளுக்கு உதவுவதற்காக பாளையங்கோட்டை சிறைக்குச் சென்றேன். பாளையங்கோட்டை சிறையை நான் தேர்வு செய்யக் காரணம், இது மாதிரியான குற்றங்கள் இந்த பகுதியில் அதிகம்.

சிறைக்கண்காணிப்பாளரிடம் நான் வந்த நோக்கத்தை சொன்னபோது, ‘‘தனிப்பட்ட மனிதர்களுக்கு அனுமதி கிடையாது என்றும் தொண்டு நிறுவனங்களுக்கு மட்டுமே அனுமதியளிக்கமுடியும் என்றார். அப்போதுதான் நண்பர்களின் முயற்சியில் 'உலக சமத்துவத்திற்கான கூட்டமைப்பு' (Global Network for Equality) என்ற பெயரில் ஒரு தொண்டு நிறுவனத்தைத் தொடங்கினேன். என்னைப் பற்றி நன்கு விசாரித்துவிட்டு, சிறைவாசிகளைச் சந்திக்க என்னை அனுமதித்தார்கள். ஐநூறுக்கும் மேற்பட்ட கைதிகளை விசாரித்தபோது, அதில் 40 பேர் மனைவியைக் கொலை செய்த குற்றத்துக்காக ஆயுள் தண்டனை பெற்றிருப்பது தெரிந்தது. அவர்களின் வீடுகளைத் தேடி அலைந்தேன்.

நண்பர்கள் அரவிந்தன், முருகன் உதவியுடன் 13 நாட்கள் தொடர்ந்து கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மூன்று மாவட்டகளில் சுமார் 2933 கிலோ மீட்டர் சுற்றியதில் இப்படி சிறைவாசிகளின் 205 குழந்தைகள் பெற்றோரை இழந்து, படிக்க முடியாமல், கூலி வேலைக்கும், வீட்டில் எடுபிடி வேலையைச் செய்கிறவர்களாகவும் மிகவும் வறுமையில் இருந்தது தெரியவந்தது. 'அவர்களை படிக்க வைக்க ஏற்பாடு செய்கிறேன். பள்ளிக்கு அனுப்புவீர்களா' என குழந்தைகளின் பாதுகாவலர்களிடம் கேட்டேன். அவர்கள் மகிழ்ச்சியோடு ஒப்புக்கொண்டார்கள். 2014-ல் 205 குழந்தைகளுக்கு 7.39 லட்ச ரூபாய் திரட்டி அவர்களின் படிப்புச் செலவுக்கு திரட்டித் தந்தேன். 2015-ல் 159 குழந்தைகளுக்காக 4.93 லட்ச ரூபாய் தந்தோம்

எங்கள் தொண்டு நிறுவனத்துக்காக இதுவரை நான் எங்கும் நன்கொடை பெறவில்லை. குழந்தைகளைப் படிக்க வைக்க எவ்வளவு பணம் தேவை என்பதை பல அமைப்புகளுக்கும் மின்னஞ்சல் மூலம் அனுப்புவேன். அவர்கள் தரும் பணத்தை குழந்தைகள் படிக்கும் கல்வி நிறுவனத்துக்கு காசோலையாக அனுப்பிவிடுவோம். வரும் ஆண்டில் 255 குழந்தைகளுக்கு சுமார் 6 லட்ச ரூபாயாவது தேவை. அந்தப் பணத்தைத் திரட்டும் வேலையைத்தான் இப்போது செய்துவருகிறேன்’’ என்கிறார் ராஜா.

சிறை இல்லவாசிகளின் குழந்தைகளுக்கு மட்டுமல்ல, சிறை இல்லவாசிகளுக்கே சில நன்மைகள் கிடைத்திருக்கிறது ராஜாவினால். ஆயுள் தண்டனை பெற்ற சிறைக் கைதிகளை சந்திக்க செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் மட்டுமே முன்பு அனுமதி உண்டு. அந்நாட்களில் குழந்தைகள் பள்ளிக்கூடம் இருக்கும் என்பதால், தங்களின் பிள்ளைகளை பார்க்க முடியாமல் தவித்தனர் சிறைவாசிகள்.

இதைப்புரிந்துகொண்ட ராஜா, ஞாயிற்றுக்கிழமைகளில் இவர்களை சந்திக்க முடியும் என்று மாற்றினால், குழந்தைகள் தன் தந்தையை சந்திக்க முடியும் என சிறைத்துறை டி.ஐ.ஜியான ஏ.ஜி மெளரியாவின் கவனத்துக்கு இதை கொண்டு சென்றார். உடனே தமிழகம் முழுக்க உள்ள சிறைகளில் அதை நடைமுறைப்படுத்தினார் அவர்.

இதுதவிர, சிறை இல்லவாசிகளுக்கு ராஜா அளித்த மனநல ஆலோசனையால் பாளையங்கோட்டை சிறையில் தற்கொலை செய்துகொள்ளும் இல்லவாசிகளின் எண்ணிக்கை குறைந்தது. மற்ற சிறைகளில் இல்லாத மாற்றம் இங்கே உருவாக என்ன காரணம் என்று சிறைத் துறை ஆராய, ராஜாவின் வேலையின் முக்கியத்துவம் புரிந்தது. உடனே தமிழகம் முழுக்க உள்ள எல்லா சிறைகளிலும் இரண்டு மனநல ஆலோசகர்களை  நியமிக்கும்படி உத்தரவிட்டார் சிறைத் துறை அதிகாரி மெளரியா. அதன்படி பாளையங்கோட்டை சிறையின் மனநல ஆலோசகராக நியமிக்கப்பட்டார் ராஜா.

கடந்த மூன்று ஆண்டுகால மனநல ஆலோசகர் பணியை ராஜா, இப்போது ராஜினாமா செய்திருக்கிறார்.

‘‘சிறைவாசியின் குழந்தைகளுக்கு உதவி செய்வதின் மூலம் சிறை இல்லவாசிகளையும் குணபடுத்த முடியும் என்பதுதான் என் நோக்கம். இந்த பணி என் அடிப்படை நோக்கத்தை சிதைப்பதாக இருந்தது. சிறை இல்லவாசிகளின் குழந்தைகளுக்கு தொடர்ந்து உதவ முடியாத அளவுக்கு சிலர் என்னை கட்டுப்படுத்த நினைத்தனர். அரசு வேலைதான் என் நோக்கம் என்றால் அரசுத் தேர்வு எழுதி நான் அதை அடைந்திருப்பேன்.

ஆனால் அது என் இலக்கு அல்ல. கொடுங்குற்றச் செயல்கள் இல்லாத ஒரு ஆரோக்கியமான சமூகம் எதிர்காலத்தில் உருவாக வேண்டும் என்றால் இதுபோன்ற குழந்தைகளுக்கு நாம் நல்வழி காட்டவேண்டும், எனவே சிறை இல்லவாசிகளின் குழந்தைகளின் நல்வாழ்வுக்காக மேலும் பணியாற்ற விரும்பியதால்,   சிறையின் மனநல ஆலோசகர் வேலையை ராஜினாமா செய்துவிட்டேன்’’ என லேசான புன்னகையுடன் சொல்கிறார் ராஜா.

இயல்பான வாழ்வின் அத்தனை சுகங்கள் அடையப்பெற்றபின்னரும் தன்னலனுக்காக வாழும் மனிதர்கள் மத்தியில் உடலால் சிறையிலடைபட்டவர்களுக்காக உள்ளத்தால் தொண்டுசெய்துவாழும் ராஜா போன்றவர்கள் இந்த சமூகத்தால் கொண்டாடப்படவேண்டியவர்கள்.

பாராட்டுக்கள் ராஜா!

- ஏ.ஆர்.குமார்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close