Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சாம்சங்க்கு பதிலாக நிர்மா சோப்... ஆன்லைன் வர்த்தக சிக்கலுக்கு தீர்வு என்ன?

 

மும்பையை சேர்ந்த ஆனந்த் பலாகியா என்பவர்,  'சாம்சங் கேலக்சி நோட் 4 செல்போன்'  ஒன்றை வாங்குவதற்காக  ப்ளிப்கார்ட்டில் ஆர்டர் செய்திருக்கிறார். அதன் விலை ரூ.  29,900 ஆகும். இதை 'கேஷ் ஆன் டெலிவரி' யில் வாங்கி,  திறந்து பார்த்த ஆனந்த் பலாகியாவுக்கு அதிர்ச்சிதான் காத்திருந்தது.

பார்சலில் போனுக்கு பதிலாக நிர்மா சோப் இருந்திருக்கிறது. உடனே டெலிவரி செய்தவருக்கு போன் செய்து விஷயத்தை கூறியுள்ளார். அவரும் வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு புகார் அளிக்குமாறு கூறியுள்ளார். ஆனால், ப்ளிப்கார்ட் நிறுவனத்தின் வாடிக்கையாளர் மையத்தில் இந்த புகாரை ஏற்க மறுத்துள்ளார்கள். 'நாங்கள் போனைதான் அனுப்பி உள்ளோம்' என்று கூறியிருக்கிறார்கள். மேலும், ' நீங்கள் வேண்டுமானால் போலீஸில் புகார் கொடுங்கள்'  என்று கூறி இருக்கிறார்கள். ஆனந்த்தும் இது குறித்து மலபார் ஹில் போலீஸில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, சட்டப்பிரிவு 420-ன் கீழ் ப்ளிப்கார்ட் நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

'நமக்கு நேரம் மிச்சமாகும், அதிகமான ஆஃபர், வீட்டிற்கே பொருட்களை கொண்டு வந்த பிறகு பணம் கொடுக்கலாம்'  என பல்வேறு காரணங்களினால் ஆன்லைனில் பொருட்கள் வாங்குகிறோம். வாங்கும் பொருளில் பிரச்னை ஏற்படாத வரை சிக்கல் இல்லை.

ஆனால், வாங்கிய பொருளில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து சிட்டிஸன் கன்ஸ்யூமர் அண்ட் சிவிக் ஆக்‌ஷன் குரூப்பின் ( Citizen consumer and civic Action Group) ஒருங்கிணைப்பாளர் சரோஜாவிடம் கேட்டோம்.

" ஆன்லைனில் பொருட்கள் வாங்கும்போது மிகவும் கவனமாக இருப்பது அவசியம். ஏனெனில் பெரும்பாலான ஆன்லைன் நிறுவனங்கள்,  பொருட்களை உற்பத்தியாளர்களிடம் இருந்து வாங்கி அதை விற்பனை மட்டுமே செய்கின்றன. வாங்கும் பொருட்களில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டால் உற்பத்தியாளர்களிடம்தான் கேட்க வேண்டும். ஆனால், உற்பத்தியாளரின் முழுவிவரம் இருந்தால்தான் அதைச் செய்ய முடியும். அதாவது முகவரி, இணையதள முகவரி, தொலைபேசி எண்  ஆகியவை கிடைப்பதில் சில நேரங்களில் சிக்கல் ஏற்படுகிறது. மேலும் சின்னச் சின்ன உற்பத்தியாளர்கள் பொருட்களை தயாரித்து ஆன்லைன் நிறுவனங்கள் மூலம் விற்பனை செய்கிறார்கள். இவர்களுக்கு வாடிக்கையாளர் சேவை மையம் என்பது பெரும்பாலும் இருக்காது. இதனால், வாங்கிய பொருளில் உள்ள பிரச்னையை யாரிடம் தெரிவிப்பது என்பது சிக்கலாக இருக்கும்.

வாங்கும் பொருட்களில் உள்ள பிரச்னையை குறித்து நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் தெரிவிக்க வேண்டுமெனில், உற்பத்தியாளர் நீங்கள் இருக்கும் இடத்தில் இருப்பது அவசியம். அப்போதுதான் வழக்கை எளிதாக முடிக்க முடியும். இல்லையெனில் அலைச்சல்தான் மிச்சமாகும். அதாவது, நீங்கள் சென்னையில் இருந்து, உற்பத்தியாளர் மும்பை அல்லது வேறு மாநிலத்தில் இருந்தால் அங்கு சென்று புகார் அளிக்க வேண்டியிருக்கும். ஒருவேளை, நீங்கள் இருக்கும் இடத்தில் உள்ள நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் அளித்தாலும்,  அதில் எந்த அளவுக்கு பயன் இருக்கும் என்பது தெரியாது. அத்துடன் உற்பத்தியாளர் வேறு மாநிலத்தில் இருக்கும்போது,  வழக்கு விசாரணைக்கு வருவாரா என்பதும் தெரியாது. மேலும் வழக்கை நடத்தி அதில் நீங்கள் வெற்றி அடைந்தாலும், தீர்ப்பில் உள்ள இழப்பீடு உங்களுக்கு கிடைப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாக இருக்கும். வேறுவேறு மாநிலங்கள் என்பதால் சட்ட விதிமுறைகளில் அதிக மாற்றம் இருக்கும்.

வாங்கிய பொருளில் ஏதாவது பிரச்னை இருந்தால்,  அது குறித்து பொருளை தயாரித்த நிறுவனம் மற்றும் பொருளை விற்பனை செய்த நிறுவனங்களுக்கு அந்த தகவலை எழுத்து மூலமாக தெரிவிக்க வேண்டும். அதற்கு அந்த நிறுவனம் எந்த விதமான பதிலும் தெரிவிக்கவில்லை எனில், நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யலாம். பொருள் வாங்கியதற்கான பில், நிறுவனத்துக்கு எழுதிய கடிதத்தின் நகல், வாராண்டி கார்டு ஆகியவை தேவை.

பொருட்களில் பிரச்னை ஏற்பட்டிருந்தால்,  அதற்கு ஆன்லைனில் பொருளை விற்பனை செய்த நிறுவனமும் பொறுப்பு ஏற்க வேண்டும். ஆனால், பெரும்பாலான ஆன்லைன் நிறுவனங்கள் இதை செய்வதில்லை. பொருட்களை டெலிவரி செய்த குறிப்பிட்ட நாளுக்குள் பிரச்னை ஏற்பட்டால்தான் பொருளை திரும்ப வாங்கிக் கொள்வோம் என்று கூறுகிறார்கள். இது முற்றிலும் தவறானது.

இ-காமர்ஸ் மூலமாக பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கு தனியாக விதிமுறைகளை எதுவும் இல்லை. இதை உருவாக்க வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

சின்னச் சின்ன பொருட்களை ஆன்லைனில் வாங்குவதில் தவறு இல்லை. விலை அதிகமான பொருட்களை ஆன்லைனில் வாங்குவதை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது. அதேபோல டெலிவரி வாங்கும் போது பார்சலை பிரித்து பார்த்து,  அதன் பின் பணத்தை கொடுப்பது நல்லது. பெரும்பாலான ஆன்லைன் நிறுவனங்கள் இதை அனுமதிப்பது இல்லை. ஆனால், வாடிக்கையாளர்கள் தொடர்ந்து இதை வலியுறுத்தும் போது வேறு வழியில்லாமல் ஆன்லைன் நிறுவனங்கள் செய்யக்கூடும்." 


-இரா.ரூபாவதி

எடிட்டர் சாய்ஸ்

MUST READ