Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'மாணவர்கள் கஷ்டப்பட்டால்தான் பலன்... விளம்பரம்தான் எங்கள் பலம்!' - சொல்கிறார் சென்னைஸ் அமிர்தா பூமிநாதன்

'சென்னைஸ் அமிர்தாஸ்' குறித்து நமது Vikatan.com இணையதளத்தில்,  Dக்கு முன்னால E என்பது உண்மைதானா? - 'சென்னைஸ் அமிர்தா'வுக்கு ஒரு நேரடி விசிட்!” என்ற தலைப்பில், 'சென்னைஸ் அமிர்தா' கல்வி நிலைய செயல்பாடுகள் பற்றி ஒரு செய்திக் கட்டுரை வெளியிட்டு இருந்தோம்அதில்,  'சென்னைஸ் அமிர்தா'வின் கட்டமைப்பு, பயிற்சி குறித்து விவரிக்கும் அங்கு பயிலும் மாணவர்களின் காணொளியையும் அந்தக் கட்டுரையுடன் இணைத்திருந்தோம்.

செய்தியின் இறுதியில், இது தொடர்பாக 'சென்னைஸ் அமிர்தா' நிர்வாகத்தினர், இங்கு இந்த கல்வியைக் கற்று வெளிநாடுகளில் வேலை கிடைத்த மாணவர்கள் மற்றும் உயர்சம்பளம் பெறும் மாணவர்கள் ஆதாரங்களுடன், மனம் திறந்த பேட்டியளிக்க முன்வந்தால், அதைப் பரிசீலித்து பிரசுரிக்க தயாராகவே இருக்கிறோம்!” எனக் குறிப்பிட்டிருந்தோம்.

செய்தி வெளியானதும் நம்மைத் தொடர்பு கொண்ட சென்னைஸ் அமிர்தா நிர்வாகம், தங்கள் தரப்பு விளக்கமாக, சில விஷயங்களை பகிர முன்வந்தார்கள். நிர்வாகத்தின் தலைமைச் செயல் அலுவலர் ஆர். பூமிநாதனுடன் நடந்த நீண்ட உரையாடல் இது....

உங்களுக்கு இந்த ஹோட்டல் மேனேஜ்மென்ட் துறையின் மீது ஆர்வம் வர என்ன காரணம்...?

நான் 15 ஆண்டு காலம், ஒரு கல்வி நிலையத்தில் நிர்வாக துறையில் வேலை பார்த்து வந்தேன். அப்போது, ஒன்றை உணர்ந்தேன். பெரும்பாலும் மாணவர்கள் கற்கும் கல்விக்கும், அவர்கள் வேலை பார்க்கும் துறைக்கும் சம்பந்தம் இல்லாததாக இருந்தது. ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்தவர்கள் மட்டும்தான், அவர்கள் படித்த துறையில் வேலை பார்த்தார்கள். அது மட்டுமல்லாமல், இந்த துறையில் மட்டும்தான் 100 சதவீதம் வேலை வாய்ப்பு இருப்பதை உணர்ந்தேன். என்னிடம் படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் வேலை கிடைக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில்தான் 2008-ல் இக்கல்வி நிலையத்தை துவங்கினேன்.

ஆனால், 'உங்கள் கல்வி நிறுவனத்தில் போதுமான உள்கட்டமைப்பு வசதி இல்லை, நீங்கள் உறுதி அளிப்பதுபோல் வேலையும் வாங்கித் தருவதில்லை' என்கிறார்களே உங்கள் மாணவர்கள்...?

அது உண்மை அல்ல. எங்கள் நிறுவனத்தில் உலக தரத்தில் உள்கட்டமைப்பு வசதி இருக்கிறது. எங்கள் நிறுவனத்தின் உள்கட்டமைப்பை நீங்கள் எந்த கல்வி நிறுவனத்துடனும் ஒப்பிட முடியாது. அந்த அளவிற்கு இங்கு வசதி உள்ளது.

உங்கள் மாணவர்களிடம் பேட்டி கண்டுதான் செய்தி வெளியிட்டு இருந்தோம். அப்படியானால் உங்கள் மாணவர்கள் பொய் சொல்கிறார்கள் என்கிறீர்களா...?

இது எங்கள் முன்னாள் பங்குதாரர்களின் சூழ்ச்சி என்கிறேன்.

புரியவில்லையே...?

2008-ல் மூன்று பேர் சேர்ந்து அமிர்தா கல்வி நிலையங்களை சென்னை, திருச்சி மற்றும் கோவையில் துவக்கினோம். சென்னை கல்விநிலையத்தை நான் நிர்வகிப்பது என்றும், திருச்சி, கோவை நிறுவனத்தை பிற பங்குதாரர்கள் நிர்வகிப்பதென்றும் முடிவானது. ஆனால், சில ஆண்டுகளில் எங்களுக்குள் சில முரண்பாடுகள் வந்தன. அதனால், நான் அவர்களிடமிருந்து பிரிந்து, நீதிமன்றம் சென்று சட்டப்பூர்வமாக நிறுவனத்தையும் பிரித்துவிட்டேன். இப்போது சென்னை நிர்வாகம் முழுக்க முழுக்க என் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது.

இதற்கும் உங்கள் மாணவர்கள், உங்கள் நிறுவனத்தை பற்றி குற்றம் சுமத்துவதற்கும் என்ன சம்மந்தம்...?

'சென்னைஸ் அமிர்தா'வின் வளர்ச்சியை பார்த்து என் முன்னாள் பங்குதாரர்களுக்கு என் மேல் பொறாமை. அதனால்தான், இது போன்ற வதந்திகளை பரப்பி, என் நிறுவனத்தை அழிக்க பார்க்கிறார்கள்.

 

ஆனால், உங்கள் மீது குற்றம் சுமத்துவது உங்கள் மாணவர்கள்தானே....உங்கள் முன்னாள் பங்குதாரர்கள் இல்லையே...?

இது அவர்களின் சூழ்ச்சி. சில மாணவர்களை அவர்கள் கைக்குள் போட்டுக்கொண்டு, என் நிறுவனத்திற்கு எதிராக இதுபோல் செய்திகளைப் பரப்புகிறார்கள். குறிப்பாக, மாணவர்கள் சேர்க்கை காலத்தில்தான் இதுபோன்ற செயல்களில் இறங்குகிறார்கள். சென்ற வருடம் எங்கள் கல்லூரி மாணவன், அவன் சொந்த பிரச்னை காரணமாக, அவன் தங்கியிருந்த அறையில் தற்கொலை செய்து கொண்டான். உடனே, அவன் இறப்பிற்கு கல்லூரி நிர்வாகம்தான் காரணம் என்பதுபோல் செய்தியை பரப்பினார்கள். அதற்கு, அந்த மாணவனின் தந்தையையும் பயன்படுத்திக் கொண்டார்கள். ஆனால், இறுதியில் காவல்துறை விசாரணையில் உண்மை வெளிவந்தது. அந்த மாணவனின் தந்தையும், சிலரின் தூண்டுதலின் பேரில் எங்கள் கல்லூரிக்கு எதிராக பேசியதாக ஒப்புக் கொண்டார்.

இது சில மாணவர்களின் குற்றசாட்டு அல்ல... பல மாணவர்களை உங்கள் கல்வி நிறுவனத்தின் பல கிளைகளில் சந்தித்து, உரையாடிய பின்தான் விகடன்.காமில் செய்தியை வெளியிட்டோம். அவர்கள் அனைவரும் உங்கள் முன்னாள் பங்குதாரர்களின் ஆட்களாக இருப்பார்கள் என்று நாங்கள் நம்பவில்லை. சரி, நீங்கள் சொல்லிய கட்டணத்தைவிட அதிகமாக வசூலிப்பதாக அம்மாணவர்கள் சொல்லியதற்கு உங்கள் விளக்கம்...?

அதுவும் உண்மையில்லை... வேண்டுமானால்... இப்போது எம் மாணவர்களை சந்தித்து நீங்களே உரையாடுங்கள்.

நீங்கள் வாக்குறுதி அளிப்பது போல், அனைத்து மாணவர்களையும் நீங்கள் பயிற்சிக்கு அனுப்புவதில்லை... சில மாணவர்கள் தங்கள் சொந்த முயற்சியில் சென்றுள்ளதாக சொல்கிறார்களே...?

இல்லை... நாங்கள் எல்லா மாணவர்களையும் பயிற்சிக்கு அனுப்புகிறோம். அதற்காக மட்டும் நூற்றுக்கணக்காண ஊழியர்கள் இயங்குகிறார்கள். நாங்கள் பயிற்சிக்கு அனுப்பியதற்கான அனைத்து ஆதாரங்களும் எங்களிடம் உள்ளன.

நீங்கள் உங்கள் விளம்பரத்தில் குறிப்பிடுவதுபோல் யாருக்கும் ஸ்டைஃபண்ட் எல்லாம் வாங்கித் தருவதில்லை.... சிலருக்கு பார்ட்டைம் ஜாப்பில் 500 ரூபாய் ஸ்டைஃபண்ட்தான் கிடைக்கிறது என்கிறார்களே....?

பார்ட் டைம் ஜாப்பில் இல்லை. சமயங்களில் தொழிற் பயிற்சிக்குச் செல்லும்போது குறைவான ஸ்டைஃபண்ட் பெற வாய்ப்பு அதிகம். அதுவும் குறைந்தபட்சம் ரூபாய் 2000 வரை கிடைக்கும். பார்ட் டைம் ஜாப் சென்றால் 7000 முதல் சம்பளம் கிடைக்கும். இது தெரியாமல், அந்த மாணவர்கள் சொல்லி இருக்கிறார்கள்.

 

பயிற்சிக்குச் செல்பவர்களையும் 20 மணி நேரத்திற்கு மேல் வேலை வாங்குவதாக கூறுகிறார்களே...?

சார்... கஷ்டபட்டாதான் சார் உயர முடியும்.போலீஸ் டிரைனிங்க்ல எல்லாரும் எவ்வளவு நேரம் வேலை பார்க்குறாங்க... அதுவே அவங்க இன்ஸ்பெக்டர் ஆன பிறகு அவ்வளவு நேரம் வேலை பார்க்கிறார்களா என்ன...? பயிற்சியில் கஷ்டப்பட்டால்தான் சார் முன்னேற முடியும். அதுவும், 20 மணிநேர வேலை என்பதெல்லாம் சுத்தப் பொய்..!

உங்கள் நிறுவனத்தில் சேரும் முக்கால்வாசிப்பேர் படிப்பை தொடராமல் பாதியில் நின்று விடுகிறார்களாமே.? உண்மையா... அப்படியானால் ஏன்.?

எல்லா கல்வி நிறுவனங்களிலும் இடைநிற்றல் (Dropouts) இருக்கதான் செய்யும். அதுபோல் எங்கள் நிறுவனத்திலும் 10 சதவீதம் வரை இருக்கிறது. அதற்கு எங்கள் கல்வி நிர்வாகம் காரணமில்லை. மாணவர்களின் குடும்பச்சூழல், அவனின் தனிப்பட்ட பழக்க வழக்கங்களே காரணம். ஒன்றை புரிந்து கொள்ளுங்கள், ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிக்கும் யாரும் பள்ளிக் காலத்தில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் அல்ல. பள்ளிக் கல்வியில் சோபிக்க முடியாதவர்கள்தான், இந்த பாடத்தைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அவர்களுக்கென்று சில பிரச்னைகள் இருக்கும்தானே....?

சரி... உங்கள் நிறுவனம் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றுவது இல்லையென்றுதான் சென்ற ஆண்டு உங்கள் விளம்பரத்தில் நடித்த ராதிகா, இந்த ஆண்டு நடிக்கவில்லையாமே...?

இல்லை...  எங்களிடம் உள்ள பொருளாதார வலிமைக்கு யாரை வேண்டுமானாலும், எங்கள் விளம்பரத்தில் நடிக்க வைக்க முடியும். நாங்கள்தான் வேண்டாமென்று முடிவு செய்தோம். எங்கள் மாணவர்களே இப்போது எங்கள் விளம்பரத் தூதர்கள்.இப்போது எங்கள் எல்லா விளம்பரங்களிலும் எங்கள் மாணவர்கள் மட்டும்தான் நடிக்கிறார்கள்

LONDON SCHOOL OF BUSINESS &FINANCE பல்கலைகழகத்துடனான tie-up நடைமுறைகள் முடிந்துவிட்டதா...?

இல்லை. நடந்து கொண்டுதான் இருக்கிறது.

எங்கள் நிருபர், மாணவராக கடந்த வாரம் விசாரித்தபோது, இன்னும் மூன்று சீட்டுதான் இருக்கிறது என்று கூறியிருந்தீர்கள்...? இன்னுமா அந்த மூன்று சீட்டிற்கு ஆட்கள் வரவில்லை...?

நாங்கள் அனைவரையும் எங்கள் கல்வி நிலையத்தில் சேர்க்க மாட்டோம். முதலில் 1750 ரூபாய் கொடுத்து ரிஜிஸ்டர் செய்துகொள்ள வேண்டும். அவர்கள் அனைவருக்கும் எங்கள் கல்வி நிலையத்தில் படிக்க வாய்ப்பு கிடைக்குமா என்றால்... கிடைக்காது. பதிவு செய்தவர்களுக்கு தனி நேர்காணல் வைத்துதான், தேர்வு செய்வோம். இந்த ஹோட்டல் மேனேஜ்மென்ட் துறையின் மீது உண்மையான விருப்பம் உள்ளவர்களைத்தான் தேர்வு செய்வோம்.

பொதுவாக கல்வி நிலையங்கள் டிரஸ்டின் கீழ்தான் இயங்கும். அது லாப நோக்கமற்றதாக இருக்க வேண்டும் என்பது எதிர்பார்ப்பு. உங்கள் கல்வி நிலையம் எப்படி...?

நாங்கள் தனியாக டிரஸ்ட் வைத்து ஏழை மாணவர்களுக்கு 2 கோடி ரூபாய் மதிப்புக்கு உதவுகிறோம். ஆனால், எங்கள் கல்வி நிலையம், ஒரு தனியார் நிறுவனமாகதான் இயங்குகிறது.

நீங்கள் மிக நேர்மையாக கல்விநிலையத்தை நடத்துவதாக சொல்கிறீர்கள். ஆனால், விளம்பரத்திற்கு அதிகமாக செலவு செய்வது போல் தெரிகிறதே....? இது எப்படி சாத்தியம்...?

ஆம்... விளம்பரம்தான் எங்கள் பலம். இப்போது நாங்கள் அதிகமாக விளம்பரம் செய்து, எங்கள் பிராண்டிற்கென்று ஒரு இமேஜை உருவாக்குகிறோம்.கடந்த மூன்று ஆண்டுகளாக, நாங்கள் எதுவும் சம்பாதிக்கவில்லை. வரும் நாட்களில், அனைத்து மாவட்டங்களிலும் எங்கள் கல்விநிலையத்தை திறக்கும்போது, இதை ஈடுகட்டுவோம்!

 என்று முடித்தவர், தங்கள் கல்வி நிலைய மாணவர்களுடன் உரையாடலுக்கு ஏற்பாடு செய்தார்.

மாணவர்கள் அனைவரும் தங்களுக்கு தரமான கல்வியும், படித்தவுடன் வேலையும் வழங்கப்படுவதாகவே தெரிவித்தனர். அதிலும் குறிப்பாக ஒரு மாணவர், அமிர்தா தன்னை மலேசியாவுக்கு பயிற்சிக்கு அனுப்பியதென்றும், அங்கு மாதம் பத்தாயிரம் சம்பளம் பெற்றதாகவும் தெரிவித்தார்.

 

 

மேலும் அவர், " தஞ்சைக்கு பெரிய கோவில் அழகு, மன்னைக்கு செங்கமலத்தார் அழகு, திருப்பதிக்கு லட்டு அழகு, பழனிக்கு பஞ்சாமிர்தம் அழகு, சென்னைக்கு சென்னைஸ் அமிர்தா அழகு" என்றார்.

ஒரு மாணவி, தனக்குப் பயிற்சி காலத்தில் ஒரு நிறுவனம் ரூபாய் 10,000 சம்பளத்தில் வேலை தர முன் வந்ததாகவும், தானே வேண்டாம் என்று சொல்லிவிட்டதாகவும் தெரிவித்தார்.

மாணவர்களுடன் உரையாடல் முடிந்தபின், நிர்வாகத்தினர், நந்தனத்தில் உள்ள தங்கள் கல்வி நிலையத்தைச் சுற்றிக் காண்பித்தனர். ஐந்து மாடிக் கட்டடத்தின் முதலாவது தளத்தையும், நான்காவது தளத்தையும் வாடகைக்கு எடுத்து, அவற்றை கண்ணாடியால் பிரித்து 11 வகுப்பறைகளையும், பயிற்சி அறைகளையும் உண்டாக்கி இருந்தனர். நாம் அந்தக் கண்ணாடி அறைகளை சுற்றிப் பார்த்தபோது, நம்முடன் வந்த ஒரு நிர்வாகி, “அத்தனையும் 'Imported Glass' சார்” என்றார் பெருமிதமான குரலில்!



நாம் விடைபெற்றுக் கிளம்பும்போது, அங்கிருந்த மாணவர்கள் நாம் செல்வதையே பார்த்துக் கொண்டிருக்க, தென் தமிழகத்திலிருந்து வந்த சில மாணவர்கள் பெற்றோர்களுடன்,  'சென்னைஸ் அமிர்தா'வின் சேர்க்கை நடைமுறை குறித்து விசாரித்துக் கொண்டிருந்தார்கள்..!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close