Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பஞ்சாயத்து ராஜ் சட்டத்தில் திருத்தம் ? -உள்ளாட்சித் தேர்தலில் ஜெ.வைக்கும் முதல் 'செக்'!

பெருநகரங்கள் மாநகராட்சிகளாகின்றன, அந்த மாநகராட்சிகளின் மூலமாக மக்களின் உள்ளாட்சி தொடர்பான அடிப்படைத் தேவைகள் அனைத்தும் தீர்த்து வைக்கப்படும் என்று குறிப்புகளில் சொல்லப் படுகின்றன.அந்த மாநகராட்சிகளுக்கு மன்ற உறுப்பினர்களாக வருவோர்,அரசியல் கட்சிகளால் அறிமுகம் செய்யப்பட்டு, பின்னர் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

மாநகரத் தந்தை என்று மெச்சத் தகுந்த பதவியான மேயர் பதவிக்கு ஒருவர் தேர்வாகிறார். இவருக்கு அடுத்த நிலையிலான துணை மேயர் பதவியானது ஆட்சியாளர்களால் நேரடியாகவே வாக்கெடுப்பின் மூலம் வழங்கப்பட்டு விடுகிறது.மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிற ஒரு மக்கள் பிரதிநிதியான மேயர்,  செங்கோல் ஏந்திய பாதுகாவலருடன்  'சின்ன கோட்டை' என்றழைக்கப்படும் மாநகராட்சி மன்றத்தின்  மாளிகையில் வந்தமர்கிறார்.

பத்தாம் நூற்றாண்டில் உள்ளாட்சி

10-மற்றும் 11-ஆம் நூற்றாண்டுகளில் நடைபெற்ற சோழர் ஆட்சி காலங்களில் உள்ளாட்சித் துறை குழுக்களுக்கான உறுப்பினர்கள் குடவோலை முறையில் தேர்ந்தெடுக் கப்பட்டனர்.தமிழ்நாட்டில் சோழர்கள் காலத்திலேயே உள்ளாட்சி அமைப்புகள் இருந்துள்ளன. 1871-ல் உள்ளாட்சிகள் நிதி சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. 1884-ல் சென்னை உள்ளாட்சி மன்றங்கள் சட்டம் தமிழ்நாட்டில் உள்ளாட்சி சுய அரசாங்கம் சம்பந்தப்பட்ட சட்டமாக அமைந்தது.1920-ல் உள்ளூர் வாரியங்கள் சட்டம் சென்னை கிராம ஊராட்சிகள் சட்டம் கொண்டு வரப்பட்டது.

ரிப்பன் மாளிகையும், சட்ட திட்டமும்

சென்னை நகராட்சி சட்டம் 1867ஆம் ஆண்டு உருவானது. அதன் பின்னர் தோன்றியதே, சென்னை மாகாணம்.  கல்வி, சாலைகள், துப்புரவு, குடிநீர், கழிவுநீர், சுகாதாரம், வரி விதிப்பு, வசூலிப்பு  பணிகள் இதன்மூலம் நடைமுறைப் படுத்தப் பட்டன. உள்ளாட்சித் துறையின் தந்தை என போற்றப்படும் லார்டு ரிப்பன் பிரபு (இன்றைய சென்னை மாநகராட்சி ரிப்பன் பில்டிங் இவர் பெயரால்தான் இயங்குகிறது)வைக் கொண்டுள்ள   சென்னை மாநகராட்சி சட்டம், 1919-லும் , மாவட்ட நகராட்சி சட்டம் 1920-லும் இயற்றப்பட்டன.

மாநகராட்சி ஆணையர்கள் யார்?

மாநகராட்சிகளின்  ஆணையர் பொறுப்புக்கு இ.ஆ.ப.  அதிகாரிகள் அல்லது அதற்கு தகுதியான கல்வியுள்ள  அதிகாரிகள் மாநகராட்சி ஆணையாளர்கள் பொறுப்பில் அரசால்  நியமிக்கப்படுகின்றனர்.அதிக மக்கள் தொகையுடன் அதிக வருவாய் என்ற அடிப்படையில் வருகிற நகரங்களை (உதாரணம் : சென்னையை ஒட்டியிருந்த திருவொற்றியூர் நகராட்சியைச் சொல்லலாம். இப்போது அது சென்னை மாநகராட்சியோடு இணைக்கப்பட்டு விட்டதால், திருவொற்றியூர் நகராட்சி சத்தமின்றி கலைக்கப்பட்டு விட்டது) நகராட்சிகளாகப் பிரித்துள்ளனர்.

நகராட்சிகளுக்கான  ஆணையாளர்கள் பொறுப்பில்,குரூப்-1 தேர்வு அதிகாரிகள் அரசுகளின் மூலம் நியமனம் செய்யப்படுகின்றனர். நகர்மன்ற உறுப்பினர்களால், நிர்ணயிக்கப்பட்ட காலங்களில்  நடத்தப்படும் மன்றக் கூட்டங்களில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களின்படி ஆணையர் அதை செயல்படுத்துவார்.

நகராட்சிகளும், பேரூராட்சிகளும்

தமிழ்நாட்டில் இருக்கிற 148 நகராட்சிகளும், சிறப்பு நிலை, தேர்வு நிலை, முதல் நிலை, இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை என்று தரம் பிரிக்கப்பட்டுள்ளன. இவைகள், தமிழ்நாடு நகராட்சி நிர்வாக ஆணையரின் கீழ் இயங்குகின்றன.

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் முதன்முறையாக நகராட்சிகளுக்கும் ஊராட்சிகளுக்கும் இடைப்பட்ட பேரூராட்சி என்ற அமைப்பு செயல்படுத்தப்பட்டு வருகிறது.  நகராட்சிக்கு அடுத்த நிலையில் அதிக மக்கள் தொகை, அதிக வருவாய் கொண்ட இடங்கள் பேரூராட்சிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

மாநகராட்சிகளுக்கும், நகராட்சிகளுக்கும் ஆணையர் போன்று,   பேரூராட்சிகளுக்கு, பேரூராட்சி செயல் அலுவலர் என்ற பொறுப்பில் அரசு அதிகாரிகள் அரசின் மூலம் நியமனம் செய்யப்படுகின்றனர்.  ஆனால், உள்ளாட்சி அமைப்பின் மன்ற உறுப்பினர்கள், தலைவர்கள், மேயர்கள் அனைவருமே மக்களால் தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள்.

தமிழ்நாட்டில் மொத்தம் 561 பேரூராட்சிகள் இருக்கின்றன. இவை அனைத்தும் தமிழ்நாடு அரசின் பேருராட்சிகளுக்கான ஆணையர் அலுவலகக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகின்றன. அதேபோல் தமிழ்நாட்டில் மொத்தம் 12, 618 ஊராட்சிகள்  செயல்படுகின்றன.

ஊராட்சி ஒன்றியங்கள்

ஊராட்சி அமைப்புகள் அவை இருக்கும் பகுதிகளில் ஒன்றிணைக்கப்பட்டு வட்டார அளவில் ஊராட்சி ஒன்றியங்களாகவும், ஊராட்சிகள் அனைத்தும் மாவட்ட அளவில் ஒருங்கிணைக்கப்பட்டு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை என்றும் அழைக்கப் பட்டு செயல்படுகின்றன.மாவட்டத்தில் இருக்கும் கிராமப்பகுதியின் ஊராட்சி மன்றங்களை ஒன்று சேர்த்து, அவை  வட்டார அளவில் ஊராட்சி ஒன்றியங்கள் என்றானது. ஒன்றியங்கள் அளவிலான கிராமப் பகுதிகளைக் கொண்டு ஊராட்சி ஒன்றிய வார்டுகள் பிரிக்கப்படுகின்றன. 

ஒன்றிய வார்டுகளில் இருக்கும் பொதுமக்(வாக்காளர்)களால், முறையே, ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இவர்களில் இருவர்,  ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர்- துணைத் தலைவர் பொறுப்புக்கு தேர்வு  செய்யப்படுகின்றனர். அந்த வகையில்  தமிழ்நாட்டில் மொத்தம் 385 ஊராட்சி ஒன்றியங்கள் இருக்கின்றன.

மாவட்ட ஊராட்சி மன்றங்கள் 

ஒவ்வொரு மாவட்டத்திலும்,  மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அமைக்கப் பட்டுள்ளது. மாவட்டத்தின் சில கிராமப் பகுதிகளில் இருந்து மாவட்ட ஊராட்சி வார்டுகள் பிரிக்கப் படுகின்றன.  வார்டில் உள்ள  வாக்காளர்களைக் கொண்டு மாவட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் தேர்வாகின்றனர்.
இவர்களில் இருந்து ஒருவர் மாவட்ட ஊராட்சி மன்றத் தலைவர்,  துணைத் தலைவர்  பதவிகளுக்கு தேர்வு செய்யப்படுகின்றார். அந்த வகையில், தமிழ்நாட்டில் 32 மாவட்ட ஊராட்சி மன்றங்கள் இருக்கின்றன.

கருணாநிதியும் உள்ளாட்சியும்

மீண்டும் பழைய உள்ளாட்சி அமைப்பு முறையானது,  எம்.ஜி.ஆர். 'கால' த்துக்குப் பின், தமிழகத்தை ஆண்ட திமுக அரசால், முதல்வர் கருணாநிதியால் கொண்டு வரப்பட்டது. அதன் பின்னர் தான் மேயர்களும் வந்தனர், நகர சபை தலைவர்களும் வந்தனர்.

உள்ளாட்சி அமைப்பை ஏன் கலைத்தார் எம்.ஜி.ஆர்.?

'நான் 72 கட்சிக்காரன்பா '(கட்சி தொடங்கப்பட்ட 1972-ல் இருந்து அதில் இருக்கிறவர்) என்று அடிக்கடி தோள் தட்டிக் கொள்ளும், சென்னை ராயபுரத்தின் சீனியர் ர.ர.க்கள் சிலரிடம் பேசியதில்,

"1958இல் சென்னை ஊராட்சிகள் சட்டம் கொண்டு வரப்பட்டது.  1976- வரை அது தொடர்ந்தது. 1977-ஆம் ஆண்டுக்குப் பிறகு உள்ளாட்சி அமைப்புகள் அன்றைய தமிழக முதல்வர், தலைவரால் (எம்.ஜி.ஆர்) கலைக்கப்பட்டு, தனி அலுவலர்களைக் கொண்ட நிர்வாக முறை வந்தது.

உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளால் கிராமப் புறங்களில் நடக்கும் சட்டத்துக்குப் புறம்பான அத்துமீறல்கள், குறிப்பாய் சொத்து சேகரிப்பு விஷயங்களை முழுமையாக கண்காணிக்க முடியாது என்றே தலைவர்  கருதினார்.  உள்ளாட்சி மன்ற அமைப்புகளின் மீது அவர் கொண்டிருந்த வெறுப்புணர்வை தன்னுடைய 'நம்நாடு' திரைப்படம் மூலமாகவும், பாடல்கள் மூலமாகவும் அவ்வப்போது வெளிப்படுத்தினார்.

ஆட்சியைப் பிடித்ததும் முதல் வேலையாக உள்ளாட்சி அமைப்புகளை கலைத்து உத்தரவிட்டார்... அம்மா (ஜெ) வழி, தனி வழி இல்லைங்களா?" என்று சொல்லி நம்முடைய பதிலை எதிர்பார்த்தார்.

கருணாநிதிக்கு கைகொடுத்த உள்ளாட்சி

'உள்ளாட்சி அமைப்பை கருணாநிதி ஏன் கை விடுவதே யில்லை ? ' மூத்த உ.பி. ஒருவரிடம் கேட்ட போது, "கட்சியில் இருக்கும் அத்தனை பேரையும், எம்.எல்.ஏ, எம்.பி., மந்திரி பதவிகளில் அமர வைக்க முடியாது.
அதே வேளையில் கட்சிக்காரர்களை மனநிறைவுடன் பதவியில் வலம் வரவைக்கக் கூடிய வாய்ப்பாக உள்ளாட்சி மன்றங்களை பயன்படுத்தலாம் என்று கலைஞர் உணர்ந்திருந்தார்.

மேயர், துணை.மேயர், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி, மாவட்ட ஊராட்சிகளுக்குத் தலைவர்கள், துணைத் தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள் (கவுன்சிலர்கள்)போன்ற பதவிகள்...

பெரு நகரங்களில் மண்டலக் குழுத் தலைவர்கள், துறை வாரியாக  சேர்மன்கள் ,  வட்டம் வாரியாக கவுன்சிலர்கள் போன்ற பதவிகளைக் கொண்டு கட்சியை தொய்வின்றி கொண்டு போகமுடியும் என்று தலைவர் கலைஞர் முழுமையாக நம்பினார், அதைத்தான் இன்று வரை செய்கிறார்" என்கிறார் மகிழ்ச்சி பொங்க.

கருணாநிதி ரூட்டில் ஜெயலலிதா

உள்ளாட்சி விஷயத்தில்தான் நேரடியாக கருணாநிதியின் 'ரூட்' டை அப்படியே கடை பிடித்தார்  ஜெயலலிதா எனலாம். எம்.ஜி.ஆரின் அரசியல் வாரிசாக அடையாளங் காட்டப் பட்டுள்ள ஜெயலலிதா, எம்.ஜி.ஆரே தயக்கங் காட்டிய 'உள்ளாட்சி' யை கொஞ்சமும் தயங்காமல் துணிச்சலாக கையிலெடுத்தார், வெற்றியும் கண்டார்.

உள்ளாட்சி தேர்தல் தேதி ?

அண்மையில் நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் 2016-21-க்கான முதல்வர் நாற்காலியை மீண்டும் கைப்பற்றிய கையோடு உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தேதியையும், ஜெயலலிதா கையோடு அறிவிப்பார் என்று கட்சியினர் காத்துக் கொண்டிருக்கின்றனர்... ஆனால், ஜெயலலிதா இந்த முறை அதில் அவசரம் காட்ட வில்லை.

சென்னை மழை தந்த பாடம்

சட்டமன்றத் தேர்தலுக்கு சமீபத்தில் தமிழகத்தையே அச்சுறுத்திய சென்னை மழையையும், உள்ளாட்சி மன்ற உறுப்பினர்களின் 'அற்புதமான பணியில்' மொத்த சாலைகளும் பிளந்து கிடந்ததையும், மழைநீர் வடிகால் திட்டமே காணாமல் போயிருந்ததையும் மக்கள் நேரடியாக கண்டனர், வெடித்துக் கிளம்பினர்.


பார்க்குமிடமெல்லாம் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளை கண்டித்து மக்கள் நடத்திய போராட்டம், ஆர்ப்பாட்டம் ஆட்சித் தலைமையை ஆட்டங் காண வைத்தது. அதன் அப்பட்டமான எதிரொலிப்பாய் நாடு முழுவதும் வெற்றி பெற்றாலும், சென்னையில் பெரும்பாலான இடங்களில் அதிமுக மண்ணைக் கவ்வியது.


உள்ளாட்சி அமைப்பினர் பதவி ரத்து ?

'முதல்வர் ஜெயலலிதா என்ன நினைக்கிறார்,  உள்ளாட்சி மன்றத் தேர்தலில் அவருடைய திட்டம் என்ன ? கடந்த சில நாட்களாக  இதுகுறித்த, நம்முடைய டிராவலில் கிடைத்த விடையே இந்த கட்டுரைக்கான அடித்தளம்.

"உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்கள் நடத்தப் பட்டே ஆகவேண்டும், அதே வேளையில், கவுன்சிலர்கள் உள்ளிட்ட உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் செய்யும் தவறுகளை தட்டிக் கேட்கும் விதமாக அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கையை எடுக்க முடியுமா? " என்பதே ஜெயலலிதா முன் நிற்கும் முக்கிய கேள்வி.

படு ஸ்ட்ராங்க் பஞ்சாயத்து ராஜ் சட்டம்

உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் எந்த தவறு செய்தாலும் அவர்களை அந்தப் பொறுப்பிலிருந்து நீக்கி வைக்க முடியாத அளவு ரயில்வே சட்டம் போல் படு ஸ்ட்ராங்காய் இருப்பது உள்ளாட்சி பிரதிநிதித்துவ சட்டமான பஞ்சாயத்து ராஜ் சட்டம்.

பதவி பறிப்பு சாத்தியமா ?

அதிருப்தியோ, அதிக தவறுகளோ தொடர்ந்து சுமக்கிற உள்ளாட்சி மன்ற உறுப்பினர்கள், அம்மாநில முதல்வரால் பதவி நீக்கம் செய்யப் படக் கூடிய 'தகுதி நிலை அதிகாரம்' வழங்க பஞ்சாயத்து ராஜ் சட்டத்தில் சீர்திருத்தம் கொண்டு வரவேண்டும். அப்படிக் கொண்டு வந்தால் அது இந்தியா முழுமைக்குமான பொது சட்ட சீர்திருத்தமாக மாறிவிடும்.

அந்த சட்டத்தையும் அகில இந்திய அளவில் கொண்டுவரக் காரணமாக இருந்தது,  ஜெயலலிதா தலைமையிலான  தமிழக அரசு என்ற இமேஜூடன் மக்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடிக்கலாம்.
இன்னொரு எம்.ஜி.ஆராக தன்னை நிலைப்படுத்திக் கொள்ள, பஞ்சாயத்து ராஜ் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வலுவான பாராளுமன்ற அதிமுகவின் எண்ணிக்கை  கை கொடுக்கும் என்பதே ஜெயலலிதா போட்டு வைத்துள்ள திட்டம்.

இதை நடைமுறைக்கு கொண்டு வர பல கிணறுகளை தாண்ட வேண்டியிருக்கும் என்பதும் ஜெயலலிதாவுக்கு எடுத்து சொல்லப் பட்டிருக்கிறது.

இந்த திட்டத்தில் மட்டும் பின் வாங்காமல், ஜெயலலிதா உறுதியாய் நின்றால் 'கவுன்சிலர் சீட்' வாங்க கட்சிக்காரர்கள் 'பெரிய அளவிற்கெல்லாம்' சிரமப்பட்டுக் கொண்டிருக்க மாட்டார்கள் என்று உறுதியாக நம்பலாம்.


 ந.பா.சேதுராமன்

 

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ