Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சாட்டையை சொடுக்கிய கருணாநிதி.... திமுக மாவட்டச் செயலாளர்கள் நீக்கத்தின் பின்னணித் தகவல்கள்!

ந்தமுறை தேர்தல் தோல்வி திமுக தலைமையை கொஞ்சம்.... இல்லை, அதிகமாகவே அசைத்துப்பார்த்துவிட்டது. வெற்றிக்கோட்டுக்கு மிக அருகில் வந்தும் அதைத் தொட முடியாமல் போனது  கருணாநிதியை ரொம்பவே வருத்தம் கொள்ளவைத்துவிட்டது.

'130 தொகுதிகளுக்கு குறையாமல் வெற்றிப் பெற வேண்டும்' என்பதுதான் திமுக மாவட்டச் செயலாளர்களுக்கு, கட்சித் தலைமை கொடுத்த அசைன்மென்ட். மிக எளிதாக இந்த இலக்கை எட்டிவிடலாம் எனக் கருதியிருந்த நிலையில், 89 இடங்களில் மட்டுமே திமுகவால் வெற்றிப் பெற முடிந்தது. சில மாவட்டச் செயலாளர்களின் மோசமான செயல்பாடுகளே பெரும்பாலான இடங்களில் தோல்விக்கு காரணம் எனக் கூறப்பட்டது.

கடந்த மே 24-ம் தேதி நடந்த திமுக செயற்குழு கூட்டத்தில்,  தேர்தலில் தோல்வி அடைந்த வேட்பாளர்கள் பலரும்,  மாவட்டச் செயலாளர்கள் மற்றும் ஒருசில கட்சி நிர்வாகிகள், தங்களுக்கு எதிராக வேலை பார்த்ததை பட்டியலிட்டு கருணாநிதியிடம் கொடுத்தனர். தோல்வி அடைந்த வேட்பாளர்கள் பலர் கண்ணீர் விட்டு அழவே செய்தனர் அப்போது. கவலை தோய்ந்த முகத்துடன் அதை கேட்டுக்கொண்டார் கருணாநிதி.

அதனைத் தொடர்ந்து பொதுச் செயலாளர் அன்பழகன் உள்ளிட்ட  கட்சியின் வெகு சில தலைவர்களுடன் மட்டும் ஆலோசனை நடத்திய கருணாநிதி,  பழைய பாணி இனி எடுபடாது என முடிவெடுத்து, 'ஆபரேஷன் டிஸ்ட்ரிக்ட் செகரட்டரி' என்ற ஆயுதத்தை கையிலெடுத்ததாகவும்,  அதன் முதற்கட்டமாகத்தான் 3 மாவட்டச் செயலாளர்களுக்கு கல்தா கொடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கின்றன அறிவாலய உள்வட்டாரத் தகவல்கள்.

இந்த அதிரடி நடவடிக்கையின் ஒரு பகுதியாகதான் '' கோவை மாநகர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் எம்.வீரகோபால் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, மு.முத்துசாமி கோவை மாநகர் வடக்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நாமக்கல் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் செ.காந்திசெல்வன் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, பார். இளங்கோவன் நாமக்கல் கிழக்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். திருநெல்வேலி மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் கி.துரைராஜ் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு சிவ.பத்மநாபன் திருநெல்வேலி மேற்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்.
ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட அந்தந்த மாவட்டக் கழக நிர்வாகிகள் அவர்களுடன் இணைந்து பணியாற்றிட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் " என கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகனிடமிருந்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மாவட்டச் செயலாளர்கள் நீக்கப்பட காரணங்கள் என்ன, அவர்கள் மீதான புகார்கள் என்ன என்பதை இங்கே பார்க்கலாம்...

கோவை: பணம் படுத்திய பாடு

கோவை மாவட்டத்தில் மொத்தம் 10 தொகுதிகள். இவற்றில் ஒன்றில் மட்டுமே தி.மு.கழகம் ஜெயித்தது. கட்சியின் தோல்விக்கு என்ன காரணம் என விவாதிக்கப்பட்ட செயற்குழுக்கூட்டத்தில், வீரகோபால் மீது அடுக்கடுக்கான புகார்களை குவித்தார் கோவை வடக்குத் தொகுதியில் போட்டியிட்ட மீனா லோகு. " கட்சியின் மாவட்டச் செயலாளர், பிரசாரத்துக்கு கூட வரவில்லை. எனக்கு எந்த ஒத்துழைப்பும் கொடுக்கவில்லை. இவர் வேலை செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை. 'கட்சியில் யாரும் வேலை செய்யக்கூடாது. மீனாலோகுவுக்கு வாக்களிக்கக் கூடாது' என்று வெளிப்படையாகவே உத்தரவிட்டார். தேர்தல் வேலைகளை துவங்க வேண்டும் என நான் கேட்டபோது, 'முதலில் 10 லட்சத்தை கொடுங்கள்' என்றார். உடனே 10 லட்சத்தை கொடுத்தேன். ஆனால் அதன் பின்னரும் அவர் வேலையை துவங்கவில்லை. மாவட்டச் செயலாளர் தரப்பினர் திமுகவுக்கு எதிராக வேலை செய்தனர். அதன் பின்னணியில் நடந்த சில விஷயங்களை நான் அறிவேன். இதனால்,  கோவை வடக்கு தொகுதியில் எளிதில் வெல்ல வேண்டிய திமுக, 7 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றது. இதற்கு வேறு யாரும் காரணம் இல்லை. கட்சியின் மாவட்டச் செயலாளரும், நிர்வாகிகளும்தான்" என பகிரங்கமாகவே குற்றஞ்சாட்டினார்.

கோவை மாவட்டத்தை பொறுத்தவரை பொங்கலூர் பழனிச்சாமிக்கும், வீரகோபாலுக்கும் நீண்ட காலமாகவே பிரச்னை இருந்து வருகிறது. அடிக்கடி கோபாலபுரத்திலும், அறிவாலயத்திலும் பஞ்சாயத்து நடந்தாலும் இந்த பிரச்னை முடியவே இல்லை. இதன் நீட்சியாகத்தான் இந்த பிரச்னையும் எழுந்துள்ளது.
கோவை வடக்குத் தொகுதியில் போட்டியிட்ட மீனா லோகு, பொங்கலூர் பழனிச்சாமியின் ஆதரவாளர் என்கிறார்கள். அதனால்தான் மீனா லோகுவுக்கு சரிவர ஒத்துழைப்பும் கொடுக்காமல் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது.

நாமக்கல்: காந்தியின் சூழ்ச்சியால் கவிழ்ந்தாரா வி.பி.துரைசாமி?

நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 6 தொகுதிகள். ஒன்றில் மட்டுமே தி.மு.கழகம் ஜெயித்தது. 'மாவட்டச் செயலாளர் காந்திச் செல்வனின் சூழ்ச்சிதான் இந்த தோல்விக்கு காரணம்’ என நீ..............ண்ட புகாரை காந்தி செல்வனுக்கு எதிராக கருணாநிதியிடம் உள்ளுர் கட்சிக்காரர்கள் வாசிக்க, இப்போது 'முன்னாள் மாவட்டம்'  ஆகிவிட்டார் காந்தி செல்வன். ராசிபுரம் தனித் தொகுதியில் அ.தி.மு.க., சார்பாக முன்னாள் எம்.பி., சரோஜாவும், தி.மு.க., சார்பாக கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் துணை சபாநாயகருமான வி.பி.துரைசாமியும் போட்டியிட்டார்கள்.

அ.தி.மு.க.,வின் கோட்டையான ராசிபுரம் தொகுதியின் அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,வாக இருந்த சபாநாயகர் தனபால்,  தொகுதிப் பக்கமே எட்டிப்பார்க்காத அதிருப்தியில் தொகுதி மக்கள் இருந்ததால்,  இம்முறை சரோஜாவிற்கு 'சீட்' வழங்கப்பட்டது.

உள்ளூர் அ.தி.மு.கழக பிரமுகர்களை சரோஜா தேர்தல் பணிகளில் சரிவர ஈடுபடுத்தவில்லை என்பதாலும், அவர், பிரசார வாகனத்தை விட்டு கீழே இறங்கி பிரசாரம் செய்யாததாலும், ராசிபுரம் தொகுதியில் தி.மு.கவே வெற்றி பெற அதிக வாய்ப்பு  உள்ளதாக நம்பப்பட்டது. சரோஜாவிற்கு இணையாக தொகுதியில் பணம் இறக்கியும் சரோஜாவிடம் 9631 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார் வி.பி.டி.

‘வேட்பாளராக வி.பி.டி., அறிவிக்கப்பட்டதில் இருந்து நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளர் காந்திசெல்வன் எந்த விதத்திலும் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. வி.பி.துரைசாமிக்கு கட்சித் தலைமையில் நல்ல நெருக்கம் இருப்பதால், அவர் தன் மாவட்டத்தில் எம்.எல்.ஏ.,வாகி இன்னும் வளர்ந்து விட்டால், அது தன் பதவிக்கு ஆபத்தாக போய் விடும் என்பதாலும், தனக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்காததாலும் ஆரம்பத்திலிருந்தே அதிருப்தியாகவே இருந்தார். கூட்டங்களில் கூட பட்டும் படாமலும்தான் நடந்துகொண்டார். ராசிபுரம் தொகுதிக்கு ஒரு முறை கூட பிரசாரத்திற்கு வரவில்லை.

ஸ்டாலின் ராசிபுரம் பிரசாரத்திற்கு வந்தபோது அவரோடு காரில் வந்ததோடு சரி. மீண்டும் தொகுதிப் பக்கம் தலைகாட்டவே இல்லை. தன்னுடைய ஆதரவாளர்களையும் வேலை செய்யாத அளவுக்கு பார்த்துக் கொண்டார்.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய நாமக்கல்லை சேர்ந்த திமுக பிரமுகர் ஒருவர்,  '' குமாரபாளையம் தொகுதியில் அமைச்சர் தங்கமணியை எதிர்த்து போட்டியிட்ட எங்கள் கட்சி வேட்பாளர் யுவராஜிற்கு, கட்சித் தலைமை கணிசமான ஒரு தொகை கொடுத்தது. அதை அப்படியே காந்திச் செல்வம் வேட்பாளரிடம் தந்தாரா என்று விசாரித்தாலே பல உண்மைகள் தெரியவரும். அதேபோல், சேந்தமங்கலம் தொகுதியில் தி.மு.க., சார்பாக போட்டியிட்டு தோற்ற பொன்னுசாமி தரப்பினரை கேட்டால், ஏதோ நிலம் கைமாறிய கதையை சொல்லுகிறார்கள. கூட்டணி வேட்பாளர்களுக்கு வழக்கமாக தி.மு.க., தலைமை பணம் கொடுக்கும். அப்படி இந்த முறை நாமக்கல் தொகுதி காங்கிரஸ் வேட்பாளருக்கு கொடுத்த பணம் முழுவதுமாக வேட்பாளரிடம் தரப்பட்டதா என்பது காந்திச் செல்வத்துக்கே வெளிச்சம். தேர்தலுக்கு 20 நாட்கள் இருக்கும் நிலையில் மோகனூர் ஒன்றியச் செயலாளர் கைலாசத்தை கட்சியை விட்டு நீக்குகிறார். இருந்தபோதும் அவர் தன் ஒன்றியத்தில் அதிக ஓட்டுகளை வாங்கி தந்திருக்கிறார். இப்படி பல தகிடுதத்தங்களை செய்த காந்திச் செல்வத்துக்கு பதவி நிச்சயமாக பறிபோகும் என கட்சிக்காரர்கள் சொல்லிவந்தனர். அது, இப்போது நடந்ததுவிட்டது"  என்கிறார்.

திருநெல்வேலி: 'கானா' தொடர்பால் காலியான துரைராஜ்

திருநெல்வேலி மாவட்டத்தில் வரும் 10 தொகுதிகளில் 5 ல் திமுகவும் 5 ல் அதிமுகவும் சரிபாதியாக வெற்றிபெற்றுள்ளது. தோல்வியடைந்த 5 தொகுதிகளில், 3 மேற்கு மாவட்டத்தின் கீழ் வருகின்றன. எம்.ஜி.ஆர் காலத்து அரசியல்வாதியான கருப்பசாமி பாண்டியனின் தீவிர ஆதரவாளர், திருநெல்வேலி மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் கி.துரைராஜ். திமுக தலைமையுடன் முரண்பட்டு 'கானா'  கட்சியைவிட்டு வெளியேறிய பின்னும், அவருடன் தொடர்பில் இருந்தார் என்பது துரைராஜ் மீது வைக்கப்பட்ட முதல் குற்றச்சாட்டு. மேற்கு மாவட்ட தொகுதிகளுக்காக கட்சித்தலைமை கொடுத்த பணத்தை தேர்தலுக்காக செலவிடாமல் அப்படியே பத்திரப்படுத்திக்கொண்டாராம் துரைராஜ். இதை அப்போதே தலைமையின் கவனத்துக்கு கொண்டு சென்றார்கள் மாவட்ட நிர்வாகிகள். ஆனால் தலைமை காதுகொடுக்கவில்லை. தோல்விக்குப்பின் கடந்த வாரம் மேற்கு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. 80 சதவீதம் பேர் இந்த கூட்டத்திற்கு வராமல் புறக்கணித்துவிட்டனர். புகைப்பட பதிவு தலைமைக்கு அனுப்பி வைக்கப்பட்டபின்னர்தான் சுதாரித்தது தலைமை. இப்போது கட்டம் கட்டப்பட்டுள்ளார் துரைராஜ்.

கருணாநிதி காட்டியுள்ள இந்த திடீர் கடுமை , பல மாவட்டச் செயலாளர்கள் மத்தியில் கிலியை ஏற்படுத்தி உள்ள நிலையில், இரண்டாவது களையெடுப்பு நடவடிக்கைகள் குறித்த பேச்சுவார்த்தைகள் அறிவாலயத்தில் தற்போது தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. இதனால் மேலும் பல மாவட்டச் செயலாளர்கள் நீக்கப்படுவதற்கான அறிவிப்பு அடுத்த சில நாட்களில் வரலாம் என காதைக் கடிக்கின்றனர் அறிவாலயத்தை சுற்றி வரும் உடன்பிறப்புகள்.

எஸ்.கிருபாகரன், ஆண்டனிராஜ், ச.ஜெ.ரவி, வீ.கே.ரமேஷ்
படங்கள்: தி.விஜய், எல்.ராஜேந்திரன்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close