Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நதிநீர் இணைப்பு திட்டம் வறட்சிக்கு உண்மையான தீர்வா...?

ழக்கமான அரசியல் சதுரங்க ஆட்டத்தில் மீண்டும் சூழலியல் சிக்கித் தவிக்கிறது. எங்கு பிரச்னையோ, அதை அங்கேயே தீர்க்க எளிமையான வழிகளைத் தேடாமல், பிரச்னைகளை மேலும் அதிகப்படுத்தும், தொலைநோக்கில் எந்த நன்மையையும் கொண்டு வரப்போகாத, அதிக செலவுப்பிடிக்கும் திட்டத்தை முன்வைக்கிறார்கள் அரசியல்வாதிகள்.

'பண்டல்கண்ட் பிரதேசத்தின் தண்ணீர் பஞ்சத்தை தீர்க்க, கென் மற்றும் பெட்வா நதிகளை இணைக்க வேண்டும். அதற்கான முயற்சிகளை உடனே துரிதப்படுத்த வேண்டும். இல்லையென்றால், நான் உண்ணாவிரதத்தில் அமருவேன்' என்கிறார் மத்திய அமைச்சர் உமாபாரதி. ஆனால், செயற்பாட்டாளர்களும், சூழலியலாளர்களும்,  ' வரப்போக்கும் உத்தரபிரதேச மாநில தேர்தலை கணக்கில் கொண்டு உமாபாரதி இவ்வாறு பேசி உள்ளார். உண்மையில் இந்த நதிகளை இணைப்பதால், சிக்கல் அதிகம் ஆகுமே தவிர, எந்த பிரச்னையும் தீராது' என்கிறார்கள்.

கென் - பெட்வா நதி இணைப்பு:

கடந்த பல ஆண்டுகளாக பண்டல்கண்ட் பகுதியில் கடுமையான வறட்சி நிலவி வருகிறது. அப்பகுதியில் மட்டும், நாளொன்றுக்கு வறட்சியின் காரணமாக சராசரியாக மூன்று விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இந்தப் பகுதியின் வறட்சியை போக்க  ஆட்சியாளர்கள் கென் - பெட்வா நதிகளை இணைப்பை முன்வைக்கிறார்கள். அவர்கள் வைக்கும் வாதம், “கென் - பெட்வா நதிகளை இணைப்பதன் மூலம் 1,16, 140 ஏக்கர் நிலங்களில் பாசனம் செய்ய முடியும். அது மட்டுமல்லாமல் உத்தரபிரதேசம் மற்றும் மத்தியபிரதேசத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கானவர்களுக்கு குடிநீர் வழங்க முடியும். உண்மையில் இந்த திட்டம் ஒரு வரம்" என்று வழக்கம்போல் தேன் தடவிய வார்த்தைகளில் பேசுகிறார்கள் அரசியல்வாதிகள்.

மேலோட்டமாக பார்க்கையில் இந்தத் திட்டம் மிகவும் சரியானது என்று தோன்றினாலும், தொலைநோக்கில் பார்க்கையில் இது எந்த நன்மையையும் பயக்கப்போவதில்லை.

இத்திட்டத்தை செயல்படுத்த ஒரு பெரிய அணையைக் கட்ட வேண்டும். அந்த அணையை கட்டுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இடமும், பன்னா புலிகள் காப்பகத்தில் வருகிறது. இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் பட்சத்தில், பன்னா புலிகள் காப்பகத்தின் 10,233 ஏக்கர் நிலம் தண்ணீரில் மூழ்கும். இங்கு தான், புலிகள் தங்கி இனப்பெருக்கம் செய்வதற்கான தட்பவெப்ப சூழல் நிலவுகிறது. ஒரு வேளை, இந்தத் திட்டம் செயல்பாட்டிற்கு வரும் பட்சத்தில், பன்னா புலிகள் காப்பக்கத்தின் சூழலியலே கெடும். அது மட்டுமல்லாமல் கென் நதி,  அருகி வரும் பல உயிரினங்களுக்கு தாய்மடியாக திகழ்கிறது. இந்தத் திட்டம், அந்த ஆற்றங்கரை சுற்றுச் சூழலையும் கெடுத்துவிடும் என்கிறார்கள் சூழலியலாளர்கள்.


உங்களுக்கு மனித உயிர்களைவிட, புலிகளும் மற்ற சிறு உயிரினங்களும் முக்கியமாக போய்விட்டதா...? என்பது உங்கள் கேள்வியாக இருக்குமாயின், ராபின் பறவையின் மரணத்திற்கும், எல்ம் மரத்தின் அழிவிற்கும் உள்ள தொடர்பை கொஞ்சம் நினைவு கூறுங்கள். இங்கு எதுவும் தனித் தனியானது அல்ல. ஒன்றுடன் ஒன்று பிணைக்கப்பட்டது. அனைத்தையும் அழித்துவிட்டு மனிதன் மட்டும் தனியாக வாழ முடியாது.

அதுமட்டுமல்லாமல், பண்டல்கண்டின் நிலப்பரப்பு  மிக வித்தியாசமானது, அங்கு தொடர்ச்சியாக ஒரே மண் வகை கிடையாது. சிறிது தூர இடைவெளியில் மண்ணின் தன்மை வேறுபடும். அதற்கு நதி நீர் பாசனம் உகந்தது அல்ல என்கிறார் உத்தரபிரதேசம் பண்டா பகுதியை சேர்ந்த செயற்பாட்டாளர் புஷ்பேந்திரா. அதற்குப் பதிலாக, அந்தப் பகுதியில் விழும் மழையை அந்தப் பகுதியிலேயே தக்கவைக்கும் முயற்சிகளை அரசு எடுக்க வேண்டும். அதுதான் நிரந்திர தீர்வாக இருக்கும் என்கிறார் அவர். இதை வலியுறுத்தி  ‘குளத்தை சொந்தமாக்குங்கள்’ என்ற இயக்கத்தையும் நடத்தி வருகிறார்.

“கென் - பெட்வா நதிகளை இணைக்க பத்தாயிரம் கோடி ரூபாய் செலவு ஆகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. பணிகளை முழுவதுமாக முடிக்க 9 ஆண்டுகள் ஆகும் என்கிறார்கள். இந்த பணத்தை,  பண்டல்கண்ட் பகுதியில் உள்ள குளங்களை, ஏரிகளை மேம்படுத்துவதற்கு செலவு செய்தால்,  அந்தப் பகுதியின் நீர் பிரச்னையை முழுவதுமாக தீர்த்து,  சில ஆண்டுகளில் சோலையாக்கிவிடலாம்.” என்கிறார் செயற்பாட்டாளர் அமர் நாத்

மேலும், "இது எதையும் வார்த்தை வர்ணனைகளுக்காக சொல்லவில்லை. நாங்கள் நதிகளின் போக்கை தடுக்காமல்,  தடுப்பணைகள் கட்டியதன் மூலம் வியத்தகு மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறோம்" என்கிறார் அவர் .

சூழ்ச்சியான தரவு:

அது மட்டுமல்ல, "கென் - பெட்வா நதிகள் குறித்து அரசு சொல்லும் தகவல்களும் உண்மையானதாக இருக்க வாய்ப்பில்லை. கென் -பெட்வா நதிகளின் உபரி நீர் குறித்து நாங்கள் வழங்கிய அனைத்து தரவுகளும், பழைய கணக்குகளை அடிப்படையாகக் கொண்டது. அது எதுவும் முழுமையானது அல்ல" என்கிறார் உத்தர பிரதேச பாசனத் துறையைச் சேர்ந்த ஒரு அதிகாரி.

அதாவது, உண்மையாக  பண்டல்கண்ட் பகுதியின் வறட்சியை தீர்க்க நடவடிக்கை எடுக்காமல், கவர்ச்சியான திட்டத்தை  முன்வைத்து,  மக்களை திசை திருப்பவே அரசியல் கட்சிகள் முயற்சிப்பதாகவே தெரிகிறது.

 

 

சிறியதே அழகு:

தொடர்ந்து நதிநீர்  இணைப்பை எதிர்த்துவரும் சூழலியலாளர் பியூஷ், “இது மக்களை முட்டாள் ஆக்கும் திட்டம் மட்டுமல்ல, மொத்தமாக சூழலியலை அழிக்கும் திட்டம். இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், நதி நீர் பிரச்னைகள் அதிகமாகுமே தவிர நிச்சயம் குறையாது.

காடுகள்தான் தண்ணீரின் உற்பத்தியாளர்கள். நதிகள் சுரக்கும் மார்பாக காடுகள்தான் இருக்கின்றன. ஆனால், இவர்கள் உற்பத்தியாளரை அழித்து விட்டு, தண்ணீரை சேமிக்க கிடங்கு (அணை) கட்டுகிறேன் என்கிறார்கள். இது எத்தகைய அறிவியல்...?

நாங்கள் தருமபுரியில் சில நுண்ணிய திட்டங்களை செயல்படுத்தி, மூன்று ஓடைகளை வெட்டி உள்ளோம். இதனால் மூன்று கிராம மக்கள் பயன் அடைந்துவருகிறார்கள். இதற்காக நாங்கள் செலவு செய்தது வெறும் 13 லட்சம் ரூபாய்தான். இதுதான் வளம்குன்றா தீர்வும் கூட.” என்கிறார்.

உத்தரபிரதேச பாண்டா நகரத்தை சேர்ந்த பிரேம் சிங் என்னும் விவசாயியும்  இதையே வழிமொழிகிறார். இவர் கடும் வறட்சியிலும் வெற்றிகரமாக இயற்கை வேளாண்மை செய்துவருகிறார். அவர், “ பண்டல்கண்ட் எப்போதும் வறட்சியானப் பகுதிதான். ஆனால், மக்கள் தங்கள் மரபறிவைக் கொண்டு வெற்றிகரமாக தண்ணீரை சேமித்து விவசாயம் செய்து வந்துள்ளார்கள். ஆனால், நாம் பெரிய திட்டங்களை முன் வைத்து, நாம் அவர்கள் மனதை சீரழித்து விட்டோம். பெரிய அணைகளை கட்டுவதற்கு பதில், சிறு ஓடைகள், குளங்கள், ஏரிகளை கட்டுவதன் மூலம், நாம் வறட்சியை எதிர்கொள்ள முடியும்.”

- மு. நியாஸ் அகமது

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close