Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

எல்லை மீறும் எத்தனால் கலப்பு... அதிகரிக்கும் உயிரிழப்பு... அலட்சியம் காட்டும் அரசு!

 

து பழக்கத்துக்கு ஆளான இந்தியர்களில், ஒன்றரை மணி நேரத்துக்கு ஒருவர் மரணமடைகிறார் எனவும், ஒரு நாளைக்கு 15 நபர்கள் வரை மரணம் அடைகிறார்கள் எனவும் தேசிய குற்றவியல் ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள தகவல் அதிர வைக்கிறது.

இது 2013-ம் ஆண்டின் நிலவரம்தான். 2016-ம் ஆண்டுக்கான இறப்பு விகிதம், இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. தொடர்ந்து மது அருந்துபவர்கள், உடலின் பல்வேறு உறுப்புகள் பாதிக்கப்பட்டு இறுதியாக மரணம் அடைகிறார்கள். மது குடிப்பவர்களால் குடும்ப உறுப்பினர்களும் அதிகளவில் மன உளச்சலுக்கு ஆளாகிறார்கள். பெண்களையும், குடும்பத்தினரையும் பற்றி சொல்லவே வேண்டாம். இதன் காரணமாக தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், இந்தியா முழுவதுமே பரவலாக மது பழக்கத்திற்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. இதன் காரணமாகவும், பல்வேறு அமைப்புகள்  போராட்டம் நடத்தியதன் விளைவாகவும், கடந்த தேர்தல் அறிக்கையில் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் அறிவித்திருந்தார். முதல் கட்டமாக மது விற்பனை நேரத்தை குறைத்திருக்கிறார்.

எப்படி பார்த்தாலும் மதுவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது. அதுமட்டுமல்ல, இந்தியாவில் சராசரியாக ஒருவர் மது அருந்தும் அளவும் அதிகரித்துக் கொண்டே போகிறது என்ற  அதிர்ச்சி தகவலும் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது 2003 - 05 வரையிலான காலகட்டத்தில் 1.6 லிட்டராக இருந்த ஒருவரின் மது அருந்தும் அளவு, 2010 - 12 ல் 38 சதவீதம் அதிகரித்து. 2.2 லிட்டராக உயர்ந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதுமட்டும் இல்லாமல் குடிப்பவர்களின் எண்ணிக்கையும் தமிழகத்தில் 11 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இதுவே உலக அளவில் 16 சதவிகிதம் அதிகரித்துள்ளது. தேர்தலுக்கு முன் எடுத்த ஒரு சர்வேயில்,  மதுவிலக்கு வேண்டாம் என கேரளாவில் 47 சதவிகிதத்தினரும், தமிழகத்தில் 52 சதவிகிதத்தினரும் கூறியுள்ளர்கள்.

மதுப் பழக்கத்தினால் ஒருவருடைய உடல் நலம் மட்டும் பாதிக்கப்படுவதில்லை. அவருடைய நல்ல பழக்க வழக்கங்களும் மாறுகின்றன. மேலும் சமூகம் சார்ந்த பிரச்னைகளும் உருவாகின்றன. அதாவது தமிழகத்தில் பெரும்பாலான வாகன விபத்துகள் மதுவினால்தான் ஏற்படுகிறது. இதுமட்டும் இல்லாமல் பெண்களின் மீது வன்முறை, பாலியல் தொந்தரவு, குடும்ப வன்முறை என பல பிரச்னைகளுக்கும் முக்கிய காரணமாக அமைந்துவிடுகிறது.

மதுக் குடிப்பவர்கள் மரணம் அடைவதற்கு முக்கிய காரணம், பரிந்துரைக்கப்பட்ட அளவை விட மதுவில் அதிகமாக எத்தனால் கலந்திருப்பது மற்றும் தரமற்ற தயாரிப்பு வழிமுறைகள்தான் என சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் செயலாளர் செந்தில் ஆறுமுகம் கூறுகிறார். மேலும் மது தயாரிப்பு முறைகள் குறித்தும் அவர் விளக்குகிறார்.

''மது, உலக அளவில் பிரபலமான போதை பொருள். இதை எப்படி முறைப்படி தயாரித்து, பதப்படுத்தி பயன்படுத்த வேண்டும் என  வரையறைகள் உள்ளன. ஆனால், தமிழகத்தில் அப்படி எதுவும் இல்லை. மேலும், மது தயாரிக்கும் நிறுவனங்களினால் தமிழக கட்சிகள் அதிகமாக நன்மை அடைவதால், தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சிகள் அது குறித்து அக்கறை காட்டுவதும் இல்லை. வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் மது, குறிப்பிட்ட ஆண்டுகள் கழித்துதான் விற்பனைக்கு வருகிறது. ஆனால், தமிழகத்தில் தயாரிக்கப்படும் மது உடனடியாக விற்பனைக்கு வருகிறது. மதுவில் எவ்வளவு சதவிகிதம் எத்தனால் கலந்திருக்க வேண்டுமென்று வரைமுறை உள்ளது. இது ஒவ்வொரு மதுபான வகைக்கும் மாறுபடும். ஆனால், நாங்கள் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் மதுவை பரிசோதனை செய்தபோது, அந்த மது வகையில் 42.8 சதவிகிதம் எத்தனால் இருக்க வேண்டுமென்று அந்த பாட்டில் டேபிளில் இருந்தது. ஆனால் சோதனையில்,  அந்த மதுவகையில் 47 சதவிகிதம் எத்தனால் கலந்திருப்பதை கண்டுபிடித்தோம். இதை எங்கள் அமைப்பு பரிசோதனை செய்து வெளியிட்ட பிறகு, குறிப்பிட்ட பேட்ச் மதுபாட்டில்கள் மட்டும் விற்பனை செய்யாமல் தடுக்கப்பட்டது. ஆனால், சம்பந்தப்பட்ட மது தயாரிப்பு நிறுவனங்களின் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை'' என்றார்.

மேலும் மது குடித்து இறப்பவர்களின் விவரங்களை தமிழக அரசு தெரிவிக்க மறுக்கிறது. இந்த விவரம் கேட்டு ஆர்.டி.ஐ போட்டாலும் அதற்கு சரியான பதில் தெரிவிப்பதில்லை. மது அருந்துவதால் நேரடியாக யாரும் இறப்பதில்லை. ஆனால் பல உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு மரணமடைகிறார்கள். இதை அரசு,  தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறது. மது விற்பனையை குறைத்தால் வருமானம் குறையும் என அரசு நினைக்கிறது. கேரளா,பீகார் உள்ளிட்ட பல மாநில அரசுகள், மக்களின் உடல் மற்றும் மன நலம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து மதுவை ஒழித்து வருகின்றன.

தமிழகத்திலும் வெறும் கண் துடைப்புக்காக அல்லாமல், மதுவை ஒழிப்பதற்கான உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் நாள் எந்நாளோ...?

இரா. ரூபாவதி

எடிட்டர் சாய்ஸ்

MUST READ