Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

17 மாணவர்கள் மரணம்: பலி பீடங்களாக மாறும் IIT- JEE பயிற்சி மையங்கள்!

வள் பெயர் கீர்த்தி திரிபாதி. வயது 17. மிகவும் சுறுசுறுப்பானவள். பள்ளிப் படிப்பிலும் பயங்கர சுட்டி. அவளுக்கு என்னென்ன கனவுகள் இருந்தன என்று தெரியாது. ஆனால், அவள் குறித்து அவள் பெற்றோருக்கு பல கனவுகள் இருந்தன. ஆனால் பாவம், அவள் பெற்றோருக்கும் தெரியாது அந்த கனவுகள், கீர்த்தியின் மனதிற்கு நெருக்கமானதா என்று. அவள் ஒரு கழுதையாக... மன்னிக்கவும் வேறு என்ன வார்த்தைகள் பயன்படுத்துவது என்று தெரியவில்லை... ஆம் ஒரு கழுதையாகதான் அவள் பெற்றோரின் கனவுகளை சுமந்தாள். துரதிருஷ்டமான ஒரு நாளில் கனவுகளின் சுமை தாங்காமல்,  ஐந்து மாடி கட்டடத்திலிருந்து குதித்து தன்னைத்தானே மாய்த்துக் கொண்டாள். 

நம் பிள்ளைகளை, இரண்டுமுறை கொல்கிறோம்:

அவள் எழுதி இருந்த தற்கொலை கடிதத்தில்,  " நான் JEE மெயின்ஸ் தேர்வில் குறைவான மதிப்பெண்கள் பெற்றதற்காக நான் தற்கொலை செய்து கொள்ளவில்லை" என்று குறிப்பிட்டு இருக்கிறாள். இத்தனைக்கும் அவள் குறைவான மதிப்பெண் பெறவில்லை. பொதுப் பிரிவினருக்கான கட் ஆஃப் மதிப்பெண்கள் 100. ஆனால், அவள் 144 மதிப்பெண்கள் எடுத்திருந்தாள். பின்பு ஏன் அவள் தற்கொலை செய்து கொண்டாள்...?


அவளே தொடர்கிறாள், “எனக்கு என்னையே பிடிக்காமல் போய்விட்டது. நான் என்னை வெறுக்க துவங்கிவிட்டேன். எந்த அளவிற்கு என்றால் என்னையே மாய்த்துக் கொள்ளும் அளவிற்கு. என் தலையில் கேட்கும் சத்தம், என் இதயத்தின் வெறுப்பு, என்னை பைத்தியமாக்குகிறது.”

அந்த தற்கொலை கடிதத்தில் அம்மாவிற்கு இப்படி எழுதி இருக்கிறாள், “நீங்கள் சூழ்ச்சிகொண்டு என் மீது அறிவியல் பாடத்தை திணித்தீர்கள். நான் உங்கள் மகிழ்ச்சிக்காக அறிவியல் பாடத்தை தேர்வு செய்தேன். தயவு செய்து இதே மாதிரி சூழ்ச்சிகளை பதினொன்றாவது படிக்கும் என் தங்கையிடம் செய்யாதீர்கள்...” என்று.

எந்த முன் முடிவுகளும் இல்லாமல், தெளிவாக யோசிப்போமானால், தன் பூத உடலை மாய்த்துக் கொள்வது மட்டும் மரணம் அல்ல. தனது ஆன்மாவை சுதந்திரமாக சிந்திக்கவிடாமல், தன் ஆன்மாவின் விருப்பங்களை பூர்த்தி செய்யாமல் இருப்பதும் மரணம்தான். இங்கு நம் பெரும்பாலான பிள்ளைகள் அப்படிதான் வாழ்கிறார்கள். இந்த தலைமுறை குழந்தைகளில் பெரும்பாலானவர்கள் இரண்டு உலகத்தில் வாழ்கிறார்கள். தங்கள் கனவுகளை கொண்ட ஓர் உலகம், தம் பெற்றோர்களின் கனவுகளைக் கொண்ட இன்னொரு உலகம். பெற்றோர்களின் கனவுகளைக் கொண்ட இன்னொரு உலகத்தைதான் அவர்கள் வெளி உலகத்துடன் பகிர்ந்து  கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள். வாழ்வு முழுவதும் பொய்யாகவே வாழ்கிறார்கள். இந்த அழுத்தத்தினால் ஒரு நாள் தன் பூத உடலை மாய்த்துக் கொள்கிறார்கள். ஆம். நம் பிள்ளைகளை நாம் இரண்டு முறை கொல்கிறோம்.

ஆனால், இந்த கட்டுரை கீர்த்தி குறித்தானதோ அல்லது இன்றைய கல்வி முறை குறித்தானதோ மட்டுமல்ல. ஆம். இங்கு மனசாட்சி உள்ள அனைவருக்கும்  நன்கு தெரியும், நம் கல்வி முறை மனிதர்களின் ஆளுமையை வளர்ப்பதாக இல்லை, சந்தைக்கான அடிமைகளை உற்பத்தி செய்வதாக மட்டுமே இருக்கிறதென்று. சந்தை பொருளாதாரத்தில் மாற்றம் கொண்டு வராமல் தனியாக கல்வியில் மட்டும் மாற்றம் கொண்டு வருவது சிக்கலைதான் அதிகப்படுத்தும். ஆனால், அதே நேரம் எவ்வளவு அழுத்தங்களை நம் பிள்ளைகள் மீது திணிப்பது...?


கோட்டாவில் தொடரும் மரணங்கள்:

 

நம் ஊரு நாமக்கல் பள்ளிக்கூடங்கள் போல,  இந்திய அளவில்  ராஜஸ்தான் மாநிலம் 'கோட்டா' என்ற ஊரில் இருக்கும் ஐஐடி, மருத்துவ நுழைவு தேர்வுக்கான பயிற்சி மையங்கள் மிகப் பிரபலம். இங்குதான் கீர்த்தியும் படித்தாள், இறந்தாள். ஆனால் அங்கு கீர்த்தி மட்டும் இறக்கவில்லை. கேஷவ் மீனா என்னும் 17 வயது பையன், மருத்துவ நுழைவுத் தேர்வை சரியாக செய்யாததால் கோட்டாவில் தற்கொலை  செய்துகொண்டிருக்கிறான். அதுபோல நுழைவு தேர்வுக்கு, கோட்டாவிற்கு படிக்க சென்ற சிவதத், சுரேஷ் என மொத்தம் 17 பேர் மன அழுத்தம் தாங்காமல், இந்த ஏழு மாதங்களில் தற்கொலை செய்து  கொண்டிக்கிறார்கள்.

இறப்பு மட்டுமல்ல, இங்கு படிக்கும் மாணவர்கள் ரத்த அழுத்தம், ஒற்றைத் தலைவலி என  எண்ணற்ற நோய்களுக்கும் ஆளாகிறார்கள். மன அழுத்தத்தால் தவித்த இரண்டு மாணவர்களுக்கு சிகிச்சை அளித்த மனதத்துவ நிபுணர் மருத்துவர் அகர்வாலிடம், இரண்டு மாணவர்கள் இவ்வாறாக சொல்லி இருக்கிறார்கள், “எங்கள் பெற்றோர் IIT- JEE நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்ற பின்பே வீடு திரும்ப சொல்லி இருக்கிறார்கள்...” என்று.  அனைத்து பெற்றோர்களும் அப்படியே சொல்வதால் வெற்றி பெறாத மாணவர்கள் எப்போதும் வீடு திரும்புவதில்லை. தன்னைத் தானே, மாய்த்துக் கொண்டு கோட்டாவிலே இறந்து போகிறார்கள்.

கோட்டாவும் வணிகமும்...:

அசோசெம் (ASSOCHAM, The Associated Chambers of Commerce of India) மதிப்பீட்டின்படி, இந்த பயிற்சி மையங்களின் ஆண்டு வணிகமதிப்பு 100 பில்லியன் ரூபாய். அங்குள்ள பயிற்சி மையத்தில் சராசரியாக வாங்கப்படும் கட்டணம், குறைந்தபட்சம் ஒருவருக்கு ஒரு லட்சம் ரூபாய். பயிற்சி மையங்கள் நமக்கு பிடிக்கவில்லை என்று, நாம் பாதியில் இடை நின்றாலும் கூட அவர்கள் பணத்தை திரும்ப தருவதில்லை. ஒரு நாளைக்கு 18 மணி நேரம் படிக்க நிர்பந்திக்கப்படுகிறார்கள்.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் நலனுக்காகவென்று தங்களைத் தாங்களே சமாதானம் செய்து  கொண்டு எடுக்கும் முடிவுகளை, கோட்டாவில் உள்ள பயிற்சி மையங்கள் எந்த அறமும் இல்லாமல் வெறும் வணிகமாக மட்டும் பார்த்து, அவர்களது கனவுகளை காசாக்கிக் கொண்டிருக்கிறது.

கல்வி முக்கியம்தான்... அதை விட மிக முக்கியம் நம் பிள்ளைகளின் உயிர். அதை நாம் உணர மறுப்போமானால்,  நம் குழந்தைகளை யாராலும் காக்க முடியாது.

- மு. நியாஸ் அகமது
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close