Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மதுக்கரை மகாராஜுக்கு மோடியிடம் மனு அளிக்கத் தெரியாதது குற்றமா...?

மீண்டும் ஒரு யானை மக்களை அச்சுறுத்தியதாக பிடிபட்டு இருக்கிறது. மீண்டும் ஒரு யானை தொடர்வண்டியில் அடிபட்டு இறந்து இருக்கிறது.  யானை நகரத்திற்குள் வருவதும், யானை ரயிலில் அடிபட்டு இறப்பதும் உண்மையில் தற்செயலான நிகழ்வுகள் இல்லை. அரசின் கொள்கைகளுக்கும் இதற்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கிறது. ஆம். நாம் திட்டமிட்டு காடுகளை அழிக்கும்போது, அதன் வழித்தடங்களை ஆக்கிரமிக்கும்போது, அந்த யானைகள் என்ன செய்யும்...? பாவம் அதற்கு மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க தெரியாது, நில ஆக்கிரமிப்பு வழக்குகளை கையாள காவல் துறையில் தனி பிரிவு துவங்கப்பட்டதும் தெரியாது.

உண்மையில் ஒரு பெரும் வேட்கையுடன் நீதி வேண்டிதான் அலைகின்றன.  காடுகள் அழிப்பு, யானைகள் வழித்தடம் ஆக்கிரமிப்பு என எதுவும் புதிய விஷயங்கள் இல்லை. பல நூறு முறை விவாதிக்கப்பட்ட விஷயங்கள் என நம் அனைவருக்கும் தெரியும். ஆனால், நாம் அதிலிருந்து எந்த பாடங்களையும் கற்கவில்லை என்பதுதான் பெரும் துயரம்.

அழிக்கப்படும் காடுகள்:

அறிவியல் மற்றும் சூழலியலுக்கான மையம்,  கடந்த இரண்டாண்டு கால மோடி அரசின் சூழலியல் சார்ந்த செயல்பாடுகளை ஆய்வு செய்து, அறிக்கை சமர்ப்பித்துள்ளது. அந்த அறிக்கை, சென்ற காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கும், பிஜேபி தலைமையிலான இந்த தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கும் எந்த வேறுபாடும் இல்லையென்பதை உணர்த்தும்படி இருக்கிறது. உண்மையில் வளர்ச்சி என்ற பெயரில் காடுகளை அழிப்பதில், சுரங்கம் அமைக்க காடுகளை தனியாருக்கு தாரைவார்ப்பதில் இருவருக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை அந்த அறிக்கை காட்டுகிறது.

தேசிய வனவிலங்கு வாரியம்,  உச்சபட்ச அதிகாரம் கொண்ட அமைப்பு. இதன் அனுமதி இல்லாமல் வனவிலங்கு வாழ்விடங்கள் அருகில் எந்த திட்டத்தையும் செயல்படுத்த முடியாது. ஆனால், கடந்த இரண்டாண்டு காலகட்டத்தில் மட்டும் இந்த அமைப்பு, 301 திட்டங்களை  வனவிலங்கு இருப்பிடங்களுக்கு அருகில் செயல்பட அனுமதி அளித்துள்ளது. இது ஒப்பீட்டளவில்,  காங்கிரஸ் ஆட்சியை விட அதிகம் என்கிறது அந்த அறிக்கை.

ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் இரண்டாவது ஆட்சியின் போது, தேசிய வனவிலங்கு வாரியம் 17 கூட்டங்களைக் கூட்டி உள்ளது. அதில் வனவிலங்கு இருப்பிடம் அருகே செயல்பட அனுமதி கோரிய 11.90 சதவீத திட்டங்களுக்கு அனுமதி மறுத்துள்ளது. ஆனால், இந்த சதவீதம் இந்த இரண்டாண்டு கால மோடி ஆட்சியில் 0.01% சதவீதம் என்ற அளவிற்கே இருக்கிறது. அதாவது, காடுகளுக்கு உள்ளேயும், அருகேயும் செயல்பட அனுமதி கோரிய பெரும்பாலான திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளன.

ஜூன் 2014 ல் துவங்கி, ஏப்ரல் 2016 வரையிலான இந்த இரண்டாண்டு காலகட்டத்தில் 68 நிலக்கரி சுரங்க திட்டத்திற்கும், 12 இரும்புத் தாது சுரங்க திட்டத்திற்கும், 34 சுண்ணாம்பு சுரங்க திட்டத்திற்கும், 10 பாக்ஸைட் திட்டத்திற்கும், 184 ஜல்லி, மணல் மற்றும் இன்னும் பிற சுரங்க திட்டத்திற்கும் அனுமதி அளித்துள்ளது.  

குறிப்பாக, 47, 473 ஹெக்டேர் காடுகள் இந்த திட்டங்களுக்காக அளிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், “நாங்கள் ஆட்சி அமைப்பதற்கு  முன்பான 17 மாத காலகட்டதில் தேசிய வனவிலங்கு வாரியம்  கூட்டம் கூடவே இல்லை. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தால் இறுதிசெய்யப்பட்ட நிறைய திட்டங்கள் அனுமதிக்காக காத்திருந்தன. நாங்கள் பொறுப்பேற்றதும் கூடிய  தேசிய வனவிலங்கு வாரியக் கூட்டத்தில், அந்த திட்டங்கள்தான் அனுமதி பெற்றுள்ளன. அதுமட்டுமல்ல காங்கிரசின் முதல் இரண்டாண்டு ஆட்சியில் அளிக்கப்பட்ட அனுமதியை விட, இது குறைவு” என்கிறார்.

ஆம். அது உண்மையும் கூட. ஆக, இரு அரசாங்கங்களும்  வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரில் காடுகளை அழிப்பதில் எந்த வித்தியாசமும் காட்டவில்லை என்பது நிதர்சனமாகிறது.


மந்த நிலையில் நமாமி கங்கா திட்டம் :

இருபதாயிரம் கோடி ரூபாயில் கங்காவை புதுப்பிக்க துவங்கப்பட்ட நமாமி கங்கா திட்டமும் மந்த நிலையில் இருப்பதாக அந்த ஆய்வறிக்கை சொல்கிறது. 'ஜூலை 2014 முதல்  கங்காவை புதுப்பிக்க 21 திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டன. ஆனால், எந்த திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. இதனால், அரசின் பணம் விரயமாக்கப்படுகிறது' என்கிறது ஆய்வறிக்கை.

இவற்றுக்கு மத்தியில், நமக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமான ஒரு குறிப்பும் அந்த அறிக்கையில் உள்ளது. அதாவது, இவ்வரசு தண்ணீர் மாசை குறைப்பதற்கு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்கிறது அறிவியல் மற்றும் சூழலியலுக்கான மையத்தின் அறிக்கை.

ஒட்டு மொத்தமாக பார்த்தால் காடுகளை வளர்ச்சித் திட்டங்களுக்கு மடைமாற்றி இருப்பதுதான் உறுத்துகிறது.

வாரணம் என்ன செய்யும்...?:


 

வனத்தின் செல்லப் பிள்ளை வாரணம். அதன் வனத்தை அதனிடமிருந்து பிரித்து விட்டு, ஒரு கொடும் வில்லனை வீழ்த்திவிட்ட தொனியில் யானையை பிடித்த செய்தி பரிமாறப்படுவது வன்முறையின் உச்சம். அந்த வாரணம்  ஏதோ திட்டமிட்டு மனிதர்களை தாக்கியது போலவும், வயல்களை அழித்தது போலவும் முணுமுணுக்கப்படுகிறது. அந்த யானை ஒரு ஆக்கிரமிப்பாளன் போல் சித்தரிக்கப்படுகிறது. ஆனால்,  உண்மையில் யார் ஆக்கிரமிப்பாளர்கள்...? அந்த யானைகளா இல்லை நாமா...? வளர்ச்சி தேவைதான். ஆனால், அது பிறர் வாழ்வை அழிப்பதாக இருக்க கூடாது. அனைவரும் இயைந்து வாழும் வளம் குன்றா வளர்ச்சியாகதான் அது இருக்க வேண்டும்.  மீண்டும் மீண்டும் நம் தேவைகளுக்காக கானகத்தை ஆக்கிரமித்துக் கொண்டே போனால், பாவம் அந்த வாரணம் என்னதான் செய்யும்...?

-  மு. நியாஸ் அகமது
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ