Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அரசின் சலுகைகள் மட்டும் வேண்டும்... ஆனால் சட்டம் வேண்டாமா? - ஐடி நிறுவனங்களை கேள்வி கேட்கும் ஊழியர்கள்!

ருவழியாக நீண்ட போராட்டத்திற்கு பின்பு, தொழிற்சங்கம் அமைக்கும் உரிமையை வென்றெடுத்திருக்கிறார்கள்  தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள். பணி நீக்கம் செய்யப்பட்ட மென்பொறியாளர்கள் சார்பாக தேசிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி தொடர்ந்த வழக்கில், 'ஊழியர்கள்  தொழிற்சங்கம் அமைத்து தீர்வை தேடலாம்' என  இந்த விவகாரத்தில் தனது நீண்ட நாள் மெளனத்தை அண்மையில் கலைத்துள்ளது தமிழக அரசு.

இந்த தீர்ப்பு குறித்து அண்மையில் ஒரு ஊடகத்திற்கு கருத்து தெரிவித்த இன்ஃபோசிஸின் முன்னாள் நிர்வாக குழு உறுப்பினர் மோகன்தாஸ் பை,  இந்த தீர்ப்பு மகிழ்ச்சி அளிப்பதாக இல்லை என்று கூறியுள்ளார். அவர் மட்டுமல்ல, பல மென்பொறியியல் நிறுவனங்களும், இத்தகைய கருத்தைதான் வெளியிட்டுள்ளன. இது மட்டுமல்ல, மோகன்தாஸ் அந்த பேட்டியில், இதை தேவையற்ற கட்டுப்பாடு என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இது சம்பந்தமாக ஐடி ஊழியர்களின் உரிமைகளுக்காக செயல்படும் தகவல் தொழில் நுட்பப் பணியாளர்களின் மன்றம் (Forum for I.T. Employees) என்ற அமைப்பு, மோகன்தாஸிற்கு ஒரு நீண்ட கடிதத்தை அனுப்பி உள்ளது. அதில் பல கேள்விகளை எழுப்பி உள்ளது.

இந்த சட்டம் சம்பந்தமாக மோகன்தாஸின் கருத்தை முதலில் பார்ப்போம்...

ஊழியர்கள் விரும்பியே வேலையை விடுகிறார்களா...?

மோகன்தாஸ், “ உண்மையில் இது ஒரு கெட்ட செய்தி. பல மாநிலங்கள் தகவல் தொழில்நுட்ப துறைக்கு தொழிலாளர் சட்டங்களிலிருந்து விலக்கு அளித்துள்ளது. ஆனால், தமிழகம்  இந்த சட்டத்திற்கு அனுமதி அளித்து இருப்பது உண்மையில் மகிழ்ச்சிகரமானதாக இல்லை. இனி தமிழகத்தில் உள்ள தகவல் தொழிற்நுட்ப நிறுவனங்கள், தங்கள் நிறுவனத்தை அம்மாநிலத்தில் விரிவாக்கம் செய்ய பல முறை யோசிக்கும். 

இந்த தகவல் தொழில்நுட்ப துறையில்,  15 முதல் 20 சதவீதம் பேர் தங்களுக்கு வேலை திருப்தியளிக்கவில்லை என்றால் வேலையை விடுகிறார்கள். அதாவது தங்களுக்கு திருப்தியான வேறு நிறுவனத்தை தேர்ந்தெடுக்கிறார்கள்.

ஐடி நிறுவனங்களின்  நேர்முகத்தேர்வில், 20 சதவீத பேருக்கு வாய்ப்பளித்தால், அதில் குறைந்தது 15 சதவீத பேர் வேலைக்கு சேருவதில்லை. நாங்கள் அவர்களுக்கு எந்த அபராதமும் விதிப்பதில்லை. அதுபோல், ஊழியர்கள் வேறு நிறுவனத்திற்கு செல்லக் கூடாது, எங்கள் நிறுவனத்திலேயேதான் வேலை பார்க்க வேண்டும்  என்று நிர்பந்திக்க எந்தச் சட்டமாவது இருக்கிறதா... இல்லைதானே...? அப்புறம் என்ன தொழிலாளர் சட்டம்?. 

இவ்வளவு வேலை வாய்ப்புள்ள ஒரு துறைக்கு இந்தச் சட்டம் தேவையில்லை. அதுமட்டுமல்ல  இந்த துறை மற்ற துறைகள் போன்றதல்ல, 24 X 7 மணி நேரமும் உழைப்பை கோரும் துறை. அதனால் இந்த சட்டம் தொல்லையைதான் தரும்"  என்று கூறியுள்ளார். அது மட்டுமல்லாமல், "தமிழகத்தில் இனி மென்பொருள் நிறுவனங்கள், தங்கள் விரிவாக்க பணிகளை மேற்கொள்ள வேண்டாம். சந்திரபாபு மீண்டும் வந்துவிட்டார். அதனால் ஆந்திராவிற்கு செல்லுங்கள்" என்று ஆலோசனையும் வழங்கி உள்ளார்.

சலுகை வேண்டும்...சட்டம் வேண்டாமா...?:

மோகன்தாஸின் இந்த கருத்து குறித்து, கடிதம் எழுதி உள்ள  ஐடி ஊழியர்களுக்கான பொது மன்றம் என்ற அமைப்பு, “சலுகை வேண்டும் ஆனால் சட்டம் வேண்டாமா...? “ என்று வினா எழுப்பி உள்ளது. 

" தமிழக அரசு ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனம் துவங்க எண்ணற்ற சலுகைகளை வழங்குகிறது. அவர்களுக்கும் வரிச் சலுகை உண்டு, மின்சார கட்டணத்தில் சலுகை உண்டு. அது மட்டுமல்ல, நிறுவனத்தை துவங்குவதற்கே பல ஒதுக்கீடுகளை வழங்குகிறது. இவ்வளவும் செய்ய காரணம் புதிய வேலை வாய்ப்புகளை உண்டாக்கதான். ஆனால், சலுகைகளை மட்டும் அனுபவித்துக் கொண்டு சட்டம் வேண்டாமென்று சொல்வது என்ன நியாயம்...? இதுபோன்ற அமெரிக்க சட்டத்தையோ அல்லது ஐரோப்பிய சட்டத்தையோ வீண் என்று மோகன் தாஸால் சொல்ல முடியுமா...?

இந்த சட்டம் ஏன் வேண்டாமென்று மோகன் தாஸ் சொல்லும் காரணமே, இந்த சட்டம் ஏன் வேண்டும் என்பதற்கான காரணமாக அமைகிறது. அதாவது 15 முதல் 20 சதவீதம் வரை தங்களுக்கு வேலை திருப்தியளிக்கவில்லை என்றால், வேலையை விட்டு தங்களுக்கு பிடித்தமான வேறு நிறுவனங்களுக்கு செல்கிறார்கள். அது மட்டுமல்ல, வேலை அளித்தாலும் 15 சதவீதம் பேர் வந்து பணியில் சேருவதில்லை என்கிறார்.

ஆனால், உண்மையான கள நிலவரம் என்ன...?  இவர்கள் உண்மையில் தங்களுக்கு பிடித்துதான் வேலையை விடுகிறார்களா... அல்லது நிர்பந்தத்தால் வேலையை விடுகிறார்களா...? அண்மையில் CiteHR மேற்கொண்ட ஆய்வில்,  தானாக முன் வந்து வேலையை ராஜினாமா செய்வதில் 8.03 சதவீதம் பேர்தான், தங்கள் சொந்த காரணங்களுக்காக வேலையை விடுகிறார்கள். 91 சதவீதத்திற்கு மேலானோர்  வேலையைவிட காரணம் நிறுவனக் காரணிகள்தான். அதாவது, ஊழியர் - மேலாளர் உறவு நன்றாக இல்லாதது, பழமையான மனித வளக் கொள்கைகள், வேலையிடத்தில் சந்திக்கும் பாலியல் துன்புறுத்தல்கள், அற்ப சம்பள உயர்வு போன்றவைதான் காரணம். பெரும்பாலான சமயம், இதை சரி செய்ய நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு மேலாளர் தயக்கம் காட்டுகிறார். அதுதான் பெரும்பாலான ஊழியர்கள் வேலையைவிட்டுச் செல்ல காரணமாகிறது. அதாவது பெரும்பாலானோர் கட்டாயத்தால்தான் வேலையை விட்டுச் செல்கிறார்கள்.

இது மட்டுமல்ல, வேலைவாய்ப்புக் கடிதம் பெற்றவர்களில் 15 சதவீதத்திற்கும் மேலானவர்கள் பணியில் சேர்வதில்லை.  இதற்காக நாங்கள் அவர்களுக்கு அபராதம் விதிக்க முடியுமா என்கிறார். அண்மையில் 1500 பேருக்கு வேலை வாய்ப்புக் கடிதத்தை எல் & டி நிறுவனம் வழங்கி விட்டு, பின்னர் அவர்களை பணியில் அமர்த்தவில்லை. அந்தக் கடிதம் சட்டப்பூர்வமான ஒப்பந்த பிணைப்பு இல்லை என்று சொல்லிவிட்டது. பின்னர் அவர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தியும் எந்தப் பலனும் இல்லை... இதற்கு என்ன சொல்கிறார் மோகன் தாஸ் ? " என்று அந்த அமைப்பு வினா எழுப்புகிறது.

முதலாளிகளுக்கு மட்டும் சங்க வேண்டுமா...?:

மேலும் " ஊழியர்களுக்கு சங்கம் வேண்டாம். ஆனால், முதலாளிகளுக்கு மட்டும் சங்கம் வேண்டுமா...?. 'நாஸ்காம்'  என்ற கூட்டமைப்பை தகவல் தொழிற் நுட்ப நிறுவனங்கள் அமைத்து, பல அழுத்தங்களை கொடுத்து, தங்கள் நலனுக்கு சாதமாக அரசின் கொள்கைகளையே மாற்ற வைக்கின்றன. வட அமெரிக்காவில் உள்ள தங்கள் நிறுவனக் கிளைகளின் நலனுக்காக, அண்மையில் நாஸ்காம் தனது செல்வாக்கை செலுத்தி, அமெரிக்க குடியமர்வு மசோதாவையே மாற்ற வைத்தது.

முதலாளிகள் தங்கள் நலனுக்காக சங்கம் அமைக்கும் போது, ஊழியர்கள் மட்டும் செய்யக் கூடாதா...?

தொழிலாளர் சட்டம் என்பது தொழிலாளர்களை மட்டும் காப்பதில்லை. அதில் முதலாளிகளின் நலன் சார்ந்த பல வழிக்காட்டுதல்களும் உள்ளன. அதை மோகன் தாஸ் போன்றவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்" என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மோகன் தாஸின் பதில்:

இது கடிதத்திற்கு மோகன் தாஸ் அனுப்பி உள்ள பதிலில்,

" கட்டாயமாக வேலையைவிட்டு அனுப்பப்படுகிறார்கள் என்பது முட்டாள்தனமானது. 5 முதல் 10 சதவீதம் பேர் வேண்டுமானால் அப்படி அனுப்பப்படலாம் " என்று தெரிவித்துள்ளார்.

அது மட்டுமல்ல, "செயல் திறனற்ற ஊழியர்களை நாங்கள் வேலையிலிருந்து அனுப்பும் போது ரூபாய் ஒரு லட்சம் வரை இழப்பீடாக தருகிறோம் . ஐடி ஊழியர்கள் என்பவர்கள் தொழிலாளிகள் அல்ல, அவர்கள் அதிகாரிகள். எந்த அதிகாரியும் அதிக நேரம் வேலை பார்ப்பதற்காக அலவன்ஸ் பெறுவதில்லை. வேலை நேரத்திற்கு மேல் அலுவலகத்தில் இருக்கும் ஊழியர்கள் அனைவரும் அலுவலக பணியில் இருக்கிறார்கள் என்று அர்த்தமில்லை. அவர்கள் உடற்பயிற்சி கூடத்தில் கூட இருக்கலாம்.

'நாஸ்காம்' தங்கள் நலனுக்காக யாரையும் நிர்பந்திப்பதில்லை. ஆனால், தொழிற்சங்கங்கள்தான் கண்மூடித்தனமான காரியங்களுக்காக தங்கள் நிறுவனங்களை மிரட்டும்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக, தகவல் தொழில்நுட்பப் பணியாளர்களின் மன்றம் அமைப்பின் இணைச் செயலாளர் சதீஷிடம் சில கேள்விகளை முன் வைத்தோம்.

மோகன் தாஸ் சொல்வதும் நியாயம் தானே... இந்தத் துறையை மற்ற துறையுடன் ஒப்பிட முடியது. உங்களுக்கான பணியை வழங்குபவர்கள் வெளிநாட்டில் இருக்கிறார்கள். அதனால் உங்களுக்கு 24 x 7 மணி நேரமும் வேலை இருக்கும். இதில் தொழிலாளர் சட்டத்தை அமல்படுத்துவது சங்கடங்களை தானே தரும்...? 

உங்கள் கேள்வியிலேயே பதிலும் இருக்கிறது. 24 x 7 மணி நேரமும் பணியைக் கோரும் ஒரு பெரிய துறைக்கு தானே உண்மையாக சங்கம் தேவை. அப்போதுதானே ஊழியர்களின் பிரச்னைகளை களைந்து, இன்னும் உத்வேகத்துடன் பணி செய்ய வைக்க முடியும். இது உண்மையில் நிறுவனங்களுக்குதான் நன்மை பயக்கும்.

ஆனால், இதுபோன்ற சட்டங்களால், நிறுவனங்கள் அவர் சொல்லியது போல் வேறு மாநிலத்திற்கு செல்ல வாய்ப்பிருக்கிறதே...?

அவர் அச்சமூட்டுவதற்காக அப்படி சொல்கிறார். ஆனால்,  தமிழகம்  ஒரு திறமையாளர்களின் கூடம். ஏறத்தாழ 5 லட்சம் பணியாளர்கள் இத்துறையில் பணி செய்கிறார்கள். எண்ணற்ற பொறியியல் கல்லூரிகள் உள்ளன. மென்பொருள் உற்பத்தியில் மூன்றாவது இடத்தில் இருக்கிறோம். அதனால், நிறுவனங்கள் தமிழகத்தை விட்டுச் செல்லாது.

மென்பொறியியல் துறையில் அவ்வளவு வாய்ப்பு கொட்டிக் கிடக்கிறது. அதனால்தான்  15 முதல் 20 சதவீதத்திற்கு அதிகமான ஊழியர்கள் தன்னிச்சையாக வேலையை விட்டுச் செல்கிறார்கள் (Volutary attrition) என்று கூறுகிறாரே...?

இல்லை... பெரும்பாலானவர்கள் நிறுவனங்கள் தரும் அழுத்தத்தால்தான் செல்கிறார்கள். நிறுவனங்கள் அவர்களுக்கு அழுத்தம் கொடுத்து ஊழியர்கள் தங்களாகவே வேலையை விட வைக்கிறது என்பதுதான் நிஜம். இதனால் பலர் தற்கொலை கூட செய்திருக்கிறார்கள். ஆனால், இது ஏதோ பணக்கார துறையென்று, எங்களுக்காக பேசக் கூட யாரும் வருவதில்லை. இதற்காகதான் நாங்கள் தொழிற்சங்கம் வேண்டும் என்கிறோம். ஆனால், அவர் தொழிற் சங்கங்கள் நிறுவனங்களை மிரட்டுகிறது என்று வெறுப்பை உமிழ்ந்துள்ளார். தொழிற்சங்கங்கள் பற்றி பொது புத்தியில் தவறான கருத்தை ஏற்படுத்துவதுதான் அவர் நோக்கமாக இருக்கிறது.

அவரே தொடர்ந்து, "நாங்கள் எழுதிய கடிதத்தை மோகன்தாஸ் பைக்கான கடிதமாக மட்டும் சுருக்கி கொள்ளாதீர்கள். எங்கள் கேள்வி ஒட்டு மொத்த தகவல் தொழில்நுட்ப துறைக்கானது." என ஆதங்கத்துடன் முடித்தார்.

- மு. நியாஸ் அகமது

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close